மார்ட்டின் லூத்தர்

ஜெர்மனியில் உள்ள சாக்ஸனியின் ஐஸ்லெபென் என்ற இடத்தில் வசித்து வந்த ஹான்ஸ் மற்றும் மார்கரெட் தம்பதியினருக்கு 1483 நவம்பர் 10-ம் நாள் மகனாக பிறந்தார். இவர் பிறந்த மறு தினமே ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப் பட்டார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் இன்னும் ஆறுபேர் இருந்தனர். லூத்தரின் தாயும், தந்தையும் கடினமாக வேலைசெய்து உழைத்துச் சம்பாதித்துக் குடும்பத்துக்கு உணவளித்ததுடன் முறையான கல்வியைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கவும் செய்தார்கள்.

மார்ட்டின் ஐந்து வயதாய் இருக்கும்போதே கல்விகற்க ஆரம்பித்தார். இவர் மான்ஸ்ஃபெல்டு என்னும் கிராமத்தில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கேயே அவர் தன் 13-ம் வயதுவரை தொடர்ந்து படித்தார். இங்கே இவர் வாசிக்கவும் எழுதவும் கற்றதுமட்டுமின்றி, லத்தீன் மொழியையும் கற்றார்.

லூத்தர் தன் 14-ம் வயதில் அருகில் உள்ள பட்டணமான மெக்டேபர்க்கில் படிக்கச் சென்றார். இவருக்குப் பள்ளிக்குச் செல்ல இவரது பெற்றோரால் பணம் கொடுக்க முடியவில்லை. எனவே இவர் பலரிடம் உதவி கேட்டுத் தன் பள்ளிக்குச் சென்று படித்தார். இவ்வாறு ஒரு வருடம் கடந்தது.

1498-ல் மார்ட்டின் ஐாசனாக் என்னும் நகரத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் லூத்தர் பலரிடம் உதவி பெற்றுத்தான் தன் வாழ்க்கையை நடத்தினார். லூத்தர் இனிமையாகப் பாடுவார். ஒருநாள் இவர் பாடியதைக் கேட்ட இசைப்பிரியையான ஊர்சுளா கோட்டா என்ற பணக்கார வயோதிப அம்மையார் மார்ட்டின் லூத்தரைத் தன்னுடன், தனது வீட்டில் வந்து தங்கிக்கொண்டு படிக்குமாறு அழைத்தார். மார்ட்டின் மிக மகிழ்ச்சியுடன் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். அடுத்த நான்கு ஆண்டுகள் லூத்தர் அந்த அம்மையாரின் ஆதரவில் இருந்தார். அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்தார்.

லூத்தருக்கு 18 வயதானபோது, அவரது தந்தை அவரைப் படிப்பிக்கச் செலவு செய்யும் நிலையில் இருந்ததால் அவரை எர்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் மேற்படிப்புக்குச் சேர்த்துவிட்டார். லூத்தரின் அப்பாவின் விருப்பம், “லூத்தர் சட்டம் பயின்று ஒரு வழக்கறிஞராகத் தொழில் செய்யவேண்டும்” என்பதே. மார்ட்டின் எப்பொழுதும் நகைச்சுவையாகப் பேசுவார். கலகலப்பாக இருப்பார். இனிமையாகப் பாடுவார். நன்றாக விளையாடுவார். எனவே இவர் இருந்த இடமெல்லாம் புகழ்பெற்று, எல்லாராலும் நேசிக்கப்பட்டு, மாணவர்கள் மத்தியில் எல்லாராலும் நேசிக்கப்பட்ட ஒருவராய் இருந்தார்.

1502-ல் லூத்தர் தன் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து படித்து 1505-ல் எம்.ஏ. தேர்ச்சி பெற்றார். லூத்தரின் கல்லூரி வாழ்க்கையில் நடந்த மறக்கமுடியாத சம்பவம், கல்லூரியின் நூலகத்தில் இவர் ஒரு பரிசுத்த வேதாகமத்தைக் கண்டதுதான். லூத்தர் வேதாகமத்தைப் படிக்க ஆரம்பித்தார். தன் தந்தையின் விருப்பப்படி தொடர்ந்து சட்டம் பயின்றார். அப்பொழுதும் வேதாகமத்தைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். அதிக ஆவலுடனும், விருப்பத்துடனும் வேதாகமத்தைப் படித்து தேவனைப்பற்றிய சத்தியத்தைத் தேடிக் கண்டுபிடித்தார்.

