யகாசியேல்

Dr.உட்ரோ குரோல்

யோசபாத் இராஜா தன்னுடைய இராஜ்யத்தின் சமாதானத்துக்கு ஒரு பெரிய இடையூறு வருவதைச் சந்தித்தான். மோவாபியரும், அம்மோனியரும் இன்னும் பல இராஜ்யங்களின் சேனைகளோடு ஒரு பெரிய சேனையைத் திரட்டி எருசலேமைப் படையெடுத்து வந்தார்கள். இந்தச் சூழ்நிலை ஒரு நம்பிக்கையிழக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. யோசபாத், தனது மக்கள் அனைவரும் உபவாசம் இருக்க வேண்டும் என்று அறிவித்தான். அதன்படி மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆண்டவரை நோக்கி ஜெபிக்கத் தொடங்கினார்கள். பின்னர் திடீரென்று தேவன் அவர்களுக்கு நம்பிக்கை யூட்டும் ஒரு செய்தியை இதுவரை அறியப் படாத ஒரு மனிதனாகிய யகாசியேல் மூலம் அனுப்பினார். அவனது குரல் வலிமையுள்ளதாகவும், அவன் சிறிய செய்தி தெளிவானதாகவும் இருந்தது.

நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது (2நாளா.20:15). தேசமக்களையும், இராஜாவையும், சேனையையும் யுத்தத்துக்குத் தைரியமாகச் செல்லும்படி தூண்டினான். தேவன் அவனைப் பயன்படுத்தினார். யுத்தத்தில் அவர்கள் வெற்றி கண்டார்கள்.

யுத்தம் நம்முடையதல்ல:

ஒரு சிறப்பு நிகழ்ச்சி தொடங்குவதற்காகக் காத்திருக்கும் ஒரு பெரியக் கூட்டத்தில் நீங்களும் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். விளக்குகளின் ஒளி மங்கலாய் இருக்கிறது. நீங்கள் ஒருவராலும் அறியப்படாமல் அமைதியாய் இருந்துகொண்டிருக்கிறீர்கள். கூட்டத்தில் மங்கலான ஒளியில் உங்கள் முகமும் ஒன்று என்று நினைக்கிறீர்கள். திடீரென்று தூரத்திலிருந்து ஒரு மிகப் பிரகாசமான ஒளிக்கற்றை கூட்டம் முழுவதும் சுற்றி வீசிக்கொண்டு, குறிப்பாக உங்கள்மீது பட்டு தரித்து நிற்கிறது. இப்படி அந்த ஒளி உங்கள் மீது பட்டு நின்றதும் கூட்டத்தார் அனைவருடைய கண்களும் உங்களுக்கு நேராகத் திரும்புகின்றன.

அன்று தேவனுடைய ஆவியானவர் யகாசியேலிடம் வந்து இறங்கியபோது அவன் எப்படி உணர்ந்திருப்பான்! என்பதை இப் பொழுது உங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது அல்லவா.

முற்காலத்தில் யூதா தேசத்தில் காரியங்கள் ஒருபோதும் அமைதியாக இருந்ததில்லை. யோசபாத் இராஜாவும், அவனது தேசமக்களும் இராணுவ முற்றுகைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் யோசபாத் எருசலேமுக்கு வந்து அங்கு சமாதானத்துடன் வாழ்ந்து வந்தான்.

துரதிர்ஷ்டவசமாக அவனுடைய அமைதி அதிக காலம் நீடிக்கவில்லை. யோர்தானைக் கடந்து கிழக்கே இருக்கும் யூதா தேசத்தின் மேல் ஒரு பெரும் புயல் காற்று சீறிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. மோவாபியரும், அம் மோனியரும், ஏதோமியரை துணைக்குச் சேர்த்துக்கொண்டு யூதாவை எதிர்த்துக் கடலிலே தள்ளிவிட வேண்டும் என்ற திட்டத்துடன் படையெடுத்து வந்தார்கள். மறுபடியும் கிரியை செய்ய வேண்டிய காலம் வந்தது.

ஒரு திறமையான இராணுவத் தளபதி என்ற நிலையில் யோசபாத்துக்கு அவன் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது. அவன் தேவன்பேரில் நம்பிக்கை உள்ளவனாய் இருந்த படியால் முதலாவது என்ன செய்யவேண்டும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.

“அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்“ (2நாளா.20:3) என்று பார்க்கிறோம். 6 முதல் 12 வரை உள்ள வசனங்கள் யூதாவின் இராஜா தேவனிடம் ஏறெடுத்த ஜெபம் காணப்படுகிறது. அந்த ஜெபத்தில் தேவன் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றியைத் தரும்படியும் எதிரிகளை நியாயந் தீர்க்க வேண்டுமென்றும் ஜெபித்தான்.

