ஆ.பிரேம்குமார்
(ஜனவரி-பிப்ரவரி 2017)

“அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள்என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம் பற்றினார்” (அப்.13:2).

அப்போஸ்தலருடைய நடபடிகளை ஆவியானவரின் நடவடிக்கைகள் என்று அழைப்பது அதிக பொருத்தமானது என்பது அநேக வேத அறிஞர்களின் அபிப்பிராயம். உண்மையில் அப்போஸ்தலருடைய நடபடிகள். அப்போஸ்தலரைக் கொண்டு தேவ ஆவியானவர் நடப்பித்த நடவடிக்கைகளாகும்.

பல்லினங்களைக்கொண்ட அந்தியோகியா சபை, ஐக்கியமான சபையாக உபவாசத்தோடு தேவனை ஆராதித்துக்கொண்டிருந்தபோது, தாம் அழைத்த ஊழியத்திற்காகப் பவுலையும் பர்னபாவையும் பிரித்துவிடும்படி பரிசுத்த ஆவியானவர் திருவுளம் பற்றினார் என்று வாசிக்கிறோம். ஆவியானவரின் சத்தத்தை இவர்கள் எப்படிக் கேட்டார்கள் என்று நாமறியோம்.

ஒருவேளை ஒரு சத்தத்தைக் கேட்டார்களோ, அல்லது அங்கிருந்த தீர்க்கதரிசி ஒருவருக்கூடாக ஆவியானவர் பேசினாரோ என்று நாம் அறியோம். அந்தியோகியா சபைத் தலைவர்கள் கூடி, “நாம் மிஷனரி இயக்கமொன்றை ஆரம்பிப்போம்” என்று கூறவில்லை. இந்த மிஷனரி ஊழியம் (இயக்கம்) சபை மூப்பராலோ, அல்லது போதகராலோ ஒரு திட்டமிடல் கூட்டத்தில் ஆரம்பிக்கப்படவில்லை. மாறாக, ஒரு ஜெபக்கூட்டத்தில் ஆவியானவராலேதான் ஆரம்பிக்கப்பட்டது. அவரே மிஷனரி ஊழியத்தின் இயக்குனர் என்றால் மிகையாகாது.

“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்” (அப்.1:8). பரிசுத்த ஆவியின் வல்லமை, பூமியின் கடைசி பரியந்தமும் சாட்சிகளாக இருப்பதற்காகவே என்று இவ்வசனம் நமக்கு அறிவிக்கிறது. அதாவது, இவ்விடத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமை, மிஷன் பணிக்காக… பவுலையும் பர்னபாவையும் மிஷனரிகளாக பிரித்து விடும்படி கூறியது பரிசுத்த ஆவியானவரேயாகும். அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டு… (அப்.13:4) என்றும் வாசிக்கிறோம்.

பவுல் தனது இரண்டாம் மிஷனரிப் பிரயாணத்தின்போது, “அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு… (அப்.16:6) என்று வாசிக்கிறோம். மறுபடியும் “மீசியா தேசமட்டும் வந்து, பித்தினி யாநாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினார்கள். ஆவியானவரோ அவர்களை போகவொட்டாதிருந்தார்( அப்.16:7) என வாசிக்கிறோம்.

சுசி பிரபாகரதாஸ் அவர்கள் “அடைக்கப்படுகிற அனைத்து வாசல்களையும் சாத்தான் அடைப்பதில்லை; சில வாசல்களை ஆவியானவரும் அடைக்கிறார்” என்ற பொருள்படக் கூறினார். அது எவ்வளவு உண்மை! ஆவியானவரே மிஷனரி இயக்கத்தின் ஸ்தாபகர், இயக்குனர். இங்கிலாந்து தேசத்தில் பிரசித்தி பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற கணிதமேதை ஹென்றி மார்ட்டின் அவர்களை ஆண்டவர் இந்தியாவுக்கு மிஷனரியாகப் போகும்படி அழைத்தபோது. தான் உயிரைப் போல் நேசித்த அன்புக்காதலியை விட்டு இந்தியாவுக்கு மிஷனரியாக வந்து, இந்தியாவில் பீகாரிலும் ஊழியம் செய்து, இந்துஸ்தானி, அரபிக், பெர்சிய மொழிகளில் புதிய ஏற்பாட்டையும் மொழிபெயர்த்தார். இவர் மரிக்கையில் இவருக்கு வயது 31. இவர் கூறிய பிரபல்யமான ஒரு கூற்று: “கிறிஸ்துவின் ஆவி மிஷனரி ஆவி. நாம் எவ்வளவாக அவருக்குள் நெருங்கி வருகிறோமோ அவ்வளவுக்குத் தீவிரமான மிஷனரிகளாவோம்”. (The spirit of Christ is the spirit of missions. The nearer we get to Him, the more intensely missionary we become -Henry Martyn).

இன்று சிலர் தங்கள் பொது அறிவிலும் புத்திக்கூர்மையிலும் மட்டுமே தங்கி, தங்கள் வாழ்வையும் ஊழியத்தையும் திட்டமிட, மற்றும் சிலர், ஆவியானவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என்று எதனையுமே திட்டமிடாமலும் இருக்கின்றனர். பிரசங்கங்களைக் கூட ஆயத்தம் செய்வது கிடையாது. ஆவியானவர் பார்த்துக் கொள்வாரென்று சோம்பலாக இருந்துவிடுகின்றனர். மற்றும் சிலரோ, ஆண்டவரின் பாதத்தில் காத்திருந்து ஆவியானவரின் வழிநடத்துதலை நாடாமல், தங்களை ஆயத்தப்படுத்தாமல் பிரசங்கத்தை மட்டும் ஆயத்தப்படுத்துகின்றனர். இவை இரண்டும் இரண்டு அந்தங்கள். அந்தியோகியா சபை ஆண்டவரின் வார்த்தையில் கட்டப்பட்ட சபை மாத்திரமல்ல, ஆவியானவரின் சத்தத்திற்கு உணர்வுள்ளதாயும் இருந்த சபையாகும்.

இன்று ஆவியானவரைக் குறித்தும், அவருடைய வழிநடத்துதல் குறித்தும் பல குழப்பங்கள் சபைகளில் காணப்படுகிறது. தங்கள் மனதில் தோன்றுவதையெல்லாம் ஆவியானவர் சொல்லுகிறார் என்று கூறுகிறவர்கள் ஒருபுறம்; வேதப்புத்தகத்தைத் தவிர்த்து வெளியே ஆவியானவர் பேசவேமாட்டார் என்று கூறுகிறவர்கள் இன்னொரு புறம். பரிசுத்த ஆவியானவர் வேதவசனத்திற்கு முரணாகப் பேசமாட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் வேதவசனத்திற்கு முரண்படாதவகையில் ஒரு காரியத்தைக் குறித்த பாரத்தையோ உந்துதலையோ அவர் கொடுக்கலாம். நமது குற்றங்களை நமக்கு உணர்த்தலாம்; உறவுகளைச் சரி செய்ய ஏவலாம். ஒரு காரியத்தைச் செய்ய வழிநடத்தலாம். ஆவியானவரும் வசனமும் இணைந்து செயற்பட வேண்டும். “ஆவியில்லாமல் வசனமிருந்தால் உலர்ந்துவிடுவாய்; வசனமில்லாமல் ஆவியிருந்தால் ஊதிவிடுவாய்; வசனமும் ஆவியும் இருந்தால்தான் வளருவாய்” என்றார் ஒரு இறைபக்தன்.

ஆவியானவர் என்பது ஒரு சக்தியல்ல; அவர் ஆள்தன்மையுள்ள ஒரு நபர். சபையிலே தலைவர்களை நியமிப்பவர் பரிசுத்த ஆவியானவர் (அப்.20:28). அவர் திரித்துவத்தில் ஒருவர். நாம் சுவிசேஷத்தைக் கேட்டு விசுவாசிகளாகும்போது நமக்குள் வருபவர். “நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்தியவசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்” (எபேசியர் 1:13).

ஒவ்வொரு உண்மை விசுவாசியையும் கூட்டி, ஒரே சரீரமாக இணைத்தவர் அவரே. “நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்” (1கொரி.12:13).

தேவனுடைய நோக்கத்திற்காகவே தேவ ஆவியானவர் கொடுக்கப்பட்டுள்ளார்; மாறாக, நமது தேவைக்காக அல்ல. “உங்கள் வாழ்வுக்கான தேவசித்தத்தை ஆவியானவர் என்றுமே தவறாகப் புரிந்து கொள்வதில்லை. உங்கள் வாழ்வைக் குறித்த தேவசித்தத்திற்கு நேராக உங்களை நடத்துவதே அவர் வேலை. அதன்பின் தேவசித்தத்தைச் செய்ய அவர் பெலன் கொடுக்கிறார்” என்கிறார் ஹென்றி பிலக்கபி அவர்கள். நாம் ஆவியானவரை ஒரு மந்திரப் பொருளைப்போல, அல்லது மாய சக்தியைப்போல பயன்படுத்தக் கூடாது. அவர் நம்மைப் பயன்படுத்த நாம் இடங்கொடுக்க வேண்டும். அவர் நம்மை ஆட்கொள்ள இடங்கொடுக்க வேண்டும்.

தேவ ஆவியால் வழிநடத்தப்படுதலுக்கு வேதாகமத்திலே சிமியோன் ஒரு நல்ல உதாரணம். சிமியோன் மேலும் பரிசுத்தாவியானவர் இருந்தார்; அவர் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் தேவாலயத்திற்கு வந்திருந்தார் என்று லூக்கா 2:27ல் வாசிக்கிறோம். அதுமட்டுமல்ல, “கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது” (லூக்கா2:26).

தேவ ஆவியானவர் சிமியோன்மேல் இருந்தார். அவருக்கு வார்த்தை கொடுத்தார்; ஆலயத்திற்கு வரும்படி ஏவினார். ஆம், சிமியோன் ஆண்டவரின் ஆவியானவரால் நடத்தப்பட்டார்; ஆவியானவரிடமிருந்து வார்த்தையைப் பெற்றார். ஆவியானவர் நம்மை சொகுசான பசுமையான பாதையில்தான் வழிநடத்துவார் என்றில்லை. இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டபோது, ஆவியானவரால் வனாந்தரத்திற்கூடாக நடத்தப்பட்டார்; அங்கே பிசாசினாலே இயேசு சோதிக்கப்பட்டார் என்று வாசிக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்மை வனாந்தர வழியாக, கரடுமுரடான கடினமான பாதைக்கூடாக, வேதனைக்கூடாகக் கூட வழிநடத்தலாம்.

“இன்றைய நாட்களில் பரிசுத்த ஆவியானவருக்கு மிகவும் குறைவான சந்தர்ப்பமே கொடுக்கப்படுகிறது. இன்றைய சபைகளும் அருட்பணி ஸ்தாபனங்களும் தமது சட்ட திட்டங்களுக்கு முதலிடத்தை கொடுப்பதனால், அவரை ஒரு மூலையில் அமரவைத்து விட்டு, தாமே பணிகளை செய்கின்றனர்” என்கிறார் சி.டி.ஸ்டட் அவர்கள். சட்டதிட்டங்கள் இருப்பது நல்லது. ஆனால் அவை அளவுக்கு அதிகமானவையாக இருப்பது நல்லதல்ல. அச்சட்டதிட்டங்களைக் கடுமையாகக் கடைபிடிப்பதில் மட்டும் கவனத்தைச் செலுத்திவிட்டு, ஆவியானவரின் செயற்பாட்டிற்கு இடமளிக்காமல் விட்டுவிடலாம். மறுபுறத்தில், எந்தச் சட்டதிட்டங்களோ கோட்பாடுகளோ எதுவுமில்லாமல் ஆவியானவர் நடத்துவார் என்று ஒழுங்கற்றிருப்பதும் நல்லதல்ல. “தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்” (1கொரி.14:32,33) “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது (1கொரி.14:40). ஆனால், ஆவியானவருக்கு முழுமையான சுதந்திரமும் ஆளுகையும் கொடுக்கப்பட வேண்டும்.

ஆவியானவரின் சத்தத்தைக் கேட்பதற்கு நாம் ஆவியானவரால் நிரப்பப்படுவது அவசியம். ஆவியானவரால் நிரப்பப்படுமாறு வேதத்தில் கட்டளை இடப்பட்டுள்ளது. “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறி கொள்ளாமல், ஆவியினால் நிறைந்து….” (எபே.5:18). இது ஒரு வேண்டுகோள் அல்ல; ஒரு கட்டளை!

ஆவியானரால் நிரப்பப்படுவது நாம் ஆவியானவருக்கூடாகக் கடந்துபோகும் அனுபவம் என்று ஒரு சாராரும், அது ஆவியானவரின் முழுமையான ஆளுகைக்கு விட்டுக்கொடுத்த ஒரு வாழ்வின் குணாதிசயம் என்று இன்னொரு சாராரும் கருதுகின்றனர். வேதாகமத்தில் இவை இரண்டையுமே நாம் காண்கிறோம்.

ஆவியின் நிறைவைக்குறித்து கலாநிதி அஜித் பெர்ணாந்து அவர்கள் விளக்குகையில், இரண்டுவிதமான நிரப்புதல்களைப்பற்றி கூறுகிறார்:

1. வாழ்க்கைக்குரிய குணாதிசயமாகும் நிறைவு: (Fullness as a quality of Life) மக்களின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் பண்பாக ஆவியின் நிறைவு காணப்படுகிறது (The fullness of the spirit a quality that characterizes people).

“பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து நற்சாட்சி பெற்றிருக்கிற” (அப்.6:3) ஸ்தேவான், பர்னபா இருவருமே ஆவியானவரால் நிரப்பப்பட்டவர்களாக விபரிக்கப்படுகின்றனர் (அப்.6:5). இது எல்லா கிறிஸ்தவர்களிடமும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது எபேசி. 5:18இல் “ஆவியினால் நிறைந்து” என்று பவுல் கட்டளை கொடுப்பதிலிருந்து நிரூபணமாகிறது. ஆவியானவரால் நிரம்பியிருப்பது பிரசங்கிப்பவர்களுக்கும் போதகர்களுக்குமான தேவை மட்டுமல்ல, நிர்வாக காரியங்களைச் செய்பவர்களின் தேவையாகவுமிருக்கிறது என்று குறிப்பிடுவதுடன், கிறிஸ்தவ குணாதிசயத்தை உருவாக்குவதில் ஆவியானவரின் செயற்பாட்டிற்கு பவுல் வலியுறுத்தம் கொடுப்பதையும் கலாநிதி அஜித் பெர்ணாந்து அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.

2. ஒரு விசேஷ காரியத்தை செய்வதற்கான நிரப்புதல்: (Fullness for a special task) உதாரணமாக இரத்தச் சாட்சியாக மரிப்பதற்கு முன்பாக நிரப்பப்படுதல்.

புதிய ஏற்பாட்டின் வேறுபட்ட வேதப் பகுதிகளை ஒப்பிடும்போது, பரிசுத்த ஆவியின் “நிரப்புதல்” “நிரப்பப்படுதல்” என்பது மூன்று வகைக்குட்படுவதாகத் தென்படுகிறதென்று ஜோன் ஸ்டொட் என்பவர் கூறி, அதைப் பின் வருமாறு வகைப்படுத்துகிறார்.

முதலாவதாக, நிறைவு அல்லது நிரப்பப் படுதல் என்பது அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவனினதும் இயல்பான குணாதிசயம் (அப்.6:5,6, 11:24, 13:52).

இரண்டாவதாக, இச்சொற்பிரயோகம் ஒரு குறித்த ஊழியத்திற்கோ, பதவிக்கோ, உரிமையளித்தலை வெளிப்படுத்துகிறது (லூக்.1:15-17; அப்.9:17; 22:12-15; 26:16-23).

மூன்றாவதாக, ஒரு வாழ்க்கைக் கால ஊழியத்திற்கோ பதவிக்கோ அல்ல; (உதாரணம்: அப்போஸ்தல அல்லது தீர்க்கதரிசன ஊழியம்) ஒரு உடனடிப் பணியை விசேஷமாக, அவசர காரியத்தை நிறைவேற்றுவதற்கான பெலனளிப்பு (லூக்.1:5-8,41,67; அப்.4:8,31; 7:55; 13:9) தருகிறார்.

வேதாகமம் பரிசுத்த ஆவியானவரின் நிறைவை ஒரு நிலைமையாக (பண்பாக) பேசுகையில், அது, பரிசுத்த ஆவி மக்களின் வாழ்வை ஆளும் நிலைபற்றியே பேசுகிறது. அது அவர்கள் நடத்தையிலும் ஊழியத்திலும் வெளிப்படுகிறது.

நாம் ஏன் திரும்பத்திரும்ப நிரப்பப்பட வேண்டும்? ஆவியானவரின் நிறைவு நம்மிலிருந்து கசிந்து போவதாலே நாம் திரும்பவும் நிரப்பப்பட்டாக வேண்டும். நாம் நிரப்பப்படுவது எப்படி? நமது பாவங்களை உணர்ந்து உண்மையான மனந்திரும்புதலோடு தேவனிடம் மன்னிப்பைக் கோரி, கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படுவதும், ஆவியானவரின் ஆளுகைக்கு நமது வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் விட்டுக்கொடுப்பது மூலமாகவுமே ஆகும்.

இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலும் மிகவும் உயர்வாக மதிக்கப்படும் தேவ ஊழியர் அஜித் பெர்ணாந்து பின்வருமாறு எழுதுகிறார்:

“ஆம், நீண்டகால செயற்திறன் மிக்க ஊழியமானது ஆவியின் நிறைவினால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையின் பிரதி பலனேயாகும். உண்மைத்துவமிக்க ஊழியத்திற்கு ஊற்றாயிருக்கும் ஆவியின் நிறைவை இழந்துவிடுவேனோ என்பதே எனது அச்சம்.

நான் மாம்சத்தில் ஊழியத்தைச் செய்கிறேன் என்பதை ஜனங்கள் ஆரம்பத்தில் கவனிக்கமாட்டார்கள். குறிப்பிட்ட காலத்திற்கு எனது அறிவு, அனுபவம், திறமைகளைக் கொண்டு ஜனங்களை ஏமாற்றலாம் என நினைக்கிறோம். ஆனால் தேவனுடைய இராஜ்யத்தின் நிகழ்ச்சி திட்டத்தில் செயற்திறன் மிக்கவர்களுக்கான விதிமுறைகளிலிருந்து நான் தள்ளிவிடப்படுவதோடு, தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறும் சேவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன்” என்கிறார். இந்தப் பகுதி என் உள்ளத்திலும் ஒருவித பயத்தினை ஏற்படுத்தியது.

இதனை வாசிக்கும் சகோதரனே, சகோதரியே, உங்கள் வாழ்வு ஆவியானவரின் ஆளுகைக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட வாழ்வாயிருக்கிறதா? ஆவியானவரால் நடத்தப்படும் வாழ்வாயிருக்கிறதா? ஆவியானவரின் வழி நடத்துதலுக்கு முழுவதும் விட்டுக்கொடுத்த வாழ்க்கையாயிருக்கிறதா? அல்லது மாம்சத்தினால் நடத்தப்படும் வாழ்வாயிருக்கிறதா? நீங்கள் செய்யும் ஊழியம் ஆண்டவரின் ஆவியின் பெலத்தால் செய்யப்படுவதா? அல்லது, மாம்ச பெலத்தால் செய்யப்படுவதா?

என்னுடைய வாழ்வைத் திரும்பிப் பார்க்கையில் மாம்சத்தால் நடத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் பல இருந்ததையும், மாம்ச பெலத்தில் ஊழியஞ்செய்ய நினைத்த சந்தர்ப்பங்களும் இருந்திருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன். பிரபல எழுத்தாளரும் போதகருமான A.W.டோசர் என்பவர் “இன்று பரிசுத்த ஆவியானவர் சபையை விட்டு எடுபடுவாரானால் நாம் செய்யும் 95 விதமான காரியங்கள் (ஊழியங்கள்) தொடர்ந்து நடைபெற்றிருக்கும். நாமோ வித்தியாசத்தை அறியாதிருப்போம். புதிய ஏற்பாட்டு சபையிலிருந்து பரிசுத்த ஆவியானவர் எடுபட்டிருந்தாரானால் அவர்கள் செய்த 95 வீதமான காரியங்கள் நின்றுபோயிருக்கும். அனைவரும் வித்தியாசத்தை அறிந்திருப்பர்” என்கிறார். இது எவ்வளவு கசப்பான உண்மை! மாம்சத்தில் நாம் சபைகளை நடத்தலாம். ஊழியங்களைக் கொண்டு செல்லலாம். ஆனால் அவை தேவ அங்கீகாரத்தைப் பெறுமா?

உங்கள் சபை ஆவியானவரின் சத்தத்திற்கு உணர்வுள்ளதாயிருக்கிறதா? அல்லது, ஆவி யானவரை சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிற சபையாயிருக்கிறதா? ஆவியானவர், அந்தியோகியா சபையிலிருந்த சிறந்த தலைவர்கள் இருவரை அனுப்பச் சொன்னபோது, அது கடினமான கட்டளையாயிருந்தாலும் சபை கீழ்ப்படிந்தது. உங்கள் சபை எப்படி? ஆண்டவர் உங்கள் சபையில் உங்களுக்கு மிகவும் உபயோகமான ஒருவரை அனுப்பச் சொன்னால் அனுப்பத் தயாரா? உங்கள் உதவி போதகரை அனுப்பச் சொன்னால் அனுப்பத் தயாரா? உங்கள் சொந்தப் பிள்ளையை மிஷனரியாக அனுப்பச் சொன்னால் ஆயத்தமா?


நினைவுகூருங்கள்!

கிறிஸ்தவர்களுடைய ஜெபம் இரகசியமானதாய் இருந்தாலும் அதினுடைய விளைவை யாராலும் மறைக்க முடியாது.