லூத்தரின் பெற்றோர் தங்கள் வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கமும், கண்டிப்பும் காட்டி வளர்த்தனர். பிள்ளைகள் தேவனுக்குப் பயப்படும் பயத்தில் பயிற்சியளிக்கப்பட்டனர். சிறு வயதிலேயே அவர்கள் “விசுவாசப் பிரமாணம்” கற்றுக்கொண்டனர். பத்துக்கற்பனைகளையும், பரமண்டல ஜெபத்தையும், சில கிறிஸ்தவ பக்திப் பாடல்களையும் கற்றுக்கொண்டனர். அக்காலத்துப் பிள்ளைகளுக்கு அவர்களது பாவங்களுக்கு அவர்களே பிராயச்சித்தம் செலுத்தவேண்டும். அவர்களால் செலுத்த முடியாது. அவர்களால் நற்கிரியைகளையும் செய்ய முடியாது. எனவே அவர்கள் பரலோகத்திலிருக்கிற பரிசுத்தவான்களையோ, இயேசுவின் தாயாகிய மரியாளையோ, தங்கள்மீது இரக்கமாயிருக்கும்படி இயேசுவிடம் பரிந்துபேசும்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்பட்டனர்.

பல்கலைக்கழகத்தில் தன்னுடைய வேலை முடியும் வேளையில் மார்ட்டின் லூத்தரிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. பல்கலைக்கழத்தில் இருக்கும்போது இவருக்கும் இவரது நண்பருக்கும் ஒரு விபத்து நேரிட்டது. விபத்தில் படுகாயமடைந்த இவருடைய நண்பர் இறந்துவிட்டார். தன்னுடைய நெருங்கிய நண்பருடைய மரணம் இவரை மிகவும் உலுக்கியது. லூத்தரும் படுகாயமடைந்து, மயிரிழையில் தப்பினார். இவ்வாறு மிகவும் வேதனைப்பட்ட வேளையில் லூத்தர் மனம்வெதும்பி, “தூய ஆனி அம்மையாரே, எனக்கு விடுதலையைத் தாரும். நானும் ஒரு துறவி ஆகிவிடுகிறேன்” என்று ஜெபித்தார்.

இப்படி ஒரு பொருத்தனை செய்தபடியால், அதை நிறைவேற்றவேண்டும் என்று கருதி எர்ஃபர்ட்டில் உள்ள ஒரு மடத்தில் போய்ச் சேர்ந்தார். அங்கே தன்னுடைய பெயரை “அகஸ்டின்” என்று மாற்றிக்கொண்டார். 1507 பெப்ரவரி மாதம் மார்ட்டின் லூத்தர் ஒரு பாதிரியாராக அபிஷேகம் பெற்றார்.

சிலநாட்களுக்குப் பின்னர் போதகராக அபிஷேகம் பெற்ற “பாதிரியார்” நடத்தும் முதல் ஆராதனை வந்தது. அன்று அவருக்குப் பலர் பல பரிசுகளைக் கொடுத்தார்கள். அந்தப் பரிசுகளில் ஒன்று “சிவப்பு எழுத்து வேதாகமம்.” அந்த வேதாகமத்தில் இயேசுகிறிஸ்து வாய் திறந்து சொன்ன வார்த்தைகள் யாவும் சிவப்பு எழுத்துக்களிலும், மற்ற எல்லா வரிகளும் கறுப்பு எழுத்துக்களாகவும் இருக்கும். மிகுந்த ஆர்வத்துடன், சத்தியத்தை அறியும் வேட்கையுடன் இந்த வேதாகமத்தைப் படித்தார். ஒருமுறை பல நாட்கள் ஒன்றும் சாப்பிடாமல் உபவாசம் இருந்தார். ஒருமுறை பல இரவுகள் தூங்காமல் விழித்திருந்து தியானித்தார். இவருக்கு வேண்டியதெல்லாம் ‘சமாதானம்’. அதாவது, தேவன் கொடுக்கும் சமாதானம். இவருடைய மனம் விரும்பும் சத்தியம். இதை அறிந்துகொள்ளவும் பெற்றுக்கொள்ளவும், உபவாசித்து, ஜெபித்து, வேத ஆராய்ச்சி செய்தும் முயற்சித்தார். இவை எல்லாவற்றின் மூலமும் அவருக்கு ஆத்தும சமாதானம் கிடைக்கவில்லை.

