அந்த முதல் உறவு!

சகோதரி சாந்தி பொன்னு
(மே-ஜுன் 2017)

“நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” (லேவி.11:44).

அமைதியைக் கிழித்துக்கொண்டு, நடுநடுங்கும் குரல் ஒன்று ஒலித்தது. “இந்த உலகத்திலே உறவுகள் எதுவுமே நிரந்தரம் இல்லை. 49 வருடங்கள் என்னுடன் வாழ்ந்த மனைவி போய்விட்டாள். பிள்ளைகளோ தங்கள் தங்கள் வழிகளில்! கண்ட சுகம் என்ன? எனக்கென்று ஒரு மாறாத உறவு உண்டு என்பதை அறிந்திருந்தாலும், இந்த உறவும் எல்லா உறவுகளிலும் ஒன்று என்று சாதாரணமாக ஒரு இடத்தைக் கொடுத்திருந்தேன். இப்போதுதான் என் முழு உறவுமே இதுதான் என்பதை உணருகிறேன். ஆனால், இந்த உன்னத உறவின் மகிழ்ச்சியை பெறுவதற்கு என் முதுமை மட்டும் நான் கடந்துவரவேண்டியிருந்தது. இள வயதில் நான் மரித்திருந்தால்…? சிலிர்த்துக் கொண்டார் அந்தப் பெரியவர். மூத்தோர் இல்லத்தில் இருந்த அனைவரும் அவரது பேச்சை உற்றுக்கேட்டு நெற்றியைச் சுருக்கித் தலையை அசைத்துக் கொண்டனர்.

‘உறவு’ இது ஒரு அற்புதமான ஆனந்தமான உணர்வு. இதைப் பணம் கொடுத்தும் வாங்க முடியாது; பலவந்தம் செய்தும் பெறமுடியாது. இது இதயத்தில் ஊற்றெடுக்கின்ற ஒன்று. ஆனால், இன்று இந்த ஆனந்தத்தைத் தொலைத்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நமது ஏராளமான பிரச்சனைகள் இந்த ‘உறவு’ என்பதிலிருந்துதான் உருவாகிறது என்றால் மிகையாகாது. இதற்குக் காரணம்தான் என்ன? ஆம், எதற்கும் ஒரு ஆரம்பம் அல்லது ‘முதல்’ என்று ஒன்று இருக்கும். அந்த ‘முதல்’ முறியும்போது அதை அஸ்திபாரமாகக் கொண்ட அனைத்தும் இடிந்து விடுகிறது என்பது இயல்பு. ஆக, மனித உறவுகள் இன்று ஆட்டங்கண்டிருக்கிறது என்றால், அவன் தன் முதல் உறவை மறந்துவிட்டானோ அல்லது அதனை மாசுபடுத்திவிட்டானோ அல்லது, அந்த உறவில் இருப்பது போன்ற மாயையில் விழுந்து விட்டானோ என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அந்த முதல் உறவு எது? ஆம், தேவனுக்கும், அவரால் அவருக்கென்றே அவருடைய சித்தப்படி படைக்கப்பட்ட மனிதனுக்குமுள்ள அந்த முதல் உறவு இன்று எந்த நிலையில் இருக்கிறது? இது தள்ளாடுவதால்தானோ நமது மனித உறவுகள் இன்று வெகு இலகுவாக உடைகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