துன்பம் வரும்போது, எந்த தேசத்துக்கும் தேவபயம் உள்ள ஒரு தலைவன் இருப்பது நல்லது என்று இங்கு காண்கிறோம். இந்தத் தலைவனோடுகூட தேச மக்கள் அனைவரும் தேவனுக்குப் பயந்தவர்களாய் இருப்பது மிகவும் நல்லது அல்லவா? யூதாவுக்கு இந்த இரண்டும் அமைந்திருந்தன. யோசபாத் இராஜா கர்த்தரிடம் ஜெபிக்கும்படி தேவாலயத்தில் நின்று கொண்டிருந்தான். அவனுடன், “யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண் ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூடக் கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்“ (2நாளா.20:13).

யூதாவின் குடும்பங்கள் யாவும் ஒன்றாகக் கூடிக் கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள். அது அவர்களுடைய தேசத்துக்கு ஒரு பயமுறுத்தல் ஏற்பட்ட நேரமாயிருந்தது. தேச மக்கள் அனைவரும் ஒரு அணியாகத் திரண்டு நின்று தங்கள் தேசத்துக்கு வந்த அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்ற வேண்டும். குடும்பங்கள் ஒன்றாகக் கூடும்போது பலமடைந்து விடுகின்றன. அப்பா, அம்மா, குழந்தைகள் அனைவரும் தேவனுக்குக் கீழ்ப்படிந்து ஒன்றாகச் சேர்ந்து நிற்கவேண்டும்.

அப்பொழுது அது நடந்தது:

ஆயிரக்கணக்கானவர்கள் அவனைச் சூழ்ந்து நின்றார்கள். அவன் தன் குடும்பத்துடன் நின்றான். சமுத்திரம் போன்று விரிந்து, பரந்து காணப்படும் முகங்களில் ஒரு தனி முகமாக அவனுடைய முகம் காணப்பட்டது. இருளைக் கடந்துவந்து ஒரு குறிப்பிட்டப் பொருளை மட்டும் வட்டமிட்டுக் காட்டும் ஒளிக்கற்றையைப் போல, சபையின் மத்தியில் கர்த்தருடைய ஆவியானவர் யகாசியேலின் மேல் மட்டும் வந்து இறங்கி, அவனைப் பலப்படுத்தினார். ஆவியானவரையும், அவருடைய வல்லமையையும் அங்கு கூடியிருந்த மக்களில் வேறு எவரும் உணரவில்லை. அறியவில்லை. யகாசியேல் மட்டும் அவற்றை உணர்ந்தான்.

யகாசியேல் தனிச்சிறப்புள்ள ஒரு மனிதன் அல்ல. சிலவேளைகளில் தேவன் ஒன்றுமில்லாதவர்களாயிருக்கும் உங்களையும் என்னையும் கூட தமது சித்தத்தை நிறைவேற்றப் பயன்படுத்தக்கூடும். யகாசியேல், ஆசாபின் புத்திரரான லேவியின் கோத்திரத்தைச் சேர்ந்தவன், ஒரு யூதன் என்று  2நாளா.20:14 கூறுகிறது. இந்த யகாசியேலைக் குறித்து வேதாகமத்தில் இதற்கு முன் எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறதைக் காணவில்லை. அதன்பின்னரும் அவனுடைய பெயர் எங்கும் கூறப்படவில்லை. அவன் கூட்டத்தில் காணப்பட்ட முகங்களில் ஒன்றாகவே இருந்தான். இந்த அறியப்படாத வழிப் போக்கன் மூலம் தேவன் ஒரு முக்கியமான செய்தியை யூதாவுக்கு அறிவிக்கும்படி பயன்படுத்தச் சித்தம் கொண்டார். அவன் மூலம் அளிக்கப்பட்ட செய்தி யூதாவின் இராஜாவுக்கும், தேசமக்கள் அனைவருக்கும் ஆறுதலையும், ஊக்கத்தையும் அளித்தது.

யகாசியேலின் செய்தியில் 100 வார்த் தைகள் மாத்திரம் இருந்தன. அந்தச் செய்தி அவனுக்கு நேரடியாக தேவனிடமிருந்து வந்தது. அவன் கூறியதாவது:

“சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.

இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்” (2நாளா.20:15-17).

யகாசியேலின் வார்த்தைகள், அது தேவனுடைய ஞானம். பயமும், மனக்கலக்கமும் நிறைந்த நெருக்கடி வேளையில் அமைதிப்படுத்துகிறவைகளாயிருந்தன. சோதனை நேரத்தில் நம்பிக்கையூட்டும் சொற்கள் அவை. அவன் தேவனுடைய செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு செய்தியாளனாய் இருந்தான். ஒரு நம்பிக்கையிழந்த நெருக்கடி வேளையில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவித்தான்.