ஆனால், தேவன் லூத்தரை வழிநடத்திக் கொண்டே இருந்தார். லூத்தர் அந்த மடத்தில் தன்னுடைய பிரச்சனைகளையும், கவலையையும் தெரிவித்தார். ஒருநாள் அவர்கள் “மனந்திரும்புதல்” பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவருடைய நண்பர் ஒருவர் கூறிய வார்த்தைகள் லூத்தருக்குப் பிடித்திருந்தது. லூத்தர் தன் அறைக்குச் சென்று வேதாகமத்தைத் தேடித்தேடி வாசித்தார். அப்பொழுது அவர் மனந்திரும்புதல் குறித்த வேதப்பகுதிகளைக் கண்டு பிடித்துவிட்டார். அப்பொழுது தன்னுடைய நண்பரான மடத்தலைவர் கூறிய கருத்துக்களும், வேதாகமத்தில் இருக்கும் சத்தியங்களும் ஒன்றாக இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டார். இப்பொழுது “மனந்திரும்புதல்” என்ற சொல் அவருக்கு மனக்கசப்பைத் தரவில்லை. கருத்தாழம் கொண்ட ஒரு அனுபவமாகத் தெரிந்தது.

மார்ட்டின் லுத்தர், அவரது 25-வது வயதில் 1508-ல் விட்டென்பர்க் என்னும் இடத்தில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் அவர் துறவிகள் மடத்தில் தங்கியிருந்தபோது, கிரேக்க மொழியையும், எபிரேய மொழியையும் படித்திருந்தார். சிறுகுழந்தையாயிருந்தபோதே தன்னுடைய தாயிடமிருந்து ஜெர்மன் மொழியைக் கற்றறிருந்தார். அந்தக் காலத்தில் மார்ட்டின் லூத்தரைவிடச் சிறந்த பயிற்சி வேறு எந்த இறையியலாளரும் பெற்றதில்லை. தேவன் லூத்தரைத் தம் பணிக்காகப் பலவிதப் பயிற்சிகளையும், அனுபவங்களையும், மொழி அறிவுகளையும் கொடுத்து ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். வேத வசனங்களின்மீது மார்ட்டின் லூத்தர் செய்த பிரசங்கங்கள் கேட்கும் மக்களுக்குப் பிரமிப்பூட்டுபவையாக இருந்தன. மிகவும் விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் இவருடைய பிரசங்கங்களைக் கேட்டனர். ஏனெனில் இவருக்கு ஜெர்மன், கிரேக்கம், எபிரேயம் போன்ற மொழிகள் தெரியும்.

ஒருமுறை பிரசங்கத்துக்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது வேதாகமத்தில் ஒரு வசனம் இவருடைய கவனத்தை ஈர்த்தது. “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ரோமர் 1:17). அவர் ஒரு அபிஷேகம் பெற்ற போதகராய் இருந்த போதிலும்கூடத் தினமும் வேதாகமத்திலிருந்து புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டிருந்தார். இவ்வாறு லுத்தர் வேதாகமத்தை ஆராய்ந்து, புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டிருந்தபோது, அவற்றின் அடிப்படையில் சபையில் சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதை உணர்ந்தார். ஒரு தடவை மார்ட்டின் லூத்தர் இன்னொரு துறவியுடன், மடவிஷயமாகத் தங்களுக்குத் தலைமையிடமாகவும் “நித்திய நகரம்” என்றும் அழைக்கப்பட்ட ரோமாபுரிக்குச் சென்றனர். ஆறுவாரங்கள் கால்நடையாக நடந்துவந்து, ரோம் நகரத்துக்குள் பிரவேசித்ததும் அவர் தரையில் விழுந்து, மண்ணை முத்தமிட்டு, “பரிசுத்த ரோம் நகரமே, நீ வாழ்க” என்று கூறி வாழ்த்தினார். அந்த நகரம் பாவம் இல்லாமல் பரிசுத்தமாய் இருப்பதாக நினைத்திருந்தார். ஆனால், அவர் ரோம் நகரத்துக்குள் பிரவேசித்தது முதல் அவர் கண்ட நிகழ்ச்சிகளும், கேட்ட காரியங்களும் மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியவையாக இருந்தன.

