நறுமணம்! நாற்றமெடுக்க முடியுமா?

 சகோதரி சாந்தி பொன்னு
(செப்டம்பர்-அக்டோபர் 2016)

மனித வாழ்வின் ஒரு முக்கிய நிகழ்வு விவாக சம்பந்தம். இதை ஒரு நிகழ்வு என்று சொல்லுவது தவறு. இது தேவனுடைய அநாதி நியமம், திட்டம். இது மனிதன் கேட்டுப் பெற்றுக்கொண்ட ஒன்று அல்ல; இது தேவனுடைய யோசனை, அவருடைய ஒழுங்கு. இந்த சம்பந்தத்தில் பங்கம் ஏதும் இருக்க முடியாது. ஏனெனில், மனிதனைப் படைத்த தேவனே மனிதனுடைய தனிமையைக் கண்டு. அத்தனிமையைப் போக்குவதற்கும், தம்மைச் சேவிக்கின்ற ஒரு பரிசுத்த சந்ததி உருவாக வேண்டுமென்றும் தேவனால் ஏற்படுத்தப் பட்ட ஒன்றே இந்த மனித விவாக உறவு. ஆதாம் கேட்டானா தனக்கு ஒரு துணை வேண்டும் என்று, மனைவி வேண்டும் என்று கேட்டானா? அல்ல.

மேலும், ஆணிலிருந்தே பெண்ணைப் படைத்து, அவளைத் தேவனே மனிதனிடம் கொண்டுவந்த தேவஞானத்தை என்ன வென்பது! அப்போது, ‘இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாயிருக்கிறாள்’ (ஆதி.2:23) என்று ஆதாமைச் சொல்ல வைத்தது எது? இவள் உன் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவள் என்று கர்த்தர் சொன்னாரா? அல்லது, பிரிதல், இசைந்திருத்தல், ஒரே மாம்சமாகுதல் என்ற ஒழுங்கைக் கொடுத்த பின்னரா ஆதாம் அவளை அடையாளங் கண்டு, அவளுக்கு மனுஷி என்று பெயரிட்டான். இல்லையே! ஆதாம் தன் துணையை (மனைவியை அல்ல) அடையாளங்கண்ட பின்னர்தான் தேவன் அந்த விவாக சட்டத்தைக் (ஆதி.2:24) கொடுத்தார்.

மேலும், நித்தியமாகத் தம்முடன் உறவாயிருப்பதற்கென்று தாமே உருவாக்கிய மனிதனுக்கென்று தேவன் ஏற்படுத்திய முதல் மனித உறவு, இந்த விவாக உறவுதான். அம்மா அப்பா அண்ணன் அக்கா எல்லாம் பின்னர் ஏற்பட்டவை. தேவன் ஏற்படுத்திய இந்த அழகான முதல் உறவு இன்று கடையாகிப் போவது ஏன்? விவாக உறவுக்கு முதலிடம் கொடுக்கவேண்டிய மனிதன் இன்று எதற்கெல்லாமோ முதலிடம் கொடுக்கிறான்? படைப்பிலே அழகாக மணம்வீசிய இந்த மனித விவாக நறுமணம் நாற்றமடைய விட்டுவிடலாமா? அது இன்று அழுகிப்போகிறது என்றால், இதற்கு யார் காரணம்?

தப்பித்துக்கொள்ள ஒரு சாக்கு:

எல்லாத் தப்புகளுக்கும் சாத்தானையும், பாவத்தையும் வெகு இலகுவாகச் சுட்டிக்காட்டி விட்டு நாம் தப்பித்துக்கொள்ளப்பார்க்கிறோம்;  அது முடியாது. உண்மைதான், பாவம் மனித வாழ்வைக் கறைப்படுத்தி, தேவனாகிய கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த அற்புதமான பரிசுத்த உறவைக் கிழித்து, மனிதனைத் தனிமைப் படுத்திய பின்னர்தான் இந்த விவாக உறவிலும் கறைபடிய ஆரம்பித்தது. ஆதாம் ஏவாளையும், ஏவாள் சர்ப்பத்தையும் சுட்டிக்காட்டியபோதே உறவு கிழிய ஆரம்பித்திருந்தது.

