வில்லியம் டிண்டேல்

வில்லியம் டிண்டேல் இங்கிலாந்து நாட்டிலுள்ள கிளொசெஸ்டர் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவ ஞானத்தில் (Philosophy) முதுகலைப்பட்டம் பெற்றவர். பின்னர் இறையியல் (Theology) பட்டமும் பெற்றவர். வேதத்தை ஆராய்ந்து படித்து சிறந்த வேத வல்லுநரானார். வல்லமையான பிரசங்கியாராகவும் மாறினார்.

இவர் வாழ்ந்த 16-ம் நூற்றாண்டு துவக்கத்தில் (கி.பி.1494-1536) ஆலயத்திலுள்ள பாதிரியார்கள் (Priests) மாத்திரமே பிரசங்கம் செய்து வந்தனர். ஏனெனில் எபிரேய, கிரேக்க மொழி அறிவு அவர்களுக்கு மாத்திரமே இருந்தது. அப்பொழுது வேதாகமம் மூலமொழியாகிய எபிரேய, கிரேக்க மொழி தவிர ஆங்கிலத்தில் வேதாகமம் இல்லாதிருந்த காலம், வில்லியம் டிண்டேலுக்கும் வேதாகம மூலமொழி அறிவு மிகத்தெளிவாக இருந்தபடியால் பாதிரியார்களின் தவறான வேத விளக்கங்களை சுட்டிக்காட்டுவார். வேதத்தில் சொல்லப்பட்ட உபதேசத்திற்கு முற்றிலும் மாறான அநேக உபதேசங்களை பாதிரியார்கள் போதித்ததையும் கண்டித்து உணர்த்த ஆரம்பித்தார். இந்நிலையில் அப்போது லண்டனின் பிஷப்பாக இருந்த கத்பெர்ட்டன்ஸ்டால் (Cuthberttonstall – Bishop of London) மற்றும் பாதிரியார்களுக்கும் வில்லியம் டிண்டேல்மீது கசப்பான உணர்வுகளை உருவாக்கிற்று. பின்பு அது பகையாக மாறியது. பாதிரியார்கள் அவரை வெளிப்படையாக எச்சரிக்கவும் மிரட்டவும் ஆரம்பித்தனர். ஆனால் வில்லியம் டிண்டேல் இதைக்கண்டு துவண்டுவிடவில்லை.

பாதிரியார்கள் தாங்கள் மட்டுமே வேதத்தில் சொல்லப்பட்ட காரியங்களை விளக்கித்தர முடியும் என்ற பெருமையும், மக்கள் மீதான அதிகாரத்தைச் செலுத்தி தாங்கள் எப்பொழுதும் உயர்ந்த நிலையிலேயே இருக்கவேண்டும் என்ற ஆளுமைத் தன்மையையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தனர், பொதுநிலையிலுள்ளோர் (Layman) இந்தக் காரியத்தில் நுழைந்து வேதத்தை கையிலெடுப்பார்களென்றால் அவர்கள் கூறும் காரியம் வேதப்புரட்டாகவும் (Heresy) தேவ தூஷணமாகவுமே (Blasphemy) இருக்கும் என்றும் அப்படிப்பட்டவர்கள் வேதப் புரட்டர்கள் (Heretic) என்றும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த பின்னணியத்தில் வில்லியம் டிண்டேல் முதலாவதாக புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட முயற்சிகள் மேற்கொண்டார். இதற்கு மதவாதிகளாகிய பாதிரியார்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர், இந்நிலையில் பிஷப் அவர்களின் சான்ஸலர் வில்லியம் டிண்டேலை வருவித்துப் பேசினார். வேதத்திலிருந்து அநேக காரியங்களை டிண்டேலிடமிருந்து கேட்டறிந்தார். டிண்டேல் அளித்த விளக்கங்கள் எதையுமே அவரால் மறுக்கமுடியவில்லை. ஆனாலும், கடைசியாக “போப்பாண்டவருக்கு எதிரான கருத்தை நீர் பிரசங்கிப்பீரானால் அது உம்முடைய உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை நீர் விளங்கிக்கொள்ள வேண்டும்” என்று டிண்டேலை எச்சரித்தார். டிண்டேல் அவருக்கு தைரியமாக, உறுதியாக, மிகத்தெளிவாக பதிலளித்தார். “கர்த்தர் எனக்கு ஜீவனைத் தந்து என் ஆயுட்நாளைக் கூட்டித் தருவாரென்றால் இந்த நாட்டில் ஏர் ஓட்டுகிற சிறுவன்கூட வேதத்தை எளிதில் அறிந்துகொள்ளுகிற அளவுக்கு தாய் மொழியில் மொழி பெயர்த்து மக்களில் தேவ அறிவை உருவாக்கி உயர்த்த முடியும். இந்த மேலான நோக்கத்திற்காக நான் போப்பாண்டவரையும் அவரது சட்டதிட்டங்களையும் மீறுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன்” என்பதுதான் அவரது பதில்.

