அருட்பணியாளர்களை அனுப்பிய சபை!

சகோ.ஆ.பிரேம்குமார்
(செப்டம்பர்-அக்டோபர் 2016)

“அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார். அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து அவர்களை அனுப்பினார்கள். அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புரு தீவுக்குப் போனார்கள் (அப்.13.2-4).

மிஷனரி அழைப்பு தேவனிடமிருந்து வருவது:

அருட்பணி என்பது தாமாக நினைத்து ஆரம்பிப்பதொன்றல்ல. மிஷனரி ஊழிய அழைப்பு தேவ ஆவியானவரிடமிருந்து வருகின்ற அழைப்பு. அந்த அழைப்பு மனுஷர்மூலமாக வரலாம். ஆனால், தேவனுடைய இருதயத்துடிப்பான மிஷன் தேவ ஆவியானவரிடமிருந்து வருகிறது. தெளிவான அடையாள அற்புதங்களுக்கூடாகத்தான் இந்த அழைப்பு வரவேண்டும் என்றில்லை. அல்லது தெளிவான தீர்க்கதரிசனத்திற்கூடாகத்தான் வரவேண்டும் என்றும் இல்லை. சிலவேளைகளில் அப்படியும் வரலாம். பவுலுக்கும் பர்னபாவுக்கும் அவ்விதமே அழைப்பு வந்திருக்க வேண்டும்.

ஆனால், எல்லா வேளைகளிலும் தீர்க்கதரி சனத்திற்கூடாகத்தான் அழைப்பு வரவேண்டும் என்றில்லை. மாற்கு, தீமோத்தேயு போன்றவர்கள் அற்புதவிதமாக அழைக்கப்பட்டதாக வேதாகமம் கூறவில்லை. மாற்கு விலகியதால் வெற்றிடமொன்று இருந்தபோது, பவுல் தீமோத்தேயுவைக் கண்டு, அவர் பொருத்தமானவர் என்று தெரிவு செய்தார் (அப்16). அந்தியோகியா சபையில் சவுலையும் பர்னபாவையும் தாம் அழைத்த ஊழியத்திற்குப் பிரித்துவிடுமாறு திருவுளம்பற்றியவர் பரிசுத்த ஆவியானவரே!

மிஷனரிகளை அனுப்பும் பொறுப்பு சபைக்குரியது:

பரிசுத்த ஆவியானவர் மிஷனரி ஊழியத்திற்கு அழைத்தபோது அந்தியோகியா சபையினர் திரும்பவும், “உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து அவர்களை அனுப்பினார்கள்”.

இன்று சபைகள் வெறுமனே தேவனைத் துதித்துப் பாடுகின்ற பக்தர் சமூகமாக மட்டுமே இருக்கக்கூடாது. ஆண்டவரின் வார்த்தையைக் கற்றுக்கொள்ளும் மாணவர் சமூகமாகமட்டுமே இருக்கமுடியாது. ஒரு சமூக அங்கீகாரத்தைக் கொடுக்கிற ஐக்கிய சமூகமாக மட்டும் இருக்க முடியாது. சபைக்கு ஒரு அருட்பணி உண்டு. “அருட்பணிதான் சபையின் குறிக்கோளாகும்” என்கிறார் ஒஸ்வெல்ட் ஜே.ஸ்மித் அவர்கள்.

துதிபாடல் ஆராதனை மட்டுமே சபையின் நோக்கமாக இருந்திருந்தால், ஆண்டவர் சபையை சீக்கிரமாகவே பரலோகத்திற்கு எடுத்திருப்பார். அங்கே தேவனை பரிபூரணமாக ஆராதிக்கலாம். தேவ அறிவுதான் பிரதான நோக்கமென்றால், பரலோகில் தேவனையும் அவர் வார்த்தையையும் பரிபூரணமாய் அறிந்திருப்போம். ஐக்கியம்தான் சபையின் ஒரே நோக்கமென்றால் அதற்கு பரலோகத்தைவிட சிறந்த இடம் ஏது! ஆண்டவர் இந்த உலகில் சபையை வைத்திருப்பதில் அவருக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. சகல மக்களினங்களையும் அவருக்குச் சீஷராக்கி, அவர்களுக்கூடாக தாம் மகிமைப்படுவதே அவரது நோக்கம் (மத்.28:18-20).