அதற்காக, இன்றைய புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களாகிய நாமும் அதே கதையை அளந்துகொட்டலாமா? நமது பாவங்களையெல்லாம் சிலுவையில் ஆணியடித்து அழித்துப்போடவென்றே தேவனே ஒரு மனிதனாய் – கிறிஸ்துவாய் – உலகிற்கு வந்ததையும், தவறாமல் ஒவ்வொரு ஞாயிறு தினத்திலும் அதை விசுவாச அறிக்கை பண்ணுவதும், அவர் எனக்காக மரித்தார், நித்திய ஜீவன் எனக்குண்டு என்று விசுவாசிக்கிறவர்களுமாகிய இன்றைய சந்ததியைச் சேர்ந்த நாமும் அதே ஆதாம், ஏவாள், சாத்தானையும் பாவத்தையும் சுட்டிக் காட்டுவது எப்படி?

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் விவாகம் என்பது ஒரு திருப்புமுனை என்றால் அது மிகையாகாது. விவாகம், ஒரு மனிதனுடைய வாழ்வை ஒரு புதிய பாதையில் இட்டுச்செல்லுகிறது. இனி மரணம்வரைக்கும் அதுதான் அவனுடைய வாழ்வு. எதிர்பாலாரில் ஏற்படுகின்ற ஈர்ப்பும், விவாகத்திற்கான ஏக்கமும், ஆண் பெண் உறவும், அவர்களுக்கிடையிலான பாலியல் தாகமும் இயல்பானவை. இதிலே வெட்கப்படவோ, அதிசயிக்கவோ எதுவுமே இல்லை. மனிதனை உருவாக்கிய தேவன், பலுகிப்பெருகும்படி அப்பொழுதே அவர்களை ஆசீர்வதித்துவிட்டார்.

இப்படியிருக்க, திருமண உறவும் கேள்விக் குறியாகி, அந்த உறவின் அன்பின் அடையாளமான ஆசீர்வாத ஈவுகளாகிய பிள்ளைகள் அவலப்படுவதும் ஏன்? நறுமணம் வீசி, தேவனை மகிமைப்படுத்தவேண்டிய இந்த உறவுகள் இன்று நாற்றமெடுத்திருப்பது ஏன்? விவாக ஆராதனையை நடத்திவிட்டு, ‘இவர்கள் கணவன் – மனைவி என்று தேவனுடைய சந்நிதானத்தில் நின்று அறிவிக்கிறேன்’ என்று கூறிவிட்டு ‘தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்’ என்று பகிரங்க அறிவிப்புக் கொடுப்பாரே போதகர், எதற்காக? அப்பா, அம்மா, மாமன், மாமி, அடுத்தவன், அடுத்தவள் மாத்திரமல்ல, இந்த ‘மனிதன்’ என்பது விவாகத்தில் இணைந்த பெண்ணுக்கும் ஆணுக்கும்கூட கொடுக்கப்படுகின்ற அறிவித்தல்தான். ஒரு விவாக சம்பந்தத்தை யார் பிரிக்க முற்பட்டாலும், சம்பந்தப்பட்ட கணவன் மனைவியும் இந்தப் பிரிவுக்கு உரமிட முடியாது. இது தேவனுக்கு விரோதமான, அவரது சித்தத்துக்கு எதிரான கொடிய பாவம்.

