தீர்க்கதரிசன வாக்கியங்களில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு!

திரு.எம்.எஸ்.வசந்தகுமார்
(நவம்பர்-டிசம்பர் 2017)

மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் தேவன் தனிப்பட்ட ரீதியாக நம்முடைய வாழ்வுக்கென்று ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார் என்பது உண்மை என்றாலும், நம்முடைய வாழ்வில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை நாம் அறியாதவர்களாகவே இருக்கின்றோம். ஆனால் இயேசுகிறிஸ்துவினுடைய மானிட வாழ்வைப் பொறுத்தவரை, அவர் மனிதனாக இவ்வுலகத்தில் பிறப்பதற்கும் முன்பே அவருடைய வாழ்வுச் சம்பவங்கள் அனைத்தும் வேதாகமத்தின் முதற்பகுதியான பழைய ஏற்பாட்டில் பலநூறு வருஷங்களுக்கும் முன்பே எழுதப்பட்டுள்ளன. இதனால்தான் தம்முடைய வாழ்வைக் குறித்து அவர் சொல்லும்போது, “மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்” (மத். 26:24, மாற்கு 14:21) என்று தெரிவித்தார். ஏனென்றால், அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற காரியங்கள் அனைத்தும் ஏற்கனவே பழைய ஏற்பாட்டுக்கால தீர்க்கதரிசிகளினால் முன்னுரைக்கப்பட்டிருந்தது. இதனால்தான், இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் மத்தேயு அவருடைய வாழ்க்கையின் பல சம்பவங்களை “தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இவ்வாறு நடந்தது” என்னும் விளக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், மொத்தம் 232 பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் இயேசுகிறிஸ்துவின் வாழ்வில் நிறைவேறியுள்ளதாக வேத ஆராய்ச்சியாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

இயேசுகிறிஸ்துவின் இவ்வுலக வாழ்க்கையில் 232 தீர்க்கதரிசனங்கள் சொல்லர்த்தமாக நிறைவேறியுள்ளபோதிலும், இக்கட்டுரையில் அவருடைய பிறப்பில் நிறைவேறிய மூன்று தீர்க்கதரிசனங்கள் ஆராயப்பட்டுள்ளன. இவை அவர் எப்படி பிறப்பார்? எங்கு பிறப்பார்? எப்படிப்பட்டவராய் இருப்பார்? என்பதைப் பற்றிய முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களாகும். இயேசுகிறிஸ்து எப்படி பிறப்பார் என்பதை ஆதி.3:15-ல் தேவன் முன்னறிவித்துள்ளார். இது இயேசுகிறிஸ்து பிறப்பதற்கும் முன்பு ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனமாகும். பிற்காலத்தில் இதே விஷயம், இயேசுகிறிஸ்து பிறப்பதற்கும் ஏறக்குறைய 700 வருஷங்களுக்கும் முன்பு ஏசாயாவினால் அறிவிக்கப்பட்டது. இதைப் பற்றி ஏசாயா 7:14-ல் நாம் வாசிக்கலாம். ஏசாயாவின் காலத்தில் வாழ்ந்த மீகா என்னும் தீர்க்கதரிசி இயேசுகிறிஸ்து எங்கு பிறப்பார் என்பதை மீகா 5:2-ல் முன்னறிவித்துள்ளார். ஏசாயாவினுடைய இன்னுமொரு தீர்க்கதரிசனம் அதாவது 9:6-ல் அவர் குறிப்பிட்டுள்ள விஷயம், இயேசுகிறிஸ்து எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை அறியத்தருகின்றது. இம்மூன்று தீர்க்க தரிசனங்களும் இயேசுகிறிஸ்துவினுடைய வாழ்வில் எவ்விதமாய் நிறைவேறியுள்ளன என்பதை இக்கட்டுரையில் ஆராய்ந்து பார்ப்போம்.

