500 ஆண்டுகளைக் கடந்த சீர்திருத்த சபையின் 5 அடித்தளங்கள்

பேராசிரியர்  எடிசன்
(மே-ஜுன் 2017)

திருச்சபை சரித்திரத்தில் நாம் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. ஏனென்றால் அது அவ்வளவு முக்கியமானதல்ல என்று நினைக்கிறோம். திருச்சபையின் காலங்களை வெளிப்படுத்தலில் உள்ள ஏழு சபைகளின் குணாதிசயங்களை வைத்து ஏழு காலங்களாகப் பிரிப்பதுண்டு. ஆதி அப்போஸ்தல திருச்சபை தேவனிடத்தில் பயபக்தியும் அன்பும் கொண்ட சபை. சிதறப்பட்டவர்கள் எங்கும் திரிந்து சுவிசேஷத்தை அறிவித்தனர். சபைத் தலைவர்கள் இயேசுவின்மேலுள்ள சபையினரின் விசுவாசத்தைப் பெலப்படுத்த அநேக பாடுகள்பட்டு இரத்தசாட்சிகளாகவும் மரித்தனர்.

ரோமப் பேரரசன் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவனானபோது கிறிஸ்தவம் அரசாங்க மதமானது. கிறிஸ்தவர்களின் உபத்திரவம் நின்றது. சபையில் பக்திக்குப் பதிலாக புறமதத்து சடங்காச்சாரங்களும் பண்டிகைகளும் உட்புகுந்து சபை சீர்கெட்டுப் போனது. அது கத்தோலிக்க மதத்திற்கு அடிகோலியது. போப்பாண்டவர் அதிகாரம் மேலோங்கி அரசனுக்குக் கட்டளையிட ஆரம்பித்தனர். இயேசுவை ஒதுக்கிவிட்டு மாதாவையும் பரிசுத்தவான்களையும் வணங்கலாயினர். இயேசுவின் போதனைகள் மறக்கப்பட்டன. சாதாரண மனிதனுக்கு வேதாகமம் மறுக்கப்பட்டது. போப்பின் போதனைகளே புனிதமாயின. பாவமன்னிப்பிற்காக மனந்திரும்ப அவசியமில்லை. பணங்கொடுத்து ஒரு பாவமன்னிப்பு சீட்டைப் பெற்றுக்கொண்டால்போதும்; பரலோகம் போய்விடலாம். எந்தப் பாவச்சிற்றின்பத்தையும் விடவேண்டியதில்லை! நாட்டில் அக்கிரமமும், சபையில் ஒழுக்கக்கேடும் பெருகினது.

இந்தச் சூழ்நிலையில் தேவன் மார்ட்டின் லூத்தரை எழுப்பினார். அவர் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. இயேசு, “மனந்திரும்புங்கள்; பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது” என்று போதித்தாரே! இந்த போப்பாண்டவர் பாவ மன்னிப்புச் சீட்டை விற்கிறாரே? பணத்தினால் பாவ மன்னிப்பைப் பெறமுடியுமா? என்று சிந்தித்து பவுல் ரோமருக்கெழுதின நிருபத்தை தியானிக்கலானார். வாசித்து தியானிக்க தியானிக்க லூத்தருக்கு ஒரு சத்தியம் தெளிவாயிற்று. அதென்னவென்றால், “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்பதே (ரோமர் 1:16,17). இறையியல் வல்லுனர்களைக் கூட்டி விவாதித்தார்.

