அன்பினால் ஈந்த சபை

ஆ.பிரேம்குமார்
(ஜூலை-ஆகஸ்டு 2017)

அந்தியோகியா சபை அகதிகளால் ஆரம்பிக்கப்பட்ட சபையென்றும், ஆண்டவரின் வார்த்தை கற்பிக்கப்பட்ட சபையென்றும் பல இன மக்களைப் பல வித்தியாசமான வரங்களைக் கொண்ட மக்களைக் கொண்டிருந்தாலும் அந்நியோன்யமாக ஐக்கியமாகச் செயல்பட்ட சபையென்றும் பார்த்தோம். இனி அச்சபையின் இன்னொரு பண்பை கவனிப்போம்.

அன்பினால் ஈந்த சபை
(கொடுக்கிற சபை – அப்.11:27-30)

அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க் கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள். அவர் களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியுராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று. அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ்சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம் பண்ணினார்கள். அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவகளுடைய கையில் கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள் (அப்.11:27-30). அகபு தீர்க்கதரிசி உலகமெங்கும் கொடிய பஞ்சமுண்டாகுமென்று தீர்க்கதரிசனம் உரைத்தார். இதே அகபு தீர்க்கதரிசி பவுலின் சிறையிருப்பையும் முன்னறிவித்தார். அகபு தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையை உண்மையாய் அறிவித்த தீர்க்கதரிசி. இன்றைய கள்ளத்தீர்க்கதரிசிகளைப்போல ஆசீர்வாதத்தையும் செழுமையையும்மட்டும் வாக்குப் பண்ணவில்லை. பஞ்சத்தையும் பாடுகளையும் முன்னறிவித்தார்.

அந்தியோகிய சபை தங்களைப் பற்றி யோசிக்காமல், எருசலேம் சபைக்கு உதவவேண்டு மென்று தீர்மானித்தார்கள். அதற்குரிய பணம் அவர்களிடம் இருக்கவில்லை. அதைச் சேகரித்து அனுப்பியதாகக் காண்கிறோம். தேவனுக்கு நாம் நேரடியாக பணம் கொடுக்க முடியாது. சபைகளுக்கும் ஊழியர்களுக்கும் ஊழியங்களுக்கும் கொடுப்பதன் மூலமே தேவனுக்கு கொடுக்கிறோம் (பழைய உடன்படிக்கையில் தசமபாகம் என்பது பத்தில் ஒன்றாக இருந்தது). இன்று ஒரு  பணத்தேவை என்று வரும்போது, சபையில் சில பணக்காரர்களே உதவி செய்யவேண்டும் என நினைக்கிறோம். ஆனால் சபையிலுள்ள ஏழைகளும் கொடுக்கலாம் என்பதை மறந்துவிடுகின்றோம். தேவ ஊழியனாகிய எலியாவைப் போஷிக்கும்படி தேவன் அவரை, ஒரு பணக்காரியிடம் அனுப்பவில்லை (1 இரா.17:7-6). ஒரு ஏழை விதவையிடம் அனுப்பினார். அவள் தானும் தன் பிள்ளையும் சாப்பிட்டு மரிக்க வைத்திருந்த உணவிலிருந்து தேவ ஊழியனுக்குக் கொடுத்தாள். பஞ்சம் முடியும் வரை அவள் அப்பத்திற்கு குறைவுபடவில்லை. தேவன் அவளது தேவைகளைச் சந்தித்தார்.

தேவாலயத்திலுள்ள செல்வந்தர் பெருந்தொகை பணத்தை போட்டபோதும்கூட அது கிறிஸ்துவின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் ஒரு ஏழை விதவை தனக்கிருந்த அனைத்துமாகிய இரண்டு காசைப் போட்டதும் அது இயேசுவின் கவனத்தை ஈர்த்தது.

வடகிழக்கு இந்தியாவில், மிசோராம் என்னுமிடத்தில் பெண்கள் ஒவ்வொரு நாளிலும் தாம் சமைக்குமுன் ஒரு கைப்பிடி அரிசியை தேவனுக்கென்றும், மிஷனரி ஊழியத்திற்கென்றும் ஒதுக்குவார்கள். அவ்வாறு சேர்த்தவைகளை ஞாயிற்றுக் கிழமையன்று திருச்சபைக்குச் கொண்டுச் செல்வார்கள். சபை அதனை மக்களுக்கு விற்று, அதன் மூலம் பல மிஷனரிகளைத் தாங்குகின்றனர். கொடுப்பதற்கு பணம் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை! மனமிருந்தால் போதும்.

பிலிப்பிய சபை மிகவும் வறுமையில் வாடிய சபை. ஆனால் பவுலின் மிஷனரி ஊழியங்களுக்கு தியாகப்பூர்வமாக கொடுத்தார்கள். தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுத்தார்கள் (2 கொரி. 8:1-3).

அதாவது தமது தேவைகளுக்கென வைத்திருந்ததையும் தியாகமாய்க் கொடுத்திருக்க வேண்டும். சிலர் ஒருவேளை கொடுத்துவிட்டு பட்டினி கூட கிடந்திருக்கலாம்.