1. இயேசுகிறிஸ்து எப்படி பிறப்பார்- ஆதி.3:15

இயேசுகிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய முதலாவது தீர்க்கதரிசனம் ஆதி.3-ம் அதிகாரம் 15-ம் வசனத்தில் உள்ளது. இதனால், இதுவே வேதத்திலுள்ள “முதலாவது சுவிசேஷம்” என்று சில வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இதுவே உலகிற்கு வரும் மீட்பரைப் பற்றி வேதாகமத்தில் இருக்கும் முதலாவது குறிப்பாகும், இது வேதாகமத்திலுள்ள முதலாவது தீர்க்க தரிசனமாக மட்டுமல்ல, தேவனுடைய முதலாவது வாக்குத்தத்தமாகவும் உள்ளது. இதில், கிறிஸ்துவின் பிறப்பும் அவரது பாடுகளும் சாத்தானின் மீதான அவரது வெற்றியும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உலகின் முதல் மனிதர்களான ஆதாமும் ஏவாளும் தேவனுடைய கட்டளையை மீறிப் பாவம் செய்தபின்னர் அவர்களுக்கான தண்டனைகள் அறிவிக்கப்படும்போது, அவர்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக உலகத்திற்கு மனிதனாக வரும் தேவனாகிய இயேசுகிறிஸ்து எப்படி பிறப்பார் என்றும், சாத்தான் அவருக்கு என்ன செய்வான் என்றும், அவர் சாத்தானை எவ்வாறு முறியடிப்பார் என்றும் இவ்வசனத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

வேதாகமத்தின் முதலாவது தீர்க்கதரிசனமான ஆதி.3:15 இயேசுகிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய முன்னறிவிப்பாக உள்ளபோதிலும், இது மனிதனுக்கு அல்ல; சாத்தானுக்கு அறிவிக்கப்பட்ட தண்டனையாகவே உள்ளது. ஏனெனில், இவ்வசனமும் இதற்குமுன் உள்ள வசனமும் சர்ப்பத்துடன் தேவன் பேசுகின்ற வார்த்தைகளாக உள்ளபோதிலும், 14-ம் வசனம் மாத்திரமே சர்ப்பத்திற்கான தண்டனை பற்றிய அறிவிப்பாக உள்ளது. 15-ம் வசனத்தில் தேவன் சர்ப்பத்திற்குள் இருந்த சாத்தானிடமே பேசுகின்றார். ஏனெனில் ஆதாமையும் ஏவாளையும் பாவத்தில் வீழ்த்துவதற்காக சாத்தான் அவர்களைச் சோதிக்கச் சென்றபோது அவன் சர்ப்பத்திற்குள் இருந்தே ஏவாளுடன் பேசினான் (ஆதி.3:1). இதனால்தான் புதிய ஏற்பாட்டிலும் சாத்தான் சர்ப்பமாக உருவகிக்கப்பட்டுள்ளான் (வெளி. 12:9, 20:2). எனவே, ஆதி.3:15-ல் சாத்தானுக்கு இயேசுகிறிஸ்து எத்தகைய தண்டனையைக் கொடுப்பார் என்பதை அறிவிக்கும் தேவன், அவர் எப்படி மனிதனாகப் பிறப்பார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். “சாத்தானுடைய கிரியைகளை அழிப்பதற்காகவே இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்ததினால்” (எபி.2:14, 1 யோவா.3:8), அவருடைய வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனம் முதலில் சாத்தானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் வசனத்தில் தேவன் சாத்தானிடம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்” (ஆதி.3:15).

இத்தீர்க்கதரிசனத்தின் முதல் வாக்கியம், தேவன் ஏற்படுத்திய இரண்டுவிதமான பகைகளைப்பற்றி கூறுகிறது. முதலாவது பகை, சாத்தானுக்கும் ஏவாளுக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் பகையாகும். இதனால்தான் “உனக்கும் ஸ்திரீக்கும்” என்று இவ்வசனம் ஆரம்பமாகின்றது. சாத்தான் ஏவாளைச் சோதிக்க சென்றபோது, அவள் சாத்தானுடன் பேசுகிறவளாக இருந்ததினால், இனிமேல் அப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காகத் தேவன் அவளுக்கும் சாத்தானும் இடையில் பகையை ஏற்படுத்தப்போவதாகத் தெரிவித்தார். சில வேத ஆராய்ச்சியாளர்கள் இது சர்ப்பங்களுக்கும் மனிதருக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் பகை என்று கருதுகின்றனர். இதனால், “நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்னும் வாக்கியம், மனிதர்கள் சர்ப்பத்தின் தலையைக் குறிவைத்து அடித்து அவற்றைக் கொல்லுவார்கள் என்றும் இவ்வசனத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.

