காரிருளில் தோன்றிய மகிமையின் ஒளி!

Rev.டோனி பெக்கெட்
(நவம்பர்-டிசம்பர் 2016)

சங்கீதம் 23 மற்றும் யோவான் 3:16 போன்ற சில வேதபகுதிகள் எந்த அறிமுகமும் தேவைப்படாமல் தனித்து நின்று அனைவராலும் விரும்பப்படத்தக்கதாக உள்ளன. இந்த இதழில் கிறிஸ்துமஸ் நிகழ்வுடன் இணைந்து சிறுவர்களும் புரிந்துகொள்ளும்படியாக மகிழ்வினைத் தரும் லூக்கா எழுதின நற்செய்தியிலுள்ள 2ஆம் அதிகாரத்தை நாம் விரிவாகக் காண்போம்.

மேய்ப்பர்கள் ஒரு வயல்வெளியில் கூடி நின்றதையும், அந்த இரவின் இருளின் மத்தியில் பிரகாசித்த மேன்மையான ஒளியையும் நமக்கு அப்பகுதி காண்பிக்கிறது: “அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.

அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். தேவ தூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்” (லூக்.2:8-20).

மேய்ப்பனின் தொழில் நாம் நினைக்கிறபடி எளிதானதல்ல. இரவு நேரம் அவர்களுக்கு உறங்கும் நேரம் அல்ல; அது விழித்திருக்கும் நேரமாகும். தனிமையில் இரவைக் கழிக்க வேண்டியதே மேய்ப்பனின் பணியாகும். தூங்கும் மந்தைகள் விழித்தெழாமலும் அவைகள் அங்குமிங்கும் நடமாடாமலும் கவனித்துக்கொள்ள வேண்டும். மறைமுகமான கொள்ளையர்களும் கொடிய விலங்குகளும் தாக்காதபடி அவைகளுக்குக் காவல் இருக்கவேண்டும். இவ்வாறாக அன்றும் சில மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளைக் காத்துக் கொண்டிருந்தபொழுது கர்த்தருடைய தூதன் இரவில் அவர்களுக்குக் காட்சியளித்தார். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் பயந்ததில் வியப்பொன்றுமில்லை. மனிதர்கள் தேவதூதனைக் காணும் வேளையில் கூறுகின்ற “பயப்படாதிருங்கள்” என்ற வார்த்தையையே இந்த தூதனும் விளம்பினார். மேலும் “இதோ நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்றார்.

இன்றும் நமக்கு நற்செய்தி தேவைப்படுகிறதல்லவா? நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் கூறப்படுபவை நல்ல செய்திகளாக இருப்பதில்லை. இவ்வருடத்தின் இறுதியில் நாம் கேள்விப்படுபவை யாவும் விரும்பத்தகாதவைகளே. அறிவிப்பதற்கு நல்ல செய்திகள் இல்லாமையால் அவைகள் கெட்ட செய்திகளையே திரும்பத்திரும்ப ஒளிபரப்புகின்றன. ஆனால் வேதாகமத்தின் இப் பகுதியில் தேவன் கூறுவது: “உங்களுக்கு நான் நற்செய்தியை வைத்திருக்கிறேன்” என்பதாகும். இந்த நற்செய்தியை நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருக்கிறோம். அந்த நற்செய்தியானது, “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்பதாகும்.

இந்த வசனத்தை வாசிக்கும்பொழுது நான் என் எண்ணவோட்டத்தை இங்கு சிறிது நேரம் நிறுத்திவிடுவேன். அதைத் திரும்பத் திரும்ப என் சிந்தையில் நிறுத்தி தியானிப்பேன். சிலவேளைகளில் மக்கள் இயேசுவைப் பற்றி சிறு குழப்பமடைவதுண்டு. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று நாம் சொல்லும் பொழுது அது அவரது மூன்று பெயர்கள் என்று எண்ணிக்கொள்ளுகின்றனர். ஆனால் நாம் அவ்வாறு கூறப்போவது இல்லை. அவை மூன்று வார்த்தைகள். அவருடைய பெயர் இயேசு என்பதாகும். ஆனால் கர்த்தராகிய இயேசு  கிறிஸ்து என்னும் பொழுது அது அவரது சிறப்பு அடைமொழிகள் எனக் காண்கிறோம். இங்கு தேவதூதர் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை; மாறாக அவரது சிறப்புப் பெயர்களையே அறிவிக்கிறார். இவை மூன்றும் அற்புதமான அடைமொழிகளாகும்.

