சகோதரி சாந்தி பொன்னு
(ஜனவரி-பிப்ரவரி 2017)

“ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்” (ரோமர் 15:7).

இன்னுமொரு புதிய ஆண்டுக்குள் கடந்து வர ஜீவன் சுகம் பெலன் தந்து நம்மை வழி நடத்திய தேவனுக்கே சகல கனமும் மகிமையும் உண்டாவதாக. இந்தப் புதிய ஆண்டும் எப்படியிருக்குமோ என்று வழக்கம் போல பல கேள்விகளுடனும் ஏக்கத்துடனும் நாம் இந்த நாட்களுக்குள் பிரவேசித்திருக்கலாம். ஆனால் சகலவற்றையும் தமது ஆளுகைக்குள் வைத்திருக்கிற தேவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.

புதிய ஆண்டு, புதிய மாதம், சிலசமயம் புதிய நாளில்கூட நம்மில் பலர் வாக்குத்தத் தங்களை நாடித் தேடி அலைவதுண்டு. அதனைப் பொறுக்கித் தருவதற்கென்றும் பலர் இருக்கிறார்கள். ஆனால் நமது கையில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்புத்தகத்தின் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு எழுத்துமே தேவனுடைய வாக்குறுதிகள்தான். செய்வேன் என்கிறவர் செய்வார்; அதில் என்ன சந்தேகம்? தேவாதி தேவனை நமது கைக்குள் அடக்கிவைத்து, நமது காரியத்தை முடிக்கின்ற சிந்தனை நமக்கு வேண்டாம். தாம் சொன்னதைச் செய்யாமல் மனம்மாற அவர் நம்மைப்போன்றவர் அல்ல.

நமது ஜெபங்களை அவர் கேட்கவேண்டும், தாம் சொன்ன வாக்குப்படியே அவர் செய்ய வேண்டும் என்றால், நாம் செய்யவேண்டிய நமது பங்கை நாம் சரியாகச் செய்யவேண்டுமே! “அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாக பிரியமானவைகளைச் செய்கிறபடியினால், நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்கிறோம்” (1யோவா 3:22). இதுவே நமது பங்கு.

“தேவனிடத்தில் நாம் முழுமையாய் அன்புகூர வேண்டும்; நம்மில் நாம் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூரவேண்டும்”. தேவனுடைய இந்தக் கட்டளைகள் நமக்குத் தெரியாது என்று யாரும் சொல்லமுடியாது. இதன் இரண்டாவது பகுதியை இயேசு இன்னும் ஆழமாக நமக்கு விளக்கிக் காட்டியுள்ளார். “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவா. 13:34). நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருப்பதற்கும், ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுவதற்கும் நமக்கு ஒரே மாதிரி இயேசு ஒருவர்தான்.

நாளை மாறிப்போகின்ற இந்த உலகத்துக்கு அடுத்த காரியங்களுக்காக நமது வாழ்வை வீணாக்காதபடி, உலகத்திற்கேற்ப புதிய வருடத் தீர்மானங்கள் எடுத்து, பின்னர் நிறைவேற்ற முடியாமல் பின்வாங்கிப்போய் வெறுப்படையாதபடி, நமது வாழ்வில் எல்லா நிலைகளிலும் இயேசுவையே மாதிரியாகக்கொண்டு, தேவனைப் பிரியப்படுத்துவது ஒன்றையே தீர்மானமாகக் கொண்டு, அவரை மகிமைப் படுத்த நம்மை அவர் கைகளில் விட்டு விடுவதே புத்தியுள்ள செயல்.

மூன்று முத்துக்கள்

பவுலடியார் ரோமருக்கு எழுதிய நிருபம் 15ம் அதிகாரம் 7ம் வசனம் நமக்கு இந்த ஆண்டிலே ஒரு புதிய உத்வேகத்தைத் தரட்டும். அந்த ஒரே வாக்கியத்திலே மூன்று முத்துக்களை தேவ ஆவியானவர் பதித்து வைத்துள்ளார்.