சர்ப்பத்தைக் கண்டால் மனிதர் ஏன் அதைக் கொல்ல முற்படுகின்றனர் என்பதற்கும், சர்ப்பங்கள் மனிதரைக் கண்டால் அவர்களை அவைகள் ஏன் கொத்துகின்றன என்பதற்கும் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமாகவே இவ்வசனம் இருப்பதாகச் சில வேத ஆராய்ச்சியாளர்கள் கருதினாலும், இவ் வசனம் தேவன் சர்ப்பத்திற்குள் இருந்த சாத்தானிடம் பேசுகின்ற வார்த்தைகளாக இருப்பதனால், தேவன் சாத்தானுக்கும் ஏவாளுக்கும் இடையில் ஏற்படுத்திய பகையைப் பற்றிய அறிவிப்பாகவே உள்ளது. மனிதன் பாவத்தில் விழுகின்ற விதத்தில் சாத்தான் ஏவாளைச் சோதித்ததினால், அவன் மனிதருடைய எதிரி என்பதை அறியத்தரும் விதத்தில் அவனுக்கும் ஏவாளுக்கும் இடையில் பகையை ஏற்படுத்தப்போவதாகத் தேவன் தெரிவித்துள்ளார். சாத்தான் மனிதனுடைய எதிரியாக இருப்பதினாலேயே “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்” என்று வேதாகமம் கூறுகிறது (1 பேதுரு 5:8). சாத்தான் நம்முடைய எதிரியாக இருப்பதனால் நாம் அவனுடன் நட்புறவு வைத்துக்கொள்ளக்கூடாது. உண்மையில், சாத்தான் என்பது எபிரேய மொழிச்சொல். இதன் அர்த்தம் “எதிரானவன்” என்பதாகும். அவன் நமக்கு எதிராகச் செயற்படுகிறவனாகவே இருக்கின்றான்.

சாத்தானுக்கும் ஏவாளுக்கும் மாத்திரமல்ல, சாத்தானுடைய வித்துக்கும் ஸ்திரீயினுடைய வித்துக்கும் இடையிலும் பகையை உண்டாக்குவதாகவும் தேவன் இவ்வசனத்தில் முன்னறிவித்துள்ளார். எனினும், இத்தீர்க்கதரிசனத்தில் “சாத்தானின் வித்தாகவும்” “ஸ்திரீயின் வித்தாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் யார் என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. ஏவாளின் பிள்ளைகளே ஸ்திரீயின் வித்தாக இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். சில வேத ஆராய்ச்சியாளர்கள் “ஸ்திரீயை” சபைக்கான அடையாளமாகவும், அவளுடைய வித்தை சபையின் விசுவாசிகளாகவும் கருதுகின்றனர். ஆனால், அடுத்த வாக்கியத்தில் இந்த வித்து “அவர்” என்று தனிப்பட்ட ரீதியாக ஒருவரைக் குறிப்பிடும் விதத்தில் இருப்பதனால், இதை ஏவாளின் வம்சத்தினராகவோ அல்லது கிறிஸ்தவ சபையின் விசுவாசிகளாகவோ கருதமுடியாது. தனிப்பட்ட ஒரு நபரே இவ்வசனத்தில் ஸ்திரீயின் வித்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். ஸ்திரீயின் வித்து யார் என்பதை தேவன் இவ்வசனத்தில் நேரடியாக அறிவிக்காதபோதிலும், ஸ்திரீயின் வித்தாக இந்த உலகத்திற்கு வந்தவர் யார் என்பதை வேதாகம சரித்திரம் நமக்கு அறியத்தருகின்றது.

