சகோதரி.பிரியா கோவிந்தராஜ்
(ஜனவரி-பிப்ரவரி 2017)

 என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? (சங்-56:8)

ஒரு வருடத்தின் இறுதி பகுதிக்கு வரும்போது, சிலர் கடந்த காலத்தைக் குறித்து அழ முற்படுவார்கள். கண்ணீர் ஒரு ஆயுதம். அது சந்தோஷமான நேரத்திலும், துக்கமான நேரத்திலும் பாய்ந்தோடும். குறிப்பாக, பெண்களுக்கு அதுவே பேராயுதம்.

பொதுவாக பெண்கள் உட்பட சிறுபிள்ளைகள் தங்கள் வார்த்தைகளால் செய்ய முடியாதவற்றை தங்கள் அழுகையால் சாதித்து விட பார்ப்பார்கள். பல ஆண்கள் கூட வெட்கம் காரணமாக வெளியே அழாவிட்டாலும் தனிமையில் அழத்தான் செய்கின்றார்கள். பொதுவாக நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றிற்காக அழுகிறோம். ஆம், நாம் அழும்போது வரும் கண்ணீரானது நமது கண்களை சுத்தப்படுத்தும்; அதேவேளை நமது மனதின் கவலையையும் சற்றே குறைக்கும் என்று சில ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றது.

எது எப்படியிருந்தாலும் கர்த்தருக்கு முன் பான நமது கண்ணீரானது எப்படியும் பலனற்று போகாது. அவர் நமது கண்ணீரை துருத்தியில் வார்த்து வைத்திருப்பதாக (சங்கீதம் 56:8) கர்த்தருடைய வசனம் கூறுகின்றது. ஆம், நாம் எதற்காக அழுகிறோம்? நமது கண்ணீருக்கு கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை வேதாகம நபர்களின் கண்ணீரின் வாழ்வுக் கூடாக அறிந்து கொள்வோம்.

ஆகாரின் கண்ணீர்

ஆகாரின் கண்ணீரைக் குறித்து நாம் ஆதியாகமம் 21:14-19 வரையிலான வசனங்களில் நாம் வாசிக்கலாம். கைவிடப்பட்ட நிலையில் ஆதரவின்றி ஆகார் தன் மகனோடு வனாந்திரத்தில் அலைந்து திரிகின்றாள். ஒரு துளிக்கூட தண்ணீர் இல்லாமல் சாகக்கிடக்கும் தன் மகனுக்காக சத்தமிட்டு அழுகின்றாள். அவளின் அழுகைக்கு பலன் கிடைத்தது. அவள் அழுகையை கர்த்தர் கேட்டார்.

“ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்” (ஆதி.21:17,18) என ஆகாருக்கு அவளின் மகனை பெரிய ஜாதியாக்குவதாக வாக்குத்தத்தம் கிடைத்தது. தண்ணீர் கிடைத்தது. இன்றைக்கும் பல பெற்றோர் பிள்ளைகளைக் குறித்தும் அவர்களது ஜீவியம், எதிர் காலம் குறித்தும் அழுத வண்ணம் இருக்கின்றார்கள். அன்று ஆகாருக்கு கிடைத்த அதே வாக்குறுதி இன்று நமக்கும் இருக்கின்றது.

அன்னாளின் கண்ணீர்

1சாமுவேல் 1:10இல் அன்னாளின் கண்ணீரை நாம் காணலாம். பிள்ளைபேறு இல்லாமல் தன் வீட்டு நபராலே துக்கப்படுத்தப்பட்டாள், விசனப்படுத்தப்பட்டாள், மனமடிவாக்கப்பட்டாள். அதனால் சதா மனங் கசந்து அழுகின்றவளானாள். அவளது தேவை சந்திக்கப்படாமல் வேதனையோடு காணப்பட்ட அவள், தனது எல்லா விண்ணப்பத்தையும் கர்த்தருடைய சந்நிதியில் கண்ணீரோடு இறக்கிவைத்தாள். “அவள் போய் மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள்” (1சாமு. 1:10). மனிதரிடம் சொல்ல முடியாதவற்றை கர்த்தரிடம் அறிக்கையிட்டாள். அவளது கண்ணீர் ஜெபம் கேட்கப்பட்டது. சாமுவேல் எனும் பிள்ளையை கொடுத்து அவளின் கண்ணீரை கர்த்தர் துடைத்தார். நம்பிக்கையோடே கேட்ட அன்னாள் கேட்டதைப் பெற்றுக்கொண்டாள்.