இரட்சகர்

நமக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னும் ஓர் இரட்சகர் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்களில் ஒருவரான ஜி.காம்ப்பெல் மார்கன் என்பவர் “அவர் பாவத்தை எதிர்க்கும் இரட்சகர்” என்று குறிப்பிட்டுள்ளார். இரட்சகர் என்பதன் பொருளை அறிந்துகொள்ள மேலும் இரு காரியங்களை நாம் ஆராய்வோம்.

Soter என்ற கிரேக்க சொல்லிலிருந்து Savior – இரட்சகர் அல்லது மீட்பர் என்ற சொல் வந்துள்ளது. அதாவது இச்சொல் ‘பாதுகாவலர்’ என்ற பொருளைக் குறிக்கிறது. மேலும் விடுதலையாக்கும் வல்லமையான செயலையும் அதன் விளைவையும் இது அறிவிக்கிறது. விடுதலையின் விளைவு யாதெனில் பாதுகாப்பளிப்பதாகும். இங்கு இச்சொல் தேவனை இரட்சகராக விவரிக்கிறது.

ஏசாயா 25 மற்றும் 33ஆம் அதிகாரங்களும் தேவனை இரட்சகராக சித்தரிக்கிறது. லூக்கா 1:47இல் மரியாள் “என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது” என்று கூறுகிறார். இங்கு இரட்சகர் என்ற சொல் தேவனைக் குறிப்பிடுகிறது. லூக்கா 2ம் அதிகாரத்தில் அது இயேசுகிறிஸ்துவைக் குறிப்பிடுகிறது. இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாட்களில் யூதர்கள் தங்களை விடுதலையாக்கும் ஒரு இரட்சகரை எதிர்பார்த்தனர். ரோம ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுதலையாக்கி இரட்சிக்கும் அரசியலைச் சார்ந்த ஒருவரைத் தேடினர்.

ஆனால் தேவனோ தமது தீர்மானத்தின் படியும் திட்டத்தின்படியும் தம்முடைய அரசை நிர்ணயிக்கவிருப்பதை அறிந்திருந்தார். அது புதிய வானமும் புதிய பூமியும் உள்ள விண்ணரசாகும். ஆனால் இயேசு வெள்ளை குதிரையின் மீதேறி ரோம அரசினை எதிர்த்து அதனை கவிழ்த்து வெற்றி பெறும் ஒரு தலைவராக வரவில்லை. மனுக்குலம் அனைத்தையும் பாவத்திலிருந்தும் அதன் தண்டனையிலிருந்தும் அதன் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலையையும் தந்த இரட்சகராக அவர் வந்தார்.

மேய்ப்பர்களுக்கு இந்த நற்செய்தியை அறிவித்த வான்தூதர்கள் அவரை “இரட்சகர்” என அறிமுகப்படுத்தினர். அவர் உங்கள் இரட்சகராக இருக்கிறாரா? என்று இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நான் உங்களிடம் கேட்கிறேன். ஜி.காம்ப்பெல் மார்கன் என்பவர் “அவர் பாவத்தை எதிர்க்கும் இரட்சகர்” என்று குறிப்பிட்டுள்ளார். பாவத்தின் தண்டனையிலிருந்தும் அதன் வல்லமையிலிருந்தும் அவர் தரும் மகத்தான விடுதலையை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா?

கிறிஸ்து

கிறிஸ்துவாக அவர் குழப்பங்களை நீக்குகிறார். ஞாயிறு பாடசாலையில் நான்கு வயது குழந்தைகளின் வகுப்பில் ஆசிரியர் இல்லாதபொழுது கூச்சலும் குழப்பமுமாக இருக்கும். அனுபவமில்லாத ஆசிரியரால் அவர்களை ஒன்று  திரட்டவோ அமைதியாக அமரச்செய்யவோ இயலாது. ஆனால் அவர்களை ஒழுங்குக்குக் கொண்டுவரும் ஆசிரியர் அவ்வகுப்பின் ஆளுகையைப் பெறுவார். இவ்வுலகமும் அதுபோலவே குழப்பத்தில் உள்ளது. எனவே இக்குழப்பத்தை அகற்றி அமைதி பெறச் செய்யும் ஒருவர் இவ்வுலகிற்குத் தேவை. தீர்க்கர்கள் உரைத்தபடி ஒருநாள் வரும்; அந்நாளில் ஒருவர் “நானே அந்த மனிதன்; என்னால் முடியும்” என்று கூறுவார். ஆனால் அவர் இயேசு அல்லர்; அவர் அந்திக்கிறிஸ்து ஆவார்.

