ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

மார்ச்-ஏப்ரல் 2018

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

எல்லாரையும் மீட்கும்பொருளாக தம்மையே ஒப்புக்கொடுத்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இக்கல்வியாண்டின் இறுதி மாதங்களுக்கு கடந்துவர தேவன் கிருபை செய்திருக்கிறார். பிளஸ் டூ, பிளஸ் ஒன் மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து பங்காளர் பிள்ளைகளுக்காகவும் நாங்கள் கருத்தாய் ஜெபிக்கிறோம். மேலும் உயர் கல்விக்கு தகுதித்தேர்வு எழுதுப்போகும் யாவருக்காகவும் நாங்கள் தொடர்ந்து வேண்டுதல் செய்கிறோம்.

சத்தியவசன லெந்துகால சிறப்புக்கூட்டங்கள் சிவகாசி, கோவை, திருச்சி ஆகிய இடங்களில்  கர்த்தர் ஆசீர்வாதமாக நடத்தித் தந்தார். இக்கூட்டங்கள் சிறப்புற நடைபெறுவதற்கு ஜெபித்த தங்களுக்கும், பங்கெடுத்த பங்காளர்கள் சத்தியவசன பிரதிநிதிகள் யாவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மார்ச் மாதம் முதல் சத்தியவசனத்திலிருந்து Whatsapp ஊழியத்தை துவங்க தேவன் கிருபை செய்தார். ஒவ்வொருநாளின் அன்றாட வேதவாசிப்பு, அந்த நாளுக்குரிய வேதவாக்கு தினசரி ஜெபக்குறிப்புகள் அதில் இடம் பெறுகின்றன. தாங்கள் இவ்வூழியத்தின் மூலம் பயனடைய விரும்பினால் Whatsapp No. 6380692034 ஆகும். இந்த எண்ணில் உங்கள் பெயரையும் எண்ணையும் பதிவு செய்துக்கொள்ள அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் லெந்து நாட்களுக்கான சிறப்புச் செய்திகளாக திரு.ஜி.கிறிஸ்டியன் வெய்ஸ் அவர்கள் எழுதின கெத்செமனே – ஒலிவ அழுத்தி என்ற செய்தியும், வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதிய தவிர்க்கமுடியாத தண்டனை என்ற செய்தியும், சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய நெருங்கி வந்தும் பிரவேசிக்கவில்லையே என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்திகளாக Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய சந்தேக உள்ளத்துக்கு நம்பிக்கை என்ற தலைப்பிலான செய்தியும், திருமதி சுகுணா ஜோசப் அவர்கள் எழுதிய அவதாரத்தின் மகிமையான முடிவு என்ற தலைப்பிலான செய்தியின் மறுபதிப்பும் பிரசுரமாகியுள்ளது. மேலும் மிஷனெரிகளின் கரிசனைக்கான அவசியத்தைக் குறித்து சகோ.ஆ.பிரேம் குமார் அவர்கள் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

நற்செய்தியை கொண்டாடுவோம் என்ற கருப்பொருளில் தயாரிக்கப்பட்ட இவ்வருட காலண்டரில் இடம் பெற்றுள்ள அருட்பணியாளர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து வருகிறோம். இவ்விதழில் திரு.ஜிம் எலியட் & எலிசபெத் எலியட், மற்றும் திரு.ஹட்சன் டெய்லர் ஆகியோர் ஆற்றிய அருட்பணி அனுபவங்களை சுருக்கமாக தொகுத்து வழங்கியுள்ளோம். இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் அருட்பணி ஊழியங்களுக்காக ஜெபிப்பதற்கு உங்களை உற்சாகப்படுத்தவும், விசுவாசத்தில் நிலைத்து நிற்பதற்கும் உதவி செய்வதாக. வாசகர்கள் மற்றும் பங்காளர்கள் அனைவருக்கும்  எமது மனம் நிறைந்த ஈஸ்டர் நல் வாழ்த்துக்கள்!

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்