இப்படியிருக்க, இன்று ஏன் விவாக சம்பந் தங்கள் கேள்விக்குறியாய் நிற்பது ஏன்? அதிலும், ‘பரிசுத்த விவாகம்’ என்று அறியப்பட்டிருக்கிற கிறிஸ்தவ விவாகங்கள் இப்போதெல்லாம் வருடங்கள் கழிந்தபின் அல்ல, மாதங்கள் நாட் கள் கடந்த நிலையிலேயே நீதிமன்ற வாசலில் தவம் கிடப்பதும் என்? எந்தவித பயமோ, எதிர்கால சிந்தனையோ, தேவசந்நிதானத்தில் செய்த உடன்படிக்கையைக் குறித்த நடுக்கமோ இல்லாமல், பிரிவும் போதாது, விவாகரத்து – ‘விவாகம் ரத்தாக வேண்டும்’ – என்று தம்பதிகள் அடம்பிடிப்பதும் ஏன்?

காதல் திருமணங்கள் மலிந்துவிட்ட இந்தக் காலப்பகுதியிலும், அந்நிய நுகமானாலும் பிள்ளைகள் விருப்பம் என்கின்ற பெற்றோர் பெருகிவிட்ட நிலையிலும், பல லட்சங்கள் செலவாகின்ற ஆடம்பர திருமண வைபவங்களும், தம்பதிகள் நடனம், நாகரீகமான குடி வகைகள், பகிடி சொற்பொழிவுகள், ஆடை அலங்காரம் என்ற பெயரில் தகுதியே இல்லாத உடைகள், நாவில் நீர் ஊறச்செய்தாலும், ஜீரணத்துக்கு இரைப்பையும் குடலும் போராட வேண்டிய அளவுக்கு விதவிதமான உணவு வகைகள் என்று எல்லாமே எங்கேயோ போய்விட்ட திருமண வைபவங்கள் பெருகிவிட்டன.

மாத்திரமல்ல, திருமண வைபவங்களும் போட்டி மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றதைப் பார்த்துச் சிரிப்பதா அழுவதா? தேவசித்தம் என்னவென்றே சிந்திக்கமுடியாத அளவுக்கு மேல்நாட்டு மோகம் கிறிஸ்தவ வைபவங்களை அடிமை கொண்டுவிட்டது. இனி இதிலிருந்து வெளிவருவது சற்றுக் கடினம்தான்.

தேவன் அமைத்த விவாகம்

விவாகம் என்பது என்ன? இந்தப் பரிசுத்த மான பிணைப்பிலே தேவன் கொண்டுள்ள நோக்கம் என்ன என்று சிந்திக்கமுடியாத அளவுக்கு இன்று சாத்தான் விவாக சம்பந்தங்களில் தன் கையைப் புதைத்துவிட்டான் என்பதைத் தற்கால மணமக்கள் எங்கே உணருகிறார்கள்? பெண்ணைப் படைத்தபோது, அவளைத் தனிப்படப் படைக்காமல், ஆணிலிருந்து படைத்தாரே தேவன்; அந்த தேவ ஞானத்தை மனிதன் அறியாமலா இருக்கிறான்? மாத்திரமல்ல, பெண்ணைப் படைத்து விட்டு, ‘போ’ என்று விட்டுவிடாமல், அவரே அழைத்து வந்து, ஆதாமுக்கு முன்பாக நிறுத்தினாரே, இதனை எந்தப் பெற்றோரும் உணராமலா இருக்கிறார்கள்? விவாக ஆராதனையில் தகப்பனோ, தகப்பன் இல்லாத நிலையில் வேறு நெருங்கிய உறவினரோ பெண்ணை அழைத்துவந்து போதகருக்கு முன்னாக விடுவது எப்படி என்பதையா தேவன் அன்று செய்துகாட்டினார்? இல்லை. பிள்ளைகளில் பெற்றோருக்கு இருக்கவேண்டிய பொறுப்பைத்தான் தேவன் மாதிரியாக வைத்தார். இன்று தங்கள் பிள்ளைகளின் விவாக சம்பந்தத்திலே பெற்றோரின் பங்களிப்பு என்ன? பொறுப்பு எங்கே? பெரும்பாலும் பெற்றோரும் அழைப்புப்பெற்ற ஒருவராகத்தான் விவாக கொண்டாட்டத்திலே பங்கெடுக்கிறார்களோ என்று கேட்கத் தோன்றுகிறது.

