கிறிஸ்துவின் பாதையில் கிறிஸ்துமஸ்!

சகோதரி சாந்தி பொன்னு
(நவம்பர்-டிசம்பர் 2016)

“கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஜசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச் செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரச் செய்தார்” (எபேசி. 2:6,7).

எத்தனை பெரிய ஆசீர்வாதம்! உன்னதங்களிலே… அவரோடேகூட… இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும! கிறிஸ்துவுடன் நாம் உன்னதங்களில் நித்தியமாய் இருப்போம் என்ற நிச்சயத்தை தமது மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும் கிறிஸ்து நமக்குத் தந்திருக்கிறார். இதற்காகவே அவர் வந்து பிறந்தார். இத்தனைக்கும் காரணம், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் நம்மில் காட்டிய தயவுதான். கிறிஸ்து மாத்திரம் தயாள சிந்தையுடன் முழுமையாக தம்மை நமக்காகத் தந்திராவிட்டால் இன்று ஜெயமுள்ள ஒரு வாழ்வை நாம் நினைத்தும் பார்த்திருக்கமுடியாது.

ஆகவே, கிறிஸ்துவின் பாதையில் நின்று, கிறிஸ்துவின் தயாள சிந்தையை எவ்விதத்திலாவது நாமும் பிறரிடம் வெளிப்படுத்தி, மெய்யான கிறிஸ்துமஸ் சந்தோஷத்தை நாமும் அனுபவிக்கலாமே!

இயேசு பிறப்பும் நமது விசுவாசமும்:

வருடங்கள் நம்மைவிட்டு கடந்துசென்று கொண்டிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பின் நினைவுகூரல்களும் வருடாவருடம் வந்து போய்க்கொண்டே இருக்கின்றன. நாமும் வேகமாகக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம். எனக்காகவே கிறிஸ்து பிறந்தார், வாழ்ந்தார், மரித்தார், உயிர்த்தார், பரலோகத்துக்கு ஏறினார், மீண்டும் வருவார் என்று வாராவாரம் விசுவாச அறிக்கையைச் சொல்லி வருகின்ற நாம், கிறிஸ்து நம்மை நாடி வந்த நோக்கத்தை, அவர் நமக்காகச் செய்துமுடித்த மகத்தான இரட்சிப்பை உணர்ந்து வாழுகிறோமா என்பதை அந்த அவசர உலகில் சற்று நின்று நிதானிப்பது நல்லது. அவர் வாழ்ந்து காட்டிய பாதையில் நாமும் செல்லுகிறோமா? கடினமாயிருந்தாலும், மகிமை நிறைந்த கிறிஸ்துவின் பாதையில் நடந்து, அதனால் கிடைக்கும் சந்தோஷத்தை நாமும் அனுபவித்து, பிறருக்கும் ஆசீர்வாதமாயிருக்கிறோமா?

உலகம் இயேசு பிறப்பின் நினைவுகூரலின் நாட்களை குதூகலக் கொண்டாட்டமாக மாற்றிவிட்டது. கிறிஸ்து பிறப்புக்கே சம்பந்தமில்லாத கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தையும், கிறிஸ்துமஸ் மரம் என்ற ஒரு அலங்காரத்தையும் கிறிஸ்துமஸ் காலத்தின் அடையாளமாக்கி, இக்காலப்பகுதிளை வெகு தீவிரமான வர்த்தக மயமாக்கிவிட்டது. கிறிஸ்தவர்கள் நாமும் கொண்டாட்டங்களிலும், அலங்கார தோரணைகளிலும், பழகிப்போன அர்த்தமற்ற பாரம்பரியங்களிலும் தோய்ந்துபோனவர்களாக காலவெள்ளத்தில் அடிபட்டுப்போகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நமது இரட்சகரும் ஆண்டவருமாகிய கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவதில் சளைக்காமல் உழைக்க வேண்டிய நாம் இந்நாட்களில் எப்படி கிறிஸ்துவின் அன்பை, அவர் நம்மில் காட்டிய தயாள சிந்தையை வெளிப்படுத்தப் போகிறோம்?

