Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2017)
புதிய ஆண்டிற்குள்ளாக பிரவேசிக்கும் நீங்கள் கலக்கத்துடனும் பயத்துடனும் இருக்கிறீர்களா? உங்கள் சிந்தனையை மாற்றிக்கொள்ளுங்கள். கிறிஸ்துவுக்குள்ளான புது சிருஷ்டிப்பாயிருக்கும் நாம் நமது சிந்தையையும் புதியதாய் மாற்றிக்கொள்ள வேண்டும். இப்புதிய வாழ்வானது கிறிஸ்துவின் கிரியையினால் நமக்குக் கிடைத்தது. ஆனாலும் இப்புதிய வாழ்வில் நமக்கு தோல்விகளும் பின்னடைவுகளும் ஏற்படத்தான் செய்கின்றன. இதற்குக் காரணம் யார்? இப்புதிய வாழ்வுக்கும் அதில் ஏற்படும் தோல்விகளுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. அவை யாவும் பழைய வலுசர்ப்பம், சாத்தான் மற்றும் பிசாசினால் உண்டாகின்றன. நாமும் கிறிஸ்துவுக்குள் இருந்தாலும் நமது வாழ்வு முறைகள் நிலையற்றதாய் மாறிக்கொண்டே இருக்கின்றன. சாத்தான் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து அவை காணப்படுகின்றன. ஆனாலும் தேவ ஆவியானவர் வெற்றியைத் தருகிறார்.
தூய ஆவியானவருடைய ஒத்தாசை நமக்கு இல்லையெனில் நாம் விடுதலை பெற்ற வாழ்வை வாழ்வது கடினம். ஆவியானவர் வழிகாட்டுதலின்படி நாம் நடக்கவேண்டுமெனில் இறைசட்டத்தைப் பின்பற்ற நமக்கு சில ஒத்தாசைகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துவுக்குள் நாம் வாழ்வோமானால் பாவத்தை மேற்கொள்ள நம்மால் முடியும். ஏனெனில் அவரே அதற்குரிய வல்லமையை நமக்குத் தருகிறார். அமெரிக்கர்கள் நான்கு விதமான விடுதலையை விரும்புகின்றனர். அவை பேச்சு சுதந்திரம், தேவனை ஆராதிக்கும் சுதந்திரம், குறைவுகளிலிருந்து விடுதலை மற்றும் பயத்திலிருந்து விடுதலை ஆகியனவாகும்.
அப். பவுலும் நான்குவிதமான விடுதலையைப்பற்றி கூறியுள்ளார். அவை குற்றப்படுத்துதலிலிருந்து விடுதலை, பாவம் மற்றும் மரணம் இவற்றிலிருந்து விடுதலை, சட்டத்தின் தேவையிலிருந்து விடுதலை இவை தவிர மாம்சத்தின் சிந்தையிலிருந்து விடுதலை ஆகியனவாகும். கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் புது நிலையில் இருக்கும்பொழுது நாமும் இவ்விடுதலையைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
மாம்சத்தின் சிந்தையிலிருந்து விடுதலையைப் பற்றி அப்.பவுல் நான்கு காரியங்களைக் குறிப்பிடுகிறார்:
முதலாவதாக மாம்சத்தின் சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்” (ரோமர் 8:5). அதாவது நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் தேவ ஆவியானவர் விரும்பும் காரியங்களையே நாம் செய்வோம். “மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை: அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்” (ரோமர் 8:6-8) என்று அப்.பவுல் கூறியுள்ளார்.