படைப்பிலே தேவன் மனிதனுடன் ஏற்படுத்திய இந்த அற்புத உறவு தேவனால், தேவனுக்கென்று ஏற்படுத்தப்பட்டது. அதனை மனிதன் எப்போது தனது கைகளில் எடுத்தானோ, அன்றே அவன் தவறிப்போனான். இன்றைய பிரச்சனைகளுக்கெல்லாம் மூலகாரணம் தேவனுடன் உறவில் இருப்பதாக எண்ணுகின்ற மனிதன், தானே அந்தப் பரிசுத்த உறவைத் தொலைத்துவிட்ட உணர்வின்றி இருப்பதுதான். ஆக, மனிதன் இன்று உறவுகளைத் தேடி அலைகிறான். அதைத் தான் தொலைத்த இடத்தில் தேடாமல் வேறு பல இடங்களில் தேடி ஓடுகிறான். ஆனால், எங்கும் எதிலும் மனிதன் உணர்வற்றுப்போனான். ஏதேனிலே ஆரம்பித்த இந்தப் போராட்டம், இயேசு சிலுவையிலே சகலத்தையும் சீர்செய்த பின்னரும் தொடருவது நியாயமா? தேவனுக்கும் மனிதனுக்குமுள்ள இந்தப் பரிசுத்த உறவு சீர்ப்படும்போது, மற்ற எல்லா உறவுகளும் தேவனுக்குள் சீர்ப்படும் அல்லவா!

படைப்பில் உண்டான முதல்  உறவு

உறவு என்பது நம்முடன் கலந்துவிட்ட உணர்வு. மனிதன் தனித்து வாழமுடியாது. அவன் அப்படிப் படைக்கப்படவில்லை. நாம் நாமாக இந்த உலகினுள் வந்ததுமில்லை; நாமே திட்டமிட்டு இந்த உலகத்தைவிட்டுக் கடந்து செல்லப்போவதுமில்லை. “தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே…” (எபே.1:4) என்று பவுல் எழுதுகிறார். ஆக, உலகம் தோன்றுவதற்கு முன்பே நாம் நம் தேவனுடைய இருதயத்திலே இருந்திருக்கிறோம். இந்த உறவை எந்த அறிவினால் அளவிட முடியும்!

ஆக, தேவன் தமக்காகவே நம்மைப் படைத்தார்; தம்மைப்போலவே படைத்தார் என்று ஆதி. 1:16-ல் காண்கிறோம். அவருடைய சாயலை – குணாதிசயங்களை அவருடைய சுதந்திரத்தை அவருக்குள்ளான உறவின் ஆவலை எல்லாவற்றையும் அவர் நமக்குள் வைத்தார். அவர் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினார் (எபி.2:10). ஏதேனிலே மனிதன் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டபோதும், மனிதனை அழித்துப்போடாமல் மீண்டும் அவனைத் தம்முடன் உறவாக்கும்படிக்கு தாமே தமது ஜீவனைக் கொடுத்து நம்மை மீட்டு, நாம் இழந்துபோன மகிமையில் நம்மை மறுபடியும் சேர்த்துக்கொண்டார். நாம் படைக்கப்பட்டதும், உருவாக்கப்பட்டதும் தேவனுடைய, அவருக்கு மாத்திரமே உரிய சித்தம். ஆக, தேவனுக்குள் இருந்த உறவின் ஊற்று படைப்பிலே நமக்குள் பாய்ந்து வந்தது.

ஏதேனிலே மனிதன் பாவத்தை எப்போது வருந்தி அழைத்துக்கொண்டானோ, எப்போது அவன் தேவனுடனான உறவை மாசுபடுத்தினானோ, அப்பொழுதே அவனுக்குள் இருந்த உறவின் உணர்வும் மாசடைந்தது. தேவனுடனான உறவு மாசுபட்டபோது மனித உறவும் மாசுபட ஆரம்பித்தது. இல்லையானால், ஆதாம் ஏவாளில் குற்றஞ்சுமத்தியிருப்பானா? காயீன் தன் செல்லத் தம்பியைத் கொன்றிருப்பானா? இன்று நமக்குள் உள்ள உறவுப் பிரச்சனைகள், பிரிவினைகள் ஏக்கங்கள், தவிப்புகள் எல்லாவற்றுக்குமே அடிப்படைக் காரணமே இந்த முதல் உறவை நாம் தொலைத்துவிட்டதுதான்.

