நித்தியப் பிதா

பேராசிரியர் எடிசன்
(நவம்பர்-டிசம்பர் 2016)

 இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் வாசகர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.

“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானப்பிரபு என்னப்படும்” (ஏசா.9:7). இந்த வசனத்திலே நாம் கிறிஸ்துவுக்குரிய நாமங்களை தியானிக்கிறோம்.  இந்த அதிகாரத்தின் முதல் ஏழு வசனங்களை வாசித்தால்தான் அந்த நாமங்களின் பின்னணி என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும்.

“ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார். இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள். மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின் மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர். அமளியாய் யுத்தம் பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்…. தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும் (ஏசா.9:1-7).

‘நித்திய பிதா’ என்றால் அதற்கு நித்தியத்திற்கு பிதா என்று ஒரு அர்த்தத்தையும் கொடுக்கலாம். அவர் பிதாவாயிருப்பதனால் அவர் ஆரம்பமும் முடிவும் இல்லாத நித்திய பிதா! நான் அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறேன் என்றார். துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார். ஆதியும் அந்தமும் அவர். ஆகவே அவர் நித்திய பிதா. தமது பிள்ளைகளுக்கு அவர் பிதாவாகவே என்றைக்கும் இருக்கிறார். அவரில் மாறுதல் இல்லை. அவருடைய மனதுருக்கம் மாறவில்லை. அவருடைய குணங்கள் மாறவில்லை. அவர் என்றைக்கும் அன்பு செலுத்துகிற ஒரு பிதாவாகவே நித்திய நித்தியமாய் அவர் நம்மோடு இருப்பார். அதைத்தான் நித்திய பிதா என்று சொல்லி இருக்கிறது. இந்த வசனத்தை யாருக்குச் சொன்னார்கள் என்று பார்த்தால் இருளில் இருக்கும் ஜனங்களுக்கு என்று வாசிக்கிறோம். நியாயப்பிரமாணம் பாவம் இன்னதென்று வகையறுத்ததேயொழிய பாவத்தினின்று மீட்பு பெறவோ, பாவ மன்னிப்பு பெறவோ நியாயப்பிரமாணத்தில் வழியேயில்லை. அதனால் ஒருவனும் நியாயப்பிரமாணத்தினால் நீதிமானாக முடியவில்லை. பாவ இருளில் இருந்தார்கள். நரக ஆக்கினைக்கு பாத்திரராக இருளில் இருந்தார்கள். ஆனால் இயேசு பிறந்தபொழுதோ, அவர் சொன்னார்: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று. சுவிசேஷத்தின் ஒளி அந்த ஜனங்களுக்கு இயேசு பிறந்தபொழுது வந்தது. பாவமன்னிப்பிற்கான ஒரு வழி வந்தது. திமிர் வாதக்காரனைப் பார்த்து, மகனே உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று இயேசு சொன்னார். நாகமான் யோர்தான் நதியில் ஏழு தரம் முங்கினபோது, அவன் மாம்சம் குழந்தையின் மாம்சத்தைப்போல் ஆனதேயொழிய, அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக அங்கு சொல்லப்படவில்லை. ஆனால் இயேசு பிறந்து கலிலேயாவிலே ஊழியம் செய்த பொழுதோ பாவமன்னிப்பாகிய சுவிசேஷ ஒளி வந்தது. அதைத்தான் இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். அது இரட்சிப்பின் ஒளி ஆகும்! ஆகவேதான் நித்தியபிதா அவர் நித்தியகால முதலாக இந்த இரட்சிப்பை திட்டம்பண்ணி தம்முடைய குமாரனை பலியாக அனுப்பவேண்டும் என்று தீர்மானித்து அவரை அனுப்பினார்.

முதலாவதாக, நித்திய பிதா இருளில் இருக்கிற ஜனங்களுக்கு வெளிச்சத்தை உதிக்கப்பண்ணினார். பாவத்தில் சிக்கியிருந்தவர்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைத்தது. நம்பிக்கையற்ற இருளில் இருந்தவர்களுக்கு பரலோகத்தின் நம்பிக்கை கிடைத்தது. இரட்சிப்பின் நம்பிக்கை தந்தது. வெளிச்சத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