இயேசுகிறிஸ்து நமது பாவங்களுக்காக, நமது இரட்சிப்புக்காக, நம்மைத் தம்மண்டை சேர்ப்பதற்காகத் தம்மையே பலியாகத் தருவதற்கே உலகில் வந்து பிறந்தார் என்பது நமக்கு ஊறிப்போன விஷயங்கள். மெய்யாகவே நாம் இதனை விசுவாசிக்கிறோம் என்றால், அந்த விசுவாசம் கிரியையில் வெளிப்படவேண்டாமா? “வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ?” (யாக்கோபு 2:20) என்று யாக்கோபு எழுதிய சொற்கள் நமது இருதயத்தை எப்பொழுதாவது குத்திக் குதறியதுண்டா? ஆண்டவர் நமக்காகத் தம்மைக் கொடுத்தார் என்றால், அவருடைய நாமத்தைத் தரித்திருக்கிற நாம், அந்த பரிசுத்த நாமத்தினிமித்தம் ஓரளவாவது பிறருக்காக நம்மைக் கொடுக்க வேண்டாமா? இல்லையானால் கிறிஸ்து இயேசுவில், அவர் அளித்த இரட்சிப்பில் நாம் கொண்டிருக்கும் விசுவாசம் விருதாவாகிவிடுமல்லவா!
தேவ அன்பும் மனிதனின் பதிலுரையும்:

தமது சாயலிலும் தமது ரூபத்தின்படியும் மனுஷனைப் படைத்து ஏதேனிலே அவனுடன் உறவாடி மகிழ்ந்தவர் தேவன். அந்த முதல் மனிதராகிய ஆதாமும் ஏவாளும் பாவத்தைப் பற்றிக் கொண்டபோது, தேவனுக்கும் அவர்களுக்கும் இருந்த அன்பின் உறவு அறுந்து போனது. அதற்காக ஆதாமோ ஏவாளோ அல்லது அவர்களுடைய சந்ததியினரோ, அந்தப் பாவச்சிறையிலிருந்து தம்மை விடுவிக்கும்படி தேவனிடம் கெஞ்சியதாக எழுதப்படவில்லை. மாறாக, ஒருவரில் ஒருவர் குற்றத்தைச் சுமத்தி, தமது பாவசுபாவத்தை வெளிக்காட்டுவதில்தான் அவர்கள் மும்முரமாக இருந்தனர். ஆனால் தேவன்தாமே அந்த ஏதேன் தோட்டத்திலேதானே, மனிதனுடைய இரட்சிப்பைப் பிரகடனப்படுத்திவிட்டார்.

பாவம் பிரிவினையைத் தோற்றுவித்தாலும், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் எல்லாமே அற்றுப்போகவில்லை. ஆதாம் ஏவாளின் சந்ததியில் வந்த ஏனோக்கு தேவனுடன் சஞ்சரித்தார்; பலர் தேவனுடைய குரலைக் கேட்டனர், மோசே முகமுகமாக அவரைக் கண்டான் என்று எழுதப்பட்டுள்ளது. இன்னும், தேவன் தீர்க்கதரிசிகளின் நாவில் தமது வார்த்தைகளை வைத்தார். ஆனால் நாமோ, இயேசு வந்து பிறந்த காலகட்டத்திலும் கூட வாழவில்லை. அவர் செய்த அற்புதங்களை நாம் காணவுமில்லை. சிலுவையிலே அவர் மொழிந்த வார்த்தைகளை நமது சொந்தக் காதுகளால் கேட்கவுமில்லை. உயிர்த்த இயேசுவைத்தான் நாம் கண்டோமா? அல்லது சிலர் கூறுவதுபோல, தரிசனத்திலாகிலும் நாம் அவரைப் பார்த்திருக்கிறோமா? ஒருசிலர் அறிக்கைசெய்வதுபோல சாதாரணமாக நாம் அவருடைய குரலையாவது கேட்டிருக்கிறோமா? இல்லையே!