மனம் தெளிவுற்ற நிலையில் 95 சத்தியங்களை எழுதி 1571-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதியில் அதை ஜெர்மனியிலுள்ள விட்டன்பர்க் ஊர் ஆலயக் கதவில் ஆணியடித்தார். அன்று திருச்சபையில் ஆரம்பித்த மாற்றம் நிற்காமல் இன்றும் நிலைத்திருக்கிறது. 1521-ம் ஆண்டு, ஜனவரி 3-ல் மார்ட்டின் லூத்தர் ரோமன் கத்தோலிக்க சபையைவிட்டு நீக்கப்பட்டார். மக்கள் கூட்டம் கூட்டமாக லூத்தரை நாடி வந்தார்கள். அன்றும் அதன் பின்னும் அநேக சீர்திருத்தவாதிகள் ரோம திருச்சபைக்கு எதிராக வேத சத்தியங்களைக் காக்கும்படி எழும்பினார்கள். உல்ரிட்ச் சுவிங்லி சுவிட்சர்லாந்திலும், ஜாண் கெல்வின் பிரான்ஸ் மற்றும் ஜெனிவாவிலும், ஜாண்நாக்ஸ் ஸ்காட்லாந்து தேசத்திலும் சீர்திருத்த புராட்டஸ்டன்ட் சபைகளை உண்டாக்கினார்கள். லூத்தரன், பிரஸ்பிட்டேரியன், மெதடிஸ்ட், பாப்டிஸ்ட் போன்ற பல சபைப்பிரிவுகள் (Denominations) தோன்றின. இச்சபைக்களுக்கிடையே சில சிறிய வேறுபாடுகள் இருந்தாலும், ‘விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்’ என்பதையே அஸ்திபாரமாகக் கொண்டிருந்தனர். Only, Alone, மட்டும் என்று ஐந்து அடிப்படை சத்தியங்களையே அடித்தளமாகக் கொண்டிருந்தனர்.

சீர்திருத்தவாதிகளின் இறையியல் கோட்பாடுகள்:

லத்தீன் – ஆங்கிலம் – தமிழில்.
1. Sola Scriputra – Scripture alone – வேதாகமம் மட்டுமே.
2. Sola Fide – Faith alone – விசுவாசம் மட்டுமே.
3. Sola Gratia – Grace alone – கிருபை மட்டுமே.
4. Solo Christo – Christ alone – கிறிஸ்து மட்டுமே.
5. Soli Deo Gloria – Glory To God alone – மகிமை தேவனுக்கு மட்டுமே.

1. Scripture alone – வேதாகமம் மட்டுமே!

The Bible alone is our highest authority தேவனுடைய வார்த்தையாகிய வேதபுத்தகமே எல்லா அனுபவங்கள், கோட்பாடுகளுக்கும் மேலான அதிகாரமுடையது. ஒரு மனிதனின் அனுபவங்கள் இன்னொரு மனிதனை நியாயந்தீர்க்க முடியாது. கோட்பாடுகளுக்கு நியாயந்தீர்க்கும் அதிகாரம் கிடையாது. ஆனால், வேதவசனமோ நம்மை நியாயந்தீர்க்கும் (யோவான் 12:48).

அனுபவங்களிலோ, கோட்பாடுகளிலோ ஆவியுமில்லை ஜீவனுமில்லை; ஆனால், ‘கர்த்தருடைய வசனமோ ஆவியாயும் ஜீவனாயுமிருக்கிறது’ (யோவா.6:63). அனுபவங்களோ கோட்பாடுகளோ இரட்சிக்க முடியாது; வசனமோ இரட்சிக்கும் (யாக்.1:21). அனுபவங்கள் தத்துவங்களைக் கேட்டவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதில்லை; வசனத்தைக் கேட்ட யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (அப்.10:44). அனுபவங்கள், தத்துவங்கள் ஒருவன் பாவம் செய்வதைத் தடுக்கமுடியாது; ஆனால், வசனம் பாவம் செய்வதைத் தடுக்கும் (சங்.119:11). தத்துவங்களோ அனுபவங்களோ ஒருவனையும் சுத்திகரிக்க முடியாது; வசனமோ சுத்திகரிக்கும் (யோவான் 17:17; சங்.119:9). வசனம் பாதைக்கு வெளிச்சம். வசனத்தில்தான் தேவசித்தத்தை அறியமுடியும். ஆகவே நமக்கு வேதமே எல்லாவற்றிற்கும் எல்லாவற்றிலும் மேலான அதிகாரமுடையது. இதுவே சீர்திருத்த சபையின் உறுதியான அஸ்திபாரம்.

