இருண்ட காலப்பகுதியில் தேவனால் எழுப்பப்பட்ட சிறந்த கதாபாத்திரம்

டாக்டர் ரெட் ருபெஷ்
(ஜனவரி-பிப்ரவரி 2017)

டாக்டர் ரெட் ருபெஷ் அவர்கள், இஸ்ரவேலின் சரித்திரத்திலே காணப்பட்ட இருண்ட காலப் பகுதியில் ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார். ஒரேயொரு தெய்வ பக்தியுள்ள வாலிபனுக்கூடாக, முழு இஸ்ரவேல் மக்கள் மத்தியிலும் ஒரு தெளிவை உருவாக்க எப்படி கர்த்தரால் முடிந்தது என்பதை இந்த செய்தியின் மூலம் அவர் விளக்குகிறார்.

இருண்ட காலப்பகுதியிலும் தங்களால் முடிந்தமட்டும் அதி உயர்வாகப் பணியாற்றியதுதான் தேவன் உருவாக்கிய வேதாகம கதாபாத்திரங்களின் சிறப்பம்சமாகும். மனிதர் உருவாக்கிய கதாநாயகர்களைப்பார்க்கிலும், தேவன் உருவாக்கிய கதாநாயகர்களின் வாழ்வில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உண்மையாகும். இருண்ட காலத்தையும் நம்பிக்கையற்ற சூழ்நிலையையும் எனக்குக் காட்டுங்கள்; இருளை வெளிச்சமாக்குகின்றதும், நம்பிக்கையற்ற சூழலில் நம்பிக்கையைத் தருகிறதுமான, தேவனால் அனுப்பப்பட்ட ஒரு கதாநாயகனை நான் உங்களுக்கு காட்டுவேன். இப்படிப்பட்ட ஒருவர்தான் நாம் பார்க்க இருக்கும் கதாநாயகன், அவன் பெயர்தான் யோசியா.

இஸ்ரவேலின் நீண்டுகிடந்த இருண்ட காலங்களில் ஒன்றின் இறுதிப்பகுதியில் வாழ்ந்தவன்தான் யோசியா. தாவீது, சாலொமோன் என்பவர்களின் பொற்காலத்தைத் தொடர்ந்து ஒரு 300 ஆண்டு காலமாக இஸ்ரவேலில் பிரச்சனை மாறி பிரச்சனையாகவே தொடர்ந்து கொண்டிருந்தது. தவிர்க்கப்பட வேண்டிய விக்கிரக வணக்கமும் பொய்யான சமய பழக்கவழக்கங்களும் இஸ்ரவேல் மக்களுக்கு வெகு சாதாரணமாகிவிட்டிருந்தது. யாரை விழுங்கலாமோ என்ற வெறியோடிருந்த அண்டைய நாடுகளாகிய பாபிலோன், எகிப்து அசீரியா போன்ற வல்லரசுகள் இஸ்ரவேல் பிழைத்திருப்பதற்கே அச்சுறுத்தலாயிருந்தன. இஸ்ரவேலினதும் யூதாவினதும் ராஜாக்கள், ஆபத்தான வேளைகளில் தேவனிடம் திரும்புவதற்குப் பதிலாக, தங்கள் பாதுகாப்புக்காக பொய்யான தெய்வங்களிடமும், அரசியல் தீர்வுகளை நோக்கியும் திரும்பினார்கள். தமது உடன்படிக்கையின் மக்களைவிட்டு தேவன் மறைந்திருந்ததால் அவர்களைச் சுற்றியிருந்த இருள் இன்னமும் அதிகரித்திருந்தது. பின்னர் திடீரென அடைப்புத் திறந்ததுபோல யோசியா தோன்றினான். இருண்ட காலத்திலும், எப்பொழுதும் தேவன் தமது கதாநாயகர்களை எழுப்பினார் என்பதற்கு யோசியா ஒரு நினைவுகூருதலாயிருந்தான்.

ஒரு கலகத்தில் யோசியாவின் தகப்பனாகிய ஆமோன் என்ற ராஜா கொல்லப்பட்டான். அதன்பின்னர், தனது எட்டாவது வயதில் யோசியா அரசாட்சிக்கு வந்தான். ஆமோனும், அவனுடைய தகப்பன் மனாசேயும், ஒருபோதும் இல்லாதவாறு 57 வருஷ காலமாக மக்கள் மத்தியில் இரத்த ஆறு ஓடிய ஒரு அரசாட்சியையே நடத்தியிருந்தனர். எட்டு வயதுள்ள ராஜா இப்படிப்பட்ட ஒரு அரசாட்சியில் கால் பதிப்பது அவனுக்கு ஒரு உறுதியான ஆரம்பமாக இருந்திருக்க முடியாது. 2நாளாகமம் 34:3இல் பின்வரும் ஆச்சரியமான வசனத்தை வாசிக்கிறோம்: “அவன் தன் ராஜ்ய பாரத்தின் எட்டாம் வருஷத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்கள் ஆகிய இவைகள் அற்றுப்போகும்படி யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்”.

