விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

Dr.தியோடர் எச்.எஃப்
(செப்டம்பர்-அக்டோபர் 2016)

5. சர்வாயுத வர்க்கம் பற்றிய விளக்கம்  (எபேசி. 6:14-17)

முழுச் சர்வாயுத வர்க்கத்தையும் விசுவாசிகளிடம் “தரித்துக்கொள்ளுங்கள்” என்றும் (எபே.6:11) “எடுத்துக்கொள்ளுங்கள்” (எபே. 6:13)  என்று கூறியபின் பவுல் இந்தச் சர்வாயுத வர்க்கங்களை ஒவ்வொன்றாய் வசனங்கள் 14 முதல் 17 வரை விவரிப்பதைக் காண்கிறோம்.

சத்தியம் என்னும் கச்சை

சர்வாயுதவர்க்கத்தில் முதல் பகுதியாகக் குறிப்பிடப்பட்டிருப்பது “சத்தியம் என்னும் கச்சை” ஆகும். வசனம்-14இல் “சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்…” என்று கூறப்பட்டுள்ளது.

சத்தியத்தைக் குறித்து இயேசு இவ்வாறு கூறினார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவா.14:6) இயேசு சத்தியத்தின் முழு உருவமாக இருக்கிறபடியால், “சத்தியத்தை உங்கள் அரையில் கட்டிக்கொள்ளுங்கள்” என்று கூறும்போது, “இயேசுகிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள்” என்று பொருள் (ரோமர் 13:14). இயேசு தேவனாயிருக்கிறபடியால், அவர் சத்தியத்தின் முழு உருவமாகக் காட்சியளிக்கிறவர்.

இயேசுகிறிஸ்து சத்தியமாக இருப்பது மாத்திரமல்ல, தேவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றுமே சத்தியமானவை. இயேசு தமது வார்த்தைகளைக் குறித்து தேவனிடத்தில் இப்படி வேண்டுகிறார்: “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17:17). கிறிஸ்துவே “ஜீவனுள்ள வார்த்தை”. வேதாகமம் “எழுதப்பட்ட வார்த்தை”. இவை இரண்டும் சேர்ந்து விசுவாசிக்கு உறுதியான அரைக் கச்சை ஆகிறது.

சாத்தானுடைய தாக்குதல்களிலிருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், நமக்கு இயேசுகிறிஸ்து இரட்சகர் என்று தெரியவேண்டும். நாம் வேத வசனங்களின் உண்மையான மாணவர்களாக இருக்கவேண்டும். எழுதப்பட்டிருக்கும் வார்த்தை நம்மை வாழும் ஜீவவார்த்தைக்கு வழிநடத்துகிறது. உண்மையாக வேதப் பகுதிகளையும், வசனங்களையும் நாம் அறிந்திருந்தால், நாம் செய்யும் எல்லாக் காரியங்களிலும் தேவனைப் பிரியப்படுத்த விரும்புவோம்.

சங்கீதக்காரன் சொல்வதைப் பாருங்கள்: “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங்கீதம் 119:11). இது ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் கர்த்தருடைய வசனத்தின் வல்லமையைக் காட்டுகிறது. எபிரெயர் 4:12 இல் “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத் தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று பார்க்கிறோம்.

ஜீவ வார்த்தையும், எழுதப்பட்ட வார்த்தையும் தேவனுடைய வல்லமையாய் இருக்கின்றன. நம்முடைய ஆசையும், விருப்பமும் பவுலுடையதைப் போல இருக்கவேண்டும். அது இயேசுகிறிஸ்துவையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பற்றி அறிதல் (பிலி.3:10). அநேக வேத வசனங்களில் தேவவல்லமை குறிப்பிடப்பட்டுள்ளன.

பவுல் கூறினார்: “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோ.1:16). 1கொரி.1:24 கூறுகிறது: “ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்”.