மணமகனும் மணமகளும் ஏற்கனவே பழகி, தங்கள் கரங்கோர்த்து நடந்து, காதலில் கரை கண்ட பின்பு, திருமணத்துக்கென்று ஆலயத்துக்கு வரும்போது மாத்திரம் எதற்குத் தகப்பன்? இந்த மணப்பெண்ணைக் கொடுப்பது யார் என்று போதகர் கேட்க, முன்னர் தகப்பன்தான் முன்னே செல்லுவார்? இப்போது தாயும் சேர்ந்து செல்லுவார்? நல்லதுதான், இதெல்லாம் உணர்ந்து செய்யப்படுகிறதா? அல்லது நூதனமாக செய்யப்படுகிறதா? ஏனெனில் இன்று சில திருமணங்களில் மணமக்கள் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவரைக் கொடுத்துவிட்டுத்தான் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துவதற்காக ஆலயத்துக்கு வருகிறார்கள். இல்லையானால் அவர்களுடைய காதல் காட்சிகளைப் பெரிய படம் போட்டுப் பகிரங்கப்படுத்துவார்களா?

காதல் தவறு என்று சொல்ல வரவில்லை; வைபவ ஒழுங்குகளும் தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு வரையறை உண்டு.  எல்லாவற்றுக்கும் ஒரு ஒழுங்கு உண்டு. ஏன் தெரியுமா? நமது தேவன் ஒழுங்கானவர்; ஒழுங்கை விரும்புகிறவர். கிறிஸ்தவ திருமணங்கள் வெறுமனே திருமணங்கள் அல்ல; சட்டப்படி ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழுவதற்காகக் கொடுக்கப்படும் அனுமதியும் (லைசென்ஸ்) அல்ல. தேவன் சாட்சியாக, விசுவாசிகள் சாட்சியாக, திருமண உடன்படிக்கையில் முதலாவது இருதயத்தில் கையெழுத்திட்டுவிட்டு, ஒருவரையொருவர் தேவசந்நிதானத்தில் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, பின்னர்தான் பதிவேட்டில் கையெழுத்துப்போடுகிறார்கள். அந்தக் கையெழுத்துக்குக் கொடுக்கப்படுகின்ற மதிப்பு, இருதயத்தில் எழுதப்பட்ட சாட்சிக்குக் கிடைப்பதில்லையே!

திருமணத்தில் இணைகின்ற தம்பதிகள் இனி அவர்கள் ஒரு தனித்த அலகு – ஒரு தனிக் குடும்பம் – என்ற சத்தியத்திற்கு இணங்க நிறைவேற்றப்படுகின்ற பரிசுத்த விவாகம். கிறிஸ்தவ விவாகம் என்பதை கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும், சிறியவர்களோ பெரியவர்களோ ஒவ்வொருவரும் எச்சரிக்கையாயிருக்கக்கடவர்கள். இப்படி நடந்தேறுகின்ற ஒரு பரிசுத்த விவாகத்தைதான் நாம் கொண்டாடவேண்டும். அப்படியானால் அந்தக் கொண்டாட்டமும் பரிசுத்தமாயிருக்க வேண்டியது அவசியமல்லவா! ஏனெனில் அங்கும் தேவபிரசன்னம் நமக்குத் தேவை.