இரண்டாவதாக, அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; (ஏசா.9:3). நித்திய பிதா ஒரு பெருக்கத்தைக் கட்டளையிட்டார், மகிழ்ச்சியைப் பெருகப் பண்ணினார். இருளில் இருக்கும்போது ஒரு வருக்கும் மகிழ்ச்சி கிடையாது. அவர்கள் துக்கத்தில்தான் இருப்பார்கள். ஆனால் இயேசு மனிதனாக பிறந்தபொழுதோ, அவர்களுடைய மகிழ்ச்சி பெருகினது; ஏன்? இரட்சிப்பின் ஊற்றுகளில் அவர்கள் மொண்டுகொண்டார்கள். ஆகவே தான் அவர்கள் மகிழ்ச்சி பெருகினது. அது எப்படிப்பட்ட மகிழ்ச்சியாம்? ‘அறுப்பில் மகிழ்கிறதுபோல’ எனப் பார்க்கிறோம். ஆத்தும ஆதாயப் பணியிலே அறுவடை செய்து ஆத்துமாக்கள் தேவனிடத்திற்கு வருகிறதை அவர்கள் கொள்ளையாடின பொருளைப்போல எண்ணி மகிழ்ந்தார்கள். சகோதரரே, இயேசு பிறந்தார், சுவிசேஷத்தை அறிவித்தார். பாவமன்னிப்பை நமக்குத் தந்தார்.

இந்த அறுவடை பணியில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்களா? ஒரு ஆத்துமாவையாவது தேவனுக்கென்று ஆதாயம் பண்ணியிருக்கிறீர்களா? அப்படி இல்லையென்றால் நீங்கள் இன்னமும் இருளில்தானே இருக்கின்றீர்கள். இருளில் இருக்கிறவர்கள் வெளிச்சத்தைக் கண்டால் அறுவடையில் மகிழ்கிறதுபோல அவர்கள் மகிழுவார்களே.  ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணுவாரே. சகோதரனே, இந்தவித உணர்வு உங்களுக்குள் வருகின்றதா?  இயேசுவின் நாமங்களை தியானிக்கும்போது அவர் செய்த காரியங்களையும் நாம் நினைக்கவேண்டும் அல்லவா. அவர் உங்களுக்கு எவ்வளவு மேன்மையானவைகளைச் செய்திருக்கிறார்! ஒரு ஆத்துமாவையாவது அவருக்கென்று ஆதாயம் பண்ணமாட்டீர்களா? “ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்’ (நீதி.11:30). மதிகேடன் தான் ஆத்தும ஆதாயம் செய்யமாட்டான். ஆனால் தேவனுடைய பிள்ளைகள் என் தகப்பனுடைய காரியமாய் போக வேண்டும் என்று சொல்லி ஆத்துமாக்களையும், காணாமற்போன ஆடுகளையும் தேடுவார்களே. சகோதரரே, உங்களுக்கு அந்தப் பாரம் உண்டா?  நீங்கள் தேவனால் இரட்சிக்கப்பட்டு, அவர் உங்களை விடுவித்திருப்பாரென்றால் நீங்கள் இந்த காரியத்தை கண்டிப்பாக செய்யவேண்டும். அது நமது கடமையாயிருக்கிறது. அது உங்கள் விருப்பமல்ல; அது உங்கள்மேல் விழுந்த கடமை. இன்றைக்கு நீங்கள் அதைச் செய்ய தவறினால், அந்த கடமையிலிருந்து விலகுகிறீர்கள். கடமையிலிருந்து விலகுகிறவர்கள் கண்டிப்பாக எஜமானால் தண்டிக்கப்படுவர்.

இது ஒரு சந்தோஷமான காரியம்! 3ஆம் வசனத்தில்,  “அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்”. கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள், அதுவே உங்கள் பெலன்.

மூன்றாவதாக, “மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, …. அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்” (ஏசா.9:4). நித்திய பிதா ஆளோட்டியின் கோலை முறித்துப்போட்டார்.  இரட்சிக்கப்படாதவரை நாம் அடிமைகளாக இருக்கிறோம். “பாவஞ் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்” (யோவான்.8:34). இருளில் இருக்கிற நாம் வெளிச்சத்தில் வராதவரைக் கும் சாத்தானின் அடிமையாக இருக்கிறோம். நாம் பாவத்திற்கும் அடிமையாயிருக்கிறோம். சாத்தானுக்கும் அடிமையாயிருக்கிறோம்.

