தாமஸ் கிரேன்மர்

கிரேன்மர் இங்கிலாந்து தேசத்தில் நாட்டிங்கம் ஸையர் என்ற இடத்தில் 1489-ம் ஆண்டு தாமஸ் கிரேன்மர் மற்றும் எக்னஸ் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது குடும்பமானது வசதி குறைவான எளிமையான நிலையிலிருந்தது. தனது கிராமத்தில் கல்வி பயின்று வந்தார். தனது 12-வது வயதில் தகப்பனாரை இழந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் கேம்பிரிஜில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஜீசஸ் கல்லூரியில் இணைந்து பயின்றார். சுமார் 8 ஆண்டுகளில் தர்க்கவியல், இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றை பயின்று தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். மேலும் மூன்று ஆண்டுகளில் தனது முதுநிலை படிப்பையும் முடித்தார். அதில் சீர்திருத்தவாதிகளான எராஸ்மஸ் மற்றும் ஜாக்லெக்பெலர் ஆகியோரின் கியூமண்டிஸ் தத்துவங்களையும் ஆய்வுகளையும் தெரிந்தெடுத்துப் படித்தார். தனது முதுநிலை படிப்பை முடித்த பிறகு 1515-ல் ஜீசஸ் கல்லூரியில் சேர்ந்து இறையியல் கற்று வந்தார். அச்சமயத்தில் ஜோன் என்ற பெண்மணியை திருமணம் செய்தார். இவர்களது திருமணத்தினிமித்தம் ஜீசஸ் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டார். பின்பு தனது குடும்பத்தை நடத்துவதற்காக பக்கிங் ஹாம் கல்லூரியில் இணைந்து ஆசிரியராக பணி புரிந்தார். அவரது மனைவி ஜோன்ஸின் முதல் பிரசவத்தின்போது இறந்தபடியால் அதிக வேதனையடைந்தார். ஜீசஸ் கல்லூரியிலிருந்து இப்போது இறையியல் பயில மறுபடியும் அழைப்பு வந்தது. 1520-ம் ஆண்டு இறையியலை முடித்த கிரேன்மர் குருவானவராக அபிஷேகம் பண்ணப்பட்டார். அதைத் தொடர்ந்து இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

கிரேன்மரின் எண்ணங்களையும் அனுபவங்களையும் பற்றி கேம்பிரிஜில் அதிகம் அறியப்படவில்லை. 1520-ம் ஆண்டு தீவிரமாக பரவி வந்த மார்டின் லூத்தரின் சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரித்த குழுவில் இடம்பெற்றார். இங்கிலாந்து தேசத்தில் சீர்திருத்த இயக்கத்தை முன்னின்று நடத்திய வில்லியம் டின்டேல், ராபர் பர்னஸ், தாமஸ் பில்னி ஆகியோரின் வழியில் கிரேன்மர் தன்னையும் இணைத்துக்கொண்டார். போப்பின் ஆதிக்கத்திலிருந்து திருச்சபையை விடுவிக்க அதிக பிரயாசமெடுத்தார். அதற்காக அதிகமாக போராடி ஜெபித்தார். இங்கிலாந்து திருச்சபையை புராட்டஸ்ட்டன்ட் சீர்திருத்த கொள்கைகளுக்கு நேராக வழிநடத்தியதில் பெரும்பங் காற்றினார். எட்டாவது மன்னரான ஹென்றி மற்றும் ஆறாவது மன்னரான எட்வர்டு ஆகியோரின் ஆட்சிகாலத்தின்போது கேன்டர்பரியின் பேராயராக இருந்தார். தனக்குக் கிடைத்த இம் மன்னர்களின் ஆதரவைக்கொண்டு திருச்சபை வழிபாடுகளில் மாற்றங்களை கொண்டுவர அதிக முயற்சிகளை எடுத்தார். பொது ஜெபப் புஸ்தகம் ஒன்றை தயாரித்தது இவரின் குறிப்பிடத் தகுந்த சாதனைகளில் ஒன்றாகும். இன்றைக்கும் இப் புஸ்தகமானது பரவலாக மக்களால் உபயோகிக்கப்படுகிறது.

ஹென்றி VIII அரசனின் மரணத்திற்கு பின்பாக இளவரசியான மேரி பட்டத்தரசியாக முடிசூட்டப்பட்டாள். இவள் கத்தோலிக்க கோட்பாடுகளையும் கொள்கைகளையும் வழிபாட்டு முறைமைகளையும் ஆதரித்தாள். போப்பின் ஆதிக்கத்தை ஆதரிக்கும் நிலையை எடுத்தாள். மேரி அரசி பட்டத்திற்கு வந்ததும் சீர்திருத்த விசுவாசத்தை பின்பற்றின மக்களை அதிகமாக துன்புறுத்த முயன்றாள். கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்த ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் அனைவரையும் அவர்களின் விசுவாசத்தின் பொருட்டாக கொலை செய்யப்பட்டனர். சிலர் சிறையிலடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். சிலர் நாடு கடத்தப்பட்டனர். சிலரை உயிரோடு வைத்து கொளுத்தினாள்.

