Dr.தியோடர் எச்.எஃப்.
(ஜனவரி-பிப்ரவரி 2017)

5. நீதி என்னும் மார்க்கவசம் (எபேசி. 6:14-17)

நம்முடைய நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டு சாத்தான் நம்மீது குற்றச் சாட்டுக்களை தேவனுக்கு முன்பாகக் கூறும்போது, நாம் தேவனுடைய சமுகத்தை விட்டு விலக்கப்பட முடியாது. ஏனெனில் நாம் கிறிஸ்துவின் நீதியினால் அங்கு நிற்கிறோம். கிறிஸ்து அங்கே நமது மத்தியஸ்தராகப் பிதாவின் முன் நின்று, நமக்காகப் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார். 1யோவான் 2:1,2 வசனங்களில் நாம் இதைக் காண்கிறோம்: “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.”

தங்களுடைய பாதுகாப்பின் அடிப்படை கிறிஸ்துவின் நீதி என்பதை இன்று பல கிறிஸ்தவர்கள் உணருவதில்லை. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தங்களைத் தாங்களே தற்பரிசோதனை செய்து, கிறிஸ்தவ வாழ்க்கையில் சோர்வடைந்து சாத்தானுடைய தாக்குதல்களுக்கு ஏதுவாகத் தங்களை ஆக்கிக்கொள்ளுகிறார்கள். விசுவாசியைத் தாக்குவதற்கு எப்போதும் சாத்தான் வாய்ப்புத் தேடிக்கொண்டிருக்கிறான். ஒருவன் பாவம் செய்து, அதனால் குற்ற உணர்வடைந்து கவலையில் இருக்கும்போது, சாத்தான் அதைப் பயன்படுத்தி, அவனை மேலும் அதிகம் சோர்வடையச் செய்து, வெட்கம், பயம் இவற்றை ஏற்படுத்திவிடுவான். ஒரு கிறிஸ்தவன் மன்னிக்கப்பட முடியாத பெரிய பாவத்தைச் செய்துவிட்டதாகச் சிலர் நம்பிச் சோர்வடைந்துவிடுகிறார்கள். ஏனென்றால் கிறிஸ்துவை அவன் இரட்சகராக ஏற்றுக்கொண்ட உடன், அவனுடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விட்டன என்பதை உணராமலும், அந்த நிலையில் மன்னிக்கப்பட முடியாத பாவத்தைச் செய்ய முடியாது என்பதையும் மறந்துவிடுகிறான்.

நாம் நீதி என்னும் மார்க்கவசத்தை நிரந்தரமாக அணிந்துகொள்ள வேண்டும். விசுவாசத்தின்மூலம் கிறிஸ்துவுக்குள் நமது நிலையை உணர்ந்து, அவர்மேல் சார்ந்து நிற்கவேண்டும். இந்தக் கொள்கையை நாம் அறிந்திருந்தால் மட்டும் போதாது. நாம் அதைச் செயல்படுத்த வேண்டும். எபேசியர் 4:24 கூறுகிறது: “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்”. மேலும் நமக்குச் சொல்லப்படுகிறது, “ஏனெனில், நற் கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்” (எபேசியர் 2:10). நற்கிரியைகளைச் செய்வதற்காக நாம் புதிதாகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் மறக்கக்கூடாது. கிறிஸ்துவை அறிந்தவர்கள் நற்கிரியைகளைச் செய்து தேவனுக்கு மகிமையை ஏற்படுத்த வேண்டும். கிறிஸ்துவுக்குள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை நம்பும் கிறிஸ்தவர்களை விழச்செய்யச் சாத்தான் பயன்படுத்தும் மிகப் பெரிய தந்திரம், அவர்கள் நன்மை செய்ய எவ்விதக் கட்டாயமும் இல்லை என்பதை நினைக்கச்செய்து விடுவதாகும். உலகப் பிரகாரமான, வித்தியாசமான ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் வாழ்வது ஆண்டவருக்குப் பிரியமானதாக இராது. ஏனெனில், நாம் நம்முடைய மனச்சாட்சியைத் தூங்க வைத்து விட்டு, “கடவுளுக்கு முன்பாக நான் நீதிமானாய் இருக்கிறேன். நான் வேறென்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறோம். இவ்வகையான சிந்தனைக்குப் பவுல் தரும் விடையைப் பாருங்கள். “ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?” (ரோமர் 6:1,2). நம்முடைய நிலை கிறிஸ்துவின் நீதியாக இருப்பதால், நம்முடைய செயல்பாடுகள் நன்மை செய்வதாய் இருக்கவேண்டும். கிறிஸ்துவே நமது நீதி. அவரே நமது இரட்சிப்பு. அவரே நமது வாழ்க்கை. நாம் அனுதினமும் நற்கிரியைகளைச் செய்து அவரை மகிமைப்படுத்த வேண்டும்.

நாம் வாழும் வாழ்க்கை, கிறிஸ்துவை வெளிப்படுத்த வேண்டும். அது கிறிஸ்துவில் நாம் நிலைத்திருப்பதைக் காட்டும். பவுலின் வாழ்க்கையில் இதுவே அவனுடைய விருப்பமாக இருந்தது. பிலிப்பியர் நிருபத்தில் அவர் எழுதியதிலிருந்து இது தெரிகிறது: “நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப் போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” (பிலிப்.1:20,21). அதனால்தான் அவர் இப்படியும் கூறினார்: “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா. 2:20).

தேவனுக்கு முன்பாக நமது நிலையைப் பொறுத்தமட்டில், கிறிஸ்துவின் நீதியே முக்கியமானது. ஏனெனில் கிறிஸ்து நமக்குள் வாசமாயிருந்து நம்முடைய அனுதின வாழ்வில் தமது நீதியை வெளிப்படுத்துகிறார்.

தேவனுடைய கிருபையைக் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதில் அக்கறை கொள்ளாமல் இருப்போமானால், தேவன் நம்மை ஒருபுறம் ஒதுக்கி வைத்து, நம்மை ஆவிக்குரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நம்மைச் சீர்ப்படுத்த வேண்டும். கொரிந்து திருச்சபையாருக்குத் திருத்த முடியாத ஒரு கொடிய பாவியைச் சீர்ப்படுத்துவது எப்படி? என்று பவுல் அறிவுரைகளைக் கூறினார்: “அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச் செய்கிறேன்” (1கொரி.5:5).

ஆண்டவருடைய சமுகத்தில் நிற்கும்போது வெகுமதியைப் பெறாத விசுவாசிகளைக் குறித்துப் பவுல் கூறுவதைப் பாருங்கள். “ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்.” (1கொரி.3:15). அப்படிப்பட்ட ஒரு மனிதன் விசுவாசியாக இருந்தாலும், அவனிலும், அவன்மூலமாகவும் கிறிஸ்து கிரியை செய்ய அனுமதிக்காதபடியால், கிறிஸ்துவின் நியாயாசனத்துக்கு முன்பாக அவனுக்கு ஒரு வெகுமதியும் கிடையாது. (2கொரி.5:10)ஐயும் பார்க்கவும்.

எனவே நாம் நமது நீதி என்னும் மார்க்கவசத்தை அணிந்துகொள்ளுவோமாக. இது கிறிஸ்துவில் நமது நிலையைக் காட்டும். நமது அனுதின வாழ்வில் இது செயல்படுத்தப்படும். இதன்மூலம் நாம் சாத்தானை முறியடிக்க முடியும்.

மொழியாக்கம்: G.வில்சன்