பரிசுத்த மாடிப்படிகள் என்று கூறப்பட்ட பிலாத்துவின் மாடிப்படிகளில் முழங்கால் ஊன்றி ஏறினால் பாவம் நீங்கிப் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பி மக்கள் அதில் முழங்கால் ஊன்றி தவழ்ந்து ஏறுவார்கள். மார்ட்டின் லூத்தரும் அந்தப் படிகளில் முழங்கால் ஊன்றி ஏறினார். அவர் இப்படி ஏறிக்கொண்டிருக்கும்பொழுது லூத்தரின் செவிகளில் ஒரு சத்தம் ஒலித்தது. “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்!” இது லூத்தரைச் சிந்திக்க வைத்தது. வேதாகமத்தில் எங்காவது இப்படி இந்தப் படிகளை முழங்கால் ஊன்றி ஏறுங்கள், புண்ணியம் கிடைக்கும் என்று எழுதியிருக்கிறதா? என்று சிந்தித்தார். இல்லை என்று அறிந்தார். வேதாகமம் கூறுவதென்ன? “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்.”

ஆம், மாபெரும் சமயப்புரட்சிக்கும் சமயச் சீர் திருத்தலுக்கும், புரோட்டஸ்டாந்து சபை ஆரம்பத்துக்கும் இதுவே ஆதி காரணமாயிற்று. பின்னால் ரோமாபுரியைப்பற்றியும், அங்குள்ள அட்டூழியத்தையும், மக்கள் பின்பற்றிவந்த மூடப்பழக்கவழக்கங்களையும் நன்கு புரிந்துகொண்டபின் மார்ட்டின் லூத்தர் ரோமாபுரியைக் குறித்து இப்படிக் கூறினார்.

“ரோமாபுரி ஒரு வேசி. ரோமாபுரியின் தெய்வ பயமற்ற தன்மை மிகவும் பெரியது. கொடியது. இங்கே தேவனுக்கு யாரும் பயப்படுவதில்லை. மனிதனுக்கும் யாரும் பயப்படுவதில்லை. பாவத்துக்கும் யாரும் பயப்படுவதில்லை. வெட்கத்துக்கும் யாரும் பயப்படுவதில்லை. எல்லா நல்ல மனிதர்களும், ரோமாபுரியின் அட்டூழியங்களைப் பார்த்தபின்னர், அங்கு நடந்த கெட்ட காரியங்களைக் கண்டபின்னர் முன்பிருந்த நிலையை விட மிக மோசமான நிலையடைந்து வெளியே வந்தனர்.”

ரோமாபுரியின் உண்மைநிலையை மார்ட்டின் லூத்தர் கண்டுகொள்ள தேவன் உதவினார். அங்கு நடைபெற்ற எல்லா அட்டூழியங்களையும், பின்பற்றப்பட்ட மூடப்பழக்கங்களையும், மதத்தின் பேரால் செய்யப்பட்டு வந்த அக்கிரமங்கள், அட்டூழியங்கள் கொள்ளைகள் யாவற்றையும் கவனித்து ஆதாரத்துடன் குறிப்பெடுத்துக்கொண்டார். லூத்தரின் ஆத்துமாவில் தெய்வீக ஒளி வீசியது. இந்த விழிப்புணர்வைப் பெற்ற லூத்தர், அதன்பின் பின்வாங்கவே இல்லை. படிப்படியாகச் சீர்திருத்தப்பணியில் முன்னேறினார். தன்னுடன் பணியாற்றிய மற்றத் துறவிகள் எங்கு செல்வார்கள்? என்ன செய்வார்கள்? என்று அவர் கவலைப்படவில்லை. இயேசு கிறிஸ்துவோடு முன்னேறிக்கொண்டே இருந்தார்.