ஆம், நாம் மாம்சத்தின்படி வாழ்ந்தால் தேவனைப் பிரியப்படுத்தமுடியாது. இதுவே கிறிஸ்துவுடன் வாழ்தலுக்கும் கிறிஸ்துவுக்குள் வாழ்வதற்கும் உள்ள வேறுபாடாகும். ஒரு சிலர் கிறிஸ்துவுடன் வாழ்ந்தாலும் மாம்சத்தின் சிந்தனைக்கு விலகி வாழ முடிவதில்லை. ஏனெனில் மாம்சத்தின்படி வாழ்பவர்கள் தங்கள் சிந்தனையை மாம்சத்தின்மீதே வைத்திருப்பார்கள், மாம்சத்தின் மீது சிந்தனையை வைத்திருப்பது என்றால். ஒரு குறிப்பிட்ட காரியத்தையே எண்ணிக்கொண்டு இருப்பதாகும். ஒரு சிலர் தங்கள் மனம்போன காரியங்களிலேயே வாழ்வார்கள். ஒரு சிலர் பணத்தை சேர்ப்பதிலும், ஒரு சிலர் பாலியல் இச்சைகளிலும் அடிமையாகி இருப்பார்கள். அவர்கள் ஓய்வாக இருக்கும்பொழுது வேறு எந்த காரியத்தையும் எண்ணாமல் இக்காரியங்களையே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
கிறிஸ்து இயேசு நமக்கு புதிய சிந்தையைக் கொடுத்துள்ளார். நாம் முற்காலத்தில் போராடிக் கொண்டிருந்த காரியங்களையே எண்ணிக் கொண்டிருக்க தேவையில்லை. இக்காரியங்களை முறியடிக்க தேவ ஆவியானவரின் வல்லமையும் நமக்குத் தரப்பட்டுள்ளது. எனவே நமது சிந்தையை பண ஆசை, பாலியல் இச்சை அல்லது பாவமான காரியங்கள் போன்றவை ஆக்கிரமித்துக்கொள்ளாது. மாம்சத்தின்மீது வைக்கப்படும் சிந்தனை தேவனுக்கு விரோதமான பகை என வசனம் 7இல் அப். பவுல் கூறியுள்ளார். நாம் தேவனுக்கு பகையாளியாக வேண்டுமெனில் அவர் விரும்பாத காரியங்களையே எப்பொழுதும் எண்ணிக்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் நாம் எவைகளை சிந்தித்துக்கொண்டிருக்கிறோமோ அவைகளையே நாம் செய்யவும் தூண்டப்படுகிறோம்.
எனவே தான் யாக்கோபு “விபசாரரே, விபசாரிகளே, உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்கு சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” (யாக். 4:4) என்று கூறியுள்ளார். கிறிஸ்தவ வாழ்க்கை நடத்தும் சில பக்தியானவர்களும் கூட உலகத்தின் காரியங்களின் மீது அதிக நாட்டம் வைத்திருந்தால் அவர்கள் தேவனுக்கு விரோதமாய் இருக்கிறார்கள். எனவேதான் யாக்கோபு “அவ்வாறு செய்யவேண்டாம்” என்கிறார்.
இரண்டாவதாக, மாம்சத்தின் சிந்தை தேவ கட்டளைகளுக்கு கீழ்ப்படியாது. நான் என்னுடைய மாம்சத்துக்குரிய காரியங்களையே நினைத்துக்கொண்டிருந்தால் தேவனுடைய கட்டளைகளான தேவவார்த்தையை சிந்திக்க முடியாது. அவைகளுக்குக் கீழ்படிய வேண்டுமென அறியேன். எனவே என் சிந்தை கிறிஸ்துவை விட்டு விலகிவிடும்.
மூன்றாவதாக, மாம்சத்தின் சிந்தை தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய தன்னை ஒப்படைக்காது. இவைகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறீர்களா? இணையதளத்தில் ஆபாச காட்சிகளைக் காண்பதிலோ, வேகமாக பணத்தை சேமிக்கும் முறைகளை நினைப்பதிலோ, உலகப்பிரகாரமான வேறு காரியங்களிலோ அதிகமான நேரத்தை நீங்கள் செலவிட்டால், தேவனுடைய வார்த்தையை நினைப்பதற்கு நிச்சயம் உங்களுக்கு நேரம் இருக்காது. இந்த அடிமைத்தனத்தை தேவனுடைய ஆவியானவர் விடுவிப்பார். அவர் ஒருவராலே மாத்திரமே இது சாத்தியம்.
கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வைப் பெற்ற ஒரு மனிதனுடைய சிந்தனை அடிக்கடி பழைய வாழ்க்கையை தேடி ஓடும். பாவ வாழ்க்கையை விரும்பும் ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள் இருந்தாலும் அவனால் பரிசுத்த தேவனைப் பிரியப்படுத்துவது கடினமான ஒரு காரியம். ஆனால் இவ்வித எண்ணங்களைக் கொண்டு வரும் பிசாசை எவ்வாறு வெற்றி பெறுவது?
ஒரு செயலை நீங்கள் செய்யும் விதத்தை மாற்றுவது எளிதல்ல. அதுபோல உங்கள் சிந்தையை மாற்றுவதும் மிகக்கடினம். ரோமர் 8:9 இல் “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்கு உட்பட்டவர்களாயிராமல் ஆவிக்கு உட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல”. அதாவது நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுமுன்னர் உங்கள் சிந்தையை உலகக் காரியங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நிலையை அப்.பவுல் இவ்வசனத்தில் விளக்குகிறார்.