யகாசியேலின் செய்தி தேவனுடைய மக்களை காலாகாலமாக இன்றுவரை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய வாழ்க்கையில் தேவன் கிரியைச் செய்வதைக் கவனிக்கவேண்டுமானால், அவர் உங்களுக்காக யுத்தங்களைச் செய்வதைக் காணவேண்டுமானால், உங்களுக்கு யுத்தத்தில் வெற்றி கிடைக்கச் செய்ய வேண்டுமானால், 2 நாளாக மத்தில் குறிப்பிட்டிருக்கிற யகாசியேலின் யோசனைப்படிச் செய்யுங்கள்.

பயத்தை விலக்குங்கள்:

நம்மிடத்தில் இருக்கும் பயம் பொருட்களைத் தெளிவாகப் பார்ப்பதை தடை செய்கிறது. சிறிய மணற்குன்றுகளை பெரிய மலைகளாக நம்மை எண்ணச் செய்துவிடுகிறது. சாத்தான் நம்மில் ஏற்படுத்தும் இந்த இடறுதல், நம்மை முட்டாள்தனமான காரியங்களைச் செய்யவும், தேவனுக்குக் கீழ்ப்படி யாமல் இருக்கவும் செய்துவிடும்.

ஆண்டவர் நமக்குத் தரும் உபதேசம் என்ன? “இந்த ஏராளமான கூட்டத்தாரைக் கண்டு பயப்படாமலும், கலங்காமலும் இருங்கள்“ “பயப்படாதே“ “திடமனதாயிரு“ போன்ற உபதேசங்கள் வேதாகமத்தில் திரும்பத் திரும்ப பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நடுங்கும் கைகளுடனும், தடுமாறும் முழங்கால்களுடனும் இருப்பவர்கள் நாம் மட்டுமல்ல. யோசுவாவின் புத்தகம் முதல் அதிகாரத்தில் நூனின் குமாரனாகிய யோசுவாவிடம் தேவன் கூறுகிறார்:

“பலங்கொண்டு திடமனதாயிரு“ (யோசு.1:6)
“மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு“ (யோசு.1:7)
“பலங்கொண்டு திடமனதாயிரு“ (யோசு.1:9)
“பலங்கொண்டு திடமனதாய் மாத்திரம் இரும்“ (யோசு.1:18).

இவ்வாறு இந்த ஒரு அதிகாரத்தில் மட்டும் நான்கு இடங்களில் கூறித் திடப்படுத்துவதைக் காண்கிறோம். இந்த ஊக்குவிக்கும் வசனங்கள் யோசுவாவைப் பலப்படுத்தித் திடப்படுத்தியதால்தான் வெகுசீக்கிரத்தில் யாரும் அசைக்க முடியாத எரிகோ கோட்டை யோசுவாவின் தலைமையின் கீழ் விழுந்து தரை மட்டமாகியது.

சாத்தானைத் தைரியமாக எதிர்த்துப் போராடத் தீமோத்தேயுவுக்குத் தைரியம் ஊட்டும்படி, தன்னுடைய ஆவிக்குரிய குமாரனாகிய தீமோத்தேயுவுக்குப் பவுல், இப்படிக் கூறித் தைரியப்படுத்தினான். “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்“ (2தீமோ.1:7).

ஆவிக்குரிய போராட்டத்தில் பயத்துக்கு இடம் இல்லை என்பதைத் தீமோத்தேயு அறிய வேண்டியதிருந்தது. நீங்களும் நானும் கூட அந்தகார சக்திகளோடு போராட வேண்டியவர்களாய் இருக்கிறோம். நாமும் எந்த வகையான பயமும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

பயத்துடன் அல்ல, விசுவாசத்துடன் வாழ வேண்டும் என்பது தேவன் விசுவாசிகளுக்கு கொடுத்திருக்கும் திட்டம். இப்படிக் கூறுவதால் நாம் ஒருபோதும் பயப்பட மாட்டோம் என்று கூறிவிட முடியாது. நாம் சில வேளைகளில் பயப்படுவோம். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது நாம் சோர்ந்த இருதயத்துடன், மனம்தளர்ந்து இருக்கக்கூடாது. சாத்தானையோ, அவனது துரைத்தனங்களையோ எதிர்க்கப் பயந்து பின்வாங்காமல் தேவன் பேரில் நம்பிக்கை வைத்து தைரியமாக முன்னேற வேண்டும். ஒருதடவை ஒருவர் இப்படிக் கூறினார். “பயம் கதவைத் தட்டியது. விசுவாசம் இங்கே ஒருவரும் இல்லை என்று பதில் கூறியது“. யகாசியேலின் செய்தி, ‘யூதாவுக்கு எதிராகக் கூடி எதிர்த்து நிற்கும் ஏராளமான சேனை வீரர்களைக் கண்டு பயப்படக்கூடாது‘ என்பதே. நமது இராணுவத்தின் தலைமைத் தளபதியாகச் சர்வவல்லமையுள்ள தேவன் இருக்கும்போது, நமது எதிரிகள் எவ்வளவுபேர் குவிந்திருந்தாலும் அவர்களுடைய பலம் அற்பமானதே.