உறவை மீள்கட்டியெழுப்பிய தேவ அன்பு

பாவத்தைத் தழுவி, தம்முடனான பரிசுத்த உறவைவிட்டு ஒளிந்துகொண்ட மனிதனை மீட்கும்படி தமது கிரியையை ஆரம்பித்த தேவன், அதற்கும் ஒரு மனிதனைத்தான் தேடினார். அதுதான் உறவின் மேன்மை. ஆபிரகாம் என்ற தனி மனிதனை அழைத்த தேவன் அவன் வழித் தோன்றலான இஸ்ரவேல் ஜாதியைத் தெரிந்துகொண்டு அவர்கள் மூலமாகத் தாமே தேவன் என்பதையும், தாம் மனிதனில் கொண்டிருக்கும் அன்பின் உறவு பரிசுத்தமானது என்பதையும் வெளிப்படுத்தி, அந்த உறவை மீண்டும் கட்டியெழுப்பச் சித்தங்கொண்டதை பரிசுத்த வேதாகமம் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது. நானூறு வருடங்கள் எகிப்திலே அடிமைகளாக இருந்தவர்கள், அடிமை வாழ்வைத் தவிர வேறு எதையுமே அறியாதிருந்தவர்கள், எகிப்தையும் அதன் விக்கிரக வணக்கங்களையும் மாத்திரமே அறிந்திருந்திருந்தவர்கள் இந்த இஸ்ரவேலர். இவர்களைத்தான் தேவன் தமது தாசனாகிய மோசேயைக்கொண்டு மீட்டு, எகிப்தின் எல்லையைக் கடந்து, செங்கடலையும் கடந்து, வனாந்தரத்துள் கொண்டுவந்து ஒரு தனித்த ஜாதியாக அவர்களை உருவாக்கினார். இதெல்லாம் நாம் அறிந்த சங்கதிகள்தான். ஆனால், இது எதற்காக? இஸ்ரவேல், இந்த உலகத்தார்போல அல்லாமல் ஒரு தனித்துவமான ஜாதியாக, தேவநீதியை வெளிப்படுத்தி, முழு உலகுக்கும் தேவனை வெளிப்படுத்துகின்ற ஒப்பற்ற ஜாதியாக தேவனுக்குச் சாட்சியாக வாழ வேண்டும் என்பதற்காகத்தானே?

அந்த சமயத்திலே, நேரடியாகவும், மோசே மூலமாகவும், கற்பனைகள் மூலமாகவும் தேவன் தமது ஜனத்துடன் பலவிதங்களிலும் இடைப்பட்டபோது, அடிக்கடி அவர் பாவித்த சொற்றொடர் ஒன்றுண்டு. “நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்”. கற்பனைகளின் முதற் கற்பனையிலேயே “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே” (யாத்.20: 2) என்றார். தேவன் யாத்திராகமத்திலிருந்து உபாகமம் வரையிலுமான வாக்கியங்களிலே ஏராளமான தடவைகள், “உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே” என்ற இந்தச் சொற்றொடர் எழுதப்பட்டுள்ளதை கவனித்திருக்கிறீர்களா? ஆம், ஏதேனிலே, தேவன் தன்னில் கொண்டிருந்த அன்பின் உறவை மனிதன் மாசுபடுத்தினாலும், தேவ அன்பு மாறவில்லை. “நான்”, “உங்கள்” இது அவருக்கும் நமக்கும் உள்ள உறவின் பெறு மதிப்பை உணர்த்துகிறது. ‘உங்கள் தேவனாகிய கர்த்தர்’ என்னும்போது, அவருடைய ஆளுகையில் இருக்கின்ற நாம் அவருடைய நீதி நியாயத்தை வெளிப்படுத்துகின்ற பிள்ளைகளாக அழைக்கப்பட்டதை உணர்த்துகிறது.

1. நான்

‘நான்’ இவரே தேவன். இவரே படைப்பாளி. ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் முதல் வசனத்திலேயே தம்மைத் ‘தேவன்’ என்று வெளிப்படுத்தியவர். மனிதனைப் படைத்து, மனித சரித்திரத்தில் தம்மை உட்புகுத்திய பின்னர் தம்மைத் தேவனாகிய கர்த்தர் (ஆதி.2:4) என்று வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். ஆம். அவரே நம்மைப் படைத்து, நம்மை ஆளுகை செய்து நடத்துகிறவர். அவர் கர்த்தர்! அவரேயன்றி வேறே தேவர்கள் இல்லை. அவரே ‘தேவனாகிய கர்த்தர்’ அவருடைய ஆளுகையின் கீழே நாம் இருக்கிறோம். அவருடைய கட்டளைகளின்படி நடக்கும்போதுதான் நாம் அவரைப் பிரதிபலிக்கின்றவர்களாக இருக்கிறோம்.

