கெத்செமனே! ஒலிவ அழுத்தி

ஜி.கிறிஸ்டியன் வெய்ஸ்
(மார்ச்-ஏப்ரல் 2018)

‘கெத்செமனே’ என்ற பதம் ‘ஒலிவ அழுத்தி’ (Olive Press) என்று பொருள்படும். இந்த வார்த்தை ஓர் பழைய அராமிக் வார்த்தையிலிருந்து வந்ததாகும். சிறைப்பிடிக்கப்பட்ட அந்த இரவில் கெத்செமனே பூங்காவில் இயேசு அடைந்த தாங்க முடியாத வியாகுலத்தோடு இந்தப் பெயர் தொடர்புடையதால் இது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

பலர் ஒலிவ அழுத்தியையும் (Olive Press) ஒலிவ ஆலையையும்  (Olive Mill) சமன்படுத்த முயல்கின்றனர். நான் இதனை ஒரு தவறு என்றே கருகின்றேன். நான் பாலஸ்தீனா நாட்டில் இவை இரண்டையுமே பார்த்திருக்கிறேன். எனவே என் மனதில் அவைகள் வேறுபாடு உடையவைகளாகவே தோன்றுகின்றன.

ஒலிவ ஆலை

ஒலிவ ஆலை என்பது திராட்சைப் பழங்களை அல்லது ஒலிவப் பழங்களை முறைப்படி பிழியக் கூடிய இடம். ஆலைகள் ஒவ்வொன்றும் தனித்தனி அமைப்புடன் கட்டப்பட்டிருக்கலாம்.  ஆனால் அடிப்படை மாதிரியும் செயல்படும் விதமும் ஒன்றாகவே இருக்கின்றன. பொதுவாக கல்லிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரு பெரிய தொட்டி அங்கே உள்ளது. இதன் உள் அடிப்பாகம் வட்டவடிவமானது. இவைகள் முற்காலத்தில் பண்ணைகளில் விலங்குகளுக்காக தீவனம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பெரிய புராதன இரும்புக் கொப்பரைக்கு ஒத்ததாயிருக்கும். இந்த தொட்டியின் உள்ளே ஒரு மிகப் பெரிய சக்கரக்கல் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. இது மாவரைக்கும் கல்லைப் போன்றது. இந்த சக்கர வடிவ கல்லின் சுற்றளவானது தொட்டியின் வட்ட வடிவ அடிமட்டத்து எல்லைக் கோட்டுக்கு ஏற்றப்படி பொருந்தியிருக்கும். கல் சக்கரத்தின் நடுவில் ஒரு துவாரம் இருக்கிறது. அதில் ஒரு நீளமான மர உத்திரத்தின் ஒரு முனை பொருத்தப்பட்டுள்ளது. இந்த உத்திரத்தின் மறு முனையில் ஒரு விலங்கு (கழுதையோ, காளையோ, அல்லது ஒட்டகமோ) கயிற்றினால் கட்டப்பட்டு சுற்றி, வட்டமாக, மெதுவாக நடந்து வரும்போது, இந்த சக்கரம் இயங்குகிறது. இப்பெரும் கல் சக்கரம் தொட்டியினுள் சுழன்று சுழன்று வரும்போது, ஒலிவப்பழங்கள் பிழியப்பட்டு அவை சின்னாபின்னமாக்கப்பட்டு அவைகளிலுள்ள எண்ணெய் வெளிப்படுகிறது. இதே முறையைப் பயன்படுத்தி திராட்சைப் பழங்களைப் பிழிந்து அவற்றின் ரசம் எடுக்கப்படுகிறது. தொட்டியின் அருகில் சற்று தாழ்ந்த நிலையில் ஒரு தொட்டி உள்ளது. பிழியப்பட்ட எண்ணெய் இந்த தொட்டியில் வழியும் படியாகக் குறிப்பிட்ட மட்டத்தில் ஒரு வடிகால் உள்ளது.

ஒலிவ அழுத்தி

இந்த செயல் முறையைத் தொடர்ந்து சிதைக்கப்பட்ட அந்த ஒலிவப் பழங்கள் கோலால் பின்னப்பட்ட கூடைகளில் இடப்படுகிறது. இந்த கூடைகள் பரந்த பெரிய சலவைத் தொட்டிகள் போன்றவையாகும். இவைகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஒலிவ அழுத்தியின் அடியில் வைக்கப்பட்டு கிடைக்கக்கூடிய கடைசி சொட்டு எண்ணெயையும் பிழிந்தெடுக்கப்படுகிறது.