காண்டர்பெரியில் ஆர்ச் பிஷப்பாக இருந்த தாமஸ் கிரேன்மர் மதத்திற்கு விரோதமாக பேசினாரென்று குற்றஞ்சாட்டப்பட்டார். அவரையும் அவரது தோழர்களான இலார்ஸ்டரில் ஆர்ச் பிஷப்பாக இருந்த இலாட்டிமர், இலண்டனில் ஆர்ச் பிஷப்பாக இருந்த ரிட்லி மற்றும் பிராட்போர்ட் ஆகியோர்களும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு இலண்டன் டவர் என்ற சிறைச்சாலையில் ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டனர். போதுமான உணவும் உடையுமின்றி குளிரில் அதிகம் கஷ்டமடைந்தனர். இதின் மத்தியிலும் நால்வரும் வேத வசனங்களை தியானித்து தேவனை ஆராதித்து வந்தனர். அநேக நாட்கள் சென்றபின் விசாரணைக்கென்று ஆக்ஸ்போர்டு என்ற பட்டணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த இடத்திலே இவர்கள் உயிரோடு வைத்துக்கொளுத்தப்பட வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டது.

முதலில் இலாட்டிமர் மற்றும் ரிட்லி ஆகிய இருவரையும் குறித்த இடத்திற்கு எரிக்கப்படுவதற்கு அழைத்துச்சென்றனர். அந்த இடத்தை அடைந்ததும் இருவரும் முழங்காலில் நின்று அதிக ஊக்கத்துடன் ஜெபித்தனர். போர்ச்சேவகர் இருவரையும் கம்பங்களோடு சேர்த்துக்கட்டினர். பின்னர் போர்ச்சேவகர் கொழுந்துவிட்டு எரியும் பந்தத்தை ரிட்லியின் பாதத்தண்டையில் வைக்க வந்தபோது இலாட்டிமர் அவரைப் பார்த்து சகோதரனே! “சிறிதும் அஞ்சாதீர் இன்று கடவுள் கிருபையால் இங்கிலாந்தில் கொளுத்தப்போகும் அக்கினியை ஒருவராலும் அணைக்கமுடியாது” என்றார். பின் இருவரும் எரித்து கொலை செய்யப்பட்டனர். இதில், இலாட்டிமர் மற்றும் ரிட்லி ஆகிய இருவரோடு கிரேன்மர் கொல்லப்படவில்லை.

கிரேன்மரை மூன்று ஆண்டுகள் சிறையில் அடைத்து அநேக விதத்தில் துன்புறுத்தினர். கீர்த்தி வாய்ந்த பிஷப் கிரேன்மரை அடக்கி, கத்தோலிக்க சபையின் போதனைகளுக்குக் கீழ்ப்படியச் செய்தால் அநேகர் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றித் தங்கள் விசுவாசத்தை விட்டுப் பின்வாங்கிப்போவார்கள் என்று கத்தோலிக்க குருமார்கள் உறுதியாக நம்பினார்கள். கொடூரமான சிறை வாழ்க்கையால் ஆவியில் மிகவும் சோர்வுற்று, தன்னுடைய பலவீன நேரத்தில், விரோதிகள் கற்பித்த வண்ணம், தான் இதுவரை பிரசங்கித்த சுவிசேஷம் தவறுள்ளது என்று எழுதி கையொப்பம் வைத்தார். இந்த மறுதலிப்பின் சீட்டை அவருடைய விரோதிகள் அச்சிட்டு நாடெங்கும் பரப்பினர். பிஷப் கிரேன்மர் மறுதலித்த பின்பும் மேரி ராணியின் கடின நெஞ்சு உருகவில்லை. அவரைக் கொன்றே தீர வேண்டும் என்று அதிகப் பிடிவாதமாக அறிவித்தாள்.

பிஷப் கிரேன்மர் மறுதலிப்பின் சீட்டில் கையொப்பமிட்டதும் தனக்கிருந்த தெய்வ சமாதானத்தையும் சந்தோஷத்தையும் இழந்துவிட்டதாக உணர்ந்தார். இதற்கு முன்னால் அவருடைய விரோதிகள் அவரை அவமானத்திற்கும் நிந்தைக்கும் ஆளாக்கினபோதிலும், அவருக்கிருந்த உள்ளான சமாதானத்தை அவர்களால் குலைக்க முடியவில்லை. ஆனால் இப்பொழுதோ அவர் தன்னுடைய இரட்சகரை மறுதலித்தபடியினால் அவருக்கிருந்த உள்ளான சமாதானத்தையும் சந்தோஷத்தையும் இழந்தார்.

