ஜாண் விக்ளிஃப்

John-Wycliffe

ஜாண் விக்ளிஃப் 14-ம் நூற்றாண்டில் அதி உன்னத அதிகாரத்திலிருந்த போப் ஆண்டவரை யும் ரோமன் கத்தோலிக்க சபையையும் எதிர்த்து நின்று இயேசுவையும் அவருடைய சத்தியத்தை யும் முன்நிறுத்தினார். முழுஉலகத்திற்கும் ‘இயேசு கிறிஸ்து ஒருவரே கர்த்தர்’ என்பதையும் ‘பரிசுத்த வேதாகமம் ஒன்றே சத்தியம்’ என்பதையும் பறைசாற்றினார். இவர் முறையான வழியிலே ரோமன் கத்தோலிக்க சபையை எதிர்த்து நின்று உண்மையான கிறிஸ்தவத்தை இவ்வுலகில் நிறுவினார். 16-ம் நூற்றாண்டில் பிராட்டஸ்டன்ட் திருச்சபை நிறுவப்படுவதற்கு காரணமான சீர்திருத்த இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் ஜாண் விக்ளிஃப் என்றால் மிகையாகாது.

ஜாண் விக்ளிஃப் 1324-ம் ஆண்டு இங்கிலாந் திலுள்ள யார்க்ஸயர் என்ற இடத்தில் விக்ளிஃப் என்ற கிராமத்தின் பிரபுவாக இருந்த ரோஜர் விக்ளிஃப் மற்றும் கேத்ரினுக்கும் மகனாகப் பிறந்தார். தன் பள்ளிப்படிப்பை முடித்தபின் சட்டம் பயில ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் சேர்ந்தார். அவர் அங்கு சிறந்த மாணவராகவும், தலை சிறந்த தலைவராகவும் திகழ்ந்தார். எவ்வித பெரிய எதிரியையும் கவர்ந்திழுக்கக்கூடிய பேச்சாற்றல் மிக்கவராய் திகழ்ந்தார். தனது கல்லூரிப் படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலேயே போதகராக அநேக வருடங்கள் பணிபுரிந்தார்.

கேன்டர்பரியன் ஆர்ச் பிஷப்பாக இருந்த பேராசிரியர் தாமஸ் பிராட் வார்டின் போதனையினால் ஈர்க்கப்பட்டார். பிராட் வார்டின் விக்ளிஃப்பை இயேசுகிறிஸ்துவண்டை வழிநடத்தினார். பிராட்வார்டின் பரிசுத்த வேதாகமமே தேவனுடைய வார்த்தை என்பதைப் போதித்ததோடு, விக்ளிஃப்பை வேதாகமத்தை ஆழமாக தியானிக்க வழிநடத்தினார். இதனால் விக்ளிஃப் தன்னை முழுவதுமாக வேதாகமத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். அவர் அனைத்தையும் ஆண்டவரின் வெளிச்சத்தில் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தார்.

1348-ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தை உலுக்கி எடுத்த கொடூரமான வாதை நோயினால் இங்கிலாந்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதிபேர் உயிர் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சமயத்தில் ‘The Last Age of the Church’ என்ற தனது புரட்சிகரமான முதல் கைப்பிரதியை வெளியிட்டார். அதில் போதகர்களின் பாவ வாழ்க்கையினிமித்தமும், திருச்சபையிலுள்ள சீர்கேட்டினிமித்தமும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு தேசத்தில் வந்ததினால் இக்கொடிய வாதை ஏற்பட்டிருக்கிறது என்பதை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறினார்.

ஒழுக்க சீர்கெட்ட குருமார்களை சபையிலிருந்து நீக்கி ஒரு மறுமலர்ச்சியை கொண்டுவர வேண்டுமென இவர் விரும்பினார். சபையின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்களுக்கு பரிசுத்த, ஒழுக்கமான வாழ்க்கை அவசியம் என்பதை வலியுறுத்தினார். தேவன் சபையின் தலைவர்களுக்கு சொத்துக்களைக் கொடுத்திருப்பது தங்கள் சொந்த நலனுக்காக அல்ல, தேவநாம மகிமைக்காக அவைகள் பயன்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். இதைச் செய்யத் தவறுகிறவர்களிடமிருந்து சொத்துக்கள் பிடுங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதோடு ரோமன் கத்தோலிக்க சபையில் பிச்சையெடுக்கும் துறவற குழுக்களையும் (Franciscans and Dominicans), துறவறத்தையும் வெறுத்தார். மேலும் இங்கிலாந்து தேசத்தின் மேல் உள்ள போப்பின் அதிகாரத்தை எதிர்க்கவும், புறக்கணிக்கவும் செய்தார். மேலும் ரோமன் கத்தோலிக்க திருவிருந்து உபதேசத்தையும் (Transubstantitaion – அதாவது திருவிருத்தில் பரிமாறப்படும் அப்பமும், திராட்சரசமும் மெய்யான இயேசுகிறிஸ்துவின் சரீரமாக, இரத்தமாக மாறுகிறது என்பதாகும்) எதிர்த்தார். சபை ஆராதனையானது எளிமையாகவும், புதிய ஏற்பாட்டு சபை முறைமையின்படி இருக்கவேண்டுமென்று வலியுறுத்தினார். சபையின் தீர்மானமல்ல, வேதமே எல்லாவற்றிற்கும் இறுதியான தீர்ப்புடையதாகும் என்று திட்டவட்டமாக கூறினார். இவர் செய்த முக்கியவேலை 1380-ம் ஆண்டு புதிய ஏற்பாட்டை எல்லாரும் வாசிக்கத்தக்கதாக ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தார். 1384-ம் ஆண்டு தன் நண்பனின் உதவியோடு பழைய ஏற்பாட்டையும் மொழிபெயர்த்து முடித்தார்.

ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியில் வேதாக மத்தை படிக்க முடிந்தது. இதனால் அநேகருடைய கண்கள் திறக்கப்பட்டன. ரோமன் கத்தோலிக்க சபையில் இவருக்கு பயங்கர எதிர்ப்பு எழும்பினது. அரச குடும்பத்தைச் சேர்ந்த அநேகர் இவருக்கு பாதுகாப்பாக இருந்தபடியால் இவர் இரத்த சாட்சியாக மரிப்பதிலிருந்து தப்பிவிட்டார். இவருடைய கொள்கைகள் 1382-ம் ஆண்டு கண்டனம் செய்யப்பட்டாலும் லுட்டர் வொர்த் என்ற சபையில் இறுதிவரை இருக்க அனுமதிக்கப்பட்டார். 1384-ம் ஆண்டு இவர் மரித்தார். விக்ளிஃப்பின் பிரசங்கமும், வேதாகம மொழிபெயர்ப்பும் மார்க்க மறுமலர்ச்சிக்கு வழி வகுத்தன. எனவே ஜாண் விக்ளிஃப் “மார்க்க மறுமலர்ச்சியின் விடிவெள்ளி” (The Morning Star of Reformation)  என அழைக்கப்பட்டார்.

விக்ளிஃப் கத்தோலிக்க சபையினரால் அதிகம் வெறுப்புக்குள்ளானார். போப்புக்கும் அவருக்கு கீழுள்ள அதிகாரத்தில் இருந்தவர்களுககும் விக்ளிஃப்மேல் இருந்த வெறுப்பை விளக்கிக் கூற இயலாது. விக்ளிஃப் மரித்து 44 வருடங்களுக்குப் பின் 1416-ல்  விக்ளிஃப் உடலை புதைத்த இடத்திலிருந்து அவரது எலும்புகளை தோண்டி எடுத்து எரிக்கும்படி போப் உத்தரவிட்டார். கான்ஸ்டன்ஸ் சபை மன்றம் போப்பின் உத்தரவை நிறைவேற்றியது. எரித்த சாம்பலை வீசி எறிந்தனர். அவரது வேதாகம மொழிபெயர்ப்பு, அவரது சீர்  திருத்த கொள்கை, எழுத்தாக்கங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

இவரைப் பின்பற்றியவர்கள் லோலார்ட்ஸ் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டனர். 1401-ல் வில்லியம் ஷாடிர் (sawtre) முதல் இரத்த சாட்சியாக எரித்துக்கொல்லப்பட்டார். இரத்த சாட்சியாக மரித்த முதல் பெண்மணியான ஜோன் ப்ரௌஃடன் (Joan Broughton) சுமித் பீல்டு என்ற இடத்தில் 1494-ம் ஆண்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது மகள் லேடி எங்க் அவர்களும் மேலும் 6 ஆண்களும் ஒரு பெண்மணியும் 1519-ம் ஆண்டு வாக்கில் இதே இடத்தில் எரித்து கொலை செய்யப்பட்டனர். 1511-ம் ஆண்டு வில்லியம் சுவிட்டிங் மற்றும் ஜாண் புருஸ்டர் (John Breuster) ஆகிய இருவரும் சுமித்பீல்டு என்ற இடத்திலும் ஜாண் பிரவுன் என்பவர் ஏஸ்போர்டு (Ash ford) என்ற இடத்திலும் எரித்து கொலைசெய்யப்பட்டனர். இவ்வாறு இரத்த சாட்சியாய் மரித்த அனைவரும் சுத்தமான சுவிசேஷத்தை பிரசங்கித்தவர்கள் ஆவர்.


உங்களுக்குத் தெரியுமா?

மனிதர்களை இரட்சிப்பிற்கு நேராக வழிநடத்தும் பணியைத் தவிர பூமியில் கிறிஸ்தவனுக்கு அதி முக்கியப் பணி வேறொன்றும் இல்லை

– ஜாண் வெஸ்லி


சிந்தியுங்கள்!

ஆத்துமக் கனிகளை அறுவடை செய்ய விரும்புகிறவர்களுக்கு முதலாவது ஆத்துமாக்களுக்காய் கண்ணீர் சிந்த தெரிந்திருக்கவேண்டும்

– C.H.ஸ்பர்ஜன்

சத்தியவசனம்