யார் என்ன போதித்தாலும் அது வேத வசனங்களோடு ஒத்திருக்கிறதா என்று சோதித்தப் பின் னரே ஏற்றுக்கொள்ளவேண்டும். பவுல் தெசலோனிக்கேயர் சபைக்குச் சொன்னதைப் பாருங்கள். “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்” (1 தெச.5:21,22). நாம் கடை பிடிக்க வேண்டும். கோட்பாடுகள் மாறலாம்; ஆனால், கர்த்தர் அருளின வேதவசனங்கள் ஒரு போதும் மாறுவதில்லை. வசனம் என்றென்றும் நிலைத்திருக்கிறது (சங்.119:89, ஏசா.40:8). இப்படியிருக்கிறபடியால், வசனத்தின் அதிகாரம் மாறாதது, அழிக்கமுடியாதது. இந்த வசனத்தின் அடிப்படையில் அமைந்துள்ள எந்த சபையையும் பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளவே முடியாது.

ஒரு விசுவாசிக்கு பாதுகாப்பு வசனமாகிய இரு புறமும் கருக்குள்ள ஆவியின் பட்டயமே. பட்டயத்தை வைத்துப் போராட பயிற்சி வேண்டும். பழக்கமில்லாதவன் தன்னையே காயப்படுத்திக் கொள்வான். சவுல் தாவீதை கோலியாத்துக்கு எதிராக அனுப்பும்பொழுது தனது போர் உடைகளைத் தாவீதுக்கு அணிவித்து, தன் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான். அப்பொழுது தாவீது செய்ததென்ன? “சவுலுடைய பட்டயத்தைத் தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டான்” (1 சாமு. 17:39).

நாமும் சாத்தானோடு போராடும்பொழுது வசனத்தை அதிகாரத்தோடு உபயோகிக்கும் பயிற்சி வேண்டும். விசுவாச வார்த்தைகளைச் சாதாரண நேரங்களில் பயன்படுத்த அறிந்திருந்தால்தான் சோதனை நேரத்தில் வசனமாகிய பட்டயம் உதவும். எரேமியா 12:5-ஐ வாசித்துப் பாருங்கள். “நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய்?”

அனுதின வாழ்வில் வரும் சிறுசிறு சோதனைகளை இயேசுவின் வசனத்தால் ஜெயிக்கப் பழகுங்கள். இயேசு வசனத்தினால் பிசாசை வென்றார். நீங்கள் அவருடைய பிள்ளைகள். உங்களுக்கும் அந்த அதிகாரம் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட அப்பியாசமில்லாமல் பிரதான ஆசாரியனான ஸ்கேவாவின் ஏழு குமாரர்கள் பிசாசைத் துரத்த முயன்றதை அப்.19:13-16-ல் வாசிக்கிறோம். அப்பியாசம் இல்லாத இவர்களை அசுத்த ஆவி மேற்கொண்டு காயப்படுத்தி துரத்திவிட்டது. வசனம் வல்லமையுள்ளதுதான். ஆனால் அப்பியாசமில்லையென்றால் ஆபத்து!

2. Faith Alone – விசுவாசம் மட்டுமே!

எது விசுவாசம்? எதற்கு விசுவாசம் மட்டும் வேண்டும்? “விசுவாசமானது நம்பப்படுகிற வைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபி.11:1). “அவருக்குள் (இயேசுவுக்குள்) சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; … சகலமும் அவரைக் கொண்டும் அவருக் கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” (கொலோ.1:16). இதை நாம் பார்க்கவில்லை: ஆனால் நம்புவது விசுவாசம்.

எதற்கு விசுவாசம்? நாம் இரட்சிக்கப்படுதவற்கு விசுவாசம் வேண்டும். “நாம் பிறக்கும்பொழுதே பாவிகளாகப் பிறக்கிறோம்” (சங்.51:5). ஆகவே, நாம் தண்டிக்கப்பட்டு நரகத்திற்குள் தள்ளப்படுவது நியாயம். இந்தத் தண்டனைக்குக் காரணமான பாவத்திற்கு மன்னிப்பைப் பெற்றுவிட்டால் நரகத்திற்குத் தப்பித்துக்கொள்ளுவோம். இதுவே இரட்சிப்பு. நான் ஏதாகிலும் செய்து இரட்சிப்பைப் பெற முடியுமா? முடியாது. ஏனென்றால் பாவம் என் இருதயத்தைக் கறைப்படுத்திவிட்டது. இதை நாமாக நீக்க முடியுமா? வேதம் என்ன சொல்லுகிறது? “நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்கு மென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எரே.2:22). நீ என்ன செய்தாலும் உன் பாவக்கறைகள் இருந்துகொண்டேயிருக்கும். அப்படியானால் இந்த பாவக்கறை என்னைவிட்டு எப்படிப் போகும்? வேதம் சொல்லுவதென்ன? “நியாயப் பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபி.9:22). இந்த இரத்தம் சிந்தவே இயேசு சிலுவையில் தம்முடைய பரிசுத்த இரத்தத்தை பாவத்தின் கிரயமாகச் செலுத்தி, நமக்கு இரட் சிப்பை சம்பாதித்தார்.