வெறுமனே தமிழரை மட்டுமல்ல, சிங்களவர்களை மட்டுமல்ல, சகல ஜாதிகளையும் ஆண்டவரின் சீஷராக்கி, அவர்கள்மூலம் ஆண்டவர் ஆராதிக்கப்படுவதை, மகிமைப்படுவதையே அவர் விரும்புகிறார். சீஷன் என்பவன் தனக்காக மாத்திரம் வாழாமல் ஆண்டவருக்காக வாழுகிறவன். அவரையே பின்பற்றி அவரை மகிமைப்படுத்துவதும், தேவனது நீதி நியாயத்தை, பரிசுத்தத்தை, இரக்கத்தை தனது வாழ்க்கைக்கூடாக மற்றவர்கள் காணச் செய்கிறவனுமாக இருக்கின்றான்.

திருச்சபையின் மிஷனரி பணியானது, திருச்சபைக்குள் நடக்கும் ஊழியங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படத்தக்கது அல்ல. அல்லது, அயலகத்தாரை ஆதாயப்படுத்துவதற்காகவும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அனைத்து ஜாதிகளையும் சீஷராக்கும் தேவனுடைய உலகளாவிய மிஷனரி பணியில் ஒவ்வொரு சபைக்கும் பங்குண்டு.

“பிரதான கட்டளையை நிறைவேற்றுவதில் அதி தீவிரமாக ஈடுபடாத எந்த சபையும் தான் இருப்பதற்கான வேதாகமரீதியான உரிமையை இழக்கிறது” என்கிறார் ஒஸ்வேல்ட் ஜே.ஸ்மித்.

திருச்சபை தனது பொறுப்பை வெறுமனே மற்ற ஸ்தாபனங்களிடம் கையளித்துவிட முடியாது. திருச்சபை மிஷனரி ஸ்தாபனங்களுக் கூடாக மிஷனரிகளை அனுப்பலாம். அதில் தவறில்லை. சபைக்கு அக்காரியத்தில் அனுபவம் குறைவாயிருந்தால், அனுபவமும் சிறப்புத் தேர்ச்சியும் உள்ள மிஷனரி ஸ்தாபனத்தின் மூலமாக அனுப்புவது நன்மை பயக்கும். ஆனால், சபை தன் பொறுப்பிலிருந்து விடுபடமுடியாது.

நமது சபை ஏற்கனவே ஊழியப்பளுவினால் நிரம்பி இருக்கிறது. மிஷனரி ஊழியத்தைப் பொறுப்பெடுத்து நடத்த நம்மில் எவருக்கும் நேரம் இல்லை என்று சொல்ல முடியாது. அல்லது, ‘சரியான ஒரு நபர் எழும்பும்போது மிஷனரி ஊழியத்தில் ஈடுபடுவோம். மிஷனரி பாரமுள்ளவர்கள், அல்லது இதனை எடுத்துச் செய்யக்கூடிய நேரமுள்ள நபர் எழும்புமட்டும் நமக்கு இது கடினம்’ என்றும் சொல்லமுடியாது. அல்லது, ‘மிஷனரி ஊழியம் நல்லது, மிஷனரி ஊழியத்தைக் குறித்த ஆர்வமுள்ள இன்னாரும் இன்னாரும் அந்த ஊழியத்தைக் குறித்து யோசிக்கட்டும். நமக்கு வேறு அநேக முக்கியத்துவங்கள் உண்டு’ என்றும் சபை இருந்துவிட முடியாது.