உண்மையில் ஸ்திரீயின் வித்தாக இத்தீர்க்க தரிசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவர் இயேசு கிறிஸ்து என்பதை கலா.3:16 அறியத்தருகின்றது. எனினும், தமிழ் வேதாகமத்தில் “வித்து” என்னும் வார்த்தைக்குப் பதிலாக “சந்ததி”என்னும் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. ஆனால் மூலமொழியில் ‘வித்து’ என்னும் அர்த்தமுள்ள சொல்லே உள்ளது. ஆங்கில வேதாகமங்களிலும் வித்து என்னும் அர்த்தமுடைய Seed என்னும் சொல்லே உள்ளது. இவ்வசனத்தில் “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன” என்பதைச் சுட்டிக்காட்டும் பவுல், “சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே” (கலா.3:16) என்பதை அறியத்தந்துள்ளார். அதா வது, “பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்னும் வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்டபோது (ஆதி.12:3), அவனது வம்சத்தில் வரும் இயேசுகிறிஸ்துவினால் உலகிலுள்ள சகல ஜாதியினரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்னும் அர்த்தத்திலேயே அந்த வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையே பவுல் இவ்வசனத்தில் சுட்டிக் காட்டுகின்றார், எனவே, பவுல் இவ்வசனத்தில் குறிப்பிடும் “கிறிஸ்து என்னும் சந்ததி” (அதாவது மூலமொழியின்படி வித்து) ஆதி.3:16-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ள “ஸ்திரீயின் வித்தாகவே” உள்ளது.

இயேசுகிறிஸ்துவை ஸ்திரீயின் வித்தாகக் குறிப்பிடும் முதலாவது தீர்க்கதரிசனம் அவர் எவ்விதமாகப் பிறப்பார் என்பதை முன்னறிவிக்கின்றது. அதாவது, வழக்கமாக மனிதர் கருத்தரித்துப் பிறக்கின்ற விதமாக அவர் ஆணின் விந்தனுவின் மூலமாக அல்ல, ஆணின் விந்தனு இல்லாமலேயே அவர் ஒரு பெண்ணிடத்தில் பிறப்பார் என்பதை அறியத்தருவதற்காகவே அவர் ஸ்திரீயின் வித்தாக இத்தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். இத்தகைய அர்த்தத்திலேயே பவுலும் கலாத்தியர் 4:4-ல் இயேசுகிறிஸ்துவை “ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார். அக்காலத்தில் பிள்ளைகள் ஆணின் வித்தாகவே கருதப்பட்டார்கள். இதனால் பிள்ளைகள் அக்காலத்தில் பெண்ணின் வித்தாக அல்ல ஆணின் வித்தாகவே குறிப்பிடப்படுவார்கள். ஆனால், இயேசுகிறிஸ்து ஆணின் விந்தனு இல்லாத நிலையில் அற்புதமான விதத்தில் கன்னிப் பெண்ணாய் இருந்த மரியாளின் வயிற்றில் கருத்தரித்துப் பிறந்ததினால் (லூக்.1:35) அவர் ஆணின் வித்தாக அல்ல, பெண்ணின் வித்தாக ஆதியாகமம் 3:15-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்துகொள்கின்றோம். இதை நேரடியாக அறியத்தரும் விதத்தில் பிற்காலத்தில் ஏசாயா என்னும் தீர்க்கதரிசியின் மூலமாகத் தேவன், “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (ஏசா.7:14) என்று அறிவித்தார். இத்தீர்க்கதரிசனம் 700 வருஷங்களுக்குப் பின்னர் கன்னிப்பெண்ணாய் இருந்த மரியாளிடத்தில் இயேசுகிறிஸ்து பிறந்தபோது நிறைவேறியதை மத்தேயுவின் சுவிசேஷம் அறியத்தருகிறது (மத்.1:22-23). இதனால்தான், மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்ட மணப்பெண்ணாய் இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கும் முன்பே, மரியாள் கர்ப்பவதியாய் இருந்தாள் என்பதையும் (மத்.1:18), இயேசுகிறிஸ்து பிறக்கும்வரை யோசேப்பு மரியாளுடன் பாலுறவில் ஈடுபடவில்லை என்பதையும் (மத்.1:25) மத்தேயு  குறிப்பிட்டுள்ளார். எனவே ஆதி.3:15 முன்னறிவித்த விதமாக இயேசுகிறிஸ்து ஸ்திரீயின் வித்தாக, கன்னிப் பெண்ணான மரியாளின் மூலம் இவ்வுலகிற்கு வந்துள்ளார்.

