சத்தியவசனம் பங்காளர் மடல்

மே-ஜூன் 2011

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரியப்படுத்துகிறோம்.

இவ்வருடத்தில் பாதிநாட்களை நாம் கடந்து வர கிருபை செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். சத்தியவசன பங்காளர் நேயர் குடும்பங்களிலே இக்கல்வியாண்டிலே பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற கர்த்தர் செய்த கிருபைகளுக்காக ஸ்தோத்திரிக்கிறோம். அடுத்த கல்வியாண்டிற்கும், மேற்படிப்புக்கு செல்லவிருக்கிற பிள்ளைகளுக்காக பாரத்துடன் ஜெபிக்கிறோம். தேவன்தாமே படிப்பிற்கான தேவைகளை சந்திக்கவும், சரியான வழிநடத்துதலைத் தரும்படிக்கும் வேண்டுதல் செய்கிறோம். தேவன் தந்த புதிய ஆட்சியாளர்களுக்காகவும் நாம் ஜெபிப்போம்.

சத்தியவசன ஊழியத்தை தேவன் தம்முடைய பெரிதான கிருபையால் ஆசீர்வதித்து வழிநடத்தி வருகிறமைக்காக கர்த்தரைத் துதிக்கிறோம். தொடர்ந்து இவ்வூழியப் பணிகளுக்காக ஜெபத்தில் தாங்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களுக்கு இன்னும் அநேக ஆதரவாளர்கள் கிடைக்க வேண்டுதல் செய்வோம். ஜூன் மாதத்திலிருந்து வெள்ளிகிழமை தோறும் காலை 5.30 மணிக்கு பொதிகையில் மற்றுமொரு சத்தியவசன நிகழ்ச்சி ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காகவும் ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் ’யகாசியேல்’ வாழ்க்கையிலிருந்து ’யுத்தம் செய்கிறவர்கள் நாமல்ல’ என்ற கருத்தை மையமாக்கி Dr.உட்ரோகுரோல் அவர்கள் வழங்கிய சிறப்புச்செய்தியை பிரசுரித்துள்ளோம். மேலும் ஆசரிப்புக்கூடாரத்தில் ’பொன் குத்துவிளக்கு’ பற்றிய பழைய ஏற்பாட்டு வேதபாடமும், பத்துக் கன்னிகைகள் பற்றி சுவி.சுசிபிரபாகரதாஸ் அவர்கள் அளித்த புதிய ஏற்பாட்டு வேதபாடமும் இடம் பெற்றுள்ளது, இந்த வேதபாடங்களில் உள்ள விளக்கங்கள் ஆவிக்குரிய அநேக சத்தியங்களை வெளிப்படுத்துகிறது. சகோ.வஷ்னி ஏர்னஸ்ட் அவர்கள் எழுதிய ’யாரிடத்திலிருந்து உதவிவரும்’ என்ற கட்டுரையும். சகோ.எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் ’பயத்தின் மத்தியில் பக்தனின் மனம்’ என்ற கட்டுரையின் இறுதிபாகமும் இடம்பெற்றுள்ளது, இக்கட்டுரைகள் உதவியற்ற சூழ்நிலையை உணரும் நமக்கு நம்பிக்கை தருவனவாகவும் அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவன் ஈவாய் அளித்துள்ள தாய்மைக் குறித்தும் அதின் மேன்மையைக் குறித்தும் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் விசேஷித்த செய்தி வழங்கியுள்ளார்கள், இக்கட்டுரைகள் யாவும் உங்கள் யாவருக்கும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்