மிஷனரி பணி என்பது, அருட்பணி ஆர்வமுள்ள ஒரு சிலர் ஈடுபடும் காரியமல்ல. முழுச்சபையுமே ஈடுபடவேண்டிய ஊழியாகும். அருட்பணியானது சபையின் ஒரு சிலரின் சொத்தல்ல; அது முழுச்சபையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பாகும்.

“மிஷனரி பணியானது விரும்பினால் தெரிவுசெய்யும் ஒரு தெரிவல்ல. மாறாக, இது ஒரு கட்டளையாகும். முழுச்சபையுமே அப்பணியில் ஈடுபட்டாக வேண்டும்”.

“உலகம் முழுவதற்கும் சுவிசேஷம் அறிவிப்பது மனிதன் விரும்பினால் தெரிவு செய்யவும், விரும்பாவிட்டால் விட்டுவிடுவதற்கும் இதுவொரு தனிப்பட்ட மனிதனின் கிறிஸ்தவ தெரிந்தெடுப்பு அல்ல. அது கிறிஸ்துவிட மிருந்து நம்மிடம் வந்த தேவனது சுபாவத்தில் வேரூன்றப்பட்டது. மாறாக, இது ஒரு சில ஆர்வமிக்க நபர்களின் பிராந்தியமோ அல்லது அவ்வளவு முக்கியமில்லாததோ அல்லது இப்பக்கத்திற்கு சரிந்துள்ள சிறப்புத் தேர்ச்சி வாய்ந்தவர்களுக்கு உரியதோ அல்ல. மிஷனரி பணியானது ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதன் பிரத்தியேக அடையாளம்” என்கிறார் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் அவர்கள்.

“சபையின் நோக்கமே அருட்பணிதான். சபை தனது மிஷனரிப் பொறுப்பை நிறைவேற்றும்போது மட்டுமே, தான் இருப்பதன் நோக்கத்தை நியாயப்படுத்துகிறாள். திருச்சபையானது தனது பலதரப்பட்ட செயற்பாடுகளில் ஒன்றாக அருட்பணியை நடத்தக்கூடாது. அவள் ஒரு மிஷனரி மக்கள் கூட்டமாய் இருக்கிறாள். அப்படியில்லாவிட்டால் அவள் சபையாயிருக்க முடியாது” என்கிறார் ஆர்த்தர் கிளேசர்.

சபையின் ஓய்வுநாள் பாடசாலையில் அருட்பணி பற்றிக் கற்பிக்கப்பட வேண்டும். மிஷனரிகளின் வாழ்க்கை கற்றுக்கொடுக்கப் படவேண்டும். ஆண்டவரை அறியாத மக்களுக்காக, ஜாதிகளுக்காக சிறுபிள்ளைகள் ஜெபிக்கப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

ஒருமுறை வேதவசன ஐக்கிய சங்கம் (Scripture Union) என்ற கிறிஸ்தவ ஸ்தாபனம், கடலோரங்களில் வசிக்கும் ஏழைச் சிறுவர்களுக்குக் கற்பிக்கும்போது, மிஷனரி பணி குறித்தும் கற்பித்து, மிஷனுக்காகக் காணிக்கை சேர்க்க உண்டியல்களும் கொடுத்திருந்தனர். ஏழைச் சிறார்கள் தங்கள் வறுமையிலும் பணம் சேகரித்துக்கொடுக்க, அந்த உண்டியல்கள் வேத வசன ஐக்கிய சங்கத்தால், குளோபல் இம்பெக்ட் மிஷன் ஊழியங்களுக்காகக் கொடுக்கப்பட்டது. வறுமையில் வாடிய இச்சிறுவர்களும் மிஷனரி பணிக்கெனக் கொடுக்க கற்றுக்கொண்டனர். வாலிபர் கூட்டங்களில், பெண்கள் கூட்டங்களில், ஆண்கள் கூட்டங்களில், சபையின் செய்திகளில், முகாம்களில் அறை கூவல் முழங்கவேண்டும். மிஷனரி சவால்கள் கொடுக்கப்படவேண்டும். இது அவசியம். சபையின் நிகழ்ச்சி நிரலில் பிரதான கட்டளை, பிரதான இடத்தைப் பெறவேண்டும். சபையின் விண்ணப்ப ஜெபங்களில் தேசங்களுக்காக ஜெபிக்கவேண்டும். மிஷனரிகளை அனுப்ப வேண்டும். தாங்கவேண்டும்.