அப்படியிருந்தும் நமக்காகத் தமது ஜீவனையே கொடுக்குமளவுக்கு அவர் நம்மை நேசித்தாரே! நமக்காகவே இந்தப் பாவமான உலகில் தமது பரிசுத்த பாதங்களைப் பதித்தாரே! இந்த ஆண்டவருக்காக நாம் எதையாவது செய்யவேண்டாமா? “நான் ஊழியத்தில் இருக்கிறேன். நான் கிறிஸ்தவ ஸ்தாபனத்தில் பணிசெய்கிறேன், ஜெபக்கூட்டங்கள் நடத்துகிறேன், கிறிஸ்தவ கட்டுரைகள் எழுதுகிறேன், தியானங்கள் எழுதுகிறேன், நான் ஒரு போதகர், ஒரு சுவிசேஷகன், தீர்க்கத்தரிசி, நான் பாடுகிறேன், உபவாசிக்கிறேன், ஜெபிக்கிறேன், விதவைகள் மத்தியில், ஆதரவற்ற பிள்ளைகள் மத்தியில் பல சமூகப்பணி செய்கிறேன். சபை நடத்துகிறேன், சபையிலே நான் ஒரு மூப்பர் என்று நாம் சொல்லலாம். ஆனால் இவை யாவற்றுக்கும் மேலாக ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பது, நாம் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, தமக்குச் சாட்சியாக நாம் வாழவேண்டும் என்பதேயாகும்.

கிறிஸ்துவின் பெரியகட்டளையும் இன்றைய பணிகளும்:

இன்று கிறிஸ்தவ பணியிலே ஈடுபட்டுள்ளோர் ஏராளம். நல்லது. ஆனால் ஒரு விஷயத்தை நாம் சிந்தித்துப்பார்ப்பது நல்லது. பணிசெய்துகிடக்கவா நாம் அழைக்கப்பட்டோம். ஆண்டவர் உயர வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கூட்டங்களை நடத்துங்கள், கருத்தரங்குகள் வையுங்கள் என்றா சென்னார். இல்லை, தமது சுவிசேஷத்தைச் சுமந்துகொண்டு நம்மைச் சுற்றியும், தேசத்துள்ளும், உலகம் முழுவதுக்குள்ளும் கடந்து சென்று, தமக்குச் சாட்சிகளாக இருக்கும்படிக்குத்தானே கட்டளை கொடுத்தார் (அப்.1:8). அந்த மகா கட்டளையை நிறை வேற்றுமுகமாக நாம் எடுத்துக்கொண்ட சில வழிமுறைகளும், பிரயத்தனங்களும்தான் இன்றைய நமது கூட்டங்களும் இதர நிகழ்வுகளும் என்றால் மிகையாகாது. எந்தப்பணி செய்தாலும், நாம் எந்தப் பதவி வகித்தாலும் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லி என்னதான் செய்தாலும், ஒரு பாடலைத்தான் பாடினாலும் கூட நமது உள்ளான, ஆணித்தரமான ஒரே நோக்கம் சுவிசேஷமாகத்தான் – இயேசுவின் அந்தப் பெரிய கட்டளையாகத்தான் – இருக்க வேண்டுமே தவிர வேறு எந்த நோக்கமும் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.

ஆனால், காலப்போக்கில் நாமோ பணி செய்து கிடப்பதே நமது கடமை என்பதுபோல மாறிவிட்டோம். செய்வது கிறிஸ்தவ பணிதான். அதிலும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் சொல்லவும் வேண்டுமா? சக்கரம் பூட்டிவிட்ட கால்கள்போல நமது கால்கள் சுழலுகிறது. போதகர்கள் பாஸ்டர்கள் உட்பட யாருக்குமே நேரமிருக்காது. அத்தனை அலுவல்கள். ஆனால் எந்தக் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லிப் பணியில் மூழ்கிக் கிடக்கிறோமோ அந்தக் கிறிஸ்துவுடன் தரித்திருக்க, நேரமெடுத்து ஜெபித்திருக்க, அவரையும் அவருடைய இருதயத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்ற ஜீவவார்த்தைகளை வாசித்துத் தியானிக்க, விசேஷமாக இந்த நாட்களில் நாம் எவ்வளவு நேரம் (சில விநாடிகளாவது)செலவு செய்கிறோம்?

