இரத்தசாட்சிகளின் இரத்தமே சபையின் வித்து

(மே-ஜுன் 2017)

‘வேதாகமத்திற்குத் திரும்புக’ ஊழியமானது சீர்திருத்த இயக்கம் உருவாகி 500-ம் ஆண்டு நிறைவடைவதை நினைவுகூரும் வண்ணமாக இவ்விதழை சிறப்பு மலராக வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறோம்.

மார்ட்டின் லூத்தர் ஜெர்மனியில் விட்டென்பர்க் தேவாலயத்தின் கதவில் தான் வகுத்த 95 கொள்கைகளை ஆணி அடித்து தொங்கவிட்ட நிகழ்வு நடைபெற்று 500 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிகழ்வுதான் சபை சீர்திருத்தம் உருவாகுவதற்கு காரணமாயிற்று. இந்தச் சீர்திருத்தம் ஒருவேளை பரிபூரணமாக இல்லாமலிருந்தாலும் இது அநேக முக்கியமான காரியங்களை நிறைவேற்றிவிட்டது. அவற்றில் அதிமுக்கியமான இரண்டு காரியங்களை நாம் அறிய வேண்டியது அவசியம்.

முதலாவதாக, சபை சீர்திருத்த புரட்சி ஏற்பட்டதினிமித்தம் மீண்டும் வேதாகம நற்செய்தியை பெற்றுக்கொள்ள முடிந்தது. நாம் கிரியைகளினால் இரட்சிக்கப்படுவதில்லை. ஆனால், நமது ஆண்டவராகிய இயேசு தரும் கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறோம்.

இரண்டாவதாக, சபை சீர்திருத்த புரட்சியானது வேதாகமத்தின் முக்கியத்துவத்தை நமக்கு மீட்டு தந்தது. சீர்திருத்த இயக்கம் ஆரம்பமாவதற்கு முன்பாக வேதாகமம் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட புத்தகமாக இருந்தது. அதை எல்லாரும் வைத்துக்கொள்வதற்கும் படிப்பதற்கும் அனுமதி கிடையாது. சில சபை போதகர்களும் சபைத் தலைவர்கள் மட்டும் வேதாகமத்தை வைத்துக்கொள்ளவும் படிக்கவும் ஆராயவும் முடிந்தது. ஆனால், சீர்திருத்த இயக்கம் உருவானதும் தடைகள் யாவும் தகர்க்கப்பட்டு உலகத்தின் பல மொழிகளிலும் வேதாகமத்தை மொழிபெயர்ப்பதற்கும் வழி தோன்றியது. அதன் பின்பாக உலகிலுள்ள ஒவ்வொருவரும் வேதாகமத்தை பெற்றுக்கொள்ளவும் அதை படித்து தியானிக்கவும் சத்தியத்தையும் நற்செய்தியையும் புரிந்துகொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக சாதாரண மக்களும் வேதாகமத்தைப் படிப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டனர்.

இயேசுகிறிஸ்து இறுதியாக நமக்குத் தந்த “உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்ற மாபெரும் கட்டளை நிறைவேறுவதற்கு “சபை சீர்திருத்த இயக்கம்” அடித்தளமிட்டது. இன்று நமது தாய் மொழியிலே பரிசுத்த வேதாகமத்தை வைத்திருக்கிறோமென்றால், அதற்காக அநேக சீர்திருத்தவாதிகள் தங்களை தியாகம் செய்தனர். தங்கள் உயிரை பணயம் வைத்தனர். சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டனர். சீர்திருத்த இயக்கத்தின் 500-ம் ஆண்டை நினைவுகூரும் இத்தருணத்தில் இதற்காக வெகு பாடுபட்ட தியாக வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுடைய சேவைக்காக தேவனைத் துதிப்போம். இச்செய்தியில் சீர்திருத்தவாதிகளில் முக்கிய பங்காற்றிய ஜாண் விக்ளஃப், ஜாண் ஹஸ், வில்லியம் டின்டேல், மார்டின் லூத்தர், தாமஸ் கிரேன்மர் ஆகியோரின் வாழ்க்கைச் சம்பவங்களைத் தொகுத்துத் தந்துள்ளோம். இதின் வாயிலாக அவர்களுடைய அர்ப்பணிப்பை நினைவுகூர்வதோடு  நமது விசுவாசத்தைப் பெலப்படுத்துவோம்.

சத்தியவசனம்