“கட்டளையானது ‘போ’ என்றிருக்க, நாமோ சரீர ரீதியாகவும், கொடை, ஜெபம், செல்வாக்கு ரீதியாகவும் போகாமல் இருந்து விட்டோம். பூமியின் கடைசிபரியந்தமும் சாட்சிகளாயிருக்கும்படி தேவன் கேட்டிருக்கையில் 90 சதவீதமான கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த நாட்டைச் சுற்றிச் சுற்றியே இருந்துவிட்டனர்” என்கிறார் ரொபட் சவேஜ்.

“ஒரு பெரிதான சபை என்பதற்கான அடையாளம், அது எத்தனை ஆசனங்களைக் கொண்டிருக்கிறது என்பதல்ல; அது எத்தனை பேரை அனுப்பியுள்ளது என்பதே” என்கிறார் மைக் ஸ்டச்கரா.

அந்தியோகியா சபை அனுப்பியவர்கள் சபையில் அவ்வளவு ஈடுபாடு இல்லாத, அவ்வளவு திறமை அனுபவம் இல்லாதவர்கள் அல்ல. தமக்கிருந்த மிகச் சிறந்த தலைவர்கள் இருவரையே அந்தியோகியா சபை அனுப்பியது. சிறந்தவர்களை அனுப்புவதும், அனுப்பப்பட்டவர்களைப் பணத்தாலும், ஜெபத்தாலும், தனிப்பட்ட ஊக்குவிப்பாலும் தாங்கவேண்டியதும் சபையின் பொறுப்பாயுள்ளது.

இன்று சில சபைகள் மிஷனரிகளை அனுப்ப வாஞ்சிக்கிறார்கள். ஆனால், எங்கே அனுப்புவது, எப்படி அனுப்புவது என்ற அறியாமையினாலே ஏற்கனவே பல சபைகளுள்ள இடங்களுக்கே மிஷனரிகளை அனுப்புகிறார்கள். பவுலின் இலக்கு என்ன? “அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படா திருந்தவர்கள் உணர்ந்து கொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்” (ரோமர் 15:20,21) என்கிறார் பவுல்.

பவுலும் சீலாவும் தங்கள் இரண்டாம் மிஷனரிப் பிரயாணத்தின்போது, அவர்கள் போக நினைத்த சில இடங்களுக்குப் போகாதபடி பரிசுத்த ஆவியானவர் தடுத்ததை ஏற்கனவே கவனித்தோம் (அப்.16:6,7). அவர்கள் துரோவா பட்டணத்திற்கு வந்தபோது, மக்கெதோனியா தேசத்தைக் குறித்த ஒரு தரிசனத்தைப் பெற்று, மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையான பிலிப்பு பட்டணத்திற்குப் போனார்கள் (அப்.16:9-12). பிலிப்பு பட்டணம் சுவிசேஷத்தைக் கேட்டிராத, ஆதாயப்படுத்தப்படாத பட்டணமாயிருந்தது. இப்பட்டணத்திற்கே தேவன் அவர்களை வழிநடத்தினார்.

இன்று ஏற்கனவே சுவிசேஷம் அறிவித்தவர்களுக்கே பலர் திரும்ப அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சபைகளுள்ள இடங்களில் பத்தோடு பதினொன்றாக சபைகளை ஏற்படுத்தி அருட்பணி செய்வதாக எங்கும் பறைசாற்றுகின்றனர். ஒளியுள்ள இடத்திலேதான் அவர்கள் வெளிச்சமாயிருக்க விரும்புகிறார்கள். இருளுள்ள இடத்திற்குத்தானே வெளிச்சம் அவசியம்.