நித்திய உறவுக்கு ஒரு மாதிரி

ஆனால், இன்று திருமண உறவுகள் பல விதங்களிலும் சீரழிந்துகொண்டிருப்பதை நாம் மறுக்கமுடியாது. இதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். பல சாக்குப்போக்குகள் சொல்லலாம். ஒரு காரியத்தை இந்த இடத்தில் கூற விரும்புகிறேன். இந்த உலகில் தேவன் படைத்திருக்கின்ற ஒவ்வொன்றிலும், ஏற்படுத்தி வைத்திருக்கின்ற ஒவ்வொரு உறவிலும், நடத்திவருகின்ற ஒவ்வொரு நிகழ்விலும் நாம் தேவ மகிமையை, அவரது கரத்தை, அதன் மகத்துவத்தை, அதிலும் மேலாக நித்தியத்தில் நித்தியமாய் இருக்கப்போகின்ற உறவைக்கூட நமக்குத் துல்லியமாக அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை நாம் உணரவேண்டும். அப்பா-அம்மா உறவில் நாம் தேவ அன்பைக் காண்கிறோம். சகோதர உறவில் கர்த்தர் நம்மை ஒரு சகோதரனாய் நேசிப்பதைக் காண்கிறோம். ஆசிரியர் மாணவர் உறவிலே அவர் நம்மை எப்படிப் போதித்து நடத்துகிறார் என்று காண்கிறோம். அப்படியே ஒவ்வொரு இயற்கைக் காட்சியிலும் தேவன் எவ்வளவாய் நம்மை நேசிக்கிறார், வாழ்வுக்குரிய எத்தனை பாடங்களை நமக்குக் கற்றுத்தருகிறார் என்பதை நமது உள்ளுணர்வு உணரவேண்டும்.

இப்படியிருக்க, திருமணம் இதற்கு விதி விலக்காகுமா? ‘உன்னை நித்திய விவாகத்திற்கென்று ஏற்படுத்தினேன்’ என்றும், ‘நானே உன் நாயகர்’ என்றும் அன்று தீர்க்கதரிசிகளுக் கூடாக அறிவித்த தேவன் இன்றும் மாறாதவராகவே இருக்கிறார். அநேகமாக ஒவ்வொரு திருமண ஆராதனையிலும் வாசிக்கப்படுகின்ற 1கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்தை பவுலடியார் திருமண ஆராதனைகளுக்கென்றா எழுதி வைத்தார். இல்லை, என்ன வரங்கள் நமக்கிருந்தாலும் அன்பு இல்லையானால் மனிதனே வெறுமைதான் என்றும், அன்பின் மகிமையான இயல்புகள் என்னவென்றும் அவர் எழுதியது, கிறிஸ்து நம்மில் கொண்டுள்ள அன்பு எத்தகையது என்றும், அவருடைய புதிய கட்டளைப்படி (யோவான் 13:34) நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருப்பதன் அவசியத்தை உணர்த்துவதற்குமேயாகும். ஆனாலும், இந்த வேதப்பகுதி திருமண ஆராதனையில் முக்கிய இடத்தை எடுப்பது ஏன்? கணவன் – மனைவி உறவு அத்தனை மேன்மையானது என்பதனால்தான்.

மேலும் பவுலடியார், இந்த கணவன் மனைவி விவாக உறவை, கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்குமான உறவுக்கும், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்குமான உறவை கணவன் மனைவி உறவுக்குமாக ஒப்பிட்டுக் கூறிவிட்டு, ‘இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்து வைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்’ (எபேசி.5:21-32), என்று எழுதியிருக்கிறதையும்  ‘தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்’ (வச.21) என்று ஆரம்பித்த பவுல், ‘எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவது போல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன். மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்’ (வச.33) என்று முடிக்கிறதையும் யார் கருத்தில் கொள்ளுகிறார்கள்.

இவை யாவுக்கும் முடிவைத்தாற்போல, வெளிப்படுத்தல் விசேஷத்தின் வசனத்தை, விவாகமாகி வாழுகின்ற ஒவ்வொரு தம்பதிகளும், விவாகத்தில் இணைய இருக்கிறவர்களும், விவாக எண்ணத்தில் இருக்கிறவர்களும், தங்களுக்கு ஏற்றவள் ஏற்றவன் என்று தாங்களே பெண்ணை அல்லது ஆணைத் தெரிந்தெடுத்திருக்கிறவர்களும் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும்.

“… ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.  … பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும் இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்” (வெளி.19:7-9).

