இரட்சணியத்தைக் கண்ட சிமியோன்

Dr.தியோடர் வில்லியம்ஸ்
(நவம்பர்-டிசம்பர் 2016)

கிறிஸ்து பிறப்பின் வரலாற்றிலே சிமியோனைப் பற்றி வாசிக்கிறோம். ஆண்டவருடைய திட்டத்தின்படி எந்த வயதிலும் நம்மை அவர் பயன்படுத்தக்கூடும் என்பதற்கு சிமியோன் ஒரு சிறந்த உதாரணம். வயோதிபர்களால் செய்யக் கூடாததை வாலிபர்களால் செய்யக்கூடும். ஏனெனில் அவர்களுக்கு சரீர பலமிருக்கிறது. ஆனால் அதே சமயத்திலே வாலிபர்கள் செய்யக்கூடாத சில காரியங்களை வயோதிபர்கள் செய்யக்கூடும். ஆகையினாலே வயோதிபர்களுக்கு அவருடைய ஊழியத்திலே இடமில்லை என்று நாம் கூறிவிட முடியாது.

பயன்படும் வாழ்க்கைக்கு முக்கியமான ஒரு நிபந்தனை பரிசுத்தாவியானவரின் பிரசன்னமாகும். சிமியோன் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருந்தார். அவரால் நடத்தப்பட்டார். திருமறையின் மூலமாக, வேத வசனங்களின் மூலமாக, போதிக்கப்பட்ட மனிதனாயிருந்தார். ஆவியானவரால் நிரப்பப்பட்டிருந்தால்மட்டும் போதாது; அவருடைய வசனத்தினாலும் நாம் நிரப்பப்பட்டிருக்கவேண்டும். பரிசுத்தாவியானவர் நமக்குத் தரும் அனுபவங்களோடு கூட வேத வசனங்களையும் நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ளவேண்டும். அனுபவங்கள் வேதவசனங்களுக்கு ஒத்ததாக இல்லையானால் அந்த அனுபவங்களை நாம் ஒதுக்கித் தள்ளவேண்டும். அனுபவங்களின் மூலமாகவும் நாம் தவறிவிடக்கூடும்.

சாத்தான் வஞ்சிக்கிறவன். ஆகையினாலே இப்பேற்பட்ட அனுபவங்களின் மூலமாக, தரிசனங்களின் மூலமாக நம்மைத் தவறான வழிகளிலே நடத்திவிடக்கூடும். அதற்கு பாதுகாப்பாக திருமறையை நாம் நன்றாய் ஆராய்ந்து அறிந்து கொள்ளவேண்டும். வேதவசனங்களை நமக்கு உயிருள்ளவையாக விளக்கித் தருவது பரிசுத்தாவியானவரின் ஊழியமாகும். வேத வசனங்களைமட்டும் ஆராய்ந்து அறிந்து கொண்டு ஆவியானவரின் அனுபவமும் நிறைவும் இல்லாதபடியும் நாம் இருக்கக்கூடாது. பரிசுத்தாவியானவரும் தேவை. தேவ வசனமும் தேவை. இதை சிமியோனின் அனுபவத்தில் நாம் பார்க்கிறோம். சிமியோன் தேவனைத் துதித்த பாட்டை நாம் படிக்கும்போது அவர் பழைய ஏற்பாட்டு வசனங்களையும், தீர்க்கதரிசனங்களையும் நன்றாய் அறிந்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. ஆகையினாலே ஆவியானவர் அந்த வசனங்களைப் பயன்படுத்தி மேசியாவைக் குறித்து அவருக்கு போதித்திருந்தார் என்று விளங்குகிறது.