ஒஸ்வர்ல்ட் ஜே.ஸ்மித் என்பவர், “ஒரு முறைகூட சுவிசேஷத்தைக் கேட்டிராதவர்கள் இருக்கையில் இருமுறை கேட்பதற்கு எவருக்கும் உரிமையில்லை” என்கிறார்.

சுவிசேஷத்தைக் கொண்டிருக்கிற விசுவாசிகள் அதனைத் தங்களுக்குள்ளே திரும்ப திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருக்கிற அதேவேளை, தங்கள் வாழ்நாளில் ஒரு முறை கூட இரட்சிப்பின் நற்செய்தியைக் கேட்டிராத கோடிக்கணக்கான மக்கள் கேள்விப்படாமலேயே நித்திய நரக அக்கினியில் விழுந்து கொண்டிருக்கின்றார்கள்.

“கோடிக்கணக்கான மக்கள் தேவவார்த்தையும், கிறிஸ்துவைப்பற்றிய அறிவும் இல்லாத வறுமையில் இருக்கையில், அவையிரண்டும் இருக்கிற மக்களுக்காக எனது நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிக்க என்னால் முடியாது” என்கிறார் ஜே.எல்.ஈவன்.

அந்தியோகியா சபை மிஷனரிகளை அனுப்பும் அழைப்பைப் பெற்றபோது, உபவாசித்து ஜெபித்தார்கள். ஜெபமும், ஆவியானவரின் வழிநடத்துதலை நாடுவதும் மிக முக்கியம். ஒரு சில இடங்களைக் குறித்த பாரம் ஏற்படுமானால் அந்த இடத்தைக் குறித்த தகவல்கள் திரட்டுவது முக்கியம். அலங்கத்தைக் கட்டுவதற்கு முன்பாக நெகேமியா அங்கு போய் ஓர் ஆய்வு செய்தார் (நெகேமி.2:1-16).

பவுல்கூட அத்தேனே பட்டணத்திற்குப் போனபோது ஊழியத்தை உடனே தொடங்காமல் அப்பிரதேசத்தை கவனித்தார் (அப். 17:22,23). ஒரு இடத்திலுள்ள மக்களிடத்திற்கோ அல்லது ஒரு மக்கள் இனத்திடமோ நாம் ஊழியம் செய்யும்படி போவதற்கு முன்பாக அவர்களைப்பற்றிய தகவல் திரட்டியறிய வேண்டும். அவர்களது சமயம், ஜனத்தொகை, உடை, உணவு, மதிப்பீடுகள், பொழுது போக்கு விளையாட்டுக்கள், பாரம்பரியங்கள், சம்பிரதாயங்கள், விழாக்கள், வைபவங்கள் (பண்டிகைகள், திருமணம்) இசை இவைகளைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் மத்தியில் ஏற்கனவே எத்தனை சபைகள், ஊழியர்கள் ஊழியம் செய்கிறார்கள்? நாம் அங்கு போகவேண்டிய தேவை இருக்கிறதா? இவைகளையும் ஆராயவேண்டும். அவ்விடத்திற்கே போய் அந்த மக்களை கவனித்து அவர்களோடு கலந்துரையாடி, அவர்கள் மத்தியில் ஊழியம் செய்கின்ற ஊழியரைச் சந்தித்து, தகவல்கள் திரட்டலாம். அரசுத்துறை, ஏனைய அமைப்புகள்கூட இவர்களைக் குறித்து ஆய்வுகள் செய்திருக்கலாம். அவர்களைக் குறித்து கற்றுக்கொள்ளாமல் அவர்களைப் புரிந்துகொள்ளாமல் ஊழியத்தில் இறங்குவது நல்லதல்ல. அனுப்புகிறவர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்து அவர்களை நன்கு ஆயத்தப்படுத்தி அனுப்புவது நல்லது.

(தொடரும்)

சத்தியவசனம்