சூழ்நிலைகள் யாவும் அவருக்கு விரோதமாக உருவாகிறது என்பதை உணர்ந்தார். இம்மகத்தான பணியை எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இங்கிலாந்திலிருந்து செய்ய இயலாது என்பதையும் உணர்ந்தவராக தன்னுடைய நாட்டைவிட்டு ஜெர்மன் நாட்டிற்குச் சென்றார். ஜெர்மனியில் ஹம்பிரீ மும்முத் என்பவரும் இன்னும் சில நண்பர்களும் டிண்டேலுக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். அங்கிருந்த காலத்தில் புதிய ஏற்பாடு மாத்திரமல்ல, மோசேயின் 5 ஆகமங்களையும் கி.பி.1525-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முடித்தார். புதிய ஏற்பாடும் ஆகமப் புத்தகமும் இங்கிலாந்து நாட்டிற்கு மற்ற பொருட்கள் அனுப்பப்படும்போது மறைவாக வைத்துக் கடத்தப்பட்டன. இங்கிலாந்து நாட்டிற்குள் டிண்டேலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய புதிய ஏற்பாடும் ஆகமப் புத்தகமும் வந்துவிட்டன என்ற செய்தி லண்டன் பிஷப்பிற்கும் பாதிரியார்களுக்கும் பேரதிர்ச்சியாகவும் பெரும் சவாலாகவும் இருந்தது.

லண்டன் பிஷப் டிண்டேலின் ஆங்கில மொழி பெயர்ப்பு பிழையானது என்றும் தேவ தூஷணத்திற்கு ஒப்பானது என்றும் பிரகடனம் செய்தது மாத்திரமல்ல டிண்டேல் ஒரு குற்றவாளி என்றும் அறிவித்தனர். அவரது மொழிபெயர்ப்பை முற்றிலும் அழித்துவிட திட்டமிட்டனர். புதிய ஏற்பாட்டையும் ஆகம புத்தகத்தையும் வஞ்சகமாக மொத்த மொத்தமாக ஜெர்மனியிலிருந்து வாங்கி தீயிட்டு எரித்தனர். ஆனாலும், டிண்டேல் அச்சிட்டு வெளியிடுவதை நிறுத்தவில்லை. இங்கிலாந்து மக்களின் கரங்களை அது எட்டியது. அவர்களின் மனக் கண்கள் வேத சத்தியங்களுக்குத் திறக்கப்பட்டன. எத்தனையோ நூற்றாண்டுகளாய் வேத சத்தியங்களை அறியாமற்போனோமே என்பதை மக்கள் உணர்ந்தனர்.

வில்லியம் டிண்டேல் நீண்ட காலம் ஜெர்மனியில் தங்கியிருக்க இயலாத சூழ்நிலைகள் ஏற்பட்டன. தனது சொந்த நாட்டிற்கு  வந்து ஆன்ட்வெர்ப் என்ற நகரில் தலைமறைவாகவே இருந்தார். அந்நிலையில் தாமஸ் பாயின்ட்ஸ் என்பவரின் நட்பு டிண்டேலுக்கு கிடைத்தது. அது அவருக்கு பேருதவியாக இருந்தது. தாமஸ் பாயிண்ட்ஸ் வியாபாரிகள் தங்குவதற்கான விடுதி ஒன்றை நடத்தி வந்தார். ஹென்றி பிலிப் என்பவர் தாமஸ்க்கு மிகவும் நெருக்கமானவர். இந்த சூழ்நிலையில் வில்லியம் டிண்டேலுடன் பழகும் வாய்ப்பும் ஹென்றி பிலிப்புக்கு கிடைத்தது. அவர் பண ஆசையின் காரணமாகவும். பிஷப்பிற்கு மிக நெருங்கியவராகிவிடலாம் என்ற ஆசையிலும் நயவஞ்சகமாக தலைமறைவாக வாழும் டிண்டேலை லண்டன் பிஷப்பிற்கு காட்டிக்கொடுக்கத் திட்டமிட்டார். ஏனெனில் டிண்டேலின் புதிய ஏற்பாடு மோசேயின் ஆகம புத்தகங்களின் வெளியீட்டைத் தொடர்ந்து ஒரு குற்றவாளியாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தார். ஹென்றி பிலிப், டிண்டேல் கைது செய்யப்பட என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய ஆரம்பித்தார்.