நீங்கள் கிறிஸ்தவரான பின்னர் சில காலம் கழித்து தேவ ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்திருப்பாரானால் அவ்விடைப்பட்ட பகுதி ஒரு வெற்றிடமான காலமாகும். ஏனெனில் தேவனுடைய ஆவியில்லாதவன் கிறிஸ்தவனல்ல. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்பொழுது நமக்குள் தேவனுடைய ஆவியானவர் வருகிறார். அவருடைய பிரசன்னமே எனக்கும் உங்களுக்கும் இரட்சிப்பைத் தருகிறது என்று ரோமர் 5ம் அதிகாரம் விளக்குகிறது. எனவேதான் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுமுன்னர் இருந்த சிந்தை உங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்கள். அவருடைய ஆவி உங்களில் இருக்கிறதே. “மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்” என்று வசனம் 10இல் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பொருளாவது, உங்களுடைய சரீரம் மரித்ததாய் உள்ளது. அது தேவனுடைய காரியங்களுக்கு மரித்திருந்தது. ஆனால் தேவனுடைய ஆவியானவர் உங்களுடைய சிந்தையை உயிர்ப்பித்தார். நீங்கள் உங்கள் சிந்தைக்குக் கட்டுப்பட்டவர்கள். எனவேதான் கிறிஸ்துவுக்குள் இருந்த உங்களுக்கு புதிய சிந்தை உருவாகிறது. தேவனுடைய ஆவியானவர் உங்களது சிந்தையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார். ரோமர் 8ம் அதிகாரத்தின் இறுதிப்பகுதி மற்றும் 12ஆம் அதிகாரமும் ஜோடியாகும். ரோமர் 12:1 இல் “அப்படியிருக்க, சகோதரரே” என ஆரம்பிக்கிறார். எனவே இதற்கு முன்பதாக சில காரியங்களைக் கூறியிருக்கிறார் என நாம் அறிகிறோம். தேவனுடைய நீதியைக் கொண்டுவரும் இரக்கத்தைப் பற்றி அவர் முதல் எட்டு அதிகாரங்களில் எழுதியுள்ளார்.
தேவனுடைய இரக்கமே அவருடைய கிருபையை நமக்கு அருளுகிறது. அவருடைய கிருபையே கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நமக்கு ஒரு புதிய நிலையையும் புதிய சிந்தனையையும் தருகிறது. “அப்படியிருக்க சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” (ரோம.12:1) என்று அப்.பவுல் கேட்டுக்கொள்ளுகிறார். உங்களுடைய சரீரத்தை உங்களுடைய சிந்தை கட்டுப்படுத்தவேண்டும். “நான் உங்களுக்கு ஒரு பரிசினைத் தருகிறேன். நீங்கள் உங்களையே எனக்குத் தரவேண்டும்” என்று ஆண்டவர் கேட்கிறார்.
பழைய ஏற்பாட்டின் மக்கள் பலி செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். பலிபீடத்துக்கு ஆட்டுக்குட்டிகளை எடுத்துச் சென்றனர். அதனை தேவனுக்குப் பலியாகச் செலுத்தினர். தேவனும் அந்த பலிகளை ஏற்றுக்கொண்டார். ஆனால் இவ்விதமான செத்த பலிகளால் என்ன பலன்? “நீங்கள் எனக்காக மரிக்கவேண்டாம். ஆனால் நீங்கள் எனக்காக வாழவேண்டும். உங்கள் சரீரங்களை உயிருள்ள பலியாக எனக்குத் தாருங்கள். உங்கள் வழ்வின் அனைத்துக் காரியங்களும் என்னுடைய உபயோகத்துக்கு வேண்டும். அதாவது உங்களுடைய உழைப்பு, பொருளாதாரம், நேரம், தாலந்து, திருமணம், குடும்பம் போன்ற உடமைகள் மற்றும் உங்களுக்குரிய யாவும் எனக்குத் தேவை. அவைகளை என்னிடத்தில் ஒப்புவியுங்கள்” என்று கேட்கிறார். கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உங்களது சிந்தை புதிதாக மாறி உங்கள் சரீரங்கள் தேவனுடனான ஒரு புதிய உறவுக்கு மாறட்டும். “இனி ஜீவிப்பது நான் அல்ல; கிறிஸ்துவே என்னில் ஜீவிக்கிறார்” என்று உங்கள் சரீரத்துக்கு உங்கள் சிந்தை கட்டளை கொடுக்கவேண்டும். தேவனுக்குத் தரப்படும் ஜீவபலியானது பரிசுத்தமாயிருக்க வேண்டும். ‘பரிசுத்தம்’ என்றால் ‘பாவமில்லாத வாழ்வு’ என்று பொருளாகாது. ஏனெனில் எவராலும் பாவம் செய்யாதிருக்க முடியாது. பரிசுத்தம் என்றால் ‘தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட, தனித்தன்மையுள்ளது’ என்று அர்த்தமாம்.
பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பரிசுத்தப்படுதலுக்கென்று ஒரே சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. தேவன் பரிசுத்தமுள்ளவர்; எனவே நீங்களும் பரிசுத்தராயிருக்க வேண்டும். அவர் தனித்தன்மையுள்ளவர். மற்ற தேவர்களைப் போலல்லாது அவர் ஜீவனுள்ளவர். நாம் அவருக்கென்று சாட்சியாக வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அப்படியான ஒரு சாட்சியுள்ள வாழ்வு வாழும்போது நமது வாழ்வு தேவனுக்கென்று ஜீவபலியாக கருதப்படும்.
பழைய ஏற்பாட்டு பலிகள் கறையற்றதுமாய் பிழையில்லாததுமாய்க் காணப்படவேண்டும். நம்மில் இவ்வித குணங்கள் காணப்படுவது கடினம். ஆனால் தேவன் விரும்புவது இவ்வாறல்ல. நமது பழைய வாழ்வை விட்டு மனந்திரும்பி, புதிய சரீரத்தையும் புதிய எண்ணத்தையும் கொண்டவனாய் கிறிஸ்துவை விசுவாசித்து அவருக்கு சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழவே தேவன் விரும்புகிறார். நீங்கள் புதிய சிந்தையுடையவர்களாய், புதிய காரியங்களை நினைப்பவர்களாய், உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
மூன்றாவதாக, இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை என்கிறார். ‘புத்தியுள்ள’ என்ற சொல் ‘ஆவிக்குரிய’ என்ற பொருளைத் தரும். ‘இதுவே நீங்கள் செய்யத்தக்க ஆவிக்குரிய ஆராதனை’ என்று நாம் மொழிபெயர்க்கலாம். இது சரியான மொழி பெயர்ப்பாக இல்லாவிட்டாலும், ஏற்றுக்கொள்ளத்தக்க செல்லாகக் கொள்ளலாம். முதல் எட்டு அதிகாரங்களில் காணப்படும் கிருபையானது ‘உங்கள் வாழ்க்கை தேவனுக்கு உரியது’ என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. எனவே உங்கள் சிந்தை கிறிஸ்துவுக்குள்ளாக இருப்பதால், உங்கள் சரீரம் அவருக்கு ஜீவ பலியாக படைக்கப்படவேண்டும். கிறிஸ்துவுக்குள்ளாக நீங்கள் புது சிருஷ்டியாக இருந்தால், உங்கள் பணியிடத்திலும், நீங்கள் செல்லுமிடமெங்கும் நீதியைச் செய்து மற்றவர்கள் பார்வைக்கு முன்பாக தனித்துக் காணப்படுவீர்கள். இதுவே ஒரு புதுசிருஷ்டியின் புதிய சிந்தனை!
இன்றைய வாழ்வில் நாம் எவ்வாறு புது சிருஷ்டியாய் வாழ்வது? நம்முடைய சிந்தை ஒரு கணிப்பொறி போன்றது. அதில் சில கோப்புகளை அழித்து சில புதிய கோப்புகளை உருவாக்கவேண்டும். பழையவற்றை அழித்துவிட்டால் அங்கு புதியன எதுவும் தோன்றாது. நாம்தான் அவைகளை உருவாக்க வேண்டும். தேவனுடைய வசனத்தை அனுதினமும் வாசிப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் நாம் புதிய கோப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இது நமது சிந்தையைப் புதுப்பித்து, அதனைக் கூர்மையுள்ளதாகவும் ஆற்றலுள்ளதாகவும் மாற்றுகிறது. நம்மை உயிர்ப்பிக்கும் வேத வசனத்தை வாசித்து புது சிந்தையை பெற்றுக்கொள்வோமாக.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை