சீர்கெட்ட உலகுக்கு சீர்மிகு நற்செய்தி!

Dr.உட்ரோ குரோல்
(நவம்பர்-டிசம்பர் 2017)

பல நூற்றாண்டுகளாக எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்ந்துகொண்டிருந்த உலக மானது ஒரு காலத்தில் யூத நாட்டை நோக்கி தனது கவனத்தைத் திருப்பியது. பரி.லூக்கா எழுதிய நற்செய்தி நூலில் குறிப்பிடும் அக்காரியங்களை நாம் ஆராய்வோம். உலகை மாற்றியவரும் உங்கள் வாழ்விலும் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் மாற்றத்தைக் கொடுப்பவருமாகிய மாமனிதர் இயேசுவின் சரித்திரத்தை எழுதிய லூக்கா என்பவர் யூதரல்ல. அவருடைய பன்னிரண்டு சீடர்களில் ஒருவருமல்லர். இயேசு செய்த காரியங்களைக் கண்டவருமல்லர். ஆனால், அவர் செய்த அற்புதங்களை உலகிற்கு ஒழுங்குபடுத்தித் தர விரும்பினார். லூக்கா என்பவர் ஒரு சிறந்த மருத்துவர், அறிவியல் அறிஞர், வரலாறு எழுதும் ஆற்றல் மிக்கவர். இயேசுவின் வாழ்வில் நடந்தவற்றைக் கண்ணாரக் கண்டவர்களது சாட்சியங்களை வைத்து அவை யாவையும் ஒழுங்காய் எழுத எண்ணினார். உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதைப்பற்றி அவர் நன்கு அறிந்தவர். திருமுழுக்கு முனிவர் யோவான் என்பவரது வாழ்விலிருந்து தனது நூலை ஆரம்பிக்கிறார். ஒரு குறும்படத்தின் ஆரம்பத்தைப்போல அது உள்ளது.

“மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று” என்று முன்னுரையாக எழுதுகிறார் (லூக்.1:1-4).

இரண்டாயிரம் ஆண்டுகளாகிவிட்டாலும் இவரது குறிப்புகளில் ஒன்றுகூட மாற்றங்களோ முரண்பாடுகளோ இல்லை. அந்நிகழ்வுகளுக்கு இவர் நேரடி சாட்சியல்ல. ஆனால், அக்காரியங்களைக் கண்ணால் கண்டவர்கள் தங்களது சாட்சியில் தெளிவாக இருந்தனர். உதாரணமாக இயேசுவைப் பற்றி யோவான், “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவா.1:14) என்று கூறுகிறார்.

“தேவன் மாம்சத்திலே வந்தார் அந்த மாம்சத்தை நான் கண்டேன் என்று சாட்சியிடுகிறார்”. “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்” என்று அப்.பேதுரு குறிப்பிடுகிறார் (2 பேதுரு 1:16). நான் கண்டேன்; இயேசு செய்தவைகளை நான் கண்ணாரக் கண்டேன், அவர் பேசியதை நான் கேட்டேன், அவர் என்னுடன் பேசினார், எனது வாழ்வில் துன்பங்கள் வந்தன. என்ன நடந்தது என்பதை நான் நன்கு அறிவேன். நீங்கள் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன் என்று பேதுரு கூறுகிறார். மேலும் அப்.யோவான் தனது முதலாம் நிருபத்தில் “ஆதிமுதல் இருந்ததும், நங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சி கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது” (1 யோவான் 1:1-3).

இதை நான் கூறக்காரணம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் உண்மையை அறிந்த சாட்சிகளைவிட பார்க்காத, கேட்காத தொடாத தங்களுக்கு அதிகம் தெரியும் என சில மக்கள் கூறுகின்றனர். லூக்கா சொல்லும் உண்மையை மறுப்பவர்கள் முட்டாள்கள் அல்லது எதிரிகள் அவர்களது கூற்றினை நீங்கள் நம்பாதீர்கள்.

லூக்கா எழுதிய காரியங்களை நாம் வாசிப்போம். “யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து, அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான். தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்” (லூக்கா1:5-10).

இங்கே ஓர் அற்புதமான தம்பதியினரை நாம் காண்கிறோம். சகரியா ஓர் ஆசாரியர் அவருடைய மனைவி எலிசபெத்தும் ஆரோனுடைய சந்ததி. எனவே அவர்கள் தேவனுக்கு முன்பாக குற்ற மற்றவர்களாய் நடந்து நீதியுள்ள ஒரு வாழ்க்கை நடத்தினார்கள். தேவன் நம்மை பாவமில்லாதவர்களாய் அல்ல, குற்றமற்றவர்களாய் இருக்கவே எதிர்பார்க்கிறார். “கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு என்றார்”(ஆதி.17;1) என்று கட்டளையிட்டார். இவர்கள் இவ்விதமாய் நீதியுள்ளவர்களாய் வாழ்ந்து வந்தாலும் அவர்களுக்கு ஒருகுறை இருந்தது. அவர்களுக்கு குழந்தையில்லாதிருந்தது. இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தனர். எனவே இனி குழந்தை பிறக்கும் வாய்ப்பும் இல்லாதிருந்தது. இது அவர்களுக்கு அதிக மன வருத்தத்தை அளித்தது. ஏனெனில் பிள்ளைகளே சந்ததியை உருவாக்குபவர்கள். அக்காலத்திலே அதுவே வாழ்வின் நிறைவைக் காட்டியது. இத் துன்பத்தின் நடுவிலும் அவர்கள் உத்தமர்களாய் வாழ்ந்து வந்தனர். நீங்கள் செல்வந்தராய் இருப்பின் அனைத்தும் நன்றாகவே நடக்கும். உங் களுக்கு துன்பமோ நோயோ அணுகாது என்று அநேகர் சொல்வார்கள். ஆனால், அவைகள் உண்மையல்ல. தேவனுடைய வார்த்தையிலேயே நாம் நீதிமான்களாய் வாழமுடியும். பக்தன் யோபைப்போல துன்பத்தில் உழன்றாலும் தேவனுக்கு பிரியமான வாழ்வை நம்மாலும் நடத்த முடியும்.

தேவன் தந்த வாக்குறுதியை வாசியுங்கள். “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” (சங்.23:1-4). “அவர் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்” என்பதன் அடுத்த வசனம் “நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்…” என்று கூறுகிறார். நீதியுள்ள வாழ்வு நடத்துவதையும் துன்பமில்லா வாழ்வு வாழ்வதையும் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது.

சகரியாவுக்கு தேவதூதன் தோன்றி ஒரு தேதியை முன்குறித்துக் கொடுத்தார்:

“அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். சகரியா அவனைக் கண்டு கலங்கி, பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்” (லூக்.1:11-15).

மலடியாயிருக்கும் உன்னுடைய மனைவி குறித்த காலத்தில் ஓர் ஆண்மகனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக. அவன் இவ்வுலகில் அநேக காரியங்களைச் செய்வான் என்று கூறினார்.

இச்செய்தியை சகரியாவால் நம்பமுடியவில்லை. “அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே” என்றான்.  அதற்கு தேவ தூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: “நான் தேவ சந்திதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக் கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்” (1:18-20). நியாயமான அவிசுவாசமாய் இருந்தாலும் அவிசுவாசத்துக்கு அபராதம் உண்டு என்பதை நாம் நினைவில்கொள்ளுவோம். யோவான் பிறக்கும்வரைக்கும் சகரியா பேசமுடியாதவராய் ஆனார். தேவன் தம்முடைய வார்த்தையில் உரைத்திருப்பதற்கு நாம், “என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை; ஆயினும் நான் விசுவாசிக்கிறேன், ஆண்டவரே” என்றே சொல்லவேண்டும்.

சகரியா-எலிசபெத் தம்பதியினரைப் பற்றிக் கூறிவந்த லூக்கா முதலாம் அதிகாரத்தின் மையப் பகுதிக்குப் பின்னர் மற்றொரு கன்னிகையையும் எதிர்பாராத ஒரு ஆண்மகனின் பிறப்பையும் பற்றி உரைக்கிறார். “ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத் தென்னும் ஊரில் தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்” (1:26,27).

இங்கே அவர் தேவதூதரின் பெயரையும் அச் சம்பவம் நடந்த இடத்தையும் பற்றி விவரிக்கிறார். இந்நிகழ்வு கலிலேயா நாட்டில் இருந்த நாசரேத் கிராமத்தில் நடந்தது என்று குறிப்பிடுகிறார். வசனம் 27-ல் யோசேப்புக்கு நியமிக்கப்பட்ட ஒரு கன்னிகையைப் பற்றி எழுதுகிறார். இந்த யோசேப்பு தாவீதின் வம்சத்தில் வந்தவர். ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் தரவேண்டிய அனைத்துக் காரியத்தையும் துல்லியமாக லூக்கா குறிப்பிட்டுள்ளார். “அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்” (வச.28,29) மரியாளைச் சந்தித்த தேவதூதர் “கிருபை பெற்றவளே வாழ்க!” என்று வாழ்த்தினார். புதிய ஏற்பாட்டில் இந்த சொற்றொடர் இங்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இலத்தீன் மொழியில் அநேக பிரதிகளில் ‘கிருபையால் நிறைந்தவள்’ என்று தரப்படவில்லை. இங்கு மரியாளைவிட அவருக்கு நடக்க விருக்கும் காரியமே சிறப்பு செய்தியாகும். “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்” (1:31). தேவதூதனின் அறிவிப்பு மரியாளுடைய மகனான இயேசுகிறிஸ்துவைப் பற்றியதாகும். “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார். உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்” (வச.32-34).