இறுதியில் அவருடைய விரோதிகள் அவரை எல்லாருக்கும் முன்பாகவும் பகிரங்கமாக மறுதலிக்க வைக்க விரும்பி, அதற்கென்று ஒரு நாளைக் குறித்தனர். ஒரு பெரிய ஜனக்கூட்டத்திற்கு முன்பாக நின்று, தான் போதித்து வந்த சுவிசேஷம் தவறு என்று அறிக்கை செய்யும்படி அவரைத் தூண்டினர். “நான் அப்படியே அதிகச் சந்தோஷமாகச் செய்வேன்” என்று கிரேன்மர் அறிவித்தார். பின்னர் தன்னுடைய ஆசனத்திலிருந்து எழுந்து அதிக ஊக்கமாக ஜெபித்துத் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். எதிரிகள் எதிர் பார்த்ததற்கு நேர்விரோதமாக வெகு நேர்த்தியாகப் பேசி, பின்வரும் வார்த்தைகளுடன் தன் பிரசங்கத்தை முடித்தார். “நான் என் வாழ்க்கையில் பேச்சின் மூலமாகவும், சிந்தையின் மூலமாகவும், நடையின் மூலமாகவும் செய்த எல்லாப் பாவங்களைக் காட்டிலும் என்னுடைய மனச்சாட்சியை அதிகமாகக் குத்தும் பாவம் என்னவெனில், நான் சத்தியம் என்று கண்டறிந்த காரியத்திற்கு விரோதமாகக் கையொப்பமிட்டதே. இந்தக் காரியத்தை என்னுடைய மனச்சாட்சிக்கு விரோதமாக என் கை எழுதினது. இவ்விதமாக எழுதிய என்னுடைய வலதுகை முதலாவது தண்டிக்கப்படுவதாக! நான் தீக்கருகில் வரும்போது முதலாவது என்னுடைய கை சுட்டெரிக்கப்படுவதாக! நான் போப்பையும் அவரது கொள்கைகளையும் எதிர்க்கிறேன். உண்மையாகவே போப் கிறிஸ்துவின் விரோதியும், அந்திக்கிறிஸ்துவுமாக இருக்கிறார்” என்றார்.

கிரேன்மர் பேசி முடிப்பதற்குள் ஆலயத்தில் ஒரு பெரிய கலவரம் ஏற்பட்டது. கத்தோலிக்க குருமார்கள் எழுந்து நின்று அந்த அவிசுவாசியின் வாயை மூடுங்கள், மூடுங்கள் என்று கத்தினார்கள். இந்த இடத்திலிருந்து கிரேன்மர் நேராகச் சுட்டெரிக்கப்படுவதற்கு எடுத்துச்செல்லப்பட்டார்.

குறித்த இடத்தை அடைந்ததும் கிரேன்மர் முழங்காற்படியிட்டு சற்றுநேரம் ஜெபித்த பின்னர் மரிப்பதற்கு ஆயத்தப்பட்டார். அவர் நீண்ட அங்கி தரித்தவராக தான் வழக்கமாக உபயோகித்து வந்த குல்லா இல்லாமல் வழுக்கைத் தலையுடனும், நீண்ட அடர்த்தியான தாடியுடனும் கம்பத்தண்டை நின்ற கெம்பீரக் காட்சி அங்கு நின்றவர்களின் உள்ளத்தை அசைத்தது.

பின்னர் கிரேன்மரைச் சங்கிலிகளைக் கொண்டு கம்பத்தோடு சேர்த்துக் கட்டி, அவர் பாதத்தண்டையிலுள்ள கட்டைகளுக்குத் தீ வைத்தனர். தீ பற்றி, அவர் அருகில் வந்ததும் கிரேன்மர் தன்னுடைய வலதுகரத்தைத் தீக்கு நேராக நீட்டி, அதை முதலாவது சுட்டெரிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தார். அவர் உடலின் மற்ற பாகங்களைத் தீ அணுகுமுன் அவர் வலதுகரம் சாம்பலானது. கரத்தை நேராக நீட்டிக்கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தவராகப் பலமுறை, “இந்தப் பிரயோஜனமற்ற வலதுகரம்! இந்தப் பிரயோஜனமற்ற வலதுகரம்!” என்று தன்னுடைய குரல் குன்றும் வரை சொன்னார். சில நிமிடங்களுக்குள் தீ அவர் உடலின் மற்ற பாகங்களையும் பற்றினது. கொடூரத்தின் மத்தியில் சிறிதும் அசையாமல் நின்று “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே! என்னுடைய ஆவியை ஏற்றுக் கொள்ளும்!” என்று ஸ்தேவான் உரைத்த வார்த்தைகளை உரைத்து அதிக வெற்றிகரமாக மரித்தார். இந்த இரத்தசாட்சியின் மரணமானது, வேடிக்கை பார்க்க வந்த அநேகருடைய உள்ளத்தை இயேசுவின் பக்கமாக இழுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சத்தியவசனம்