2கொரி.6:3 முதல் 7 வசனங்களில் பவுல் இப்படிக் கூறியிருக்கிறார்: “எல்லாக் காரியங்களிலும் எங்களை தேவனுடைய ஊழியர்களாய் ஏற்றுக்கொண்டு… சத்திய வார்த்தையின் மூலமும்… தேவனுடைய வல்லமையினாலும், வலது கரத்திலும், இடது கரத்திலும் நீதி என்னும் சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொண்டும்…”. “சத்தியம் என்னும் கச்சையை நமது இடுப்பில் கட்டிக் கொள்ளுதல்” என்பது, ஜீவவார்த்தையும், எழுதப்பட்ட தேவவார்த்தையும் நம் வாழ்வைக் கட்டுப்படுத்துவதைக் காட்டுகிறது. சத்தியத்தை நேசித்து, அதன்படி வாழ்கிறவன் உறுதியான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்பவனாவான்.

அப்படிப்பட்டவன் “…மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிறவர்களாய்” இருக்கமாட்டான் (எபேசியர் 4:14).

ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தைக் குறித்துப் பவுல் விசுவாசிகளுக்கு எழுதும்போது, அவன் சிறைச்சாலையில் இருந்து எழுதிக்கொண்டிருந்தான். அந்நேரத்தில் அவன் ஒரு ரோமப் போர் வீரனோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்திருப்பான். ஒரு போர் வீரனின் அரைக்கச்சை ஒரு அலங்காரப் பொருளல்ல. அது அவன் அணிந்திருக்கும் பல உடைகளையும் அதனதன் இடத்தில் சரியாக இருக்கும்படி சேர்த்து இணைத்துக் காக்கும் ஒரு உபகரணம் ஆகும். அப்பொழுதுதான் அவன் முழுச் சுதந்தரத்துடன் போரில் ஈடுபட முடியும். ஒரு விசுவாசி சத்தியம் என்னும் அரைக் கச்சையைக் கட்டியிருத்தல் என்பது, அவன் ஜீவ வார்த்தையையும், எழுதப்பட்டிருக்கும் வேத வசனங்களையும் தனது இருதயத்தில் வைத்திருக்க வேண்டும். அதன்மூலம் அவன் சாத்தானின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியும்.

நீதி என்னும் மார்க்கவசம்

பவுல் கூறிய சர்வாயுதவர்க்கத்தில் இரண்டாவது பாகம் “நீதியென்னும் மார்க்கவசம்” ஆகும் (எபேசியர் 6:14). மார்க்கவசம், ரோமானியப் போர்வீரர்களால் தங்கள் சரீரத்தின் மேற்பகுதியைப் பாதுகாக்க அணிந்து கொள்வதாகும். அது அவனுடைய சரீரத்தின் முன் பகுதியையும், பின் பகுதியையும் மூடிக்கொள்ளும். இதன்மூலம் சரீரத்தின் உட்பாகத்தில் இருக்கும் இருதயம், நுரையீரல், கல்லீரல், இரைப்பை போன்ற முக்கிய உறுப்புக்கள் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த உலகப்பிரகாரமான மார்க்கவசம் பவுலுக்கு மிக முக்கியமானதாகத் தெரிந்தது. இது ஒவ்வொரு விசுவாசியும் அணிந்துகொள்ள வேண்டிய ஆவிக்குரிய மார்க்கவசமாக இருக்க வேண்டும். சாத்தானின் சதித் திட்டங்களிலிருந்து விசுவாசியைக் காக்க தேவன் அமைத்த பாதுகாப்பு அமைப்பே இந்த மார்க்கவசமாகும். ஒரு போர் வீரனின் இருதயத்தை அவன் அணிந்திருக்கும் உலோக மார்க்கவசம் பாதுகாப்பதுபோல, விசுவாசியின் இருதயத்தை அவன் அணிந்திருக்கும் ஆவிக்குரிய மார்க்கவசம் பாதுகாக்கும்.

