கிறிஸ்துமஸ் பண்டிகையும் கிறிஸ்தவ பாரம்பரியங்களும்!

சகோ.எம்.எஸ்.வசந்தகுமார்
(நவம்பர்-டிசம்பர் 2016)

கிறிஸ்தவர்கள் வருஷந்தோறும் ஆசரிக்கும் அல்லது கொண்டாடும் முக்கியமான பண்டிகையாக கிறிஸ்துமஸ் உள்ளபோதிலும், கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்பதை அறியாதநிலையிலே பெரும்பாலானவர்கள் இப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில், கிறிஸ்துமஸ் பண்டிகை எதற்காக ஆசரிக்கப்படுகின்றது என்பதை சரியான விதத்தில் அல்லது முழுமையாக அறியாத நிலையில் பலர் கொண்டாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் தற்காலத்தில் கிறிஸ்தவரல்லாதவர்களும் கிறிஸ்துமஸை ஒரு விடுமுறைகால பண்டிகையாகக் கருதி இதை ஒரு உல்லாசமான நாளாகக் கொண்டாடுகின்றனர். உண்மையில், இன்று கிறிஸ்துமஸ் வியாபாரமயப்படுத்தப்பட்ட ஒரு கொண்டாட்டமாக மாறிவிட்டது. எனவே, கிறிஸ்துமஸ் என்றால் என்ன? இப்பண்டிகை எதற்காக ஆசரிக்கப்படுகிறது? இப்பண்டிகையில் செய்யப்படும் காரியங்கள் உண்மையிலேயே எங்கிருந்து வந்துள்ளன? என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். ஏனெனில், தற்காலத்தில் கிறிஸ்துமஸ் அர்த்தமற்ற ஒரு பண்டிகையாக மாற்றமடைந்துள்ளது என்பதை மறுக்கமுடியாதுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் அர்த்தம்

கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு முன், “கிறிஸ்மஸ் என்றால் என்ன?” என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கிறிஸ்துமஸ் என்னும் சொல், “கிரைஸ்ட்” (Christ) “மாஸ்” (Mass) என்னும் இரண்டு ஆங்கில சொற்களின் சேர்க்கையாகும். இதில் “கிரைஸ்ட்” என்றால் கிறிஸ்து. “மாஸ்” என்றால் பூஜை அல்லது ஆராதனை என்று பொருள்படும். எனவே இது கிறிஸ்துவுக்காக செய்யப்படும் ஆராதனையாக, அதாவது அவருடைய மானிட பிறப்பை நினைவுகூர்ந்து செய்யப்படும் ஒரு ஆராதனையாக உள்ளது (N.F.Pearson, The Stories of our Christmas Customs, p.4). எனவே, இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்து செய்யப்படும் ஆராதனையே உண்மையான கிறிஸ்துமஸாக உள்ளது. ஆனால், தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் ஆராதனைக்கு கொடுக்கும் நேரத்தைவிட, கேளிக்கைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் செலவிடும் நேரமே அதிகமாக உள்ளது. அது மாத்திரமல்ல, கிறிஸ்துமஸ் ஆராதனைகளும் ஒரு பாரம்பரிய சடங்காசாரமாக மாறிவிட்டது. இதனால், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்து அவரை ஆராதிப்பதே அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையாக இருக்கும் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சத்தியமாய் உள்ளது.

இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்தவர்கள், பெரும்பாலும் அவருடைய பிறப்புச் சம்பவங்களை மாத்திரம் நினைகூருகிறவர்களாக இருக்கின்றனர். கிறிஸ்துமஸ் பாடல்கள், நடனங்கள், நாடகங்கள், செய்திகள் என்று அனைத்தும் மாட்டுக்குடிலையும், தேவதூதர்களையும் மேய்ப்பர்களையும், சாஸ்திரிகளையும் மாத்திரமே வருஷந்தோறும் நம் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. கேரல் பாடல்களோ, இயேசுகிறிஸ்துவை இன்னும் குழந்தையாகவே பார்த்து அவருக்குத் தாலாட்டுப் பாடி அவரைத் தூங்க வைக்கின்ற நிலையில் உள்ளன. கிறிஸ்தவர்கள் இந்தப் பாரம்பரியக் கட்டிலிருந்து விடுபட மனமற்றவர்களாகவே இருக்கின்றனர். கிறிஸ்துமஸ் காலங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு சம்பவங்களை நினைவுகூருவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால், நாம் இச்சம்பவங்களை நினைகூரும்போது, இயேசு கிறிஸ்து யார் என்பதையும், அவர் எதற்காக ஒரு குழந்தையாக பிறந்தார் என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். அதேசமயம், அவர் இன்னும் குழந்தையாகவே இருக்கின்றார் என்னும் நிலையில் அவருக்கு தாலாட்டுப் பாடுகின்றவர்களாக நாம் இருக்கக்கூடாது. தற்கால கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டங்களுக்கு எவ்வித வேதாகம ஆதாரமும் இல்லை. இவைகள் பிற மதங்களில் இருந்து கிறிஸ்தவத்திற்குள் வந்துள்ள பாரம்பரியங்களாகவே உள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு முன், முதலில் இயேசுகிறிஸ்து யார் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசுகிறிஸ்துவின் மானிடப் பிறப்பை நினைவுகூரும் ஆராதனையாகவே உள்ளது. இதனால் இயேசுகிறிஸ்து யார் என்பதை அறியாத நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆசரிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இயேசு கிறிஸ்து மனிதனாக வந்த தெய்வம் என்பதை வேதாகமம் அறியத் தருகின்றது. இதனால்தான், 1தீமோத்தேயு 3:16ல் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதியிலிருந்தே தேவனாக இருந்தவர், மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்று யோவானுடைய சுவிசேஷம் கூறுகிறது (யோவா.1:1,14). இயேசு கிறிஸ்து மனிதனாக இவ்வுலகில் பிறந்தாலும், “இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்” என்பதை ரோமர் 9:5 அறியத்தருகின்றது. இதனால்தான் இயேசு கிறிஸ்துவை “மகா தேவன்” (தீத்.2:13) என்றும், “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலோ. 2:9) என்றும் பவுல் குறிப்பிட்டுள்ளார். எனவே, இயேசுகிறிஸ்து மனிதனாக வந்த தெய்வமாக இருக்கின்றார் என்பதை கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதனால், கிறிஸ்துமஸ் நாளில் அவரை ஒரு குழந்தையாக அல்ல, தேவனாக நாம் பார்க்கவேண்டும். இதனால், அவருக்குத் தாலாட்டுப் பாடுகிறவர்களாக அல்ல, அவரைத் தெய்வமாக வழிபடுகிறவர்களாக நாம் இருக்கவேண்டும்.