1.ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வது:

முதலாவது, நாம் செய்ய வேண்டியது – ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வது. ஏற்றுக்கொள்ளுவது என்னும்போது. நமது இருதயத்தில் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்வது ஒன்று. இது மிக இலகு. ஏனெனில் வெறும் வாயினால் அறிக்கையிடுகின்ற இந்த ஏற்றுக் கொள்ளுதலை எந்தக் கண்களும் காண முடியாது. ஏனெனில் இது இருதயம் சம்பந்தப்பட்டது. அடுத்தது, ஏற்றுக்கொள்வது என்பது வீடுகளில் ஏற்றுக்கொள்வது, இதனை எல்லோருடைய கண்களும் காணும். அதாவது, நமது வீட்டுப் பந்தியில் இணைத்துக்கொண்டு நமது உணவைப் பகிர்ந்துகொள்வது. ஜாதி தராதரம் என்று எந்த வேற்றுமைகளையும் விடுத்து, எல்லோருடனும் சமாதானமாய் சந்தோஷமாய் இருப்பது. இருதயத்தில் ஒருவரை ஏற்றுக் கொண்டு அமைதியாய் இருந்தாலும், செயலில் வெளிப்படவேண்டிய இந்தக் காரியம் முடிகின்ற காரியமா? இதற்காக நமது சமுதாயம் பாரம்பரியம் கலாச்சாரம் மற்றும் நமது பெருமை தன்மானம் என்று எத்தனையோ விஷயங்களை நாம் தாண்டவேண்டியதிருக்கிறது.

அன்று ரோம சபையிலே, யூதர்கள் புறவினத்தார், அடிமைகள் சுதந்திரர், பணக்காரர் ஏழைகள், பலவான்கள் பலவீனர் என்று எதிரும் புதிருமான பலதரப்பட்டவர்கள் இருந்தார்கள். அதனால் ஒருவரையொருவர் இருதயத்தில் அல்ல, வீடுகளில் ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு மிகவும் கடினமான விஷயமாக இருந்தது. ஆகவேதான் பவுல் இதைக் குறித்து ஆணித்தரமாக எழுதியுள்ளார். இது சாத்தியமானதா என்று யாரும் கேள்விகேட்காதபடி, எப்படி இதனை நம்மால் செயற்படுத்தமுடியும் என்றும் அவரே விளக்குகிறார். நம்மால் இயலாத எதையுமே ஆண்டவராகிய தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லையே! இதற்கு ஒரே வழி இயேசுவின் மாதிரிதான்.

2. ‘கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல… ‘

இதுதான் ஒரே வழி. இந்த வழி நடந்தால் தேவகட்டளையை நிறைவேற்றுவது நமக்கொன்றும் கடினமாகவே இராது. ‘கிறிஸ்து என்னை ஏற்றுக்கொண்டார்’ என்ற விசுவாசம் இல்லாதவனுக்கு இந்த வார்த்தை புரியாது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ‘கிறிஸ்துவே என் ஆண்டவர், அவர் என்னை உள்ளபடியே ஏற்றுக்கொண்டார்’ என்று சொல்லுகின்ற நாம் ‘கிறிஸ்து என்னை எப்படி ஏற்றுக்கொண்டார் என்று தெரியாதே’ என்று சொல்லமுடியாது.

பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்தே அவர் என்னைத் தூக்கியெடுத்தார் (சங்40:2). அருவருக்கப்படத்தக்கவனாய் வெளியிலே எறியப்பட்டிருந்த நிலையில், மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் கிடந்த என்னை அவர் தூக்கியெடுத்தார் (எசேக்.16:4-6). நான் பெலனற்றவனாய், பாவியாய், சத்துருவாய் இருந்தபோது ஆண்டவர் என்னைத்தேடி வந்தார் (ரோமர் 5:6-10). நாம் அல்ல; அவரே நம்மைத் தெரிந்துகொண்டார். (யோவான் 15:16). பாவத்தின் பிடியில் கிடந்த என்னைத் தம்முடைய தேவனுக்கு முன்பாக நிறுத்தும்படி தமது இரத்தத்தையே சிந்தி என்னைத் கழுவுமளவுக்கு அவர் என்னை ஏற்றுக்கொண்டு அன்பு கூர்ந்தார் (வெளி.1:6). எதற்கும் தகுதியற்ற எனக்கும் நித்திய வாழ்வை அருளுமளவுக்கு என்னை நேசித்தார் (யோவான் 3:15).

