ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

மே-ஜுன் 2017

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாய் இருக்கிற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின்  வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழின் வாயிலாக உங்களை சந்திக்க தேவன் அளித்த கிருபைக்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். இவ்வருட கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதின பங்காளர் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற கர்த்தர் உதவி செய்திருக்கிறார். ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம். புதிய கல்வியாண்டிற்குள் பிரவேசித்திருக்கும் அனைத்து பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறோம். கர்த்தர்தாமே பங்காளர்கள் அனைவரது தேவைகளையும் நிறைவாய் சந்திப்பாராக!

திருச்சபை சீர்திருத்தத்தின் 500வது வருட நிறைவை முன்னிட்டு ‘நான் நிற்கும் கன்மலை’ என்ற புத்தகத்தை ஆசீர்வாத இளைஞர் இயக்கத்தின் ஸ்தாபகர் சகோ.ஸ்டேன்லி அவர்கள் பங்காளர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தைப் பங்காளர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். சகோ.ஸ்டேன்லி அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கர்த்தர்தாமே அவர்களது ஊழியங்களை மேன்மேலும் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.

சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் காலை 7 மணிக்கு மத்திய அலைவரிசை MW 873 Khz-ல் தெளிவாக ஒலிபரப்பாகி வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு சத்தியம் டிவியிலும், திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு தமிழன் டிவியிலும் சத்தியவசன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. சத்தியவசன ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியங்களுக்காக ஜெபியுங்கள். இதுவரையிலும் விசுவாச பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் சந்தாவைப் புதுப்பித்துக்கொள்ளுபடியும் நினைவூட்டுகிறோம்.

திருச்சபை சீர்திருத்த இயக்கத்தின் சிறப்பு இதழாக இவ்விதழை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சீர்திருத்த இயக்கத்தின் அடித்தளமாக உள்ள ஐந்து முழக்கங்களை விவரித்து பேராசிரியர் எடிசன் அவர்கள் எழுதிய சிறப்புக்கட்டுரை வெளியாகியுள்ளது. சீர்திருத்த இயக்கத்தின்போது இரத்தசாட்சிகளாக மரித்த அநேக பரிசுத்தவான்கள் உண்டு. அவர்களில் ஒரு சிலருடைய வாழ்க்கைச் சம்பவங்களையும், ஊழியத்தில் அவர்கள் அடைந்த கஷ்டங்கள் இரத்தசாட்சியாக மரித்த அனுபவங்களை தொகுத்து வெளியிட்டுளோம். மேலும் ‘அந்த முதல் உறவு’ என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையும் வெளியாகியுள்ளது, இச்செய்திகள் அனைத்தும் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். ஆமென்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்