இன்று பத்திலொன்றை தேவனுக்கு கொடுத்துவிட்டோம், மீதமுள்ள 90 சதவீதம் நமக்கு, என இன்னும் பழைய உடன்படிக்கையிலேயே நாம் இருக்கின்றோம். பழைய உடன்படிக்கையில்கூட தசமபாகத்திற்கும் அதிகமாக நிலங்கள், அணிகலன்கள் எனக் கொடுத்தனர். நாம் புதிய உடன் படிக்கைக்குரியவர்கள், கிருபைக்குரியவர்கள். கிருபை, சட்டத்தையும் கடந்து அதிகமாகக் கொடுக்கும், நமக்கு உரியது அனைத்துமே ஆண்டவருக்குரியது. நல்ல உக்கிராணக்காரராக நாமிருந்து ஒவ்வொரு சதத்தையும் கவனமாகச் செலவு செய்வது அவசியம். வெறுமனே பத்தில் ஒன்றைக் கொடுத்து, வரி கட்டிவிட்டோம் என்பது போல இருந்துவிடக்கூடாது. நாம் சரியானவற்றிற்கு செலவழித்து, எளிமையான வாழ்வு வாழ்ந்து, அதிகமாகக் கொடுக்கப் பழகவேண்டும்.

கொடுப்பதில் ஆசீர்வாதமுண்டு. செழுமையின் உபதேசத்தார் போதிப்பதுபோல, ஆண்டவருக்கு கொடுக்கும் பணத்தை அவர் இரட்டிப்பாகக் கொடுப்பார் என்று நான் கூறவில்லை. ஆனால் கொடுப்ப தில் ஆசீர்வாதமுண்டு, தேவன் உங்கள் தேவைகளைச் சந்திப்பார் என்பதே அந்த நம்பிக்கையாகும்.

எனவேதான்  தியாகப் பூர்வமாகக் கொடுத்த பிலிப்பியரைப் பார்த்து பவுல், “ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது. மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பித்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள் மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள். உபகாரத்தை நான் நாடாமல் உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக் கொண்டபடியினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். என் தேவன் தம்முடைய ஜசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி.4:14-19).

பவுல், உபகாரத்தை நாடாமல் உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படி நாடுகிறேன் என்கிறார். அத்தோடு இவர்கள் காணிக்கை சுகந்த வாசனையான, தேவனுக்கு பிரியமான பலியாக ஏற்றுக்கொண்டதாகவும் தேவன் தம்முடைய ஜசுவரியத்தின்படி இவர்கள் குறைகளையெல்லாம் நிறைவாக்குவார் என்கிறார். இந்த வாக்குத்தத்தம் தியாகப் பூர்வமாக கொடுப்பவர்களுக்கு மட்டுமே உரித்தானது. தேவன் நமக்குக் கடனாளியல்ல.

தவறான விதத்தில் உழைத்த பணத்தை நாம் தேவனுக்குக் கொடுக்கக்கூடாது. வியாபாரத்தில் நாம் மற்றவரை ஏமாற்றி எடுத்த பணத்தையோ, லஞ்சமாக வாங்கிய பணத்தையோ, மேலதிக நேரம் வேலை செய்யாமல் வேலை செய்ததாகக் கூறி சம்பாதித்த பணமோ, இப்படி அநியாயமாக உழைத்த பணத்தையோ அல்லது தமக்குக் கீழே வேலை செய்பவருக்குக் கூலிவேலை செய்பவருக்குக் கூலிகொடாமல் வஞ்சித்த பணத்தையோ தேவனுக்காகக் கொடுக்கக்கூடாது. உங்கள் சபை அதை ஏற்கலாம். ஆனால் அதை தேவன் அங்கீகரித்தார் என கருதமுடியாது. காயீனின் பலியைப் போல அது புறக்கணிக்கப்படும்.

தேவன் ஆபேலையும் அவன் பலியையும் ஏற்றுக்கொண்டார் என்று வாசிக்கிறோம். பவுல் கூட தியாகப்பூர்வமாகக் கொடுத்த மக்கெதோனிய, பிலிப்பிய சபையைக் குறித்து எழுதுகையில், மேலும் நாங்கள் நினைத்தபடி மாத்திரம் கொடாமல் தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத் தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கு ஒப்புக் கொடுத்தார்கள் (2 கொரி.8:5).

தேவனுக்குக் காணிக்கை கொடுப்பதற்காக முன்பாகத் தங்களையே கொடுத்தார்கள் என காண்கிறோம். நம்மை ஆண்டவருக்கு முதலில் கொடாமல் காணிக்கை கொடுப்பதில் பலனில்லை. அத்தோடு சகோதரனோடு கசப்போடும் மன்னிக்கும் தன்மை இல்லாமல் இருந்தால், நாம் காணிக்கை செலுத்துமுன் அவரோடு ஒப்புரவாக வேண்டும் (மத்.5:23-24).