மார்ட்டின் லூத்தர் புத்தொளி பெற்றவராகத் தன் கல்லூரிக்குத் திரும்பிச்சென்றார். அவருடைய மனதில் 24 மணி நேரமும் எதிரொலித்துக் கொண்டிருந்த குரல் “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்பதே. ரோமாபுரியிலிருந்து, திரும்பிவந்த மார்ட்டின் லூத்தர் அந்தப் பல்கலைக் கழகத்தில் இறையியல் துறையின் தலைவராக (Dean) நியமிக்கப்பட்டார். அடுத்த வருடம் 1512-ல் மார்ட்டின் லூத்தருக்கு இறையியலில் அறிவர் பட்டம் (Doctor) வழங்கப்பட்டது. முதலில் இந்தப் பட்டத்தைப் பெற்றதற்காகத் தயங்கினாலும், பின்னர் இந்தப் பட்டம் தரும் அதிகாரம் வல்லமை இவற்றால் வேதாகமத்தின் சத்தியங்களை லூத்தர் கண்டபடி வியாக்கியானம் செய்யலாம், மாணவர்களுக்குக் கற்பிக்கலாம் என்பதற்காக நன்றியுள்ளவரானார்.

புதிய உற்சாகத்துடன் லுத்தர் தன்னுடைய கற்பிக்கும் வேலையைத் தொடர்ந்தார். ரோமர் நிருபத்தைக் கற்பிக்கும்போது, அங்கே “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்னும் சத்தியம் வந்தது. இவருடைய விளக்கவுரைகளைக் கேட்கத் திரளான மக்கள் ஆர்வமுடன் கூடிவந்தனர். அவர்கள் இதுவரை கேட்டிராத சத்தியங்களைத் தெளிவாக, ஆதாரப்பூர்வமாக   கேட்டறிந்தனர். இவருடைய போதனைகள் மிகத் தெளிவாக இருந்தன.

மார்ட்டின் லூத்தர் அக்காலத் திருச்சபையில் வழக்கமாகச் சொல்லப்பட்டிருந்த கொள்கைகளை, அவை வேதாகமத்துக்கு முரணாக இருப்பதைக் கண்டதும், எதிர்க்கத் தயங்கவில்லை. மக்களுக்கு விளக்கிக் கூறி அவர்களின் சிந்தனையைத் தூண்டினார். நம்முடைய வேதம் இப்படிக் கூறும்போது நாம் ஏன் இப்படி அதற்கு முரணாகச் செய்யவேண்டும்? என்று கேட்டார். தன்னுடன் மடத்தில் இருந்த துறவிகளை ஒரு சிற்றாலயத்தில் கூடி வரச்செய்து, அதற்கு மூன்று அடி உயரத்தில் பலகைகளால் செய்யப்பட்டிருந்த பிரசங்க மேடையின்மீது நின்று போதித்தார். சபைச் சீர்திருத்தம் முதன் முதலில் இங்கேதான் ஆரம்பித்தது.

தேவனுடைய நீதியைக் குறித்த வேதப் பகுதிகளைப் படித்தபோது, லூத்தரின் ஆத்துமா விடுதலை பெற்றது. அவர் இயேசுகிறிஸ்துவுக்குள் ஒரு புதிய மனிதனாக ஆக்கப்பட்டார். லூத்தர் இப்பொழுது ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஒரு அடிமை அல்ல. போப்பும் இப்போது இவருடைய தலைவர் அல்ல. வேதாகமக் கொள்கைகளும், சத்தியங்களும் இவருக்கு வித்தியாசமாகத் தெரிந்தன. லூத்தருக்கு நாளுக்கு நாள் வேதாகமம் பொருள் செறிந்ததாகக் காணப்பட்டது. அவருடைய மூச்சுக்காற்றாகவும், போதிக்கும் பாடமாகவும் இருந்தது வேதவசனங்களே!

விசுவாசத்தின் மூலம் மக்கள் நீதிமான் ஆக்கப்பட முடியும் என்பதை அறிந்து, விசுவாசித்த லூத்தர், அமைதியாக இருக்கமுடியவில்லை. அவர் தைரியமாகப் பாவமன்னிப்புச் சீட்டு விற்பனை, பாதிரியார்கள் பணம் சேர்த்தல் இவை தவறு என்று கண்டித்துப் பேசத்தொடங்கினார். அவர் இந்த உண்மையை பயமின்றி, வெளிப்படையாகப் பேசினார். இவர் பேசியதைக் கேட்ட பலருக்கும் பெரும் குழப்பமாயிருந்தது. சிலர் வேதனைப்பட்டார்கள். சிலர் கோபப்பட்டார்கள்.