1 பேதுரு 1:19-ல் “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” என்றான். அப்.யோவானும், “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா.1:9). இயேசு அன்று சிந்தின இரத்தம் இன்றும் என் பாவங்களிலிருந்து என்னை இரட்சிக்கும் என்று நம்புவது விசுவாசம். இயேசு இன்றும் உயிரோடிருக்கிறவரானபடியினால், தாம் சிலுவையில் சிந்தின இரத்தத்தை நினைத்து என்னை மன்னித்து இரட்சிப்பார். ஆனால், இந்த இரட்சிப்பை விசுவாசத்தினால் மட்டுமே பெறமுடியும். இயேசு அன்று சிந்தின இரத்தம் இன்றும் வல்லமையோடிருக்கிறதென்றால் இயேசு இன்றும் உயிரோடிருப்பதே அதற்குக் காரணம்.

இந்த இடத்தில்தான் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் பெரிய வேறுபாடு. அவர்கள் விசுவாசமும் கிரியைகளும் சேர்ந்தால்தான் இரட்சிப்பைப் பெறமுடியும் என்று நம்புகிறார்கள். இதற்கு ஆதராமாக அவர்கள் யாக்.2:17,20-ஐ மேற்கோள் காட்டுவார்கள். “விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும்” என்று. ஆனால், சீர்திருத்த சபையோ விசுவாசத்தால்  மட்டும் பெறும் இரட்சிப்பு, கிரியைகளின் மூலம் வெளிக்காணப்படும். கிரியைகள் இரட்சிப்பின் விளைவேயன்றி இரட்சிப்பிற்குக் காரணமல்ல என்பார்கள். யாக்.2:18 இதனை உறுதிப்படுத்துகிறது. விசுவாசத்தில் மூன்று விதங்களைக் காண் கிறோம்.

1. சாத்தானின் விசுவாசம் (Devil’s Faith) – தேவன் உண்டென்று நம்பும்; ஆனால், கீழ்ப்படியாது. பாவத்தை அறிக்கைசெய்து பாவ மன்னிப்பைப் பெறாது.

2. செத்த விசுவாசம் (Dead Faith) – ஆத்தும ஆதாயம் செய்யாத விசுவாசம். கனி கொடாத மரம்.

3. செயல்படும் விசுவாசம் (Dynamic Faith) -இன்னொரு விசுவாசியை உருவாக்கும், நல்ல கனிகொடுக்கும் மரம்.

கனியினால் மரத்தை அறிகிறோம். கனி மரத்திற்கு அடையாளமேயொழிய மரம் கனி கொடுப்பதற்கு காரணமல்ல! அப்படியே கிரியையும் விசுவாசத்திற்கு அடையாளமேயொழிய காரணமல்ல.

விசுவாசத்தினால்மட்டும் இரட்சிப்பு. விசுவா சத்தினால்மட்டும் நீதிமான். விசுவாசத்தால் மட்டும் பரலோகமாகிய நித்திய ஜீவன். நாம் கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தால் மட்டுமே இரட்சிக்கப்படுகிறோம்.

3. Grace Alone – கிருபை மட்டுமே!

கிருபை என்பது தகுதியற்ற ஒருவனுக்குக் காட்டப்படும் தயவு. ஆதாம் பாவம் செய்தபோது துரத்தப்பட்டான். துரத்தப்பட்டவன் தேவனை விட்டு தூரமாய்ப்போய் தனக்கு விக்கிரக தேவர்களை உண்டுபண்ணினான். இந்த துரோக மனிதனைத்தேடி தேவன் பூமிக்கு வந்தது கிருபை!