செலவுகள் எல்லாம்போக மிஞ்சியதைக் கொடுக்கக்கூடாது. ஆண்டவருக்கென்று சிறந்ததை (மல்.1:6-8) ஆரம்பத்திலேயே (மற்ற செலவுகளுக்கு முன்பாக) ஒதுக்கிவிடவேண்டும். யாருக்குக் கொடுக்கவேண்டும்? உங்கள் சொந்த சபைக்குக் கொடுக்கவேண்டும். உங்களைப் போஷிக்கிற பாத்திரமான ஊழியங்களுக்குக் கொடுக்கலாம் (கலா.6:6) மிஷனரி ஊழியங்களுக்கு (பிலி.4) மற்ற உண்மையுள்ள பாத்திரமான ஊழியங்களுக்கு (பல்கலைகழக. சிறுவர், வாலிபர், வைத்திய துறை, வானொலி, மாற்று திறனாளிகள் மத்தியில், சிறைச்சாலைகளில் நடைபெறும் ஊழியங்கள் மற்றும் வேதப்போதனை ஊழியங்கள் தேவையுள்ள மற்ற பாத்திரமான ஊழியங்கள்) ஆகியவற்றிற்கு கொடுக்கலாம்.

வேதப்புரட்டு ஊழியங்கள், மற்றும் பணம் சம்பாதிக்கும் நோக்கோடும் புகழ்பெறும் நோக்கோடும் செய்யப்படும் ஊழியங்களுக்குக் கொடுக்கக்கூடாது. தேவனை மகிமைப்படுத்தும் நோக்கோடு செய்யும் உண்மையுள்ள ஊழியங்களுக்குக் கொடுக்கவேண்டும். இந்தப் பகுதியின் சந்தர்ப்ப சூழ்நிலையானது, அந்தியோகிய சபை தேவையுள்ள எருசலேம் சபைக்கு பணம் திரட்டிக் கொடுத்தது பற்றியாகும்.

மெதடிஸ்து சபையின் ஸ்தாபகரான ஜாண் வெஸ்லி அவருக்கு 30 பவுண்கள் வருமானம் கிடைத்தபோது, 2 பவுண்களைத் தேவனுக்குக் கொடுத்து, 28 பவுண்களைத் தனது வாழ்க்கைச் செலவுகளுக்கு பயன்படுத்தினார். வருமானம் 60 பவுண்களாக அதிகரித்தபோது அதே 28 பவுண்களைத் தனது வாழ்க்கைச் செலவுகளுக்கு வைத்துக்கொண்டு 32 பவுண்களை தேவனுக்குக் கொடுத்தார். வருமானம் 120 பவுண்களானபோது அதே 28 பவுண்களை தனக்காக வைத்துக் கொண்டு 92 பவுண்களைக் கொடுத்தார். வருமான 1400 பவுண்களாக உயர்ந்தபோது, 30 பவுண்களை செலவுக்கு வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் ஆண்டவருக்குக் கொடுத்தார்.

நாமும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து, வீண் செலவுகளைத் தவிர்த்தால் தேவனுக்காகவும் அவருடைய ராஜ்யத்தின் பணிக்காகவும் அதிகமாய்க் கொடுக்கலாம். நானும் எனது உடன் ஊழியர் ஒருவரும் மட்டக்களப்பில் உள்ள ஒரு சபைக்கு மிஷனரி சவாலுக்காக கொடுப்பதற்குச் சென்றிருந்தோம். ஆனால் அவர்கள் மிஷனரி அர்ப்பணம் எங்களுக்குச் சவாலாக இருந்தது. போதகரும் மனைவியும் காணிக்கை வேளையில் முன்னால் வந்து, எங்களுக்கு சொத்துக்கள் எதுவுமில்லை, இருக்கும் இந்த ஒரே சொத்தை மிஷன் ஊழியத்திற்குக் காணிக்கையாகக் கொடுக்கிறோம் என்று கூறி, தாலிக்கொடியைப் போட்டனர்.

கொடுப்பதற்குப் பணம் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. மனமிருந்தால் போதும்! அந்தியோகிய சபை மனமுவந்து கொடுத்த சபை. இதனை வாசிக்கும் அன்பு சகோதரனே, சகோதரியே உங்கள் ஈகை (தேவனுக்குக் கொடுத்தல்) குறித்து ஜெபத்தோடு, தேவசித்தத்தை நாடுவீர்களா? தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பீர்களா?

எல்லோருமே கொடுக்கலாம். மாணவர்கள் கூட கொடுக்கலாம். கைபேசிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கின்றோம். பெண்கள் எத்தனையோ உடைகள் இருந்தும் ஒவ்வொரு பண்டிகைக்கும் புது உடை வாங்குகின்றோம். ஆண்கள் எதற்கெல்லாமோ செலவழிக்கிறோம். ஆண்டவருக்காக கொடுக்கமுடியாதா? ஆண்டவரை அறியாத மக்களின் இரட்சிப்புக்காக கொடுக்க முடியாதா?

சிந்திப்போம். கர்த்தருடைய ராஜ்யத்தின் வளர்ச்சிக்காக இன்றே நாம் செயற்படுவோம்!

சத்தியவசனம்