மரியாளுக்கும் சகரியாவுக்கும் ஒரேவிதமான கேள்விகள் எழுந்தன. மரியாளுக்கு இது எவ்வாறு நிகழும் என்று புரியவில்லை. “கன்னியான ஒரு பெண் எப்படி ஒரு மகனைப் பெறுவாள்? அது நிகழாதே என்று எண்ணினாள். சகரியாவின் அவிசுவாசத்துக்கும் மரியாளின் அவிசுவாசத்துக்கும் உள்ள வேறுபாட்டை நாம் கவனிக்கவேண்டும். சகரியாவின் கேள்வியோ “இதை நான் எவ்வாறு அறிவேன்?” என்று அவிசுவாசத்தை வெளிப்படுத்தியது. மரியாளின் கேள்வியோ “இதை விசுவாசிக்கிறேன்; ஆனால் எவ்வாறு நிகழும் என்பதை அறியேன்” என்ற பொருளை உள்ளடக்கியது.

குழந்தைப்பேறு இன்மையோ கன்னித்தன்மையோ தேவனுக்கு பிரச்சனையே கிடையாது. கூறப்பட்ட நற்செய்தி என்னவெனில், “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்”. அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய், சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிச பெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாள்” (வச.39-41).

யோவான் ஒரு அசாதாரணமான குழந்தை. தாயின் கருவிலிருக்கும்பொழுதே தூய ஆவியானவரால் நிறைந்திருந்த அக்குழந்தை பெண்களிடத்தில் பிறந்த யாவரிலும் பெரியவராயிருப்பார். அக்குழந்தையின் தாயும் தேவ ஆவியினால் நிறைந்திருந்தார். இவ்வித சூழலில்தான் நன்மையான காரியங்கள் வரும். அவற்றை “ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்” (வச.42-45). மேலும் இதற்கு மறுமொழியாக பாடியவற்றை ‘மரியாளின் கீதம்’ என்று நாம் அழைக்கிறோம். அன்னாள் தனது முதல் குமாரனைப் பெற்ற பின்னர் பாடிய நன்றி கீதத்துக்கு இது (1 சாமு.2:1-10) ஒத்துள்ளது.

தொடர்ந்து யோவானின் பிறப்பைப் பற்றி லூக்கா “எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள். கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்து ஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள். எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப் போனார்கள். அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள். அதற்கு அவர்கள் உன் உறவின்முறை யாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி, அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்” (1:57-62) என விவரமாக எழுதியுள்ளார். பொதுவாகக் குழந்தைக்கு தகப்பன் பெயரையோ அல்லது மூதாதையரின் பெயரையோ வைப்பது மரபு. ஆனால் இருவரும் எந்த ஒரு விவாதமும் இல்லாதபடி அக்குழந்தைக்கு யோவான் என்று பெயரிட முடிவெடுத்தனர். ஏனெனில் எலிசபெத்துக்கும் சகரியாவுக்கும் யோவான் என்று அக்குழந்தைக்குப் பெயரிடுவதற்கு தேவதூதன் ஏற்கனவே கட்டளை கொடுத்திருந்தார்.

லூக்கா எழுதின நற்செய்தி நூலை “பெண் களின் நற்செய்தி” என்று அழைக்கலாம். ரோம சாம்ராஜ்யத்தில் பெண்களுக்கு எந்தவொரு முக்கியத்துவமோ உரிமைகளோ கிடையாது. ஆனாலும் தேவன் வாக்குபண்ணியதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று அவர்கள் விசுவாசித்தனர். இதை எலிசபெத்திடத்திலும் மரியாளிடத்திலும் நாம் காண்கிறோம். நமக்குப் புரியாத காரியங்களாய் இருந்தாலும் ‘தேவன் விளம்பியுள்ளதால் அதை நான் நம்புகிறேன்’ என்று நாமும் சொல்ல வேண்டும். அந்த விசுவாசமே தேவனை பிரியப்படுத்தும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்