இங்கிலாந்து மன்னரின் பிரதிநிதியாகிய  புரோக்கிரேட்டர் ஜெனரலுக்கு (Procurator General) தகவல் கொடுக்கப்பட்டு அவரது அதிகாரிகளும் டிண்டேலை கைது செய்ய ஆயத்தமானார்கள். ஹென்றி பிலிப் டிண்டேலைக் காட்டிக் கொடுத்தார். அதிகாரிகள் டிண்டேலைக் கைது செய்து வில்வோரீ என்ற இடத்தில் சிறையிலடைத் தனர்.

சட்டமுறைமையின்படி டிண்டேலின் வழக்கை நடத்த ஒரு வழக்கறிஞர் கொடுக்கப்பட்டார். ஆனால், டிண்டேல் தானே தன் வழக்கை நடத்திக்கொள்வதாகக் கூறி அதை மறுத்துவிட்டார். ஆக்ஸ்பர்க் என்ற இடத்தில் நீதி விசாரணை  நடந்தது. விசாரணையில் டிண்டேலின் எந்த நியாயமும் எடுபடவில்லை. ஏனெனில் விசாரனைக்கு முன்பாகவே அவர்கள் தீர்ப்பை முடிவுசெய்துவிட்டனர். டிண்டேல்மீது மரண தண்டனைக்கான குற்றம் இல்லை; எனினும் மன்னரின் தீர்ப்புப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்குமுன் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அவர் சிறையிலேயே இருந்தார். சிறையிலிருந்த காலத்திலும் அவர் தேவனுக்கு உண்மையுள்ளவராக இருந்தபடியால் அவரது சிறைக்காப்பாளர், அவரது மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலரை நல்ல கிறிஸ்தவர்களாக மாற்றினார்.

1536 அக்டோபர் 6-ம் நாள் காலை வில்லியம் டிண்டேலின் மரணதண்டனை ஆலய பிரமுகர்கள் மற்றும் அநேக பாதிரியார்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. தூக்கி லிடுபவன்  டிண்டேலை நாட்டப்பட்ட ஒரு மரத்தில் கட்டி அவரை கழுத்தை நெரிக்க முற்படுமுன் மரண வேளையிலும் ஆர்வம் குறையாதவராக “தேவனே, இங்கிலாந்து மன்னரின் கண்களைத் திறந்தருளும்” என்று மிகச் சுருக்கமான ஜெபத்தை ஏறெடுத்தார். தூக்கிலிடுபவன் டிண்டேலை கழுத்தை நெறித்துக்கொன்றான். அதைத் தொடர்ந்து அதே நிலையில் தீயிட்டு எரித்து சாம்பலாக்கினார்கள்.

வில்லியம் டிண்டேல் கழுத்து நெரித்து கொல்லப்பட்டாலும் வேதாகமம் தாய்மொழிக்கு மொழியாக்கம் செய்யும் அவரது கொள்கையை நெரிக்க இயலவில்லை. அவரது சரீரத்திற்கு வைக்கப்பட்ட தீ காட்டுத் தீ போல் பரவ ஆரம்பித்தது. அவரது இறுதி ஜெபத்திற்கு பலனாக 1604-ம் ஆண்டே ஆங்கில வேதாகமத்தை உருவாக்க இங்கிலாந்தின் மன்னர் ஜேம்ஸ் முன்வந்தார். 1611-ம் ஆண்டு ஆங்கில வேதாகமம் வெளியிடப்பட்டது.

வில்லியம் டிண்டேல் செய்த மொழிபெயர்ப் பின் 80 சதவீகிதம் அப்படியே ஏற்கப்பட்டது. இன்று அவரவர்கள் தாய்மொழியில் வேதாகமம் உருவாகியிருப்பதையும் உருவாகிக்கொண்டிருப்பதையும் தேவனை அறியும் அறிவு வளர்ந்து கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம்.

“என் அன்பின் இயேசு, என் இரட்சகர் என் இருதயத்தில் ஆழமாக பதித்தெழுதப்பட்டிருக்கிறார். ஆகவே, என் இருதயம் துண்டுதுண்டாக வெட்டப்பட்டாலும் இயேசுவின் பெயர் ஒவ்வொரு துண்டிலும் இருக்கும் என்று நான் நிச்சயத்திருக்கிறேன்.

சத்தியவசனம்