இதற்கும் மேலாக என்ன சொல்ல? பாவியாகிய என்னையே, மகா பரிசுத்த தேவன் தமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டிருக்க, பிறனை என் சொந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ள முடியாதபடி இந்த உலகம் கொண்டுவருகிற மாயையான தடைகளைத் தகர்த்தெறிய நான் ஏன் தயங்கவேண்டும்? “பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்” (ரோம.15:1). இந்த விஷயத்தில் நாம் பலவீனராக இருக்க முடியுமா? அடுத்தவரைக் குறித்து வீண்பேச்சுக்களைப் பேசுவதும், அதனையே பரப்புவதும் நம்மில் பலருக்கு ஒரு பொழுது போக்கு. ஒருவன் ஒரு குற்றம் செய்துவிட்டால், நமக்கு அது ஒன்றே போதும், என்ன வேகமாக அந்த நபருக்கு எதிராகப் பேசுவோம். தெரிந்தது தெரியாதது எல்லாம் பேசுவோம். இது இயேசுவின் மாதிரி இல்லை என்பதுவும் நமக்குத் தெரியும்.

தன் வாலிப மகனுடைய செயல்களினால் மனமுடைந்த ஒரு தகப்பன் அவனை வன்மையாகக் கண்டித்தார், தண்டிக்கவும் தயாரானார். மகனோ சீறிக்கொண்டிருந்தான். பல பிரச்சனைகள் குடும்பத்தில் தலைதூக்கின. இத் தகப்பனிடம் ஒரு நண்பர் ஒரேயொரு கேள்வி கேட்டார். நண்பா, இவனுடைய இந்த வயதில் நீ இருந்தபோது, உன் வாழ்வு எப்படியிருந்தது? பதில் சொல்லமுடியாமல் திக்குமுக்காடிப் போனார் தகப்பன். அதன் பின்னர் தன் மகனை ஒரு சிநேகிதன்போலப் பாவிக்க ஆரம்பித்தார். அன்பைக் காட்டினார். ஆறுதலாக அவனுடன் கூடவே நடந்தார். குடும்பத்தில் திரும்பவும் மகிழ்ச்சி உண்டானது.

“சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்” (கலா.6:1). இயேசு அதைத்தானே செயதார். சமாரியப் பெண்ணிடம் அவர் என்ன சொன்னார்? சகேயுவை அவர் என்ன செய்தார்? தமது சீஷர்களிடம் குற்றம்பிடித்த பரிசேயர் வேதபாரகரிடம் என்ன கேள்வி கேட்டார்? தன்னையே மறுதலித்த பேதுருவுக்கும், அருகிலே தொங்கிய கள்வனுக்கும் இயேசு என்ன சொன்னார் என்பதைத் தேடி வாசித்து நமதாக்கிக்கொள்வோம். “தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது” (ரோ.15:4) என்கிறார் பவுல்.

ஆகவே, ஆவிக்குரிய ரீதியிலோ, உலக ரீதியாகவோ, அல்லது சரீரத்திலோ யாராவது பலவீனராக, அல்லது பாவத்தின் பிடியில் அகப்பட்டவர்களாகவோ, எந்த நிலையில் இருந்தாலும், அவர்களைச் சுட்டிக்காட்டிக் குற்றப்படுத்திக் கொன்றுபோடாமல், ஆண்டவராகிய இயேசு நம்மைத் தாங்கிக்கொண்டு ஏற்றுக்கொண்டதுபோல நாமும் அவர்களுடைய வாழ்வின் வளர்ச்சிக்காக, அவர்களுக்கு நன்மையுண்டாக, அவர்களுடைய பக்திவிருத்திக்கு ஏதுவாக, அவர்களில் பிரியமாய் இருந்து (ரோம. 15:2) அவர்களையும் தேவனுடைய வழியில் அன்பாய் வழிநடத்துகின்ற ஒரு உன்னதமான தீர்மானத்தை இப் புதிய ஆண்டில் எடுப்போமாக. இது நமது ஆவிக்குரிய வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