இன்றைக்கும் அநேகர் தேவைகள் சந்திக்கப்படாத நிலையில் அநேகரால் நோகடிக்கப்பட்டு மனமடிவாக்கப்பட்டு கண்ணீரோடு வாழ்கின்றார்கள். அவர்களுக்கும் அன்னாளுக்கு கிடைத்த ஆசீர்வாதம்போல் நிச்சயம் கிடைக்கும். மனங்கசந்து, மிகவும் அழுது. கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது அவர் கண்ணீரைக் காண்பார், ஆசீர்வதிப்பார்.

எசேக்கியா ராஜாவின் கண்ணீர்

மரணத் தருவாயிலிருந்தபோது எசேக்கியா ராஜா தன் சுகத்துக்காக அழுதார். “ஆ, கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி எசேக்கியா மிகவும் அழுதான்” (ஏசாயா 38:3). அவனது கண்ணீரோடு கூடிய விண்ணப்பத்திற்கு உடனே பதில் கிடைத்தது. ஏசாயா தீர்க்கதரிசி மூலம் நீர் இனி பிழைக்கமாட்டீர், மரித்துபோவீர் என்று சொன்ன கர்த்தர். அதே ஏசாயா மூலம் “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரை கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்” (ஏசாயா 38:5) என்று கூறினார்.

இன்றைக்கும் அநேகர் எல்லாமே முடிந்தது. எனக்காக யாருமே இல்லை என்று வேதனையோடு வாழ்கின்றனர். நாம் கர்த்தருக்கு முன்பாக எசேக்கியா போல் உண்மையும் உத்தமமுமாய் இருக்கும்போது எசேக்கியாவுக்கு கிடைத்த ஆசீர்வாதத்தைவிட நாம் எண்ணி பார்க்க முடியாதளவு கர்த்தர் நம் கண்ணீருக்கும் பதில் கொடுக்கிறவராக இருக்கிறார்.

பேதுருவின் கண்ணீர்

பேதுருவின் கண்ணீர் வித்தியாசமான தொரு கண்ணீர்; நம்மில் பலரிடம் இல்லாத கண்ணீர். ஆம், செய்த தவறுக்காக சிந்தும் கண்ணீர். “அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் கொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்” (மத். 26:75). தன்னுடைய தவறுக்காக மனங்கசந்து அழுதபடியால் மன்னிப்பை பெற்றுக்கொண்டான். அதுமாத்திரமல்ல; ஆண்டவரின் ஆட்டுக்குட்டிகளை (மக்களை) மேய்க்கும் பொறுப்பை (ஆசீர்வாதம்) பெற்றுக் கொண்டான் (யோவான் 21:15-19).

இன்றும் ஆசீர்வாதத்திற்காகமட்டும் ஆண்டவரிடம் அழும் நாம் நம்முடைய தவறுக்காக அழுகின்றோமா? தவறுகளை குறித்து கணக்கே இல்லாமல் இருக்கிறோமா? அப்படி இல்லாமல் நமது தப்பிதங்களுக்காக அழுது கேட்கும் பட்சத்தில் நமக்கு மன்னிப்பை மட்டும் அல்ல; மேலான நன்மைகளையும் கர்த்தர் தருகிறார்.

பிரியமான தேவ பிள்ளைகளே, மனிதருக்கு முன்பாக கண்ணீர் விட்டு அழுதது போதும்! ஆகார், அன்னாள், எசேக்கியா, பேதுரு என்பவர்கள் போல கர்த்தரை மட்டுமே நோக்குவோம்.

கலங்காமல் எழுந்து அவருக்காக செயற்படுவோம். நமது வாழ்விலும் பிறருடைய வாழ்விலும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவோமாக. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.