சில வருடங்களின் பின்னர், நீண்ட கால மாக அலட்சியப்படுத்தப்பட்டிருந்த பஸ்கா பண்டிகைகளை மீண்டும் அமுல்படுத்தினான். “தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை” (2 நாளாகமம் 35:18).

தீர்க்கனாகிய எரேமியாவின் வாயிலிருந்து, யோசியாவைக் குறித்து, எல்லோரையும் அசைக்கக்கூடியதாக எழுந்த கூற்று இது: “அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 22:16). 2 இராஜாக்கள் 23:25ஐ எழுதியவர் யோசியாவைக் குறித்து பின்வருமாறு எழுதியதிலும் ஆச்சரியமில்லை.

“கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான். அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.”

இவனல்லவோ ஒரு ராஜா! அந்தக் காலப் பகுதிக்கு ஏற்ற ஒரு கதாநாயகன்!

இப்படியொரு ராஜா எப்படி எழும்பினான் என்ற கேள்வி என்னைத் துளைத்தெடுத்தது. வெகு தீமை நிறைந்த காலப்பகுதியில் சரியான பாதையில் நிற்கவும், தேவனற்ற ஒரு சூழ்நிலையை எதிர்த்து முன்செல்லவும் இவனை நெறிப்படுத்திய காரியம் என்ன? இதற்குப் பதிலாக யோசியாவின் சம்பவத்திலிருந்து மூன்று காரியங்கள் வெளிப்படுவதை நாம் கவனிக்கலாம்.

2 இராஜாக்கள் 22:1 நமக்கு முதலாவது குறிப்பைத் தருகிறது. “யோசியா ராஜாவாகிற போது எட்டு வயதாயிருந்து… அவன் தாயின்பேர் எதிதாள்”. விசேஷமாக எதிதாள் என்ற பெயர் ‘தேவனுக்குப் பிரியமானவள்’ என்று அர்த்தம் பெறும். பழைய ஏற்பாட்டுப் பெயர்கள் யாவும் பொதுவாக, அந்தப் பெயரைக் கொண்ட நபரின் குணாதிசயம் அல்லது அவரது பின் புலத்தைக் குறித்த குறிப்புகளைக் கொண்டதாகும். யோசியாவின் தாயார், தேவனில் அன்புள்ளவள் என்பதை எதிதாள் என்ற பெயர் நமக்குப் பரிந்துரைக்கிறது என்று நான் நம்புகிறேன். ஒரு இளம் பையன் திடீரென ஒரு ராஜா என்ற பாத்திரத்திற்குள் தள்ளப்பட்டதிலிருந்து, யோசியா ஒரு தெய்வ பக்தியுள்ள தாயைக்கொண்டவனாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான் என்பதை அது விளக்குகிறது.

ஆபிரகாம் லிங்கன் அவர்கள், “தெய்வ பக்தியுள்ள தாயைக் கொண்டிருக்கும் எவரும் ஏழை அல்ல” என்றார். தகப்பன் இல்லாத காலப்பகுதியில் ஒரு தாயாக தன் இளம் வாலிப மகனை உருவாக்குமளவுக்கு எதிதாள் தன் மகனில் எவ்வளவு தெய்வீக கரிசனை கொண்டிருந்திருப்பாள் என்பதை யாரால் அளவிட முடியும்! தேவனுடைய கதாநாயகர்கள் பலரின் பின்னால் ஒரு தெய்வ பக்தியுள்ள தாய் இருந்திருக்கிறாள் என்பதை காணலாம்.

மோசேயின் தாய் யோகெபேத், தீமோத்தேயுவின் தாய் ஐனிக்கேயாள், சார்ல்ஸ் வெஸ்லி அவர்களின் தாய் சூசன்ன (இவருக்கு 14 சகோதரர்கள்) இப்படிப் பலரை நான் சிந்தித்துப் பார்க்கிறேன். இத்தனை அற்புதமான தாய்மார் இருந்திராவிட்டால் தேவனுடைய எத்தனை கதாபாத்திரங்கள் தவறிப்போயிருப்பாார்கள்? இவர்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்ல மறக்கவேண்டாம்.