  • முரட்டாட்டமும் கீழ்ப்படியாததுமான முறு முறுத்த இஸ்ரவேலரை நாற்பது ஆண்டுகள் பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் நடத்தி, பாலும் தேனும் ஓடுகிற கானானைக் கொடுத்தது கிருபை!
  • மறுதலித்த பேதுருவை சந்தித்து, ‘என்னை நேசிக்கிறாயா?’ என்று கேட்டு மறுபடியும் ஊழியத்தின் தலைமைத்துவத்தைக் கொடுத்தது கிருபை!
  • உலக வழிபாடுகளுக்கு விலகி பரிசுத்தமாய்  வாழ நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தது கிருபை!

நியாயப்பிரமாணம் எது பாவமென்று போதித்ததேயல்லாமல், பாவத்தின் அடிமைத்தனத்தினின்று விடுபட வழி சொல்லவில்லை. அந்த காலத்தில் இயேசு மனிதனாகப் பிறந்து நியாயப் பிரமாணத்தின் சாபத்திலிருந்து அவனை மீட்க தன்னைக் கிருபாதார பலியாக சிலுவையில் இரத்தம் சிந்தி மரிக்க ஒப்புக்கொடுத்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது கிருபை.

“அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோமர் 4:25), இதுதான் கிருபை!

பாவமறியாத இயேசு நமக்காகப் பாவமாக்கப்பட்டாரே, இதற்கு நாம் கொஞ்சமாவது தகுதியுள்ளவர்களா?

நாம் பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவை சரிதை எனும் பாடலைப் பாடுவோம். அதில் தேவனிடம் ஒரு கேள்வி கேட்கப்படும்:

‘பாவி என் பொருட்டு; மாளவும் நீர்;
என்னில் எந்நன்மையைக் காண்கிறீர்?’

இல்லவே இல்லை; ஒன்றுமில்லை. இது தேவனுடைய சுத்தகிருபை! இந்தக் கிருபைதான் விசுவாசத்தைக்கொண்டு நம்மை இரட்சிக்கிறது.

பவுல் எபேசியருக்கு எழுதும்போது, அதி.2: 8,9-ல் “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” என்று தேவ கிருபையை விளக்கினான். மரியாளை இயேசுவின் தாயாக தெரிந்துகொண்டது தேவனுடைய கிருபை!

இந்த GRACE என்ற வார்த்தைக்கு ஒரு நல்ல விளக்கமுண்டு. “God’s Riches at Christ’s Expense.” இதில் மனிதனின் பங்கு கொஞ்சம் கூட கிடையாது. அதுவே கிருபை! இந்தக் கிருபைக்குப் பாத்திரராக நாம் வாழவேண்டும். இல்லையென்றால் கிருபையை இழந்துபோவோம். சவுல் ராஜா கிருபையை இழந்து பரிதாபமான முடிவை சந்தித்தான். யூதாஸ் கிருபையை இழந்து நான்று கொண்டு செத்தான். ஆனால், தாவீதுக்கு கிருபையின் மேன்மை தெரியும். “நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்” (சங்.86:13) என்று கிருபையைப் பற்றிக் கொண்டான். அதனால் நம்பிக்கையோடு, “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்.23:6) என்றான். நாமும் கிருபையில் நிலைத்திருந்தால் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்போம்.

4. Christ Alone – கிறிஸ்து மட்டுமே!

மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தர் கிறிஸ்து ஒருவரே. ஏதேனில் மனிதனுக்கும் தேவனுக்கும் ஏற்பட்ட பிரிவை ஒப்புரவாக்க மனிதனாய்ப் பிறந்து, சிலுவை மரணத்தால் ஒப்புரவாக்கின இயேசுவே மத்தியஸ்தர். “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது” (1 தீமோ.2:5,6).