அனுதினமும் சாத்தானோடுள்ள நமது போராட்டங்களை ஜெயிப்பது, நமது பயத்தைத் துரத்திவிடுவதில் ஆரம்பிக்கிறது. நாம் நம்முடைய எதிரியையும் மதிக்கவேண்டும். சாத்தான் நம்மைவிட வல்லமையுள்ள ஒரு எதிரியாவான். ஆனால் நாம் நமது எதிரியைக் கண்டு பயப்படக்கூடாது. ஏனெனில் தேவன் அவனை ஏற்கெனவே துரத்தியடித்துள்ளார். வேதாகமம் கூறுகிறது. “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்“ (யாக்.4:7). இது ஒரு நல்ல உபதேசம் மட்டுமல்ல, இது தேவனுடைய வார்த்தை. இன்று நீங்கள் சந்திப்பது எதுவாக இருந்தாலும் சரி, சிக்கலில் இருக்கும் திருமணம், புற்று நோய், வாட்டும் தனிமை, அனாதைகளாக வழியருகே திரியும் குழந்தைகள், நீங்கள் உங்கள் பயத்தை முதலாவதாக விலக்கிவிடுங்கள். உங்கள் விசுவாசத்தை உறுதியாய்ப் பற்றிக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் கட்டுப்படுத்த தேவன் உங்களுடன் இருக்கிறார்.

யுத்தம் யாருடையது? என்று உணருங்கள்:

“யுத்தம் உங்களுடையதல்ல. தேவனுடையது“ என்று யகாசியேல் யூதாவின் மக்களுக்கு நினைவுப்படுத்தினான். சாத்தான் உங்களுடன் போராடுகிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இறுதியில் அவன் மோதுவதும், போரிடுவதும் தேவனுடன் என்பதை அறிய வேண்டும். சாத்தான் தன்னை தேவனைவிட உயர்ந்தவனாகப் பெருமைப்படுத்தி, தேவனுக் கெதிராகக் கலகம் செய்யும் வகையில் “நான் செய்வேன்“ என்று ஐந்து காரியங்களைக் கூறினான். அப்பொழுது அவன் ‘நான் உலகத்தின் சாதாரண மக்களாகிய டாம், டிக், ஹாரி இவர்களைப்போல இருப்பேன்‘ என்று கூறவில்லை. “உன்னதமானவருக்கு ஒப்பாவேன்“ என்று கூறினான் (ஏசாயா 14:14). டாம், டிக், ஹாரி இவர்கள் மூவரும் ஒன்றாய்ச் சேர்ந்து நின்றாலும் அவர்களைக்காட்டிலும் சாத்தான் திறமையானவன். அவன் உங்களையும், என்னையும் போல இருக்க விரும்பவில்லை. அவன் தேவனாயிருக்கவே விரும்புகிறான்.

கெத்செமனே தோட்டத்திலும் பின்னர் கல்வாரி சிலுவையிலும் இயேசுவோடு சாத்தான் பயங்கரமாகப் போராடினான். அப்பொழுது அவனுடைய தாக்கும் குறி இயேசு அல்ல. ஏனெனில் இயேசு பாவமற்ற வாழ்வு வாழ்ந்திருந்தார். இயேசு தேவனாய் இருந்தபடியால்தான், தான் தேவனை எதிர்ப்பதாக எண்ணி இயேசுவோடு போராடினான். சாத்தானுடைய நீண்ட யுத்தம் தேவனோடு நடத்திய யுத்தமாகும். நாம் தேவனுடைய சேனையில் போர் வீரர்களாய் இருக்கிறோம். ஆனால் சாத்தானுக்கு வேண்டியது நாம் அல்ல. நம்முடைய சேனையின் பிரதம போர்த்தளபதியான தேவனாகும்.

சாத்தானோடு நமக்கு அனுதினமும் ஏற்படும் உரசல்களின்போது, யூதா மக்கள் நினைவுகூர வேண்டும் என்று யகாசியேல் சொன்ன – “யுத்தம் உங்களுடையதல்ல – தேவனுடையது“ என்ற வார்த்தைகளை நாமும் நினைவுகூர வேண்டும்.

(தொடரும்)

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்