இயேசுகிறிஸ்து பிறந்தபொழுது கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள், “சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டார்கள்” என்று மத்தேயு 2:11 அறியத்தருகிறது. இவ்வசனத்தில் பணிந்துகொண்டார்கள் என்பதற்கு மூல மொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் “வழிபட்டார்கள்” என்னும் அர்த்தமுடையது (J.D.Dunn, Did the First Christians Worship Jesus? The New Testament Evidence, p.11). சாஸ்திரிகள் மாத்திரமல்ல, இயேசு கிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்தபோது தேவதூதர்களும் அவரைத் தொழுது கொண்டார்கள் என்று எபிரேயர்1:6 கூறுகிறது. எனவே, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகையில் நாம் அவரைத் தெய்வமாக வழிபட்டு அவரை ஆராதிப்பதே முக்கியமான விடயமாய் உள்ளது (இயேசுகிறிஸ்து தேவன் என்பதற்கான ஆதாரங்களை அறிந்துகொள்வதற்கு எனது இயேசுகிறிஸ்து இறைவனா? என்னும் நூலைப் பார்க்கவும்).

இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்த தெய்வமாக இருப்பதனால், அவர் எதற்காக மனிதனாகினார் என்பதையும் நாம் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். வேதாகமம் இதைப்பற்றி கூறும்போது, உலக மாந்தருடைய பாவத்தைப் போக்கும் பலியாக மரிப்பதற்காகவே இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்தார் என்பதை அறியத் தருகிறது. “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது” (1தீமோ. 1:15) என்று கூறும் வேதாகமம், “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” (1யோவா. 2:2) என்று குறிப்பிட்டுள்ளது. இதனால்தான், இயேசுகிறிஸ்துவைக் கண்டபோது, “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவா.1:29) என்று யோவான் ஸ்நானன் தெரிவித்தான். மனிதர்கள் அனைவரும் பிறவியிலேயே பாவிகளாக இருப்பதனால் (ரோ.3:9-18,3:23), அவர்களுடைய பாவம் போக்கும் பலியாக சிலுவையில் மரிப்பதற்காக இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்தார் (1யோவா.1:7).

கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஆரம்பம்

தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் வருஷந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆசரிக்கின்ற போதிலும், கிறிஸ்தவ சரித்திரத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் எவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடியதைப் பற்றிய எவ்வித குறிப்புகளும் இல்லை P.F.Bradshaw & M.E.Johnson, The Origins of Feasts, Fasts and Seasons in Early Christianity, p.123). இயேசு கிறிஸ்துவின் பிறப்புச் சம்பவங்கள் இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மார்க்கத்தின் பொதுவான உபதேசங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், அக்காலத்தில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் விதத்தில் எவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடவில்லை (J.F.Kell, The Origins of Christmas, p.55). கி.பி.336ம் ஆண்டிலேயே முதல் தடவையாக கிறிஸ்துமஸ் பண்டிகை ஆசரிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிய குறிப்பு கி.பி.354ம் ஆண்டு எழுதப்பட்ட “ஃபிலோகலியன் காலண்டரில்” (The Philocalian Calendar) உள்ளது.