2. உங்கள்

அன்று உரைக்கப்பட்ட இந்த ‘உங்கள்’ என்பவர்கள் யார்? இவர்கள் அடிமைகளாயிருந்தவர்கள்; விக்கிரகங்களால் சூழப்பட்டிருந்தவர்கள். எந்த உரிமையும் அற்றிருந்தவர்கள். விடுதலைக்காகக் கூக்குரலிட்டவர்கள். இவர்களைத்தான் மோசே என்ற இரட்சகனை எழுப்பி, அற்புதமாக மீட்டுக்கொண்டார். “இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன். நீ என்னுடையவன். … நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும் உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும் உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்” (ஏசா.43:1,3) என்கிறார். இஸ்ரவேல் மீட்கப்பட்ட ஜனம். மீட்கப்பட்டவன் மீட்டவருக்குத்தானே சொந்தம்.

இன்று ஆண்டவர் நம்மிடம் கூறுகிறார். ‘நான் உங்கள் கர்த்தர்’ இந்த நாங்கள் யார்? பாவத்தின் அழுக்குப் பிடியிலிருந்தவர்கள்தான் நாங்கள். நம்மை மீட்கும்படி தமது ஒரே பேறான குமாரனையே தேவன் ஏகபலியாய் கொடுத்து நம்மை மீட்டார். நமக்காக எகிப்தையும் சேபாவையும் அல்ல, அவர் தம்மையே கொடுத்தார். இப்போ நாம் யாருக்குச் சொந்தம்? இந்தச் சொந்தம், இந்த உறவு மாசடையலாமா?

தேவனாகிய கர்த்தரின் எதிர்பார்ப்பு

“நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர். ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக” (லேவி. 11:45). பரிசுத்த தேவனை இந்த உலகிற்குப் பிரதி பலிக்கின்ற பாத்திரங்களாகவே அன்று இஸ்ரவேலையும் இன்று நம்மையும் தேவன் மீட்டுக் கொண்டார். ஆனால் இஸ்ரவேல் தோற்றுவிட்டது. இப்படியிருக்க, கல்வாரி அன்பினால் மீள் கட்டப்பட்ட உறவில் சோர்க்கப்பட்ட நாமும் அன்றைய இஸ்ரவேலைப்போல தேவனைத் துக்கப்படுத்தலாமா? எவராலும் மீட்கமுடியாதிருந்த பாவச்சிறையிலிருந்த நாம் இன்று தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்பும் அவருடனான உறவைக் கொச்சைப்படுத்தலாமா? அந்த முதல் உறவான தேவனுடனான உறவில் மீள் அமைக்கப்பட்ட நாம் அவருக்கேற்ற பிள்ளைகளாக வாழவேண்டியது அவசியமல்லவா. அதற்கு ஒரேவழி, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதுதான். “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேதுரு 1:15) இதனையே நமது தேவனாகிய கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