ஸ்திரீயின் வித்தாக இவ்வுலகிற்கு வரும் இயேசு கிறிஸ்து “சாத்தானின் தலையை நசுக்குவார்” என்றும், “சாத்தான் அவருடைய குதிங்காலை நசுக்குவான்”என்றும் தேவன் ஆதி.3:15-ல் முன்னறிவித்துள்ளார். தேவன் சாத்தானுடன் பேசியதினால், “அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்று இவ்வாக்கியம் உள்ளது. இயேசுகிறிஸ்து மனிதனாக இவ்வுலகிற்கு வந்த நாள் முதல், சாத்தான் அவரை அழிப்பதற்கு தன்னால் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துவந்தான். இதனால்தான் இயேசுகிறிஸ்து பிறந்த காலத்தில் அவரைக் கொல்லும் நோக்கத்துடன் சாத்தான் அக்காலத்தில் யூதேயாவின் அரசனாக இருந்த ஏரோதுவைத் தூண்டிவிட்டான். அவனும் யூதருக்கு ராஜாவாகப் பிறந்துள்ள இயேசுகிறிஸ்துவை அழிப்பதற்காக, அவர் பிறந்த ஊரான பெத்லகேமில் இந்த இரண்டு வயதுக்கு உட்பட்ட சகல ஆண் பிள்ளைகளையும் கொலை செய்தான் (மத்.2:12-16).

அதன் பின்னர், இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தை ஆரம்பிக்கும்போது, அவரைக் கொல்லும் நோக்கத்துடன் தேவாலயத்தின் உப்பரிகையிலிருந்து அவரைக் கீழே குதிக்கும்படி கூறினான் (மத்.4:5-6). மேலும், இயேசுகிறிஸ்து தாம் வளர்ந்த ஊரான நாசரேத் ஜெபாலயத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்தவர்களை சாத்தான் தூண்டிவிட்டதினால் அவர்கள் “அவரை ஊருக்குப் புறம்பேதள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள்” (லூக்.4:28-29). மேலும், இயேசுகிறிஸ்து தமது சீடர்களோடு கலிலேயாக் கடலில் ஒரு படகில் சென்றபோது, அப்படகைக் கவிழ்த்து அவரைக் கொல்லும் நோக்கத்துடன் சாத்தான் கடலில் கொந்தளிப்பை ஏற்படுத்தினான். அது சாத்தானால் ஏற்படுத்தப்பட்ட கொந்தளிப்பாய் இருந்ததினாலேயே இயேசுகிறிஸ்து மனிதரைப் பிசாசுகளின் பிடியிலிருந்து விடுவிக்கும்போது அவற்றை எந்த வார்த்தைகளை உபயோகித்து அதட்டினாரோ, அதே வார்த்தைகளை உபயோகித்துக் காற்றையும் கடலையும் அதட்டி அமைதிப்படுத்தினார் (மாற்கு 4:39). இதைப்போன்ற பல சம்பவங்கள் இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நடைபெற்றன.

கடைசியாக இயேசுகிறிஸ்து தம்மையே பலியாக சிலுவையில் ஒப்புக்கொடுத்தபோது, யூத மதத்தலைவர்களையும் ரோம அரசியல் அதிகாரிகளையும் சாத்தான் தூண்டிவிட்டு, அவரைக் கொலை செய்தான். சாத்தான் “மரணத்துக்கு அதிகாரியாக இருப்பதனால்” (எபி.2:14) இயேசு கிறிஸ்துவின் மரணம் அவனால் அவருக்கு ஏற்படுத்தப்பட்டதொன்றாக உள்ளது. எனினும் இது தேவனால் அனுமதிக்கப்பட்ட காரியமாகவே உள்ளது. இதைப்பற்றியே ஆதி. 3:15-ல் “நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்று சாத்தானுக்கு சொல்லப்பட்டது. உண்மையில், இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் சாத்தான் அவருடைய குதிகாலை நசுக்கும் செயலாகவே இருந்தது. ஏனெனில் சாத்தானால் அவரை முழுமையாக அழிக்க முடியவில்லை. அவர் மரணத்தையே ஜெயித்தவராக மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.