கி.பி.முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களிலும், இரண்டாம் நூற்றாண்டின் சபைத் தலைவர்களான இரேனியஸ் (கி.பி.130-200), டேர்ட்டூளியன் (கி.பி. 160-225) என் போரின் நூல்களிலும் இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் கிறிஸ்தவர்கள் பண்டிகையாக ஆசரித்ததைப்பற்றிய எவ்வித குறிப்புகளும் இல்லை. அதே சமயம், கி.பி.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரிகன் (கி.பி.165-264) என்னும் சபைத் தலைவர் ரோமர்கள் மத்தியில் இருந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களை வன்மையாகக் கண்டித்தும் விமர்சித்தும் எழுதியுள்ளார் (Origen, Homily on Leviticus 8). இதிலிருந்து, அக்காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பிறந்தநாட்களைக் கொண்டாடுவதும் சபையால் தடைசெய்யப்பட்டிருந்தது என்பதை அறிந்துகொள்கின்றோம். இதனால், அக்காலத்தில் எவரும் இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூர்ந்து அதை ஒரு பண்டிகையாக ஆசரிக்கவில்லை என்பதும் உறுதிப்படுகின்றது. தற்காலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பாவமாகக் கருதும் வேதப்புரட்டுக்குழுக்கள் தங்களுடைய கருத்துக்கு ஆதாரமாக ஆதிக்கிறிஸ்தவர்களின் இத்தகைய பழக்கத்தை சுட்டிக் காட்டுவது வழக்கம்.

கி.பி.336ம் ஆண்டு வரை எவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடாததற்கு முக்கிய காரணம், கி.பி.312ல் கான்ஸ்டன்டைன் என்னும் ரோம சக்கரவர்த்தி கிறிஸ்தவனாகும் வரை ரோம அரசாங்கம் கிறிஸ்தவர்களைக் கொடூரமாகத் துன்புறுத்திக் கொலைசெய்து வந்ததேயாகும். இதனால், அக்காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் பிறந்த நாட்களைக்கூட ஆசரிக்கவில்லை. அக்காலத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சிகளாக மரித்ததினால், அவர்களுக்குத் தங்களுடைய பிறந்த தினத்தைவிட மரண நாளே முக்கியமானதாக இருந்தது, ஏனெனில், மரண நாளே தாங்கள் பரலோக ராட்சியத்தில் பிறக்கும் நாளாக இருப்பதாக அக்காலத்தில் கிறிஸ்தவர்கள் கருதினார்கள். எனவே, பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் அக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படாததினால், அவர்கள் இயேசுகிறிஸ்துவின் பிறந்த தினத்தையும் பண்டிகையாக ஆசரிக்கவில்லை. (P.F.Bradshaw & M.E.Johnson, The Origins of Feasts, Fasts and Seasons in Early Christianity, p. 123).

இயேசுகிறிஸ்து டிசம்பர் மாதம் 25ம் திகதி பிறந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. வேதாகமத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளவிதமாக பெத்லகேமில் மேய்ப்பர்கள் இரவு நேரத்தில் வயல் வெளியில் தங்கள் மந்தைகளைக் காத்துக்கொண்டிருப்பது (லூக்.2:8) மார்ச் முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியிலேயாகும். கடுங்குளிராய் இருக்கும் டிசம்பர் முதல் பெப்ரவரி வரை பாலஸ்தீனாவில் மேய்ப்பர்கள் இரவில் தங்கள் மந்தைகளை வயல் வெளியில் வைத்திருப்பதில்லை (R.H.Stein, Luke: The New American Commentary, p.108). மேலும் ரோம சாம்ராட்சியத்தில் கடுங்குளிராய் இருக்கும் காலத்தில் குடிமதிப்பு எடுக்கப்படுவதும் இல்லை. இயேசுகிறிஸ்துவின் பிறப்பு அகஸ்டஸ் என்னும் ரோம அரசனுடைய காலத்தில் எடுக்கப்பட்ட குடிமதிப்பின்போது நடைபெற்றதாகவே வேதாகமம் கூறுகிறது (லூக்.2:1-2). இதனால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ம் திகதி நடைபெறுவதற்கு எவ்விதவாய்ப்பும் இல்லை.

உண்மையில், கி.பி.4ம் நூற்றாண்டிலிருந்தே டிசம்பர் 25ம் திகதி இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆசரிக்கப்பட்டு வருகிறது (Sourcebook for Sundays, Seasons, and Weekdays 2011: The Almanac for Pastoral Liturgy, p.29). ஆனால், இது கிறிஸ்தவர்களினால் பாரம்பரியமாக நம்பப்பட்டுவரும் ஒரு விஷயமாகவே உள்ளது. ஆரம்ப கால கிறிஸ்தவ பாரம்பரியத்தின்படி, இயேசுகிறிஸ்துவின் பிறப்பைப்பற்றி தேவதூதன் மரியாளுக்கு அறிவித்த தினம் மார்ச் 25 என்று கருதப்படுகின்றது. இன்றும்கூட சில பாரம்பரியச் சபைகள் வருஷந்தோறும் மார்ச் 25ம் தேதியை மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தேவ அறிவிப்பின் நாளாக நினைவுகூருகின்றனர். எனவே, இயேசுகிறிஸ்து மார்ச் 25ம் திகதி மரியாளின் வயிற்றில் கருத்தரித்திருந்தால், 9 மாதங்களின் முடிவில் டிசம்பர் 25ம் தேதி அவர் பிறந்திருக்க வேண்டும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது கிறிஸ்தவ பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளதே தவிர இதற்கு எவ்வித சரித்திர ஆதாரமும் இல்லை.