பரிசுத்தம், அன்பு, தேவநீதி

தேவனையும், பரிசுத்தம் அன்பு தேவநீதி இவற்றையும் பிரித்துப்பார்க்கமுடியாது. தேவனுக்கே உரிய இவற்றை நாம் எட்டிப்பிடிப்பது எப்படி? பரிசுத்த தேவனை நாம் நேரில் கண்டதில்லை. ஆனால் பிதாவை வெளிப்படுத்திய இயேசுவை நாம் அறிந்திருக்கிறோம். அவர் இந்த உலகத்தோடு ஒத்தவேஷம் தரிக்காதவராய், தனித்துவமானவராய், பிதாவின் சித்தத்தை மாத்திரமே செய்து முடிப்பதைத் தன் சித்தமாய் கொண்டு வாழ்ந்தார் அல்லவா! இதற்காக உலகம் அவரை வெறுத்தது. அதற்காகச் சிலுவையைச் சுமக்கவும் அவர் தயங்கவில்லை. தமது பிள்ளைகள் எப்படி வாழவேண்டுமென்ற மாதிரியை நமக்கு வைத்துப்போனார். அந்தப் பரிசுத்தத்தைத்தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அடுத்தது, பிதாவின் அன்பு அகாபே அன்பு; எதையும் எதிர்பாராத அன்பு. பாவியையும் துரோகியையும்கூட நேசிக்கின்ற அன்பு, இன்று நாம் அதனை இயேசுவில் கண்டோமே! தேவநீதி, இது உலகநீதியிலிருந்து வேறுபட்டது. உலகம் குற்றத்திற்குத் தண்டனை கொடுக்கும். ஆனால் ஆண்டவரோ குற்றமற்றவராக நமது குற்றங்களைத் தம்மேல் சுமந்து நமக்கான தண்டனையைத் தாம் ஏற்றுக்கொண்ட நீதி அது. பாவமில்லாதவர் பாவமாக்கப்பட்ட நீதி அது. பொய்க்குற்றஞ் சாட்டப்பட்டபோதும் மவுனமாய் நின்ற நீதி அது.

கறைபடிந்த முதல் உறவை இன்று புதுப்பிப்போமா!

தேவனோடுள்ள உறவில் நாம் நிலைத்திருப்பது என்றால், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பை, அவருடைய பரிசுத்த தன்மையை, அவருடைய நீதியை மொத்தத்தில் அவரை உலகுக்கு வெளிப்படுத்துகின்ற பாத்திரங்களாக நாம் நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். இது எப்படி நம்மால் முடியும்? அதற்கும் வார்த்தை பதில் கூறுகிறது. “நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், …  அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” (லேவி.18:3,4).

ஆம், நாம் முன்னிருந்த பாவ வழிக்குத் திரும்பாமலும், நாம் இன்று வாழுகின்ற இந்த உலகத்தாருடைய வழிகளில் நடவாமலும், அவர்களுடைய முறைமைகளினாலும், உலகம் காட்டும் கவர்ச்சிகளினாலும் இழுப்புண்டு போகாமலும், நம்மைப் படைத்து உருவாக்கி மீட்டு, தமது சாட்சிகளாக இந்த உலகில் நிறுத்திய தேவனுடைய வழிகளிலும் நியமங்களிலும் நடப்பதைத் தவிர, தேவனுடனான நமது உறவை மீள்கட்டி எழுப்பவும். அதில் நிலைத்திருக்கவும் வேறு வழியெதுவுமே இல்லை. இதற்கு நமக்கு ஒரேமாதிரி ‘இயேசு’ ஒருவர்தான். இந்த மேன்மையான உறவில் நாம் நிலைத்திருப்போமானால் மனிதருடனான உறவிற்கு உண்மையாயிருப்பது நமக்குக் கடினமாயிராது. ஆதியிலிருந்த அந்த முதல் உறவு, இந்த உலகின் முடிவு பரியந்தமும், நித்திய நித்தியமாய் இருக்கின்ற அந்த தேவனுடனான பரிசுத்த உறவில் இன்று நாம் எங்கே நிற்கிறோம்? இந்த உலகில் தனது சிலுவையைச் சுமக்காத எவனும் இந்த உறவில் நிலைத்திருக்க முடியாது. மனித உறவில் நாம் தடுமாறுகிறோம் என்றால், நாம் தேவனுடனான உறவில் தடுமாறி விட்டோம் என்பதுதான் அர்த்தம். ஆகவே முதலில் தேவனுடனான அந்த அற்புத உறவில் நாம் ஊன்றிக் கட்டப்பட நம்மை ஒப்புக்கொடுப்போமா?

சத்தியவசனம்