அத்தீர்க்கத்தரிசனங்களை இன்னும் ஆராய்ந்து பார்த்தால் அந்திக்கிறிஸ்துவின் ஆளுகை தற்காலிகமானது என்றும் கிறிஸ்துவின் ஆளுகைமட்டுமே நித்தியமானது என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம். கிறிஸ்து என்ற சொல் கிறிஸ்டோ (Christo) என்ற கிரேக்க சொல்லாகும். இதன் பொருள் ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ என்பதாகும். பழைய ஏற்பாட்டில் இது  Mishchah என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நாம் மேசியா என்று உச்சரிக்கிறோம். எனவே கிறிஸ்து என்பதும் மேசியா என்பதும் ஒரே பொருளைக் கொண்டுள்ளது. ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் அரசர்கள் பலர் அபிஷேகம் பண்ணப்பட்டனர். ஆனால் மேசியா என்கிற வார்த்தை ஒரு பரிபூரண அரசருக்கு மாத்திரமே உரியதாகும்.

அதாவது அவர் தாவீதின் சிங்காசனத்தில் அமருவார். அதில் என்றென்றும் அரசாளுவார். மேலும் அவ்வார்த்தையானது வாக்களிக்கப்பட்ட மாபெரும் இரட்சகருக்குப் பொருந்தும். அது இயேசுவுக்குப் பொருந்தும். அவர் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார். “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்று தேவதூதர் சொன்னதன்  பொருள் “மேசியா வந்துவிட்டார்” என்பதாகும். மத்தேயு 16, மாற்கு 14 மற்றும் யோவான் 4 ஆகிய அதிகாரங்களில் இயேசு இந்த சிறப்புப் பட்டத்தை ஏற்றுக்கொண்டார். மனுக்குலத்துக்கு தேவனுடைய திட்டத்தையும் பழைய ஏற்பாட்டில் தேவன் தம்முடைய மக்களுக்கு வாக்களித்த “தாவீதின் சிங்காசனத்தைஸ்தாபிப்பேன்” என்பதையும் நாம் நோக்குவோமானால் இயேசுவே கிறிஸ்து என்பது தெளிவாகப் புரியும்.

விண்தூதர்கள் ஆட்டிடையர்களுக்கு “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்துள்ளார். அவர் அனைத்து குழப்பங்களையும் தீர்த்து வைப்பார்” என்று கூறினது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. இன்றைய செய்தித்தாள், தொலைக்காட்சி ஆகியவைகளில் மிகுந்த குழப்பத்தையும் கொலைகள், கொள்ளைகள், யுத்தங்கள், வன்முறைகள், இவ்வுலகத்தையே பிரிவினைப்படுத்தும் காட்சிகள் ஆகியவைகளே காணப்படுகின்றன. ஆனாலும் இவை அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்து அவரது எதிர்பார்ப்பு, திட்டங்கள் ஆகியவற்றை  நிறைவேற்றி அவருடைய இராஜ்யத்தை நிலைநாட்டும் கிறிஸ்து என்னும் இயேசு உள்ளார். தூதர்கள் தங்களது பாடலில் “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்” என்ற வரியை மிகவும் சத்தமாகப் பாடியிருப்பார்கள் என்று C.H.ஸ்பர்ஜன் கூறியுள்ளார்.

கர்த்தர்

எஜமான் அல்லது உரிமையாளர் என்பதன் கிரேக்க வார்த்தை  Kurios என்பதாகும். இது அதிகாரத்தையும் வல்லமையையும் குறிக்கும் சொல்லாகும். லூக்கா 1:46இல் மரியாள் “என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது” எனக் கூறுகிறார். இங்கு அவர் பிதாவாகிய தேவனை Kurios எனக் குறிப்பிடுகிறார். இவ் வார்த்தை இயேசுகிறிஸ்துவுக்கும் பொருந்தும்.

எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் சங்கீதம் 110:1 மேசியாவைக் குறிக்கிறது. அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்தில் காணப்படும் பேதுருவின் பிரசங்கத்திலும் அது இயேசுகிறிஸ்துவையே சுட்டிக்காட்டுகிறது (வச.34). இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாம் காணும் அரசாங்கம், சூழ்நிலைகள் மற்றும் செயல்பாடுகள் வித்தியாசமாகக் காணப்படுகின்றன. இயேசுவை கர்த்தராகிய ஆண்டவர் என்று அழைப்பது நமது கிறிஸ்தவ நம்பிக்கையையும் தேவனுடைய வார்த்தையையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் இயேசுவின் காலத்தில் அது இராயனுடைய சாம்ராஜ்யத்தை எதிர்ப்பதைக் காட்டியது. அக்காலத்தில் ரோமர்களே யூதர்களை ஆட்சி செய்தனர், ஆனால் தேவனோ தூதர்களிடமும் மேய்ப்பர்களிடமும் நம்மிடமும் “இந்த குழந்தையே மீட்பினை அளிக்கும் இரட்சகர்; அனைத்து குழப்பங்களையும் சீர்செய்யும் கிறிஸ்து என்னும் ஒரு பூரண அரசர் தாவீதின் சிங்காசனத்தின் மீது அமர்ந்து அனைத்தையும் அரசாளுவார்” என்று கூறியுள்ளார்.

எனவே கர்த்தர் என்று நாம் சொல்லும்பொழுது சொல்லின் முழு பொருளையும் அறிந்து கொள்ளவேண்டும். கிறிஸ்தவர்கள் இச்சொல்லை இயேசுகிறிஸ்துவுக்கு மாத்திரமே பயன்படுத்தலாம். ஏனெனில் அவரே அனைத்துக்கும் ஆண்டவர்.

பிலிப்பியர் 2:5,8இல் இயேசுகிறிஸ்துவின் தாழ்மையைப் பற்றி அப்.பவுல் கூறியுள்ளார்: “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்”. இயேசுவின் தாழ்மையே நமக்கு சிறந்த உதாரணமாகும். “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலி.2:9-11) என்று நாம் வாசிக்கிறோம்.

ஆம்! ஒரு நாளில் இயேசுவே ஆண்டவர் என்று அனைவரும் அறிக்கை பண்ணியே ஆகவேண்டும். பெத்லகேமின் முன்னணையில் பிறந்த குழந்தையே இரட்சகர், கிறிஸ்து ஆண்டவர் என்பதை இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டும், அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்வது மாத்திரமல்ல; நம்மை அவருக்கு அர்ப்பணித்து கிறிஸ்துவாகிய அவருக்கு நாம் சேவை செய்யும் நாளை எதிர்பார்த்திருக்க வேண்டும்.

மேசியாவின் வருகைக்காகக் காத்திருந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள், இயேசுவுடன் வாழ்ந்த புதிய  ஏற்பாட்டு பக்தர்கள், தங்களது விசுவாசத்தை நமக்கு வைத்துச் சென்ற ஆதித் திருச்சபையினர் ஆகியோரை நான் பார்க்கும்பொழுது வேதாகமத்தை ஒரு புத்தகமாக என்னிடத்தில் வைத்திருப்பதில் அல்ல, அதை வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதே முக்கியமானதாய்த் தெரிந்து கொண்டேன். மானிடனாய் இவ்வுலகில் வாழ்ந்து என்னுடைய பாவங்களுக்காக இயேசு மரித்தார், அவர் மூலமாய் மாத்திரமே எனக்கு பாவமன்னிப்பு கிடைக்கும் என்ற விசுவாச இருதயம் நமக்கு அவசியம். சகரியா நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுக்க வந்தார் (லூக்கா 1:74,75)என்று இயேசுவைக் குறித்து முன்னுரைத்தார்.

எனக்கு அன்பானவர்களே, பணி செய்வது என்ற சொல்லின் கிரேக்க வார்த்தை ‘latreuo’ இதனை ஆராதனை என நாம் மொழி பெயர்க்கலாம். நமக்கு பிரியமான பாடலைப் பாடுவதும் கேட்பதும் ஆராதனையாகாது. அவருடைய பணியினை செய்வதே உண்மையான ஆராதனை. பிதாவாகிய தேவனை இயேசுவின் மூலமே நாம் பயமில்லாமல் ஆராதிக்க முடியும். பரிசுத்தத்தோடும்  நீதியோடும் நாம் தேவனை ஆராதிக்கவேண்டும். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் தேவனுடைய மகிமை நமக்கு வெளிப்பட்டது. இயேசுகிறிஸ்து இன்றும் நம்மில் ஜீவிக்கிறார்.

“நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” (1 பேதுரு 2:9).

பாவக்காரிருளில் வாழ்ந்த நம்மை இரட்சித்து பிரகாசிக்கும் மகிமையின் ஒளிக்குள் நடக்கும் நாம் பிறரையும் அந்த ஒளிக்குள் நடத்துவோமா!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்