சகோ.சுந்தர்சிங் மாத்யூஸ்
(ஜனவரி-பிப்ரவரி 2017)

“கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (பிலி.4:4).

சந்தோஷமாயிருங்கள் என்பது உங்களுக்கான ஒரு அறிவுறுத்தல், ஒரு கட்டளை மட்டுமல்ல, இது உங்களுக்கான ஒரு நினைவூட்டல் என்பதுதான் மிக முக்கியமானது. ஆனந்த மாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதுவும் சந்தோஷமாக வாழ்வதுமே மனிதனுக்கு கடவுளால் அருளப்பட்ட இயல்பாகவே இருக்க வேண்டிய பண்புகள். சந்தோஷமாக வாழ்வதற்காகவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள்.

சிறுவர்களாக இருந்தபோது எப்படி இருந்தீர்கள். உங்கள் எண்ணங்கள் செயல்கள் எல்லாம் எப்படியானதாக இருந்தது என சிந்தித்துப்பாருங்கள். எவ்வளவு சந்தோஷமாக இருந்தீர்கள். நண்பர்களோடு விளையாடி மகிழ்ந்தீர்கள். ஒருவருக்கொருவர் சண்டைபிடித்துக் கொண்டீர்கள், ஆனால் உடனடியாக சகலத்தையும் மறந்து மறுபடியும் ஒற்றுமையாக விளையாடினீர்கள். ஏனெனில் உங்கள் மனதில் குரோதம், கபடம் இருக்கவில்லை, பொறாமை இருக்கவில்லை. உங்கள் மனதில் அன்பு மட்டுமே இருந்தது, சந்தோஷம் மட்டுமே இருந்தது, ஆகவேதான் இயேசுவும், “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் (மத்தேயு 18:3).

சிறுபிள்ளைகளாக இருந்தபோது உங்களிடமிருந்த அந்த பண்புகள் எல்லாம் என்னவாயிற்று, பெரியவர்களாக வளர்ந்த பின்னர் சிறந்த கல்வியறிவு பெற்றுள்ளீர்கள். நிறைய அனுபவங்களை பெற்றுள்ளீர்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலையும் பெற்று உங்களின் விருப்ப தேர்வுக்கு ஏற்றவாறு ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான ஆசீர்வாதங்களையும் பெற்றுள்ளீர்கள். இறைவனால் படைக்கப்பட்ட மனுக்குலம் சிறப்பாக வாழக்கூடிய இயற்கை வளங்களோடு கூடிய இந்த அழகிய அற்புதமான பூவுலகில் ஒரு மானிட பிறவியாக வாழ்வதற்காக படைக்கப்பட்டதே நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு போதுமானதாகும். என்றாலும் அநேகர் சந்தோஷமாக வாழ்வதில்லை, வாழ முற்படுவதில்லை, சந்தோஷமாக இருக்க வேண்டிய தருணங்களில் கூட கவலையோடும், விரக்தியோடும் வாழ்வதையே பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

வளர்ந்து பெரியவர்களான பின்னர் சில சமயங்களில் இவர்கள் கற்பனைச் செய்த அளவுக்கு வாழ்க்கை சுலபமாயிருப்பதில்லை. ஏனெனில் நம்மில் பலர் ஒரு பிரச்சனையற்ற, தோல்வியே ஏற்படாத வாழ்க்கை மட்டுமே சந்தோஷமான வாழ்க்கை என்ற நடைமுறைக்கு சாத்தியமற்ற எண்ணத்துடனே வாழ்க்கையை எதிர்கொள்ள முற்படுகின்றனர். பிரச்சனையோடு கூடியதுதான் ஒரு இயல்பான வாழ்க்கை என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தோல்வியிலிருந்து, பிரச்சனைகளிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வாழ்வதுதான் சந்தோஷமான வாழ்க்கை என்பதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை.

உங்களின் வாழ்க்கையை உங்களின் விருப்ப தெரிவின்படி மட்டுமே சிந்தித்து வடிவமைத்துக்கொள்ளும்போது அது உங்களுக்கு ஒரு திருப்தியான, நிறைவான சந்தோஷமான வாழ்க்கையாக இருக்க வேண்டுமெனவும் விரும்புகிறீர்கள், எதிர்பார்க்கிறீர்கள். இந்த எதிர்பார்ப்பின் ஊடாக நீங்கள் வாழும்போது ஏதோ ஒரு பிரச்சனையோ, தோல்வியோ ஏற்படும்போது வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து, மகிழ்ச்சியையும் இழந்து துவண்டு போய் விடுகின்றீர்கள். பிரச்சனைகளோடு கூடியதுதான் வாழ்க்கை என்பதை வேதாகமம் நமக்கு நிறையவே கற்பித்துள்ளது.

இயேசுவின் போதனைகளிலும் அவரின் வாழக்கையினூடாகவும் இவைகளை நாம் தெளிவாக அறிந்துகொள்கிறோம். புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த பலரின் வாழ்க்கையை நாம் வாசிக்கும்போது அவர்கள் பல விதமான பிரச்சனைகளின் மத்தியிலும் ஒரு திருப்தியான, மகிழ்ச்சியான, வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்ததை காணமுடிகிறது. இவைகளை நாம் கற்றுக்கொள்ளும்போது இவற்றின் ஊடாக நமது வாழ்க்கையை பிரச்சனைகளின் மத்தியிலும் சந்தோஷமாக அமைத்துக்கொள்வதற்கான பாடங்களை கற்றுக்கொள்கிறோம். புரிந்துகொள்ளுங்கள்; “வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் என்பது நீங்கள் மேலும் சிறப்பாகவும் திறமையாகவும் செயற்பட உங்களுக்கு அளிக்கப்படும் ஓர் அரிய சந்தர்ப்பமாகும்”.

நீங்கள் இறை விசுவாசத்துடனும், விழிப்புணர்வுடனும் செயல்படும்போது பெரிய பிரச்சனைகள்கூட உங்கள எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வெற்றிக்கான வாய்ப்பாகிவிடுகின்றது. இதன்போது பிரச்சனைகள் ஏற்படும்போது நீங்கள் சோர்வடைந்து விடாதபடி, தைரியமாக அவைகளை எதிர்கொள்ள வழிவகுக்கிறது.

வேதாகமத்தில், “..உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும், உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்” (ரோமர் 5:3,4) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகின்றார்.

ஏற்படும் உபத்திரவமானது, இறை விசுவாசத்தை அதிகரிக்கவும், மேலும் வெற்றிகரமாக முன்னேறிச் செல்லவும் ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்தப்பட்டது. இது எவ்வளவு அற்புதமான விசுவாசம், நம்பிக்கை, சந்தோஷமாக வாழ்வதற்கு இதை விட வேறு எந்த விதமான சாத்தியமான நடைமுறைகளும் இல்லை என்பதே உண்மை.

எல்லாச் சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக இருப்பது சிலருக்கு இயலாமல் இருக்கலாம், ஆனால் பலர் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய தருணங்களிலும்கூட எதிலும் ஏதாவது ஒரு குறையை மட்டுமே கண்டு அவற்றை மட் டுமே பெரிதுபடுத்தி மகிழ்ச்சியாக வாழ வேண்டிய தருணங்களை இழந்து விடுகிறார்கள். நம்மிடையே காணப்படும் பொறாமை, காழ்ப்புணர்ச்சி போட்டி மனப்பான்மை, பிறருடன் ஒப்பிட்டு பார்க்கும் தன்மை போன்ற எதிர்மறையான எண்ணங்கள் காரணமாக நாம் சந்தோஷமாக வாழவேண்டிய தருணங்களையும் மகிழ்ச்சியாக வாழவேண்டிய பண்புகளையும் இழந்துவிடுகிறோம்.

பிலிப்பியருக்கு பவுல் எழுதிய நிருபத்தில்: “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” என பிலிப்பியர் 4:11,13இல் எழுதும்போது மகிழ்ச்சி அடைவதற்கான சூழல் இருக்கவில்லை. அவர் ரோமராஜ்யத்தின் சிறைக்கைதியாக இருந்தபோது இதை எழுதுகின்றார். அவர் இறை விசுவாசத்தின் காரணமாக கிறிஸ்துவின் மூலம் இவைகளை மேற்கொள்ள பெலன் கிடைப்பதாக சாட்சிகொடுக்கின்றார்.

ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இயல்பாகவே அப்பண்புகள் நம்மிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் நாம் ஒழுக்கமற்ற, பிழையான நேர்மையற்ற எண்ணங்களால் மனதை நிரப்பி மனதை குப்பை மேடாக்கி வாழ முற்படும்போது மனதோடு உடலையும் வருத்தி பாழ்படுத்தி, சந்தோஷமாக மகிழ்ச்சியுடன் அனுபவித்து வாழ வேண்டிய வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்.

இறை நம்பிக்கை நமது திருப்தியான மகிழ்ச்சியான வாழ்வுக்கும் நிறைவான அமைதியான மனதுக்கும் இற்றியமையாதது. ஆனால் நாம் எல்லாச் சூழ்நிலைகளிலும் அறிவியல் ரீதியாக நிந்தித்து வாழ முற்படுகின்றோம். ஆனால் எல்லாச் சூழ்நிலைகளிலும் இது வெற்றிகரமாக அமைவதில்லை. நம்மால் எதிர்கொள்ள முடியாத அறிவியல் ரீதியாக தீர்க்கமுடியாத பிரச்சனை ஏற்படும்போது மட்டுமே இறை நம்பிக்கையின் அவசியத்தை உணர்கிறோம். ஆண்டவரிடம் நாம் முற்றிலுமாக சரணடையும்போது நமக்கு ஒரு புது பெலன் தைரியம் ஏற்படுவதை அனுபவரீதியாக உணர்கிறோம். நமது கஷ்டங்கள், பிரச்சனைகள் யாவும் படிப்படியாக விலகிச்செல்வதை உணர்கிறோம்.

இறைவிசுவாசம், நம்பிக்கை என்பது நம்முடைய பிரச்சனையான காலங்களில் மட்டுமல்ல; நமது அன்றாட சகல நடவடிக்கைகளிலும், எல்லா சூழ்நிலைகளிலும் நம் வாழ்வோடு இணைந்து வியாபித்திருக்க வேண்டிய பண்பாகும். ஆனால் பலசமயங்களில் நாம் பிழையான நேர்மையற்ற, ஒழுக்கமற்ற நடைமுறைகள் காரணமாக வாழ்வை முற்றிலுமாக சீரழித்து ஆரோக்கியத்தையும் இழந்து பின்னர் நம் சுயபலத்தால் ஒன்றுமே செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் ஆண்டவரைத் தேடுகிறாம். தவிக்கின்றோம், அல்லல்படுகின்றோம். ஆனால் காலம் கடந்துவிடுகின்றது. சந்தோஷமாக வாழ்ந்திருக்கவேண்டிய இழந்துபோன நாட்களை நினைத்து ஆயாசப்பட மட்டுமே முடிகிறது. அற்புதமாக சிறகடித்து பறந்திருக்க வேண்டிய இளமைப் பருவங்கள், ஆனந்தமாக அனுபவித்திருக்கவேண்டிய குடும்ப வாழ்வு, மட்டற்ற மகிழ்ச்சியை தரும் சமூகப் பணிகள், இவை ஒவ்வொன்றுமே திரும்ப பெறமுடியாத இறைவனால் அருளப்பட்ட அற்புத நேரங்கள்.

இன்னும் பலர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக பலவிதமான புறக்கருவிகள் மூலமாக மானிட வாழ்வை சீரழிக்கும் நடைமுறைகளை மேற்கொள்கிறார்கள். சிகரட், மது, போதைப்பொருட்கள் மூலம் சந்தோஷத்தை அடைய முற்படுகின்றார்கள், இவைகள் ஒரு உடனடி மகிழ்ச்சியை, தற்காலிக கிளர்ச்சியையும் ஏற்படுத்தும். அத்துடன் அது ஒரு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையில் இந்த சிகரட், மது போன்ற பழக்கங்கள் பிறந்தநாள், திருமண வைபவங்களின் விருந்துகளின்போது நண்பர்களால் உந்தப்பட்டு, ஒருநாள் மட்டும் என்ற எண்ணத்துடன் பழகத் துவங்குகிற மக்கள், பின்பு நாளடைவில் இலகுவாக அந்த பழக்கத்துக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டு, குடும்பத்தில் மற்றும் சமுகத்தில் நன்மதிப்பையும் இழந்து விடுகிறார்கள். அதன் பின்னர் இவைகளை விட்டுவிட வேண்டுமென விரும்பினாலும்கூட அவர்களால் அது முடிவதில்லை. அவர்களின் உடலும்கூட அந்த இச்சைக்கு அடிமையாகி அப்பழக்கத்தை விட்டுவிட முடியாதவர்களாக்கிவிடும்.

போதைப்பொருள் பாவனையின் பாதிப்பை விடவும் அதிலிருந்து விடுபட முடியாமல் போவதுதான் மிகவும் பரிதாபத்திற்குரியது. எந்த ஒரு பழக்கத்திற்கோ, எந்த ஒரு உணர்வுக்கோ அடிமையாக இருப்பது உண்மையான மகிழ்ச்சியைத் தராது, எந்த ஒரு பழக்கமும, உணர்வுகளும் உங்களின் கட்டுபாட்டில் இல்லாத பட்சத்தில் நீங்கள் அதற்கு அடிமையாக இருப்பீர்கள்.

புரிந்துகொள்ளுங்கள், “நல்ல பழக்கங்கள் பழகுவது மிகவும் கடினம், ஆனால் அதன் மூலம் வாழ்வதென்பது மிகவும் இலகுவானதும் சந்தோஷமானதுமாகும்”. ஆனால் கெட்ட பழக்கங்களைப் பழகுவது மிகவும் எளிது. ஆனால் அதனோடு வாழ்வதானது மிகவும் கடினமானதும் மகிழ்ச்சியற்றதுமாகும்”. அதனால்தான் பெற்றோர் தமது பிள்ளைகளை ஒழுக்கமாக, நன்னடத்தையோடு வளர்ப்பதில் அக்கறை செலுத்தவேண்டியதுள்ளது.

ஒரு தவறான பிழையான பழக்கத்திலிருந்து விடுபடவே முடியாது என்பதினால் அல்ல, அப்படி மாற மனதார, உளமார விரும்பினாலும் கூட அது பெரும் சிரமமாகவே இருக்கும். இறை விசுவாசத்துடனும் தியானத்துடனும் முயற்சிக்கும்போது உங்களால் நிச்சயமாக மீண்டெழ முடியும், என்றாலுமே மறுபடியுமாக அந்த பிழையான காரியத்தில் ஈடுபடுவதில்லை என்ற உறுதியான எண்ணம் தேவை.

விபச்சாரம் செய்து கல்லெறிந்து கொல்லப்பட இருந்த ஸ்திரீயை நோக்கி இயேசு, “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே” (யோவா.8:11) என்று அவளை விடுதலை பண்ணுகிறார். இங்கே திரும்பவும் பாவம் செய்யாமலிருப்பதற்கான உத்திரவாதம் மட்டுமே அவள் பாவமன்னிப்பை, புனர் வாழ்வை பெறுவதற்கான ஒரு பிராயச்சித்தமாக அமைகிறது.

கெட்ட பழக்கத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை விட்டு விலகுவதே உத்தமம். இயேசு அதை மிக தெளிவாகவும், கடுமையாகவும் வலியுறுத்துகிறார், “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்” எனக் கூறுகிறார் (மத்.5:29, மாற்.9:47).

எல்லா நிலைமையிலும் நாம் சந்தோஷமாக வாழவேண்டும். பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. நோய், மூப்பு, எதிர்பாராத மரணம் எது நேரிட்டாலும், உள்ளதை கொண்டு திருப்தியாக வாழும் மனநிலை இல்லாவிடில், உலகிலுள்ள சகல ஐசுவரியமும் கிடைத்தாலும் மனிதன் சந்தோஷமாக வாழமாட்டான்.

உலக ஐசுவரியங்களின் மீதான இச்சை நம் வாழ்வை சீரழித்துவிடும். இயேசுவும் வனாந்திரத்தில், பிசாசினாலே சோதிக்கப்பட்டபோது, உலகிலுள்ள சகல ஐசுவரியங்களையுமே தருவதாக பிசாசு கூறுகிறான், உலக ஐசுவரியம் என்றுமே நிலையானதல்ல, இளமை, கல்வி, பதவி, குடும்பம், ஆரோக்கியம், வீடு, தொழில், பொருளாதார வசதி யாவுமே இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது. எனினும், நமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்வதுதான் முறைமை. அதனை விடுத்து அவைகளை இச்சிப்பதும் அவற்றை அடைவதற்காக வாழ்வை வீணாக்கினால், அன்றாடம் அனுபவித்து மகிழ்ந்திருக்க வேண்டிய தருணங்களையும், காலங்களையும் இழந்துவிடுவோம்.

அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்கு தாரும் என ஜெபிக்க இயேசு கற்பித்துள்ளார். ஒவ்வொரு நாளிலும், அந்நாளுக்கான வாழ்வை அன்றன்றே வாழ்ந்து முடித்துவிடுங்கள்.

“ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்” (மத்.6:34).

இந்த அற்புதமான பூவுலகைப் படைத்து அவற்றில் எவ்வளவோ மிருகங்கள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள் என அனைத்தையுமே படைத்து இவைகளை எல்லாம் ஆண்டு அனுபவிக்கும்படியாக, மனிதரான நம்மையும் கடவுள் தமது சாயலாகவே படைத்துள்ளார். இந்த மானிட வாழ்வே கடவுள் மனுக்குலத்திற்கு அருளிய மிக அற்புதமான பரிசும் ஆசீர்வாதமுமாகும், ஆகவே நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டுமல்லவா!

வசனம் கூறுகிறது, “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். போதுமென்கிற மன துடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” (1தீமோ.6:10,6,8). ஆகவே, மகிழ்ச்சியாக வாழ இறை விசுவாசத்துடன் உறுதிகொள்வோம்!