ஆதி.3:15-ன் தீர்க்கதரிசனம் இயேசுகிறிஸ்து ஸ்திரீயின் வித்தாக பிறப்பார் என்பதை மட்டுமல்ல, “அவர் சாத்தானின் தலையை நசுக்குவார்” என்பதையும் “சாத்தானின் வித்துக்கும் ஸ்திரீயின் வித்துக்கும் ஏற்படுத்தப்படும் பகையையும்” உள்ளடக்கியுள்ளது. சாத்தானின் வித்தைச் சில வேத ஆராய்ச்சியாளர்கள் பிசாசுகளாகவும் ஏனையவர்கள் அதை அவிசுவாசிகளாகவும் கருதுகின்றனர். எனினும் ஸ்திரீயின் வித்து ஒருமையில் இருப்பது போலவே, சாத்தானின் வித்தும் ஒருமையில் இருப்பதனால், இதுவும் தனிப்பட்ட ஒரு நபரையே குறிக்கின்றது. உண்மையில் உலகின் இறுதி காலத்தில் சாத்தானால் கொண்டுவரப்படும் உலக ஆட்சியாளனான அந்திகிறிஸ்துவே சாத்தானின் வித்தாக இருக்கின்றான். இயேசுகிறிஸ்துவின் வருகையில் உலகிலிருந்து சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் உலகத்தை ஏழு வருஷங்களுக்கு ஆளுகை செய்யும் அந்திகிறிஸ்து, அவருடைய பகிரங்க வருகையில் உயிரோடே நரகத்தில் தள்ளப்படுவான் என்பதை வெளிப்படுத்தல் 19:20 அறியத்தருகின்றது.

மேலும், தற்பொழுது சுயாதீனமாக சுற்றித் திரிகிறவனாக இருக்கும் சாத்தானும் ஒருநாள் முழுமையாக அழிக்கப்படுவான். இதை அறிந்திருந்த அப்.பவுல் ரோமர் 16:20-ல் “சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்” என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில், ஆதி.3:15-ன் தீர்க்க தரிசனத்தை அடிப்படையாகக்கொண்டே பவுல் இவ்வாறு எழுதியுள்ளார். எனினும் சாத்தானின் அழிவு அவன் நரகத்திற்குத் தள்ளப்படுவதாய் இருக்கும் என்பதை வெளி.20:10 அறியத்தருகிறது. ஸ்திரீயின் வித்தாக உலகத்திற்கு வந்த இயேசுகிறிஸ்து. மறுபடியும் இவ்வுலகத்திற்கு வரும்போது, சாத்தானையும் அவனது வித்தாக எதிர்காலத்தில் வரும் அந்திகிறிஸ்துவையும் நரகத்தில் தள்ளுவார்.

2. இயேசுகிறிஸ்து எங்கு பிறப்பார்?- மீகா 5:2

இயேசுகிறிஸ்து ஸ்திரீயின் வித்தாக முன்னறிவிக்கப்பட்டு ஏறக்குறைய 4000 வருஷங்களின் பின்னர் கன்னிப்பெண்ணான மரியாளின் வயிற்றில் கருத்தரித்து ஸ்திரீயின் வித்தாகப் பிறந்தார். அவருடைய பிறப்பு நடைபெறுவதற்கு 700 வருஷங்களுக்கு முன்னர் வாழந்த மீகா என்னும் தீர்க்கதரிசி, அவர் எங்கு பிறப்பார் என்பதை முன்னறிவித்துள்ளார். இயேசுகிறிஸ்து பிறந்த பொழுது வானத்தில் தோன்றிய சிறப்பான நட்சத்திரத்தைக் கண்டு யூதருக்கு ஒரு ராஜா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்து, அவரைத் தேடி அக்காலத்தில் யூதேயாவை ஆண்டுவந்த அரசன் ஏரோதுவிடம் வானசாஸ்திரிகள் சென்றபோது, அங்கிருந்த பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மீகா 5:2ஐ ஆதாரமாகக் கொண்டே அவர் பெத்லகேமில் பிறப்பார் என்று அறிவித்தார்கள் என்பதை மத் தேயு 2:5-6 அறியத்தருகிறது. இயேசுகிறிஸ்துவின் பிறப்பிடத்தை முன்னறிவித்த மீகா இதைப்பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” (மீகா 5:2).