செலவு பண்ணவும் செலவுபண்ணப்படவும்:

“நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும், செலவு பண்ணப்படவும் விரும்புகிறேன்” (2கொரி.12:15) இதை எழுதியவரும், எழுதியதன்படியே வாழ்ந்துகாட்டியவருமாகிய பவுல், நம்மைப்போல பாடுள்ள ஒரு மனுஷன்தான். ஆனால் தனக்காக, தம்மையே செலவு செய்த ஆண்டவரின் சிந்தையைத் தன்னில் தரித்துக்கொண்டவராய், தன்னை அதிகமாக நேசிக்காதவர்கள் என்று தெரிந்திருந்தும், அந்த கொரிந்து சபையினருக்காகத் தன்னிடம் இருப்பதைச் செலவு செய்யவும், எந்தவிதத்திலாவது செலவு செய்யப்படவும் பவுல் ஆயத்தமாயிருந்தார்.

நம்மை நேசிக்கிறவர்கள் விஷயத்திலேயே கணக்குப் பார்க்கின்ற நாம், எப்படி நம்மை நேசிக்காதவர்கள் விஷயத்தில் செலவு செய்யவும், செலவு செய்யப்படவும் முன் வருவோம்? ஆனால் தம்மைத் தேடாத, தம்மை நேசிக்காத, தமக்கு விரோதமாக ஜீவிக்கிறவர்கள் என்று தெரிந்திருந்தும், நமக்காக கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து பிறந்ததை நாம் மறுதலிக்க முடியாது. அவருடைய பிறப்பை நாம் நினைவுகூருகிறோம் என்றால், கிறிஸ்துவின் வழியில் நாமும் நிற்கிறோம்  என்பதை நமது வாழ்வு சாட்சியாய் அறிவிக்க வேண்டாமா?

இதோ ஒரு கிறிஸ்துமஸ் சவால்:

நாங்கள் பவுல் அல்ல என்பது மெய்தான். ஆனால் ஒரு சிறிய காரியத்தையாகிலும் கிறிஸ்துவுக்காய் செலவு செய்ய, செலவு செய்யப்பட முன்வரலாமே. நம்மில் பலர் கொடையாளிகளாக இருக்கலாம். அதற்குப் பல நல்ல நோக்கங்களும் இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவின் சிந்தையுடன் நாம் கொடுக்கிறோமா என்பதே காரியம். அதிலேதான் மெய்யான சந்தோஷ சமாதானம் அடங்கியிருக்கிறது. இந்த வருடம் நாம் கொண்டாடுகின்ற கிறிஸ்துமஸ் சவாலாக ஒரு சிறிய காரியத்தை இந்தக் கட்டுரை உங்கள் முன்பாக வைக்கிறது. அதனைச் சவாலாக ஏற்று, அந்தச் சிறிய சந்தோஷத்தை அனுபவிப்பதும் விட்டு விடுவதும் உங்கள் தெரிவு. இந்த சவாலை நானும், பல பெண்களும் ஏற்றிருக்கிறோம். இந்தக் காரியத்தை ஒரு புத்தகத்தில் வாசித்து நான் தொடப்பட்டதால் சத்தியவசனம் வாசகர்கள் நீங்களும் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க வாஞ்சித்து இதனை எழுதுகிறேன். இது நடந்த ஒரு உண்மைச் சம்பவம்:

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்துமஸ் நாட்களிலே ஒரு விற்பனை நிலையத்தின் பல கிளைகளில் பணியாற்றிய ஊழியர்களும் பொறுப்பாளர்களும் ஒன்றிணைந்து தங்கள் வாடிக்கையாளருக்கு ஒரு திடீர் கிறிஸ்துமஸ் சந்தோஷ அதிர்ச்சி கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்த முடிவு எடுத்தனர். பின்னர் அவர்கள் ஒன்றுகூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். ஒரு மானேஜர் தனது விற்பனை நிலையத்துக்கு குறிப்பிட்ட நாளிலே வந்தவர்கள் தங்கள் பொருட்களைச் சேகரிப்பதற்காக அதற்குரிய பணத்தைச் செலுத்தச் சென்றபோது யாரோ முகந்தெரியாதவர் அவர்களுடைய பொருட்களுக்கான பணத்தைச் செலுத்திவிட்டதைத் தெரிந்துகொண்டபோது எவ்வளவாக அதிர்ச்சி மகிழ்ச்சியடைந்தனர் என்று விபரித்தார். அந்தப் பணத்தை அவருடைய விற்பனை நிலையம் ஏற்றிருந்தது. இன்னுமொரு விற்பனை நிலையத்தின் உதவி மானேஜர், தனது அனுபவத்தை இப்படியாகச் பகிர்ந்துகொண்டார். கசங்கிய உடையிலிருந்த ஒரு தகப்பன் வெறுங்கால்களுடன் துள்ளித் துள்ளி நடந்த தனது மூன்று பிள்ளைகளுடன், இந்தக் கிறிஸ்துமஸ் முடிய நானும் முடிந்து விடுவோனோ என்று எண்ணுவதுபோலத் தோன்றிய கலங்கிய முகத்துடன், பணத்தை மாறிமாறி கணக்குப் பார்த்துக்கொண்டு கேசியரிடம் சென்றார். ஆனால் அவருக்கான மொத்தப் பணமும் யாரோ ஒருவர் செலுத்திவிட்டார்; பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்று கேசியர் சொன்னதும் அந்த ஏழைத் தகப்பனின் முகம் மலர்ந்ததையும், அவருடைய கண்கள் கண்ணீர் சிந்தியதையும் விபரிக்க இந்த உதவி மானேஜருக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. முகந்தெரியாதவர்கள், அதாவது தங்களை யார் என்று காட்டிக் கொடுத்து நன்றி என்ற வார்த்தையைக்கூட வாங்கிக்கொள்ளாமல், முகந்தெரியாதவர்களுக்காக அதாவது முன்பின் தெரியாதவர்களுக்காகச் செலவு செய்த ஒரு சிறிய முயற்சி பலருக்கு எத்தனை பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது பார்த்தீர்களா?

ஆனால் மூன்றாவது மானேஜர் சொன்ன விஷயம் எல்லோரையும் புல்லரிக்கச்செய்து விட்டது. அவருடைய விற்பனை நிலையத்துக்கு வந்த ஒரு பெண்மணிக்குரிய பணத்தை அந்த மானேஜரே பொறுப்பேற்றிருந்தார். அந்தப் பெண்மணி தன் பொருட்களுக்கான பணத்தைச் செலுத்த வந்தபோது, அவருடைய பணத்தை யாரோ ஒருவர் செலுத்திவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு அப்பெண் மணி அதிர்ந்துபோனார். ‘எனக்காக ஒருவரா;  இன்று நான் கஷ்டத்தின் மத்தியிலேதான் இங்கே வந்தேன் என்று அவருக்கு எப்படித் தெரியும்? எப்படி என் கஷ்டம் அந்த முகந்தெரியாதவருக்குத் தெரியும்?’ கண் கலங்கி சுற்றுமுற்றும் அந்த நபரைத் தேடினார் அவர். யாரும் கிடைக்கவில்லை. தன்னை மறைத்துக் கொண்டு இவற்றையெல்லாம் கண்காணித்துக் கொண்டிருந்த மானேஜரை, அதன் பின்னர் நடந்த காரியம் அதிக வியப்பில் ஆழ்த்தியது. அந்தத் தாயார் தன் பணப் பையைத் திறந்து, தன்னிடமிருந்த பணத்தை எடுத்து, அங்கே பொருட்களைச் சேகரித்துக் கொண்டிருந்த இன்னுமொரு ஏழைத் தாயைத் சுட்டிக்காட்டி ‘அவருடைய பொருட்களுக்கான பணம் இதோ’ என்று சொல்லி, அறிமுகம் இல்லாத அந்த ஏழைத் தாய்க்காகக் கொடுத்துப்போனதைக் கண்டு நெகிழ்ந்துபோனார் இந்த மானேஜர். “நாம் செய்த ஒரு சிறிய காரியம் எப்படி அடுத்தவரையும் உந்தித் தள்ளியது என்பது சிந்திக்கவேண்டிய விஷயம்” என்றார் அவர். கேட்ட எல்லோரும் வியந்து நின்றனர்.

பிரியமானவர்களே, அந்தக் கடையின் மானேஜரின் தயாளசிந்தை அந்தப் பெண்ணின் மனதை அசைக்க, அந்தப் பெண் அதையே இன்னொருவருக்குச் செய்து, தனக்குள் இருந்த தயாள சிந்தையை வெளிப்படுத்த, இன்னுமொரு ஏழைத்தாய் அதனால் மகிழ்ச்சியடைய…. எத்தனை ஆச்சரியம்! இயேசுவை நாம் காணவில்லை; ஆனால் அவர் நம்மைக் கண்டார். இயேசுவை நாம் அறிந்திராததற்கு முன்னரே அவர் நம்மை அறிந்திருந்தார். பாவப்பிடியிலிருந்து விடுபட முடியாமல் நாம் திகைத்துநிற்க, நாம் கேட்காமலே நமது பாவத்திற்கான கிரயத்தைச் செலுத்தி, அவர் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். அந்தப் பெண்ணுக்கு யார் தனக்குரிய பணத்தைச் செலுத்தியது என்று இன்றும் தெரியாது. ஆனால். தனக்காக யாரோ ஒருவர் செலுத்தினார் என்பதைச் தெரிந்துகொண்டதும், அதே காரியத்தை அவர் இன்னொருவருக்குச் செய்தாரல்லவா! அதனால் அவர் பெற்ற மகிழ்ச்சி சொல்லிமுடியாதது. இல்லையானால் அவர் இன்னொருவருக்காக தனது பணத்தைச் செலவு செய்திருக்கமாட்டார். ஆனால் இன்று நமது பாவத்திற்கான விலைக்கிரயத்தைக் கொடுப்பதற்கே கிறிஸ்து பிறந்தார் என்று தெரிந்து கொண்ட நாம், அவர் கிருபையாய் ஈந்த விடுதலையைப் பெற்ற நாம், அந்த சந்தோஷத்தை இன்னொருவருக்கு ஏதோவொரு விதத்திலாவது ஏன் கொடுக்கக் கூடாது?

இக்கிறிஸ்துமஸ் காலத்திலே, முகந்தெரியாத ஆளாய் நின்று. முகந்தெரியாத யாராகிலும் ஒருவருக்காவது ஒரு அதிர்ச்சி  சந்தோஷத்தைக் கொடுத்து. கிறிஸ்துவின் தயாள சிந்தையை வெளிப்படுத்தி பிறரைச் சந்தோஷிப்பிக்க முன்வருவோமா. திரைக்குப் பின்னால் நின்று நாம் செய்கின்ற ஒவ்வொன்றுக்கும் தேவன் கணக்கு வைப்பார். இதுவரை பலவிதங்களில் நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடியிருக்கலாம். இம்முறை ஒரு வித்தியாசமான புதிய பாதையிலே, கிறிஸ்துவின் பாதையிலே நின்று ஒரு சிலருக்கோ, குறைந்தது ஒருவருக்கோ மெய்யான கிறிஸ்துமஸ் சந்தோஷத்தைக் கொடுத்து, தூரத்தே நின்று அந்த நபரின் சந்தோஷத்தைக் கண்டு களிகூர்ந்து, இந்தக் கிறிஸ்துமஸ் மிகுந்த சந்தோஷமாகக் கொண்டாடுவோமா? செய்திருந்தால், உங்கள் சந்தோஷ சாட்சியை சத்திய வசனத்திற்கு எழுதித் தெரிவித்து மகிழ்ந்திருங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் அனைவருக்கும் அன்பின் கிறிஸ்து பிறப்பின் நினைவுகூரலின் வாழ்த்துக்களும், புது வருட நல் வாழ்த்துக்களும் கிறிஸ்துவின் நாமத்தில் உரித்தாக்குக.

சத்தியவசனம்