எட்டு மாதங்களுக்குப் பின்னர் அறிவர் மார்ட்டின் லூத்தர், 1517 அக்டோபர் 31-ம் நாள், தன்னுடைய ஆலயக்கதவின் வெளிப்புறத்தில், 95 நியமங்களைப் பட்டியலிட்டு எழுதி ஆணியடித்து வைத்தார். அவை “லூத்தரின் 95 கொள்கைகள்” என்று இன்று புகழ்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் ரோமன் கத்தோலிக்கச் சபையில் போப்பின் அதிகாரத்தின் கீழ் சபைகளில் பின் பற்றப்பட்டு வந்த தவறான பழக்கவழக்கங்கள் அத்தனையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. முக்கிய கொள்கைகளை அவர்களோடு விவாதிக்க லூத்தர் ஆயத்தமாக இருந்தார். இப்படி எதிர்ப்புக் கருத்துக்களைக் கதவில் அடித்தத்துடன் சீர்திருத்த இயக்கம் வேரூன்றிவிட்டது. உலகெங்கும் சீர்திருத்தக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன.

புரோட்டஸ்டாந்து சீர்திருத்தக் கருத்துக்கள்:

1. கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படை வேதாகமமே, திருச்சபை அல்ல.

2. நற்கிரியைகளோ, பணமோ, வேறு எதுவுமே ஒருவனை நீதிமானாக்குவதில்லை. விசுவாசம் மட்டுமே ஒருவனை கிறிஸ்தவனாக்கும்.

3. இயேசுவை விசுவாசிக்கிற அனைவருமே ஆசாரியர்கள், பாதிரியார்கள். ஒரு தனி மனிதன் அல்ல.

இந்தக் கருத்துக்களைத் தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டு லுத்தர், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைகளிலும் அநேக பாதிரியார்கள் தன்னைப் போலச் சிந்தித்ததுண்டு, ஆனால், தங்கள் கருத்தைப் பயம் காரணமாக வெளியிடத் தயங்கினார்கள் என்று குறிப்பிட்டார். “போப்புவுக்குப் பாவங்களை மன்னிக்கும் உரிமை உண்டா?” என்னும் சந்தேகக் குரலை எழுப்பியதற்காக லூத்தர் கம்பத்தில் கட்டப்பட்டுத் தீக்கொளுத்தப்பட ஏதுவுண்டாயிற்று. பிரான்டன்பர்க் என்ற இடத்தில் உள்ள பிஷப் இப்படி அறிவித்தார். அவர் கையில் ஒரு விறகுத்துண்டை வைத்திருந்தார். அதைக் காட்டிக்கொண்டே, “இந்த விறகுத்துண்டை இந்த நெருப்பினுள் போடுவதைப்போல, மார்ட்டின் லூத்தரை அக்கினிக்கிரையாக்குவதுவரை நான் சமாதானமாகப் படுத்து நித்திரை செய்யப்போவதில்லை”. இப்படிக் கூறிவிட்டு கையில் இருந்த விறகுத்துண்டை நெருப்பினுள் போட்டார்.

போப்பாண்டவர் இந்த 95 கருத்துக்களையும் குறித்துக் கேள்விப்பட்டதும் “ஒரு குடிகார ஜெர்மன், நிதானமில்லாமல், குடிபோதையில் இப்படி எழுதியிருக்கிறான்” என்றார். ஆனால், இப்படி எழுதினவன் புத்தி தெளிந்தபின்னர் வித்தியாசமாகப் பேசுவான் என்று மனதில் நினைத்துக்கொண்டார். ஆனால், போப்பை விசுவாசத்துடன் பின்தொடர்ந்து வந்த பாதிரியார்கள் ஒவ்வொருவராக லூத்தரின் கொள்கைகள் சரி என்று ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