எருசலேம் நகருக்கு தெற்கே 5 மைல்கள் தொலைவில் உள்ள பெத்லகேம் அக்காலத்தில் மிகவும் சிறியதோர் பட்டணமாக இருந்தது. இதனால்தான் கானான் தேசத்தில் யூதா கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்ட பட்டணங்களின் பெயர்ப்பட்டியலில் பெத்லகேம் என்னும் பெயர் இடம்பெறவில்லை (யோசு15, நெகேமியா11). ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் பிரபு அங்கு பிறப்பார் என்று மீகா இவ்வசனத்தில் முன்னறி வித்துள்ளார். அக்காலத்தில் பாலஸ்தீனாவின் வடக்கில், இஸ்ரவேலின் 12 கோத்திரங்களில் ஒன்றான “செபுலோன் கோத்திரத்தினருக்கு” கொடுக்கப்பட்ட பிரதேசத்திலும் பெத்லகேம் என்னும் பெயரில் ஒரு பட்டணம் இருந்ததினால் (யோசு.19:15), அதிலிருந்து இயேசுகிறிஸ்து பிறக்கும் ஊரை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகவே மீகா இதை “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேம்” என்று குறிப்பிட்டுள்ளார். எப்பிராத்தா என்பது பெத்லகேம் என்னும் ஊரினுடைய பழைய பெயர் என்பதை ஆதி.35:16, 35:19, 48:7 போன்ற வசனங்கள் அறியத்தருகின்றன. இத் தீர்க்கதரிசனத்தில் “புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” என்னும் சொற் பிரயோகம் இயேசுகிறிஸ்து நித்தியமானவர் என்பதையும், இதனால் அவர் தேவன் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. பெத்லகேம் அற்பமான சிறிய பட்டணமாக இருந்தாலும், இது தாவீது பிறந்த ஊராக இருந்ததினால், தாவீதின் வம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவும் இவ்வூரில் பிறந்துள்ளார்.

மீகா உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி இயேசுகிறிஸ்து பெத்லகேமில் பிறப்பதற்காக மரியாளும் யோசேப்பும் 80 மைல்கள் தொலைவிலிருந்த நாசரேத் என்னும் ஊரிலிருந்து பெத்லகேமுக்குச் சென்றனர். அக்காலத்தில் இஸ்ரவேல் மக்களுடைய தேசம் ரோம சாம்ராட்சியத்தின் அடிமைத் தனத்துக்கு உட்பட்டிருந்தது. ரோம சக்கரவர்த்திகள் 14 வருஷத்திற்கு ஒரு தடவை தங்களுடைய சாம்ராட்சியத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் குடிமதிப்பு எடுப்பதை தங்களுடைய ராட்சியத்தின் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இயேசுகிறிஸ்து பிறந்த வருஷம் குடிமதிப்பு எடுக்கப்பட்டதினால் 80 மைல்கள் தொலைவில் நாசரேத் என்னும் ஊரில் குடியிருந்த இயேசுகிறிஸ்துவின் சட்டரீதியான தகப்பன் யோசேப்பு மரியாளுடன் தனது சொந்த ஊரான பெத்லகேமுக்குச் சென்றான். இல்லையென்றால் அவன் நாசரேத்திலேயே இருந்திருப்பான். எனவே, இயேசுகிறிஸ்து பிறந்த வருஷம் குடிமதிப்பு எடுக்கப்பட்டதினாலேயே அவர் பெத்லகேமில் பிறக்கக்கூடியதாய் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

உண்மையில்,”தேவனுடைய திட்டத்தையும் வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றும் ஒரு ஊடகமாக ரோம சக்கரவர்த்தி செயற்பட்டு, குடிமதிப்பு எடுக்கும் முறையை அக்காலத்தில் ஏற்படுத்தியுள்ளான்”. ஏனெனில், தமது திட்டத்தை நிறைவேற்றும் தேவன் அதற்கு ஏற்றவிதமாக உலகின் அரசியல் பொருளாதார சமூக சூழ்நிலைகளை மாற்றுகிறவராக இருக்கின்றார். லூக்கா இதைப் பற்றி எழுதும்போது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்து ராயனால் கட்டளை பிறந்தது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடி மதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள்  ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும் தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. (லூக்கா 2:1-6).

(தொடரும்)

சத்தியவசனம்