ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

நவம்பர்-டிசம்பர் 2016

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் அன்பின்  வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழின் வாயிலாக உங்களை சந்திக்க தேவன் தந்த வாய்ப்பிற்காக தேவனைத் துதிக்கிறோம்.  இவ்வருடத்தின் இறுதிக்கு வந்திருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் தேவன் பாராட்டின கிருபைக்காக நன்றி செலுத்துகிறோம். இம்மட்டும் நம்மை வழிநடத்தின ஆண்டவர் இனியும் நம்மை நடத்துவார். நம் தேசத்தில் நிகழ்ந்து வருகிற அசாதாரண சூழ்நிலைகளை மனதிற் கொண்டவர்களாய் தேசத்தின் சமாதானத்திற்காகவும் அமைதிக்காகவும் 1தீமோத்.2:1-3ஆம் வசனத்தின்படி வேண்டுதல் செய்வோம்.

இவ்வருட கிறிஸ்துமஸ் கீத ஆராதனை திருநெல்வேலி, பெருமாள்புரத்திலுள்ள மார்கன் ஹாலில் டிசம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடத்த ஒழுங்குசெய்துள்ளோம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பங்காளர்கள் இக்கூட்டத்தில் குடும்பமாய் கலந்துகொள்ள அன்பாய் அழைக்கிறோம்.

மேலும் சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் நவம்பர் மாதத்திலிருந்து திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் காலை 7 மணிக்கு மத்திய அலைவரிசை MW 873 Khz இல் தெளிவாக  ஒலிபரப்பாகி வருகிறது என்பதை அறியத் தருகிறோம். இதற்காக ஜெபித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

இவ்விதழை கிறிஸ்துமஸ் சிறப்பிதழாக வெளியிடுகிறோம். ஒரு இருண்ட காரிருளில் இயேசுகிறிஸ்து எவ்வாறு மகிமையின் ஒளியாக இவ்வுலகில் வந்தார் என்பதை வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் முன்னாள் வானொலி செய்தியாளர் போதகர் டோனி பெக்கெட் அவர்கள் தனது செய்தியில் விளக்கியுள்ளார்கள். சத்திய வசன செய்தியாளர் பேராசிரியர் எடிசன் அவர்கள் நித்திய பிதாவாக நம் மத்தியில் இயேசு பிறந்ததன் அற்புதத்தையும் அதினால் நாம் அடைந்த பாக்கியத்தையும் எடுத்துக்காட்டியுள்ளார். உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்று சாட்சியளித்த சிமியோனின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அருமையான சத்தியத்தை Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

இக்கிறிஸ்துமஸ் காலத்தில் அதின் பாரம்பரியத்தைப் பற்றியும் நாம் பிரதானமாக நினைவுகூரவேண்டிய சத்தியங்களைக் குறித்தும் நம்முடைய கொண்டாட்டங்கள் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டிய அவசியத்தைக் குறித்தும் சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், வேத ஆராய்ச்சியாளர் வசந்தகுமார் அவர்களும் எழுதிய சிறப்புச் செய்திகள் இடம் பெற்றுள்ளது.  இச்செய்திகள் அனைத்தும் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நேயர்களுக்கும், பங்காளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் வாசகர் அனைவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்கள் சார்பாகவும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்