ஒலிவ அழுத்தியானது தொழில் நுட்பமான செயல் முறையைக் கொண்டது. இதில் ஒரு பிரமாண்டமான எடை கல்லானது (Weight) சிதைக்கப்பட்ட பழங்களைக் கொண்ட வைக்கோலினால் செய்யப்பட்ட கூடைகளின் மீது வைக்கப்படுகிறது. நீளமும் கனமும் உடைய ஒரு உத்திரமானது அந்த பிரமாண்டமான எடைக் கல்லின் ஒருமுனையில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த உத்திரத்தின் அதிதூரமுள்ள மறுமுனையில் ஒரு டன் அல்லது கூடுதலாகவோ ஒரு எடை தொங்கவிடப்படுகிறது. இந்த உத்திரமானது தொழில் நுட்ப முறையில் இயக்கப்படும்போது, எடையானது, பன்மடங்கு இயந்திர உபாயத்தால் ‘நெம்புகோல்’ உத்திரத்தில் பெருகுகிறது. குவியலாக கூடைகளில் வைக்கப்பட்ட பழக்கூழினை கடைசி ஒரு ‘அவுன்சு’ எண்ணெய் இருக்கும் வரை கீழே அழுத்தி பிழிந்து வெறியேற்றி வடிகால் வழியாய், அருகில் உள்ள கல் தொட்டியில் விழச்செய்கிறது. கடைசிச் சொட்டு வரை பிழியப்படும்படி இந்த கூடைகள் இந்த எடையினால் பல நாட்கள் அழுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

கெத்செமனே உண்மையில் இயேசுவின் ஒலிவ அழுத்தியாகும். இந்த கெத்செமனேயில்தான் மனுகுலத்தின் பாவபாரமும், குற்றமும் பிறருக்காக அவர்மேல் முற்றிலுமாக சுமத்தப்பட்டதால் அவர் நொறுக்கப்பட்டு மரிக்க வேண்டியதாயிற்று. மனுக்குலத்தின் எல்லா காலத்திலுமுள்ள எல்லா பாவமும் குற்றமும் ஒரு பெரும் பாரமானது. இது மனித கற்பனையினால் எண்ணிப்பார்க்க முடியாத மிகுந்த பாரமாகும். சரியாக கூறுவோமேயானால் அந்த பாரம் அவரை தரைமட்டத்திற்கு அழுத்திவிட்டது.

இந்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந் ததால் “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையில் விழுந்தது” (லூக்.22:44). அவரின் படுவேதனையில் அவர் “தரையில் விழுந்து, அந்த வேளை தம்மை விட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டு: அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்த பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும், .. என்றார்” (மாற்.14: 35,36). ஆனால் இந்த நெருக்கத்திலும் பொறுக்கமுடியா துன்பத்திலும் அவர் உணர்ந்து கூறியது: “ஆகிலும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி அவரைப் பலப்படுத்தினான்.

அவர் நம் பாவத்தை சுமந்தார். குற்றத்தினால் வரும் பயங்கரமான பாரமும் தாங்க முடியாத வியாகுலமும் சாதாரண மனித சரீரத்தினால் சகிக்கும் தன்மைக்கு அப்பாற்பட்டதுமான பாரத்தை அவர் தன் சரீரத்தில் சுமந்தார் என்பதை வேதாகமம் தெளிவாகத் தெரிவிக்கிறது.

‘கெத்செமனே’யையும், ‘கொல்கொதா’வையும் ஒலிவ அழுத்தியுடன் இணைத்து மனக்கண் முன் நிறுத்தும்போது, அவர் கூறிய வார்த்தைகளின் மெய்யான முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். “நான் முழுக வேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்” (லூக்.12:50).

ஒரு குவியல் ஒலிவ பழக்கூழை பெரும் பாரமான ‘ஒலிவ அழுத்தியின்’ கீழ் வைக்கப்பட்டு அதின் ஒவ்வொரு சொட்டு எண்ணெயையும் வெளியே வரவைப்பதை என் மனக்கண்முன் கொண்டுவராமல் நான் கெத்செமனேயை பற்றி படிப்பதும் அல்லது தியானிப்பதுமில்லை. நாம் கெத்செமனேயையும் கொல்கொதாவையும் வைத்து இவ்விதம் ஜெபிப்போம்.

“ஆட்டுக்குட்டியானவரே, இந்தக் காட்சிகளை என் கண்முன் கொண்டுவாரும்; நான் ஒவ்வொரு நாளும் இதன் நிழலை என்மேல் வைத்து நடக்க எனக்கு உதவும்” ஆமென்.

சத்தியவசனம்