3. தேவனுக்கு மகிமையுண்டாக

ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதும், கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல நாமும் பிறரை ஏற்றுக்கொள்வதும் நமது பெருமைக்காக அல்ல என்பதை ஊன்றிக் கவனிக்கவேண்டும். ஏதோ கிறிஸ்தவ புரட்சி செய்து, உலகப் புகழ் பெற்று பெருமையடைவதற்காக இந்த வாக்கியம் நமக்கு எழுதப்படவில்லை. ‘தேவனுக்கு மகிமையுண்டாக’ இதுதான் சத்தியம். மாறாக, தொலைக்காட்சி ஒளிபரப்புக்காகவும், பத்திரிக்கையில் புகழப்படுவதற்காகவும் ஏழைகளுடன் உட்கார்ந்து உண்டு, குடிசைகளுக்குள் உட்கார்ந்து பேசியும், தங்கள் பெயர் பிரஸ்தாபத்திற்காக புகைப்படங்களை எடுத்து முகப்புத்தகத்தில் போட்டு போலித்தனம் செய்கின்ற அநேகர் நம்மைச் சுற்றிலும் பல வேடங்களில் இருக்கிறார்கள். இந்தப் போலித்தனம் நமக்குக் கூடாது. தேவன் சகலத்தையும், நமது இருதயத்தின் ஆழங்களையும் காண்கிறவர்.

ஆக, தேவனுக்கு மகிமையுண்டாக நாம் செய்யவேண்டிய சில காரியங்களை இந்த ரோமர் 15:1-7 வசனங்கள் வரையான பகுதியில் பவுலடியார் நமக்குத் தந்திருக்கிறார். (இன்னமும் ஏராளமான காரியங்கள் வேதாகமத்தில் உண்டு என்பதையும் மறக்கக் கூடாது)

3. தேவனுக்குப் பிரியமாய் நடப்பது

இதற்கும் நமக்கு மாதிரி இயேசு ஒருவரே. “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” (யோவா.4:34). “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை என்றார்” (யோவான் 8:29). “கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல் உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே” (சங்.69:9) நடந்தார்.

இன்று நாம் யாரைப் பிரியப்படுத்துகிறோம்? மனுஷரையா? தேவனையா? தேவனைப் பிரியப்படுத்தும்போது பல நிந்தைகள், குறைகள், வீண்குற்றச்சாட்டுக்கள் நிச்சயம் நம்மைத் துளைத்தெடுக்கும். ஆனாலும், நமக்காகவே நிந்தைகள் பல சுமந்த இயேசு நமக்கிருக்க, அவர் காட்டிய மாதிரி, அவர் நடந்த பாதை நமக்கிருக்க, நாம் ஏன் இந்த உலகுக்குப் பயப்படவேண்டும்? இயேசுவைப்போல இன்னும் இன்னும் மாற்றமடைய இந்தப் புதிய வருடத்திலே நம்மை ஒப்புக்கொடுப்போமா?

வேதவசனத்தின்மீது வைராக்கிய வாஞ்சை யாயிருத்தல்:

வேதப்புத்தகம், தேவனுடைய வார்த்தை என்பது நமது மெய்யான விசுவாசமாயிருந்தால், அதன்மீது நமக்கிருக்கும் தாகம் என்ன? தேவனைப் பிரியப்படுத்த வேண்டுமானால் அவருக்கு எது பிரியம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி வேதப்புத்தகம்தான். நமக்கு ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாயிருக்கும்பொருட்டு அதை ஏற்கனவே ஆண்டவர் எழுதிக் கொடுத்துவிட்டார். இதைவிட மேலதிகமான ஆலோசனைக்காக அலையவேண்டிய அவசியமில்லை.

ஆனால் இன்று நமக்கிருக்கும் பெரிய சவால், இந்த வேதவாாத்தையையே புரட்டிப் போடுகின்ற பலர் நமக்குள் எழும்பியிருக்கிறார்கள். ஆகவே விழிப்புடனும் ஜாக்கிரதையுடனும் வேதத்தைப் பற்றிக்கொண்டு முன்செல்லுவோமாக. அதில் எழுதப்படாத எந்த ஒரு விஷயத்தையும் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கவும் மாட்டார்; நியாயந்தீர்க்கவும் மாட்டார்.

ஒருமனப்படு ஒரே வாயினால் பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தல்:

நாம் தனித்திருந்து தேவனைத் துதிப்பதும், பல்வேறுபட்ட தன்மையுள்ள, பல்வேறுபட்ட கருத்துக்கள்கொண்ட, வேறுபட்ட விருப்பங்கள்கொண்ட பலருடன் சேர்ந்து தேவனைத் துதித்து ஆராதிப்பதும் சற்று வித்தியாசம்தான். “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சி யோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள்” (அப்.2:46-47) என்று வாசிக்கிறோம். இந்த ஒருமனம் ஒற்றுமை இன்று நம்மவர் மத்தியில் இருக்கிறதா என்பது பெரியதொரு கேள்வி.