தேவனுடைய உள்ளத்தையும், அவருடைய இரகசியங்களையும் திட்டங்களையும் அறிந்து கொள்வதின் இரகசியமென்ன? கர்த்தருடைய வார்த்தை அவருடைய உள்ளத்தையும் சித்தத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. ஆகையினால்தான் ஆண்டவராகிய இயேசு அந்த வார்த்தையால் தம்மை நிறைத்துக்கொண்டார். வேத வசனங்களை நாம் அறிந்து அவற்றால் நம்மை நிறைத்துக்கொள்ளும்போது பரிசுத்தாவியானவர் தேவ இரகசியங்களை நமக்கு கற்றுத்தருகிறார், வெளிப்படுத்துகிறார்.

தேவனுடைய இரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவரது சித்தத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால் இன்னுமொரு இரகசியம் மத்.11:20 இல் அடங்கியிருக்கிறது. “நான் சாந்தமும் மனத் தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்று ஆண்டவர் கூறுகிறார். முழுவதுமாய் நம்மை அவருக்கு அடிமைப்படுத்தி நம்மை ஒப்புக்கொடுக்கும்போதுதான் நாம் அவரிடத்தில் கற்றுக்கொள்ளமுடியும். சிமியோனிடத்திலே இந்தத் தன்மையையும் நாம் பார்க்கிறோம். லூக்.2வது அதிகாரம் 29வது வசனத்தில் “ஆண்டவரே” என்று அழைக்கிறார். எஜமான் என்பது அந்த வார்த்தையின் பொருளாகும். அவரை முழுவதுமாக தன் வாழ்க்கையின் அதிபராக, எஜமானராக ஏற்றுக்கொண்டார். தன்னை அடிமை  என்று அழைக்கிறார். “அடியேன்” என்று அதே வசனத்தில் சொல்லுகிறார். இப்படி நம்மை முழுவதும் அவருக்கு கீழ்ப்படுத்தும்போது, வேதவசனங்களால் நம்மை நிறைத்துக்கொள்ளும்போது, பரிசுத்தாவியானவர் நம்முடைய உள்ளத்திலும் தேவ இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். இதை சிமியோனின் வாழ்க்கையிலேப் பார்க்கிறோம்.

இந்த சிமியோனின் மூலமாய் தம்முடைய திட்டத்தை, சித்தத்தை தேவன் வெளிப்படுத்துகிறார். அந்த நாட்களிலே தேவனுக்காக பேசுவதற்கென்று ஒரு மனிதன் கிடையாது. தீர்க்க தரிசிகளின் காலம் முடிந்ததுபோல தோன்றிற்று. மல்கியாவிற்குப் பிறகு எந்தவிதமான தீர்க்கதரிசியும் இருந்ததாக நாம் காணவில்லை. பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டிற்கும் நடுவிலுள்ள அந்தக் காலத்திலே தீர்க்க தரிசனத்தைப் பொருத்தமட்டிலே ஒரு பெரிய வெறுமை இருந்தது. அதற்குப் பிறகுதான் யோவான் ஸ்நானன் தீர்க்கதரிசியாக அனுப்பப்பட்டான். அப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலையிலே சிமியோன் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். தேவாலயத்திலே தேவனுடைய செய்தியாளனாக, தூதுவனாக அமைகிறார். அவர் ஒரு ஆசாரியனும் அல்ல, தீர்க்கதரிசியும் அல்ல. ஆனால் அந்த சமயத்திலே தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும் அவர் செயல்படுகிறார். தேவனுக்கும் மக்களுக்கும் நடுவில் நின்று தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை மக்களுக்கு அறிவிக்கிறார். தேவனிடத்திலே மக்களுக்காக ஜெபிக்கிறார். வாதாடுகிறார். இவ்விதமாக தன்னுடைய வாழ்க்கையை பயன்படுத்திக் கொள்கிறார்.

சிமியோன் மூலமாக தேவன் கற்றுத்தந்த காரியங்கள் என்ன?

முதலாவது சிமியோன் இரட்சிப்பைப் பற்றிப் பேசுகிறார்: “உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” (லூக்.2:32) என்றார். இந்த இரட்சணியம் என்கிற வார்த்தையை இரட்சிப்பின் கருவி என்றும் நாம் மொழிபெயர்க்கலாம். விடுதலையின் கருவி, இரட்சிப்பின் கருவி; அவர்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, மேசியா. அவரை என் கண்கள் கண்டது என்று சிமியோன் கூறுகிறார். கிறிஸ்துவின் மூலமாய், மேசியாவின் மூலமாய் இரட்சிப்பு என்பதை இங்கு சிமியோன் தெளிவாக போதிக்கிறார்.

மேலும் அந்த இரட்சிப்பு, “புறஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்” என்று கூறுகிறார் (வச.30). இந்த இரட்சிப்பு புறஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளி. அதாவது புறஜாதிகளை பிரகாசிப்பிக்கிற ஒளி என்றும், புறஜாதிகளுக்கு உரிய ஒளி என்றும் பொருள் படுத்தலாம். அவர்களை இருளிலிருந்து சத்தியத்திற்கு நடத்துகிற ஒளி;  தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்திற்குள் அவர்களைக் கொண்டுவருகிற ஒளி. அவர்களுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துகிற ஒளி, இப்படியெல்லாம் இந்த சொற்றொடரை நாம் பொருள்படுத்தலாம். அதுவரைக்கும் தங்களுக்கு மட்டும்தான் இரட்சிப்பு என்று யூதர்கள் நம்பினார்கள். புறஜாதிகளுக்கு இரட்சிப்பே இல்லை என்று கருதினார்கள். அப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலையிலே மேசியாவின் மூலமாய், இயேசுகிறிஸ்துவின் மூலமாய், புற ஜாதிகள் இரட்சிப்புக்குள்ளே வழிநடத்தப் படுவார்கள் என்று சிமியோன் போதிக்கிறார். எவ்வளவு அருமையான சத்தியம்!

ஏசாயா மேசியாவைக் குறித்து “யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களை திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும்  என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்” (ஏசா.49:6) என்று உரைக்கிறார். இஸ்ரவேல் மக்களுக்கு யாக்கோபின் கோத்திரங்களுக்கு அவர் கொடுக்கப்பட்டார். அதே சமயத்திலே ஜாதிகளுக்கு ஒளியாக, புறஜாதி யாருக்கு ஒளியாக பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி அவர் நியமிக்கப்பட்டார் என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது. இதை சிமியோன் புரிந்துகொண்டார். மற்ற ஆசாரியர்கள், வேதபாரக யூத தலைவர்கள் புரிந்துகொள்ளக்கூடாத ஒரு சத்தியத்தை சிமியோன் புரிந்துகொண்டார்.

இஸ்ரவேல் மக்களுக்கு மகிமையாகவும், புற ஜாதியாருக்கு இரட்சிப்பாகவும் மேசியா கொடுக்கப்பட்டார். இந்த சத்தியத்தை பவுல் அறிந்துகொண்டார். ஆகையினால்தான் அவர் மிஷனரி தரிசனமுள்ளவராய் புறஜாதியாருக்கு நற்செய்தியை பிரசங்கிக்கிறார். ஸ்தேவானும் இந்த சத்தியத்தை அறிந்திருந்தார். அப்போஸ்தலர் 7வது அதிகாரத்திலே ஸ்தேவானின் பிரசங்கத்தை நாம் நன்றாய் ஊன்றிப்படிக்கும் போது இதை அறிந்துகொள்ளுகிறோம். யெகோவா யூதர்களுக்கு மட்டுமல்ல, தேவாலயத்திற்குமட்டும் உரியவரல்ல, எல்லாருக்கும் உரியவர் என்பதை ஸ்தேவான் தெளிவாய் போதிக்கிறார். இப்படி மற்றவர்கள் அறிந்து கொண்ட இந்த சத்தியங்கள், யூத தலைவர்கள் அறிந்துகொள்ளக்கூடாத சத்தியங்கள், இவற்றை சிமியோன் அறிந்துகொண்டார். பரிசுத்தாவியானவர் இதை அவருக்குப் போதித்திருந்தார்.

இறுதியிலே சிமியோன் ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டார் என்று நாம் காண்கிறோம். முதலாவது, மரியாளுக்கு தீர்க்கதரிசனமாக, “இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்” (லூக்.2:34) என்று கூறுகிறார். ஆம், இயேசுகிறிஸ்து இரட்சகர், நியமிக்கப்பட்டவர், தெய்வ திட்டத்தின்படி அவர் ஏற்படுத்தப்பட்டவர். அவரது நாமத்திலே அநேகர் இரட்சிக்கப்படுவார்கள்; விழுந்துபோனவர்கள் எழுந்திருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அவரைப் பார்க்கும்போது, அவரை சந்திக்கும்போது, அநேகருடைய இருதய சிந்தனைகளை அவர் வெளிப்படுத்துகிறார்.

ஆம்; இயேசுகிறிஸ்துவை சந்திக்கிற மனிதன், ஒன்று இருளிலே தொடர்ந்து அவரை உதாசீனம் செய்து நடப்பான். அல்லது, அவரை ஏற்றுக்கொண்டு வெளிச்சத்திலே நடப்பான். மனிதர் தம்மை விசுவாசிக்கவும் அல்லது தம்மை உதாசீனம் செய்து, விசுவாசம் இல்லாமல் போவதற்கும் அவர் ஏதுவாக அமைகிறார். விழுகிறதற்கும் எழுகிறதற்கும், விரோதமாக பேசப்படுவதற்கும் அடையாளமாவதற்கும், அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மனிதன், ஒன்று அவரை ஏற்றுக்கொண்டு கனம்பண்ண வேண்டும். அல்லது அவரை எதிர்த்து அவருக்கு விரோதமாகப் பேச வேண்டும். நடுநிலைமை யாரும் வகிக்க முடியாது. இப்பேர்ப்பட்ட இரட்சகரைக் குறித்து சிமியோன் வெளிப்படுத்துகிறார்.

அதுமட்டுமல்ல, சிமியோனின் வார்த்தைகளைக் கேட்டு விதவையான அன்னாளின் வாழ்க்கையிலும் புது நம்பிக்கை உண்டாகிறது. அவளும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறாள். மேசியாவைத் துதித்து அவரைப்பற்றி மற்றவர்களுக்கு கூறுகிறாள். இப்படி சிமியோனின் மூலமாக மரியாளுக்கும் அன்னாளுக்கும் நம்பிக்கையும் மறுவாழ்வும் கிடைக்கும்படியாக பரிசுத்தாவியானவர் சிமியோனை பயன் படுத்துகிறார். நமக்கும் அவருடைய வார்த்தைகளை வாசிக்கும்பொழுது மேசியாவின் ஊழியத்தைப் பற்றியும் அவர் கொண்டுவரும் இரட்சணியத்தைப் பற்றியும் தெளிவு கிடைக்கிறது. இப்படி வயதான நேரத்திலும்கூட சிமியோன் பரிசுத்தாவியானவரால் பயன்படுத்தப்படுகிறார்.

கடைசியாக, சிமியோன் தன்னுடைய எதிர்காலத்தைக் குறித்து சொல்லுவதைக் கவனிப்போம்: “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்” (வச.29). எதிர்காலத்தைப் பற்றி யோசித்துப்பார்க்கும்போது மரணபயமோ திகிலோ காணப்படவில்லை. தான் விடைபெற்று போவதுபோல மரணத்தை எதிர்நோக்கி நம்பிக்கையோடு சந்திக்க ஆயத்தமாயிருக்கிறார்.

சிமியோன் ஆவியானவரால் நிரப்பப்பட்டார், ஆவியானவரால் நடத்தப்பட்டார், ஆவியானவரால் போதிக்கப்பட்டார், ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டார். எந்த வயதிலும், எந்த உடல் நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் நம்மை பயன்படுத்த ஆண்டவர் காத்திருக்கிறார். உங்களுடைய வாழ்க்கையும் பயனுள்ள வாழ்க்கையாக அமையுமா?

சத்தியவசனம்