போப், மார்ட்டின் லூத்தர் ஒரு குடிபோதையில் மயங்கிய ஜெர்மன் அல்ல, அறிவர் பட்டம் பெற்ற இறையியல் அறிஞர், பாதிரியார், ஒரு துறவி, பல்கலைக்கழகப் போராசிரியர் என்பதையெல்லாம் அறிந்து இப்படி ஒரு கட்டளையைப் பிறப்பித்தார். “60 நாட்களுக்குள் ரோமாபுரியில் நீர் ஆஜராகி, திரிபுக்கொள்கைக்கான காரண விளக்கத்தைக் கொடுக்கவேண்டும்” என்று. லூத்தரின் ஆதரவாளர்கள் “சகோதரரே, இதற்காக ஒரு வழக்கு ஜெர்மனியில் போடப்பட்டால் உச்ச நீதி மன்றம்வரை அதற்கு எவ்வளவு செலவானாலும் நாங்கள் பணம் தந்து உதவுகிறோம். ஆனால் ரோமாபுரியில் அல்ல என்றார்கள். மார்ட்டின் லூத்தர் ரோமாபுரியில் உள்ள போப்புக்கு அடுத்தபடியாக உள்ள கார்டினலைச் சந்தித்தார். கார்டினலிடம், “ஐயா, நான் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ததில் ஏதாவது தவறு இருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன்” என்றார். கார்டினல் லூத்தர் எழுப்பியிருக்கும் எதிர்ப்பு அபிப்பிராயங்கள் அனைத்தையும் பின் வாங்க வேண்டும் என்றார். லூத்தர் சம்மதிக்கவில்லை. இப்படிப் பல சந்திப்புகள் நிகழ்ந்தன. ஒன்றிலும் முடிவு ஏற்படவில்லை. எனவே, மார்ட்டின் லூத்தர் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார் என்ற பதவியிலிருந்து விலக்கப்பட்டார். லூத்தர் எக்காரணம் கொண்டும் போப்பிடம் தலைகாட்டக் கூடாது. தனது உரைகள் அத்தனையையும் பின் வாங்கிச் சரணடைந்து, மன்னிப்புக் கேட்பதானால்மட்டும் போப்பிடம் செல்லலாம் என்று கட்டளை இடப்பட்டது. மார்ட்டின் லூத்தரின் புகழ் உலகெங்கும் பரவிற்று.

பல தடவைகள் சபைத்தலைவர்கள் மார்ட்டின் லூத்தரை அழைத்து, “நீங்கள் உங்கள் அபிப்பிராயங்களை மாற்றிக்கொள்ளவில்லையா?” என்று கேட்டனர். ஒவ்வொரு முறையும் லூத்தர் இயேசுகிறிஸ்துவிலும், அவருடைய கொள்கைகளிலும், வேதாகமத்திலும் தனக்கு உள்ள பற்றைத் தெளிவாக எடுத்துரைத்தார். ஒருநாள் எதிர்பாராதபடி திடீரென்று மார்ட்டின் லூத்தர் கைது செய்யப்பட்டார். அவருடைய தலையையும் முகத்தையும் ஒரு கோட்டினால் மூடிக் கட்டிவிட்டார்கள். அவர் எங்கே கொண்டு போகப்படுகிறார் என்பதை அவர் அறியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்கள். இந்தக் கைது அவர்மீது இரக்கப்பட்டு, அவரைக் காப்பற்றும்படி செய்யப்பட்ட ஒன்று என்று தெரிந்தது. அவருடைய நண்பர்கள் இவரது உயிருக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படாமல் தடுக்க, எதிரிகள் செய்ததுபோல் தோன்றும்படி இப்படியொரு ஒரு காரியத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள். வார்ட் பெர்க் என்னும் பழைய அரண்மனையில் லூத்தரை அடைத்து வைத்திருந்தார்கள். அந்த அரண்மனைக் காவலாளிக்கு மட்டும் அவர் யார் என்று தெரியும். அங்கு இருந்த மற்றவர்கள் இவர் ஒரு பராக்கிரம சாலியான வீரனாகவோ, படைத் தளபதியாகவோ இருக்கலாம் என்று நினைத்தார்கள். லூத்தர் ஒரு மாறுவேட உடையில் இருந்தார். இவர் தலைமறைவாக இருந்தபடியால் உலகம் எங்கும் “லூத்தர் கொல்லப்பட்டிருக்கலாம்” என்ற செய்தி பரவியது.