ஏன் நமக்குள் பிளவுகளும் பிரிவினைகளும்? ஏன் நம்மால் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை? முரண்பாடுகள் இயல்பானவை. ஆனால் முரட்டாட்டம் கூடாது. கருத்துவேறுபாடுகள் இயல்பானவை; அதற்காக ஒருவரையொருவர் கடித்துக் குதறக்கூடாது. துதித்தலும் சபித்தலும் ஒரே வாயில் உண்டாகலாமா? அன்று விசுவாசிகளுக்குள் இருந்த ஒருமனத்தின் பலாபலன்: “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்” என்ன அழகான வசனம். இது எந்த சபை? அன்று கட்டடமே இருக்கவில்லை. பல்வேறு பெயர் பலகைகள் இருக்கவில்லை. கொள்கைப் பிரிவினைகள் இருக்கவில்லை. தேவனுடைய மக்கள் ஒன்றுகூடிவருவது சபை எனப்பட்டது.

அப்படியிருக்க, இன்று கிறிஸ்தவ சமூகமே பிசாசின் தந்திர வலையில் அகப்பட்டுவிட்டதோ என்று எண்ணத்தோன்றவில்லையா? எத்தனை பிரிவினைகள் பிளவுகள், சண்டைகள், வழக்குவாதங்கள்? இந்த வஞ்சகத்துள் நாமும் அகப்படாதிருக்க தினமும் தேவவாவியானவர் துணையை நாம் நாடுவது மிக மிக அவசியம்.

ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்

“ஒரே சிந்தை, ஒரே இருதயம், இதற்கு ஒரே மாதிரி இயேசுகிறிஸ்துதான். இயேசுவினுடைய மாதிரியின்படியே நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி…..” (ரோம.12:16)) என்று எழுதுகிறார் பவுல். கிறிஸ்துவிலிருந்த சிந்தை எது என்பதையும் பவுல் எடுத்துக்காட்டுகிறார். “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்ககடவது” (பிலி.2:4,5).

கிறிஸ்து தனக்கானதை மாத்திரமே சிந்தித்திருந்தால், இன்று நமக்குப் பாவத்திலிருந்து மீட்புக் கிடைத்திருக்குமா? ஆனால் இதற்காக அவர் அடைந்த நிந்தைகள் பாடுகள் ஏராளம். “பிதாவே, இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும்” என்று ஜெபிக்குமளவுக்கு அவர் வியாகுலம் அடைந்தார். ஆனாலும் ஆண்டவர் பின்வாங்கிப் போகவில்லை. நாம் அடுத்தவனுக்காக நமது உயிரைக் கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை. ஆனால் பிறனை நேசிக்கும் நேசத்திலும், அவனுடைய பலவீனத்தில் அவனைத் தாங்குவதிலும், அவனுடைய பக்திவிருத்திக்குப் பக்கபலமாக இருப்பதற்கும், ஒருவரோடொருவர் ஏகமனமாயும் ஏகசிந்தையும் உள்ளவர்களாய் இருந்தும் தேவனை நாம் மகிமைப் படுத்தலாமே!

நமது வாழ்வில் சகல நிலைகளுக்கும் நமக்கு மாதிரி இயேசுதான். அவருடைய மாதிரியில் நடப்பது உலகரீதியில் கடினமாக இருந்தாலும்கூட, நமது பிதாவாகிய தேவனைப் பிரியப்படுத்தவும், உலக மக்கள் மத்தியில் அவரை மகிமைப்படுத்தவும் இதைத்தவிர வேறு மார்க்கமே இல்லை.

இந்தப் புதிய ஆண்டிலே, இயேசுவின் மாதிரியைப் பின்பற்றவும், இயேசுவைப்போல மாறுவதில் இன்னும் இன்னும் முன்னேறிச் செல்லவும் தேவ ஆவியானவர் கரத்தில் நம்மை ஒப்புவிப்போமா?

அப்போது தேவனும் நம்மில் மகிழ்ந்திருப்பார். நாமும் மகிச்சியாயிருப்போம். பிறரும் தேவனுக்குள்ளான சந்தோஷ மகிழ்ச்சியைப் பெற்று ஆசீர்வதிக்கப்படுவார்கள். ஆமென்.