கி.பி.3ம் நூற்றாண்டில், இயேசுகிறிஸ்துவின் பிறந்த நாளைக் குறித்த வித்தியாசமான யூகங்கள் இருந்தன. ஆனால், அக்காலத்தில் எவரும் டிசம்பர் 25ம் தேதி இயேசுகிறிஸ்து பிறந்தார் என்று கூறவில்லை (Clement, Stromateis 1.21.145). கிறிஸ்துமஸைப்பற்றிய ஹிப்போலிட்டஸ் என்பவரின் நூலில் உள்ள குறிப்பு, பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் (K.Roll, Towards the Origins of Christmas, pp. 79-81). எனவே, கி.பி.4ம் நூற்றாண்டிலேயே டிசம்பர் 25ம் தேதியை இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாகக் கருதும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் கி.பி.3ம் நூற்றாண்டில் மார்ச் 25ம் தேதி இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளாகக் கருதப்பட்டது (Tertullian, AdversusIudaeos, 8). நான்காம் நூற்றாண்டில், இத்தினத்திலேயே தேவதூதனுடைய செய்தி மரியாளுக்கு கிடைத்தது என்றும் கருதப்பட்டு 9 மாதங்களின் பின் டிசம்பர் 25ல் இயேசுகிறிஸ்து பிறந்தார் என்னும் கருத்து உருவாகியுள்ளது (T.J.Talley, Origins of the Liturgical Year, pp. 86, 90-91). ஆனால், இவைகள் யூகத்தினால் உருவாக்கப்பட்ட தேதிகளே தவிர, குறிப்பிட்ட சம்பவங்கள் இத்தினத்திலேயே நடைபெற்றன என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.

கி.பி.4ம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டு வரை டிசம்பர் 25ம் தேதியே உலகின் சகல நாடுகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆசரிக்கப்படும் நாளாக இருந்தது. ஆனால், அதன் பின்னர் சில நாடுகளில் ஜனவரி 7ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை ஆசரிக்கப்பட்டது. இதற்குக் காரணம், அக்காலத்தில் புதியதொரு காலண்டர் அறிமுகப் படுத்தப்பட்டதேயாகும். கி.பி.16ம் நூற்றாண்டு வரை, கி.பி.46ம் ஆண்டில் ரோம சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்ட “ஜூலியன் காலண்டரே” உபயோகத்தில் இருந்தது. ஆனால், கி.பி.1582ல் 13வது கிரகரி என்னும் போப்பாண்டவர் பூமி சூரியனைச் சுற்றும் நேரத்தைக் கணிப்பிட்டு புதியதொரு காலண்டரை உருவாக்கினார். இதற்கும் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த ஜூலியன் காலண்டருக்கும் இடையில் 13 நாட்கள் வித்தியாசம் உள்ளது. தற்காலத்தில் கிரகரியின் காலண்டரே உபயோகத்தில் உள்ள போதிலும் சில நாடுகள் மார்க்க விடயங்களுக்கு இன்று வரை ஜூலியன் காலண்டரையே உபயோகித்து வருகின்றது. இக் காலண்டரை உபயோகிக்கும் நாடுகளில் டிசம்பர் 25ம் தேதியாகும்போது, நம்முடைய காலண்டரின் தேதி ஜனவரி 7 ஆக உள்ளது. இதனால்தான் தற்காலத்தில் சில நாடுகளில் ஜனவரி 7ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். உண்மையில், உலகின் சகல கிறிஸ்தவர்களும் தாங்கள் உபயோகிக்கும் காலண்டரின்படி டிசம்பர் 25ம் தேதியிலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆசரிக்கின்றனர்.

ரோமர்களினால் மாரி காலத்தின் நடுப்பகுதியில் அதாவது டிசம்பர் 17 முதல் 23 வரை ஆசரிக்கப்பட்டு வந்த விடுமுறைக்கால “சட்டர்நேலியா பண்டிகையே” கிறிஸ்தவர்களினால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக மாற்றப்பட்டுள்ளது என்றும், இதை அடிப்படையாகக்கொண்டே டிசம்பர் 25ம் தேதி இயேசுகிறிஸ்து பிறந்தார் என்னும் கருத்து தற்காலத்தில் அதிக பிரபலமானதாக உள்ளது. ஐரோப்பாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் டிசம்பர் மாத விடுமுறையில் சட்டர்நேலியா என்னும் விடுமுறைகால பண்டிகையை ஆசரித்து வந்தனர். கி.பி.274 லிருந்து இப்பண்டிகையின் முக்கிய பகுதியாக டிசம்பர் 25ம் தேதி சூரிய தெய்வத்தின் பிறப்பு நினைவுகூரப்பட்டது. கி.பி.312ல் ரோம சக்கரவர்த்தி கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவனாக மாறிய பின்னர், ரோம தெய்வங்களை வழிபட்டு வந்தவர்களைக் கிறிஸ்தவர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்ட கிறிஸ்தவ சபைத்தலைவர்கள், மாரிகால விடுமுறையில் சட்டர்நேலியா பண்டிகையைக் கொண்டாடுவதற்கு கிறிஸ்தவர்களாகியவர்களுக்கு அனுமதி கொடுத்தனர். எனினும், இது எவ்விதத்திலும் கிறிஸ்தவ பண்டிகையாக இராததினால், இதைக் கிறிஸ்தவ மயப்படுத்துவதற்காக, பண்டிகையின் கடைசி நாளான 25ம் தேதியை இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் நாளாக்கினார்கள். அக்காலத்தில் கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடினாலும் இயேசுகிறிஸ்து அந்நாளில் பிறக்கவில்லை என்பதை அறிந்தவர்களாகவே இருந்தனர் எனபதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியம் (I.Mather, A Testimony against Several Prophane and Superstitious Customs, Now Practiced by Some in New England, p.35; S.Nissenbaum, The Battle for Christmas: A Cultural History of America’s Most Cherished Holiday, p.4).

ரோமர்களினால் சூரிய தெய்வத்தின் பிறந்த நாளாகக் கருதப்பட்ட டிசம்பர் மாதம் 25ம் தேதியை கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவின் பிறந்த நாளாக நினைவுகூருவது சரியானதா என்னும் கேள்வி தற்காலத்தில் பலருடைய உள்ளத்தில் உள்ளது. பழங்காலத்திலிருந்தே மக்கள் சூரியனைத் தெய்வமாக வழிபட்டு வந்துள்ள போதிலும் கி.பி.274ம் ஆண்டில் இவ்வழிபாடு ரோம அரச மதமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் கிறிஸ்தவர்கள் இதை எதிர்க்கும் விதத்தில், வானத்தில் இருக்கும் சூரியன் அல்ல, பூமிக்கு மனிதனாக வந்த இயேசு கிறிஸ்துவே உண்மையான தெய்வம் என்பதைக் காண்பிப்பதற்காக இயேசுகிறிஸ்துவை சூரியனாக உவமித்துப் பேசுவதைத் தங்களுடைய வழக்கமாகக் கொண்டிருந்தனர். ரோமர்கள் டிசம்பர் 25ம் தேதியை சூரிய தெய்வத்தின் பிறந்த நாளாகக் கொண்டாடியதினால், இதை எதிர்க்கும் விதத்தில் அந்த நாளில் சூரியனின் பிறப்பை அல்ல, உண்மையான சூரியனான இயேசுகிறிஸ்துவின் பிறப்பே நினைவுகூரப்படவேண்டும் என்னும் கருத்து அக்கால ரோம கிறிஸ்தவர்கள் மத்தியில் உருவானது. இதனாலேயே அவர்கள் சூரிய தெய்வத்தின் பிறந்த நாளாகக் கருதப்பட்ட டிசம்பர் 25ம் தேதியில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார்கள் (J.F.Kelly, The Origins of Christmas, pp.63-67). இதன் மூலம் ரோமர்களின் பண்டிகை கிறிஸ்தவமயப்படுத்தப்பட்டது (G.F.Snyder, Ante Pacem: Archaeological Evidence of Church Life Before Constantine, p. 122).

கி.பி.3ம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை சூரியனாகக் கருதியதற்கான ஆதாரமாகக் கருதப்படுவது தற்போது வத்திக்கானிலுள்ள தூய பேதுருவின் ஆலயத்தில் இருக்கும் கி.பி.3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்லறைக் கூரைச் சித்திரமாகும். இதில், புற மதத்தில் சூரியத் தெய்வம் தேரில் பயணிப்பதுபோல இயேசு கிறிஸ்து தேரில் செல்வது போலவும், அவரது முகத்திலிருந்து சூரியக்கதிர்கள் வெளிப்படுவது போலவும் வரையப்பட்டுள்ளது (J.F.Kelly, The Origins of Christmas, p.68). அக்கால கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவை சூரியனாகக் காண்பிக்க ஒரு சில வேதவசனங்களையும் உபயோகித்துள்ளனர். மறுரூப மலையில் இயேசுகிறிஸ்துவின் முகம் “சூரியனைப்போலப் பிரகாசித்தது” (மத்.17:2) என்றும், இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்தபோது சூரிய வெளிச்சம் பூமிக்கு கிடைக்காதிருக்கும் விதத்தில் சூரியன் மறைந்துபோயிற்று என்றும் (மத்.27:45, மாற்.15:33), இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நேரம் சூரியன் உதயமாகியது (மாற்.16:2) என்றும் கூறிய கிறிஸ்தவர்கள், மகிமையடைந்த நிலையில் இயேசு கிறிஸ்துவின் முகம் “வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்ததை” (வெளி.1:16) யோவான் கண்டதையும் சுட்டிக்காட்டினர்.

பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனத்தின்படி இயேசு கிறிஸ்துவே “நீதியின் சூரியனாக” இருப்பதனால் (மல்.4:2), சூரிய தெய்வத்தின் பிறந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளையே கொண்டாட வேண்டும் என்பதே ஆதிகிறிஸ்தவர்களின் தர்க்கமாக இருந்தது. உண்மையில், “சூரியனா இயேசு கிறிஸ்துவா தெய்வம் என்னும் அக்கால சர்ச்சையே, டிசம்பர் 25ம் தேதியை இயேசுகிறிஸ்துவின் பிறந்த நாளாக்கியுள்ளது” (J.F.Kelly, The Origins of Christmas, p.70). “ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவர்கள் சூரிய தெய்வத்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட தினத்திலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆசரித்தபோதிலும், அவர்கள் சூரியன் தெய்வம் அல்ல, அது தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது என்பதை நன்றாக அறிந்திருந்தனர். இதனால் அவர்கள் சூரியனை அல்ல, சூரியனை சிருஷ்டித்த தேவனையே அந்த நாளில் வழிபட்டார்கள்” (N.F.Pearson, The Stories of Our Christmas Customs, p.6). இதனால், சூரிய தெய்வத்தின் பிறந்த நாளாகக் கருதப்பட்ட டிசம்பர் 25ம் தேதி ஆதிகிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்ததில் எவ்வித தவறும் இல்லை. மேலும், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சூரிய தெய்வத்தின் பிறந்த நாளில் கொண்டாடியதினால், ரோமர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னர் சூரிய தெய்வத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம் முழுமையாக இல்லாமல் போய்விட்டது.

ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவர்கள் சூரிய தெய்வத்தின் பிறந்த நாளாகக் கருதப்பட்ட டிசம்பர் 25ம் தேதியில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினாலும், இன்று நாம் சூரிய தெய்வத்தின் பிறந்த நாளில் இயேசுகிறிஸ்துவின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று கூறமுடியாது. ஏனெனில் நாம் ஏற்கனவே பார்த்தபடி, அக்காலத்தில் உபயோகத்தில் இருந்த ஜூலியன் காலண்டரின்படி சூரிய தெய்வத்தின் பிறந்த நாள் கொண்டாடப்படும் டிசம்பர் 25ம் தேதி முழு வருஷத்திலும் குறுகிய பகற் பொழுதுள்ள நாளாக இருந்தது. அதாவது, அந்த நாளில் பூமிக்கு சூரிய வெளிச்சம் கிடைக்கும் நேரம் மற்ற நாட்களைவிட குறைவாக இருந்தது. இதனால், ரோமர்கள் அந்நாளில் சூரியனுக்கு சிறப்பான வழிபாடுகளை ஏறெடுத்து, மாரிகாலம் விரைவாக முடிவடைந்து தங்களுக்கு கோடை காலத்தைக் கொடுக்கும்படி மன்றாடினார்கள். ஆனால், நாம் தற்பொழுது உபயோகிக்கும் கிரகரியின் கலண்டரின்படி, பூமிக்கு சூரிய வெளிச்சம் குறைவாகக் கிடைக்கும் நாளாக டிசம்பர் 25 இல்லை. இது டிசம்பர் 21ம் தேதிக்கு சென்றுவிட்டது. எனவே, இன்று நாம் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் போது சூரிய தெய்வத்தின் பிறந்த நாளில் இதை செய்கின்றோம் என்று கூறமுடியாது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஆசாரங்கள்

தற்காலத்தில் நாம் உபயோகிக்கும், கி.பி.16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கிரகரியின் காலண்டரின்படி சூரிய தெய்வத்தின் பிறந்த நாளில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடாவிட்டாலும், அக்காலத்தில் சூரிய தெய்வத்தின் பிறந்த நாளுக்கு முன் ஒரு வார காலமாக ரோமர்களினால் கொண்டாடப்பட்ட “சட்டர்நேலியா” என்னும் மாரிகால விடுமுறைப் பண்டிகையின் ஆசாரங்களே கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டங்களாக இருந்தன.  இதனால், தற்காலத்திலும் கிறிஸ்மஸ் பண்டிகையின் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் சட்டர்நேலியா பண்டிகையிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகவே உள்ளன. சட்டர்நேலியா என்பது, “சட்டர்ன்” என்னும் ரோம தெய்வத்தைக் கனப்படுத்தும் பண்டிகையாகும். வருஷந்தோறும் டிசம்பர் 17ம் திகதி சட்டர்ன் தெய்வத்தின் கோவிலில் பலி செலுத்துவதுடன் ஆரம்பமாகும் இப்பண்டிகையின் கொண்டாட்டங்கள் ஒரு வார காலத்துக்கு நீடிக்கும். அக்காலத்தில் ரோம சட்டங்களை மீறும் செயல்கள் எதுவும் குற்றமாகக் கருதப்படுவதில்லை. விருந்து வைபவங்களும், ஆடல் பாடல்களும், தெருக்களில் நிர்வாணமாகப் பாடிக்கொண்டு செல்வதும், பலவந்தமாக வீடுகளில் புகுந்து பெண்களுடன் தவறாக நடந்துகொள்வதும், விளையாட்டு விநோதங்களும், குடிபோதையும், களியாட்டங்களும், பரிசுப்பொருட்கள் பரிமாறுவதும் இவ்விடுமுறைக் காலத்தின் சிறப்பம்சங்களாக இருந்தன (The Oxford Encyclopaedia of Ancient Greece and Rome, p.172). சட்டர்நேலியா பண்டிகையின் இத்தகைய செயல்முறைகளல் பெரும்பாலானவை தற்கால கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டங்களில் வித்தியாசமான வடிவங்களில் காணப்படுகின்றன (J.F.Kelly, The Origins of Christmas, p.70).

இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூருகின்ற விதத்தில் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆசரித்து வந்தாலும், கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டங்கள் சட்டர்நேலியா பண்டிகையிலிருந்து பெறப்பட்டவைகளாகவே இருப்பதனால், புறமதத்தவரின் பண்டிகையிலுள்ள காரியங்களை கிறிஸ்தவர்கள் செய்யலாமா என்னும் கேள்வி தற்காலத்தில் அதிக சர்ச்சைக்குரியதாய் உள்ளது. பாரம்பரிய கிறிஸ்தவத்திற்கு எதிரான வேதப்புரட்டுக் குழுக்கள் அனைத்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவது தவறு என்னும் கருத்துடையவைகளாகவே உள்ளன (Awake, 18 December 1961, p.8.  Awake, 18 December 1988, p. 19; D.C.Pack, The True Origins of Christmas, pp. 5-23). இதனால், கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடலாமா என்பதை அறிந்துகொள்வதற்கு, பிறமதங்களில் செய்யப்படுகின்ற காரியங்களை நாம் செய்யலாமா என்னும் கேள்விக்கு வேதாகமத்திலிருந்து சரியான பதிலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வேதாகமத்தில் தேவனும்கூட பிறமதத்தவரின் சில செயல் முறைகளைத் தம்முடைய மக்களுக்கான கட்டளைகளாகக் கொடுத்துள்ளார். அதாவது, விருத்தசேதனம், உடன்படிக்கை செய்யும் முறை, பலிகள் போன்றவை தேவன் புதிதாக மனிதருக்கு அறிமுகப்படுத்திய விஷயங்கள் அல்ல. இவைகள் அக்கால மதங்களிலும் கடைபிடிக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், பிற மதத்தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் செயல்களும், தேவனுடைய நீதிச்சட்டத்தின்படி ஒழுக்கக்கேடான பழக்க வழக்கங்களும் மாத்திரமே வேதாகமத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. பிறமதத்தினரின் ஏனைய பழக்க வழக்கங்களையும் செயல்முறைகளையும் தேவன் பாவமாகக் கருதவில்லை.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் பிறமதத்திலிருந்து எடுத்துள்ள முக்கியமான ஒரு காரியம் விருத்தசேதனமாகும். ஆதியாகமம் 17ம் அதிகாரத்தில் தம்முடைய உடன்படிக்கையின் அடையாளமாகத் தேவன் இதை ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுத்தாலும், விருத்தசேதனம் செய்யும் முறை இதற்கும் நீண்ட காலத்திற்கும் முன்பே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்துள்ளது (J deMeo. “The Geography of Genital Mutilations” The Truth Seeker, (July/August 1989), pp 9-13, July/August 1989). அதாவது, கி.மு 4000 ஆண்டுகளுக்கும் முன்பே செமித்திய மற்றும் சுமேரிய மக்கள் மத்தியில் இப்பழக்கம் இருந்துள்ளது  (D.Doyle, “Ritual male circumcision: a brief history”. The journal of the Royal College of Physicians of Edinburgh. 35 (October 2005), pp.279–285). “ரா” என்னும் எகிப்திய சூரிய தெய்வம் தனக்குத்தானே விருத்தசேதனம் செய்து கொண்டுள்ளதாகப் புராதன எகிப்திய நூல்கள் அறியத்தருகின்றன (M.C Alanis & R.S.Lucidi, “Neonatal circumcision: a review of the world’s oldest and most controversial operation” in Obstet Gynecol Survey. 59 (May 2004), pp. 379–95). மேலும், எகிப்திலுள்ள சக்காரா என்னுமிடத்திலுள்ள கி.மு.2400-2300 அளவிலான கல்லறைச் சுவரில் விருத்தசேதனம் செய்யப்படும் செயல்முறை செதுக்கப்பட்டுள்ளது (Cf. Wellcome Library, London). ஆனால், ஆபிரகாம் கி.மு.2000 ஆண்டைச் சேர்ந்தவர். எனவே, ஆபிரகாமினுடைய காலத்திற்கும் முன்பே பழக்கத்தில் இருந்த ஒரு செயல் முறையையே தேவன் ஆபிரகாமுக்கு ஒரு கட்டளையாகக் கொடுத்துள்ளார். விருத்தசேதனம் பிற மதத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதை எவ்விதத்திலும் மறுக்கமுடியாதுள்ளது (R.G.Hall, “Epispasm: Circumcision in Reverse” in Bible Review (August 1992),  pp. 52-57; “Circumcision” The Oxford Diction ary of the Jewish Religion; J.J. Tierney. “Circumcision” in The Catholic Encyclopaedia). எனினும், தேவன் பிறமதத்திலிருந்தே விருத்தசேதனத்தை எடுத்துள்ளபோதிலும், அவர் இச்செயல்முறைக்குப் புது வடிவமும் புது அர்த்தமும் கொடுத்தே தம்முடைய மக்களுக்கான கட்டளையாக்கியுள்ளார். புராதன காலத்தில் ஆண்கள் 12 அல்லது 13 வயதில் பருவ நிலையை அடைந்ததைக் குறிப்பிடும் செயல் முறையாக விருத்தசேதனம் இருந்தது. ஆனால் தேவன் இதை 12 அல்லது 13 வயதில் செய்யும்படி அல்ல, ஆண் பிள்ளை பிறந்து எட்டாவது நாளில் செய்யப்படும் செயலாகவும் பழைய ஏற்பாட்டுக் கால உடன்படிக்கையின் அடையாளமாகவும் கொடுத்துள்ளார்.

விருத்தசேதனம் மாத்திரமல்ல, ஆதியாகமம் 15ம் அதிகாரத்தில் தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்த முறையும் அக்கால பிறமத கலாசாரத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் உடன்படிக்கை செய்வோர் துண்டிக்கப்பட்ட மிருகத்தின் நடுவாகக் கடந்து போவது வழக்கம். உடன்படிக்கையைத் தாங்கள் மீறினால், துண்டிக்கப்பட்ட மிருகத்தைப் போலத் தங்களுடைய சரீரமும் துண்டிக்கப்படட்டும் என்பதை உடன்படிக்கை செய்பவர்கள்  அறிக்கையிடும் செயல்முறையாக இத்தகைய பழக்கம் இருந்தது (V.P.Hamilton, Genesis 1-17: The New International Commentary on the Old Testament, p. 430). இதேவிதமான ஒரு உடன் படிக்கை முறை எரேமியா 34:18-19லும் உள்ளது. இது, யூதேய அரசன் சிதேக்கியா எருசலேம் நகரத்தாருடன் செய்த உடன்படிக்கையைப் பற்றியது. (P.Miller, “Sin and Judgment in Jeremiah 34:17-19” in Journal of Biblical Literature. 103 (1984), pp.611-613). தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்தபோது துண்டிக்கப்பட்ட மிருகத்தின் நடுவில் அக்கினி ஜுவாலையாகக் கடந்துபோனார் (ஆதி.15:10,17) (K.A.Matthews, Genesis 11:27-50:26: The New American Commentary, p.172). இதன் மூலம் தேவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார் (J Van Seters, Abraham in History and Tradition, pp.100-103). தற்கால சிரியாவின் வடபகுதியில் கி.மு.2800 முதல் 1760 வரையிலான காலப்பகுதியில் செழிப்புடன் இருந்த “மாரி” என்னும் பட்டணத்தில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் 1933ம் ஆண்டிலிருந்து கண்டுபிடித்த களிமண் ஏடுகளில் உள்ள குறிப்புகள் இத்தகைய உடன் படிக்கை முறை ஆபிரகாமின் காலத்திற்கும் முன்பே நடைமுறையில் இருந்துள்ளதை அறியத் தருகின்றன (M.Held, “Philological Notes on the Mari Covenant Rituals” in Bulletin of the School of Oriental and African Studies. 200 (1970), p. 33; G.Hasel, “The Meaning of the Animal Rite in Genesis 15” in Journal for the Society of the Old Testament, 19 (1981), pp. 61-78). எனவே, “அக்கால கலாசார நடைமுறைக்குத் தம்மை உட்படுத்திய நிலையிலேயே தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்துள்ளார்” (J.J.Davis, Paradise to Prison: Studies in Genesis, p. 187) என்பதை இச்சம்பவம் அறியத்தருகிறது. இதைப் போன்ற பல கலாசார செயல்முறைகள் பழைய ஏற்பாட்டில் உள்ளன.

தேவன் பிறமத்களிலிருந்து விருத்தசேதனத்தையும் உடன்படிக்கை செய்யும் முறையையும் எடுத்தவிதமாகவே, ஆதிகிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை ரோம மதத்திலிருந்து எடுத்துள்ளனர். பிறமதத்திலிருந்து தேவன் ஒரு காரியத்தை எடுக்கும்போது, அதனோடு சேர்ந்துள்ள விக்கிரக வழிபாடு மற்றும் ஒழுக்கக்கேடான செயல்முறைகள் அனைத்தையும் நீக்கி, அதற்குப் புதுவடிவமும் அர்த்தமும் கொடுத்தவிதமாகவே, ஆதிகிறிஸ்தவர்களும் ரோமர்களின் சட்டர்நேலியா பண்டிகையின் பாவமான செயல்முறைகள் அனைத்தையும் நீக்கி, இதைக் கிறிஸ்தவமயப்படுத்தியுள்ளனர்.

எனினும், தற்காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஒரு பாரம்பரிய சடங்காசாரமாக மாறிவிட்டது. எனவே, நாம் அர்த்தமற்ற பாரம்பரியங்களில் மூழ்கிப் போனவர்களாய் இராமல், இயேசு கிறிஸ்து யார் என்பதையும், அவர் எதற்காக மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்தார் என்பதையும் அனுபவ ரீதியாக அறிந்தவர்களாக, இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும் விதத்திலும், அவரை அறியாதவர்கள் அவரை அறிந்துகொள்ளும் விதத்திலும் அவருடைய மானிட பிறப்பை இவ்வருஷம் நினைவு கூருவோம்.

சத்தியவசனம்