இவை தேவனுடைய சத்தியமான வசனங்கள். ஒரு கலியாணம், ஒரு கலியாண விருந்து இது ஆயத்தமாயிருக்கிறது என்ற அறிவித்தல் இது. இது நித்தியத்தில் நடக்கவிருக்கின்ற ஒரு கலியாணம். நித்தியமாய் நிலைத்திருப்பதற்காக ஏற்படுத்தப்படப்போகின்ற ஒரு உறவு, ஒரு பந்தம். ஆம், ஆதியாகமம் 2ஆம் அதிகாரத்தில் தேவன் முதல் கலியாணத்தை நடத்தி வைத்தார். அதை மனிதன் கறைப்படுத்திவிட்டான். அதற்காக தேவன் மனிதனைப் புறக்கணிக்கவில்லை. தாமே மனிதனாய் வந்து, தமது திருரத்தத்தைச் சிந்தி, நம்மையெல்லாம் மீட்டு, நம்மைப் புதிய சிருஷ்டிகளாக்கி,  நாம் இழந்த தேவமகிமையை கிறிஸ்துவுக்குள்ளாக நமக்கு மீண்டும் தந்து, என்றும் பிரிக்கமுடியாத ஒரு நித்திய உறவின் நம்பிக்கையைத் தந்திருக்கிறார்.

அந்த நித்திய உறவுக்கான, ஆட்டுக் குட்டியானவருக்கும் சிலுவையில் அவர் வடித்த இரத்தத்தால் மீட்கப்பட்ட அவரது சபைக்குமான அந்த பரிசுத்த கலியாணத்துக்கும், கலியாண விருந்துக்கும், இந்த உலகில் கிறிஸ்துவின் பிள்ளைகளுடைய கலியாண வைபவமும், கலியாண விருந்துபசாரமும் சாட்சியாகவும் மாதிரியாகவும் இருக்கவேண்டும் என்பதை இன்றைய நாகரீக கிறிஸ்தவர்கள் மறந்து போனது என்ன? இந்த உலக வாழ்விலே விவாக சம்பந்தத்தையும், விவாக வைபவங்களையும், விவாக உறவையும் நாம் கறைப்படுத்தும்போது, அது அந்த நித்திய உறவையே நாம் கொச்சைப்படுத்துகிறோம் என்ற பயங்கரத்தை எவருமே சிந்திப்பதேயில்லை. காலையில் புறமத விவாக வைபவத்தை சிறப்பாக முடித்துவிட்டு, மாலையிலே தேவாலயத்திலே கிறிஸ்தவ திருமண வைபவத்தை நடத்துகிற அளவுக்கு நாம் தேவனுக்கு எதிராக கலகம்பண்ணத் துணிந்துவிட்டோம். அந்த விவாக ஆராதனையை நடத்துவதற்கும் உடை தரித்த ஆசாரியர்களும் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் துக்கத்துக்குரிய விஷயம்!

‘கண்டதே காதல், கொண்டதே கோலம்’ என்று நம் முன்னோர்கள் சொல்லுவதுபோல கிறிஸ்துவின் பிள்ளைகள் வாழமுடியாது. ‘நாம் நம்முடையவர்களல்ல’ என்று பாடித் துதிக்கின்ற நாம் யாரைத் துதிக்கிறோம். மீட்கப்பட முடியாத அசுரப்பிடிக்குள் அகப்பட்டிருந்த நமக்காக ‘பரிசுத்த இரத்தம்’ என்ற பலியைச் செலுத்தி நம்மைத் தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டவரை அல்லவா நாம் துதிக்கிறோம். அப்படியிருக்க, விவாகம் என்று வந்தவுடன் ‘நாம் உம்முடையவர்களல்ல’ என்று பாடாமல் பாடலாமா? நன்றாக ஆராய்ந்து, தேவ பாதத்தில் காத்திருந்து, எவரிலாவது நமக்கு கவர்ச்சி விருப்பம் ஏற்பட்டாலும்கூட அதையும் தேவசித்தத்துக்குள் வைத்து சிந்தித்து, தேவனுடைய வேளையிலே, பெற்றோர் பெரியவர்களுடைய மனப்பூர்வமான ஆசிகளுடன், அழகாக நேர்த்தியாக, தேவனுக்குச் சாட்சியாக, தேவனுக்கு மாத்திரமே மகிமை உண்டாகத்தக்கதாக, கலியாணத்துக்கு வருகிறவர்கள் அந்த இடத்திலே தங்களை நிறுத்திப்பார்த்து பூரிப்படைந்து தங்கள் விவாக வாழ்வையும் மறுபடியும் சீர்தூக்கிப்பார்த்து, மணமக்களையும் மனமார வாழ்த்தத்தக்கதாக நமது விவாக வாழ்வை ஆரம்பித்தோமானால் ஏன் நாம் தடுமாறவேண்டும்? தேவன் உங்களுடன் இருப்பாரல்லவா! இடர்கள் நேரிடும்; சோதனைகள் வரும். ஆனாலும் தேவாவியானவர் தாங்கிக்கொள்வார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விவாக ஆராதனையிலே அஜித் பெர்ணாண்டோ அவர்கள் சொன்னது இன்னமும் என் ஞாபகத்தில் உண்டு. “ஆலயத்திலே நிறைவேற்றப்படுகின்ற எல்லா கிறிஸ்தவ விவாகங்களும் பரிசுத்த விவாகங்கள் அல்ல. கிறிஸ்துவின் இரத்தத்தாலே மீட்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் தேவ சித்தப்படி இணைந்து ஏறெடுக்கும் விவாக ஆராதனைதான் பரிசுத்த விவாகம் என்று அழைக்கப்படும்” என்றார் அவர். இன்று நாம் என்ன சொல்லப்போகிறோம்? இணையத்தளங்களுக்கும், முகப்புத்தகங்களுக்கும் (Facebook) இன்று முக்கிய இடமளித்துவிட்ட இளம் சமுதாயம், விவாகத் தெரிவுக்கும் அதே இணையத்தளத்தை நாடி நிற்கிறது என்பது கிரகிக்க முடியாத ஒரு விஷயம். எல்லாவற்றையும் தீர்மானித்துவிட்டு, பெற்றோரிடமும், தேவனிடமும் வருவதுதான் இன்றைய நாகரீகமா?

‘வாழ்க்கை என்னுடையது’ என்று மார்தட்டும் வாலிபரே, இந்த வாழ்க்கை உங்களுடையது அல்ல. இது தேவன் உங்களுக்குத் தந்த ஒரு ஈவு. நீங்கள் மீட்கப்பட்டவர்கள் என்பது மெய்யானால், நீங்கள் உங்களுக்கே சொந்தமானவர்கள் அல்ல. இணையத்தளமும் முகநூலும் தேவனாக முடியாது. அப்படியிருக்க உங்கள் வாழ்க்கைத் துணைத் தெரிவில் யாருக்கு முதலிடம் கொடுக்கப்போகிறீர்கள்?

‘இந்தக் காலத்துப் பிள்ளைகளுடன் எதுவும் செய்ய முடியாது’ என்று தப்பித்துக்கொள்ளப் பார்க்கும் பெற்றோரே, தேவனுடைய ஸ்தானத்தில் நின்று தேவன் உங்களுக்கு கிருபையாக ஆசீர்வாதமாகத் தந்த பிள்ளைகளைக் குறித்த உங்கள் பொறுப்பிலிருந்து நீங்கள் விலகுவீர்களானால், இறுதி நாளில் அல்ல; இந்த உலக வாழ்விலேயே தேவனுக்கு பொறுப்புக் கூறவேண்டியது ஏற்படாது என்று சொல்லுவதற்கில்லை. சிந்தியுங்கள்.

தேவனுடைய நியாயாசனம் ஆயத்தமாய் இருக்கிறது என்பதையும், காலம் குறுகிவிட்டது என்பதையும் மறவாதிருக்க தேவ ஞானத்தைக் கேட்டு ஜெபிப்போமாக!

சத்தியவசனம்