வேதாகமம், இருதயம் உணர்ச்சிகளின் இருப்பிடம் என்று கூறுகிறது. சாத்தான் விசுவாசியின் உணர்ச்சிகளைத் தாக்கி, அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் ஆகியவற்றைத் தன்பக்கம் இழுத்துக்கொள்ளுகிறான். எனவே அவன் தேவனைவிட்டுத் தூர விலக்கப்பட்டு விடுகிறான். மனிதனின் ஆசைகளையும், விருப்பங்களையும் உலகப் பொருட்கள் மீது திருப்பிவிட்டு விடுகிறான். விசுவாசி கிறிஸ்துவின் நீதி என்னும் மார்க்கவசத்தை அணிந்துகொண்டு, விசுவாசத்தின்மூலம் கிறிஸ்துவின் நீதியின் மேல் சார்ந்துகொள்வானானால், அதை அவனது மார்க்கவசமாக அணிந்துகொள்வானானால், அவன் தன்னைச் சாத்தானின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். இயேசுகிறிஸ்துவின் நீதியினால்தான் நாம் தேவனோடு நிலைத்து நிற்கமுடியும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

வேதாகமம் கூறுகிறது: “அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1கொரி. 1:30,31). இயேசுகிறிஸ்து விசுவாசிக்கு நீதியாக்கப்பட்டிருக்கிறார்.

நாம் தேவனுக்கு முன்பாக நிற்பது நமது நீதியினால் அல்ல. அவருடைய நீதியினாலேயே என்பதை ரோமர் 4:5இல் பார்க்கிறோம். “ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்”.

நாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது நம்மீது வைக்கப்படும் கிறிஸ்துவின் நீதியைச் சாத்தான் ஒன்றும் செய்யமுடியாது. இந்த நீதி மட்டுமே எவ்வகையிலும் காயப்படுத்த முடியாத உறுதியான கவசத்துக்குள் இருக்கிறது. சாத்தான் எய்யும் அம்புகள் அதை ஒன்றும் செய்யமுடியாது. ஏனெனில் நம்மீது வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவின் நீதி இதுவே. நம்முடைய நீதியினால் அல்ல, கிறிஸ்துவின் நீதியினால் நாம் தேவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக இருக்கிறபடியால், சாத்தான் நம்மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினாலும் நாம் பயப்பட வேண்டியதில்லை. இருந்தபோதிலும் நம்முடைய நடத்தையின் அடிப்படையில் சாத்தான் நம்மைத் தாக்குவான். நாம் தேவனோடுள்ள உறவை இழந்து விட்டோம் என்று நம்பச் செய்து நம்மைச் சோதிப்பான். வேதாகமத்தில் எழுதப்பட்ட வசனங்களை நாம் உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கிறவரைக்கும் சாத்தானுடைய தாக்குதல்கள் பலங்கொண்டவையாக இருப்பதில்லை. இது தேவனுக்கு முன்பாக நம்முடைய நிலையை உறுதிப்படுத்தட்டும்.

கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் தோல்வி அடைவோமானால், சில தடவைகளில் நாம் வழிதவறிவிடுவோமானால், கிறிஸ்துவுக்குள் நமது நிலை மாறுவதில்லை. காரணம் என்னவென்றால், நம்முடைய நிலை, நாம் செய்திருக்கிற நன்மையான காரியங்களின் அடிப்படையில் அல்ல, அல்லது நமது கீழ்ப்படிதல் காரணமாகவும் அல்ல, கிறிஸ்து நமக்காகச் செய்து முடித்திருக்கிறவைகளின் அடிப்படையிலேயே இருக்கிறது. எனவேதான் நம்முடைய நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டு சாத்தான் நம்மீது குற்றச்சாட்டுக்களை தேவனுக்கு முன்பாகக் கூறும்போது, நாம் தேவனுடைய சமுகத்தைவிட்டு விலக்கப்பட முடியாது. ஏனெனில் நாம் கிறிஸ்துவின் நீதியினால் அங்கு நிற்கிறோம்.

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்