2 நாளாகமம் 34:14-19 வரையான பகுதி யோசியாவின் வாழ்வு வடிவமைக்கப்பட்டதன் இன்னொரு காரணியை நமக்குப் பரிந்துரைக்கிறது. நீண்ட காலமாக அலட்சியப்படுத்தப்பட்டு பாதுகாக்காமல் விடப்பட்டிருந்த எருசலேம் தேவாலயம் மீண்டும் மெருகூட்டப்படும்பொருட்டு பணிகள் தொடர்ந்தபோது, மோசேயின் நியாயப்பிரமாணங்கள் அடங்கிய தேவனுடைய வார்த்தையின் ஒரு பிரதி கண்டுபிடிக்கப்பட்டது.

ஏராளமான வேதாகமங்கள் அச்சிடப்பட்டு, ஒவ்வொரு புத்தகத்தட்டுகளும் வேதாகமத்தால் நிறைந்திருக்கிற இந்தக் காலப்பகுதியில், நீண்ட காலமாகத் தொலைந்திருந்த ஒரு பொக்கிஷம் திடீரென கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி நமக்குப் பெரிய காரியமாகத் தெரியாது. ஆனால் ராஜ சமுகத்தில் இது வாசிக்கப்பட்டபோது, இது ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்து வாசிக்கும்போதுதான் இக்கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்னவென்பது நமக்குப் புரியும். தேவனுடைய வார்த்தை ராஜாவின் இருதயத்தை உருக்கி, அவனது ஆத்துமாவை அது உருவக்குத்தி, ஒருவித குற்ற உணர்வை ஏற்படுத்தியது.

தேவனுடைய வார்த்தை உங்களைத் தாக்கிய கடைசி சந்தர்ப்பம் எது என்று கூற முடியுமா? தேவனுடைய வார்த்தை யோசியாவின் வாழ்வை வல்லமையாக உருவாக்கியது. கடினமான காலப்பகுதியில் தேவனுடைய கதாநாயகனாக தைரியமாக எழும்புமளவுக்கு அது அவனுக்குத் சவாலாயிருந்தது. நமது வாழ்விலும் அப்படியே செய்ய அது வல்லமையுள்ளது.

ஒரு தெய்வபக்தியுள்ள தாயின் அரவணைப்பிலும், தேவனுடைய வார்த்தையிலும் யோசியா என்ற கதாநாயகன் வளர்ந்தான். 2நாளா. 34:27 இந்த கெம்பீரமான ராஜாவை உருவாக்கிய இன்னுமொரு முக்கிய குறிப்பைத் தருகிறது. “தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்”.

யோசியா உணர்வுள்ள ஒரு இருதயத்தைக் கொண்டிருந்தான். 34:2ம் வசனத்தில் ‘செய்து’ ‘வழிகளில் நடந்து’ ‘விலகாமல் நடந்து’ என்ற சொற்தொடர்களைக் கவனிக்கவும், யோசியா தன் தாயின் விசுவாசத்தில் தன் வாழ்வை ஓட்டிவிட நினைக்கவில்லை. அல்லது, தேவனுடைய வார்த்தையால் தன் இருதயம் அசைக்கப்பட்டதை மாத்திரம் வைத்துக்கொண்டு முன் செல்லவும் நினைக்கவில்லை. அவன் கீழ்ப்படிதலுள்ள மனதுடன் செயற்பட்டான். தன் விசுவாசத்தில் தன் கால்களை வைத்தான்.

அதனால்தான், இருளான சிக்கலான காலப்பகுதியிலும் யோசியாவைக் கண்ட தேவன், “ஒரு தெய்வ பக்தியுள்ள தாய், ஒரு திறந்த வேதாகமம். ஒரு உணர்வுள்ள இருதயம்! இவற்றைக் கொண்டு நான் கிரியை செய்வேன். இந்த மனிதனிலிருந்து ஒரு கதாநாயகனை நான் உருவாக்குவேன்” என்றார். அப்படியே அவர் செய்து முடித்தார்.

உங்களிலிருந்து தமக்கேற்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க தேவனால் முடியாமற் போனதற்கும், இன்னமும் செய்யமுடியாமல் இருப்பதற்கும் “ஏதேனும் காரணம் உண்டா?” அவற்றைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தாய்மார்களே! உங்கள் பிள்ளைகள் சிறந்த கதாநாயகனாக வளர அவர்களை தேவ பயத்தில் வளர்த்தெடுங்கள். தேவகிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!