இந்தச் சிறைவாசம் லூத்தருக்கு தேவனால் அருளப்பட்டது. இங்கு லூத்தருக்கு அதிகமாகச் சிந்திக்கவும், எழுதவும் வாய்ப்புக் கிடைத்தது. இவர் ஜெர்மன், லத்தீன், கிரேக்கம், எபிரேயம் ஆகிய அத்தனை வேதாகம மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். மூன்று மாதங்களுக்குள் புதிய ஏற்பாடு முழுவதையும் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து முடித்துவிட்டார். உடனே அதை அச்சிட ஒழுங்கு செய்து விரைவில் மக்களின் கைகளில் அது கிடைக்க வகை செய்தார். அதே அரண்மனையில் தங்கி லூத்தர் பழைய ஏற்பாட்டையும் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். ஆனால், அவர் விட்டென்பர்க்குக்குத் திரும்பி வந்தபின்தான் ஜெர்மன் மொழியில் பழைய ஏற்பாடு அச்சிடப்பட்டு முடிந்து வெளிவந்தது.

ஒரு வருடத்துக்குப்பிறகு லூத்தர் விட்டென் பர்க்குக்குத் திரும்பி வந்தார். சில காலத்துக்குப் பிறகு லூத்தர் தான் அணிந்திருந்த துறவியின் ஆடையைக் களைந்துவிட்டார். ‘துறவி’ என்ற பட்டத்தையும் விட்டுவிட்டார். 1525 ஜுன் மாதம் 13-ம் நாள் காத்ரீன்வான் போரா என்ற முன்னாள் கன்னிகா ஸ்திரீ ஒருவரைத் திருமணம் செய்தார். மணமக்கள் இருவருடைய திருமண மோதிரங்களிலும் “தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக” என்னும் வசனம் எழுதப்பட்டிருந்தது.

மார்ட்டின் லூத்தரின் சிறந்த சேவை திருச்சபைச் சீர்திருத்தம் என்று இருந்தபோதிலும், அவர் அரிய பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

இசை இவருடைய வாழ்க்கையின் இன் னொரு தனிச்சிறப்பு. சீர்திருத்த இயக்கம் புரட்சிகரமாகத் தொடங்கப்பட்டபோது, இவருக்குப் பல எதிர்ப்புகளும், இன்னல்களும் ஏற்பட்டவேளையில், மனக்கிலேசத்தோடு இருக்கும்போது உலகப் புகழ்பெற்ற இனிய பாடல் ஒன்றை எழுதினார். “A mighty fortress is our Lord” “ஆண்டவர் நமக்கு ஒரு வல்ல கோட்டை”. மார்ட்டின் லூத்தர் அநேக பாமாலைகளை எழுதினார். சபை ஆராதனைகளில் உபயோகித்துப் பாடத்தக்கதாக பாமாலைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக முதலில் வெளியிட்டவர் இவரே. இதுவரை பாடல் புத்தகமே இல்லை. சபையார் ஆராதனைகளில் கூடிப்பாடுவதும் இல்லை.

அவரது உடல்நிலை சுகவீனமானபோது தன்னுடைய காலம் இனி குறுகியதே என்று உணர்ந்தார். “நீங்கள் போதித்த விசுவாசம் குறித்து உறுதியுடன் மரிக்கிறீர்களா?” என்று ஒருவர் லூத்தரிடம் கேட்டார். அவர் “ஆம்” என்று பதில் கூறினார்.

1546 பெப்ரவரி 18-ம் நாள் அமைதியாக மார்ட்டின் லூத்தர் இறைவனடி சேர்ந்தார். அறிவர் மார்ட்டின் லூத்தர் இறந்துபோனாலும் அவருடைய புகழும், செல்வாக்கும் இன்றும் தொடருகிறது. மார்ட்டின் லூத்தர் மட்டும் அன்று புரோட்டஸ்டாந்து இயக்கத்தைத் தொடங்கி புரட்சிகரமான சீர்திருத்தம் செய்திராவிட்டால், கிறிஸ்துவை அறியாத ஒவ்வொருவரையும் நற்செய்தி அறிவித்து அந்தகார இருளிலிருந்து மெய்யான தேவ ஒளிக்குக் கொண்டுவரும் ஊழியம் ஏற்பட்டிராது என்பது மறுக்கமுடியாத உண்மை.

சத்தியவசனம்