தேவனிடத்தில் போவதற்கு இயேசு ஒருவரே வழி. இயேசு: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). இயேசுவின் நாமத்தில் ஜெபித்தால் மட்டுமே பிதாவானவர் பதிலளிப்பார். கத்தோலிக்க சபை மரியாளை மேன்மைப்படுத்த அவள் மூலமாகத்தான் ஜெபிக்க வேண்டுமென்று போதித்தனர். பின், மரித்த பரிசுத்தவான்கள் மூலமாக ஜெபிக்கும் வழக்கம் ஏற்பட்டது. இது மிகப் பெரிய விசுவாச துரோகம். இப்பொழுது இது கொஞ்சம் மாறியிருக்கிறது.

இயேசுவல்லால் இரட்சிப்பில்லை. இயேசு ஒருவரே இரட்சிப்பின் காரணர். “அவராலே யன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” என்றான் (அப். 4:12). இயேசுவே கிருபாதாரபலியானவர். அவர் சிலுவையில் சிந்திய இரத்தமே நம்மைப் பாவங்களற கழுவி இரட்சிக்கிறது.

இயேசு உயிர்த்தெழுந்ததால் நாமும் உயிர்த் தெழுவோம் என்கிற நம்பிக்கை உண்டாகக் காரணம் இயேசுமட்டுமே. இயேசு மட்டுமே சபைக்கு அஸ்திபாரம். பவுல் சொல்வது என்ன வென்றால்: “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் கூடாது” (1 கொரி.3:11).

கிறிஸ்து ஒருவரே விசுவாசிகளின் ஐக்கியமாகிய சபைக்கு ஒரே மணவாளன். 2 கொரி.11:2-ல் பவுல் கொரிந்து சபையைப் பார்த்து, “நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால் உங்களுக்காகத் தேவ வைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்” என்றான். யூதர்களின் வழக்கப்படி நியமிக்கப்பட்டாலே மனைவி எனும் உறவுக்குள் வந்துவிடுவர். வெளி.21:9-ல் சபை ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகிய மணவாட்டியாகக் காண்பிக்கப்பட்டாள். “கிறிஸ்துவே நமக்கு ஞானமும், மீட்பும், நீதியும் பரிசுத்தமுமானார்” (1கொரி.1:31).

5. Glory to God Alone – மகிமை தேவனுக்குமட்டுமே!

“நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்” என்பதை ஏசா.42:8-ல் வாசிக்கிறோம். நமது தேவன் எரிச்சலுள்ள (Zealous) தேவன். அப். 12:21-23-ஐ வாசிக்கும்பொழுது இது விளங்கும். “குறித்த நாளிலே ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம் பண்ணினான். அப்பொழுது ஜனங்கள் இது மனுஷ சத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழு புழுத்து இறந்தான்.”

இதற்கு நேர் மாறாக மூடிப் பிரசங்கியாரின் வாழ்க்கையிலிருந்து ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன். ஒருநாள் மூடிப்பிரசங்கியார் பிரசங்கம் செய்துவிட்டு வந்தவுடன் ஒருவர் வந்து ‘என்னே பிரசங்கியார்’ ‘What a preacher’ என்று புகழ்ந்தார். மூடி தன் அறைக்கு வந்து அழுது, “ஆண்டவரே, அந்த மனிதன் உமக்கு மகிமையைச் செலுத்தாமல் என்னைப் புகழுகிறானே. என்ன பாவம் செய்தேன்” என்று அழுது மன்னிப்புக்கேட்டார். மறுநாள் பிரசங்கம் முடிந்தவுடன் அதே மனிதன் வந்து ‘என்னே இரட்சகர்’ ‘What a Saviour’ என் றான். மூடி சந்தோஷப்பட்டார். நாம் உண்மையாக தேவனை மகிமைப்படுத்தினால் அவர் நம்மை சந்தோஷப்படுத்துவார். பவுல் இதையே சற்று வித்தியாசமாய், “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரி.10:31) என்றான்.

எந்த ஒரு சபையின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் இந்த ஐந்தும் நல்ல அஸ்திபாரங்கள்.

நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இவை அஸ்திபாரமாக அமைந்தால் பரிசுத்தமான ஜெய வாழ்வு வாழ முடியும்.

சத்தியவசனம்