சாத்தான்தான் ஆளோட்டியாய் இருக்கிறான். அவன் பல சிற்றின்பங்களைக் காண்பிக்கிறான். நாம் அதை விருப்பமாய் செய்கிறோம். ‘என்னுடைய சித்தமல்ல, நான் வெறுக்கிற தீமையைச் செய்கிறேன். விரும்புகிற நன்மையைச் செய்ய முடியவில்லை’ என்கிறோம். காரணம், நாம் பாவத்திற்கும் அடிமை, பிசாசிற்கும் அடிமையாய் இருப்பதினால்தான்.

இயேசுகிறிஸ்து பிறந்தது இப்படிப்பட்ட ஜனங்களை விடுதலையாக்குவதற்கேயாகும். லூக்.4:16-19 வரையுள்ள வசனம் இவ்விதமாகக் கூறுகிறது:

“தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வு நாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்”.

இது இன்று நிறைவேறிற்று. சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் என இயேசு சொன்னார். அருமையானவர்களே, உங்கள் குடும்பத்தின்மேல் உள்ள பாவத்தின் கட்டுகளை உங்களால் அறுக்க முடியவில்லை. நீங்கள் மாத்திரம் இயேசுவை உங்கள் உள்ளத்திலே ஏற்றுக்கொண்டு, இந்தப் பாவத்தினின்று எங்களை விடுவியும் என்று சொல்லி கேட்போமானால், அவர் நமது பாவக்கட்டுகளை அறுப்பார். நம்மேல் இருக்கிற சாத்தானின் ஆளோட்டியின் கோலை முறித்துப் போடுவார். நீங்களும் உங்கள் வீட்டார் அனைவரும் இரட்சிக்கப்படுவீர்கள். இதைத்தான் இயேசுவின் பிறப்பு உலகத்திற்கு சொல்லுகிறது. இதுவரையிலும் சுவிசேஷம் உங்களுக்கு இல்லாமல் இருந்தது. ஒரு நற்செய்தி இல்லாமல் இருந்தது. இன்று நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், உங்கள் பாவக்கட்டிலிருந்து விடுபட உங்களுக்கு ஒரு இரட்சகர் பெத்லகேமிலே பிறந்தார், சாத்தானின் தலையை நசுக்க ஸ்திரீயின் வித்தானவர் பூமியிலே மனிதனாக பிறந்திருக்கிறார். அவருடைய நாமம் நித்திய பிதா. அவர் நித்தியத்திற்கும் பிதா, உங்களை நித்தியத்திற்கு கொண்டு சேர்க்கும் பிதாவும் அவர்தாம். அவரைப் பற்றிக்கொள்வீர்களென்றால் இந்த உலகத்தோடு நீங்கள் அழிந்துபோவதில்லை. நித்திய நித்தியமாய் அவரோடுகூட மகிழ்ச்சியாய் இருக்கலாம். அவர் உங்கள் மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணுவார்.

அருமையானவர்களே, இன்றைக்கு நீங்கள்  ஆண்டவரே, இருளில் இருக்கிற என்னை வெளிச்சத்திற்கு கொண்டுவாரும்; என் கட்டுகளின் சிறையிருப்பிலிருந்து என்னை விடுவியும் என ஆண்டவரிடத்தில் அறிக்கை செய்யுங்கள். அப்படிச் செய்யாமல் ஏன் இன்னும் இருளிலே இருந்து உழலவேண்டும். ஆண்டவரிடத்தில் திரும்புவோம். அவர் மனதுருக்கமுள்ளவர்; உங்களை நேசிக்கிறவர்; உங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி உங்களை மீட்டுக்கொண்டவர். அவர் உங்களை பாவத்தின் கட்டுகளிலிருந்தும் பிசாசுகளின் கட்டுகளிலிருந்தும் விடுவித்து உங்களை நித்திய நித்தியகாலமாய் பரம ராஜ்யத்தில் வைத்துக்கொள்வார். உங்களது நொறுங்குண்ட இருதயத்திலிருந்து புறப்படும் உண்மையான ஜெபத்தை அவர் ஒரு நாளும் அலட்சியம் பண்ணமாட்டார்.

ஆகவே தைரியத்தோடும் விசுவாசத்தோடும் ஜெபம் கேட்கப்பட்டு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஆண்டவரை நோக்கி கூப்பிடுவோம். கர்த்தர்தாமே உங்களுக்கு வெளிச்சத்தையும் விடுதலையையும் கொடுத்து நித்திய ராஜ்யத்தின் சந்தோஷத்திற்கு பாத்திரவான்களாய் உங்களை மாற்றுவார்.

சத்தியவசனம்