தவிர்க்க முடியாத தண்டனை

எம்.எஸ்.வசந்தகுமார்
(மார்ச்-ஏப்ரல் 2018)

கிறிஸ்தவ மார்க்கத்தின் மையமாக இருப்பது இயேசுகிறிஸ்துவின் சிலுவைப்பலியாகும். மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்த தேவனாகிய இயேசுகிறிஸ்து, மனிதரை மீட்பதற்காகத் தம்மையே பாவப் பரிகார பலியாகச் சிலுவையில் ஒப்புக்கொடுத்தார் என்பதே பரிசுத்த வேதாகமத்தின் முக்கிய செய்தியாய் உள்ளது (1தீமோ.1:15). எனினும், இயேசுகிறிஸ்து தேவனாக இருப்பதனால் கொடூரமான சிலுவை மரணத்திற்கு உட்படாத நிலையில் மனிதர்களை மீட்டிருக்க முடியாதா என்னும் கேள்வி தற்காலத்தில் பலரது உள்ளத்தில் உள்ளது. இதனால், இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிக்க வேண்டியதன் அவசியம் யாதென்பதை நாம் இக்கட்டுரையில் ஆராய்ந்து பார்ப்போம். உண்மையில், இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் எவ்விதத்திலும் தவிர்க்க முடியாத ஒரு தண்டனையாகவே உள்ளது.

வேதாகமம் சுட்டிக்காட்டுகின்றவிதமாக இயேசுகிறிஸ்து சர்வவல்லமையுள்ள தெய்வமாக இருப்பதனால், அவர் கொடூரமான சிலுவை மரணத்தைத் தவிர்த்து, வேறுவிதமாக மனிதரை இரட்சித்திருக்கலாம். அவரால் “செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை” (எரே. 32:17) என்று வேதாகமம் கூறினாலும், அவர் சிலுவை மரணத்தைத் தவிர்த்து வேறுவிதமாக மனிதரை இரட்சிக்காமல், தம்மையே பாவப் பரிகார பலியாக்கியுள்ளார். ஏனெனில், மனிதருடைய பாவத்தைத் தம்மீது சுமந்தவராக இயேசு கிறிஸ்து சிலுவையில் பாவப்பரிகார பலியாக மரித்ததை எவ்விதத்திலும் தவிர்க்க முடியாதிருந்தது. இது ஏன் என்பதை நாம் அறிந்து கொள்வதற்கு நாம் அவருடைய தன்மையையும், அவருடைய நீதிச் சட்டத்தையும், அவருடைய அன்பையும் சரியான விதத்தில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

வேதாகமம் அறியத்தருகின்ற விதமாகத் தேவன் பூரணமான பரிசுத்தராக இருக்கின்றார். அவர் தம்மை மக்களுக்கு வெளிப்படுத்தும்போது தாம் பரிசுத்தமானவராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் (லேவி.11:44, 11:45, 19:2, 22:32, ஏசா.57:15, எசே.39:27, ஓசி.11:9, 1பேதுரு 1:16). இதனால்தான், பரலோகத்தில் இருக்கும் ஜீவிகள் அவரை “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன” (ஏசா.6:3, வெளி.4:8). வேதாகம கால மனிதர்களும் அவரைப் பரிசுத்தராகவே அறிந்திருந்தனர் (2ராஜா.19:22, யோபு.6:10, சங்.22:3, 19:22, 78:41, 89:18, நீதி.9:10, 30:3, ஏசா.40:25, எரே.50:29, 51:5, எசே.39:7). தேவனுடைய நாமமும் பரிசுத்த மானதாகவே இருந்தது (லேவி.20:3, 1நாளா. 29:16, சங்.97:12, 106:47, 145:21, எசே.36:20-23, ஆமோ.2:7).

வேதமாகம மொழிவழக்கில், தேவன் பரிசுத்தமானவர் என்று கூறும்போது, அவர் ஏனைய ஜீவிகளிலிருந்து வேறுபிரிக்கப்பட்டவர், வித்தியாசமானவர், புனிதமானவர், பூரணமானவர், பாவத்தினால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாதவர், அசுத்தமற்றவர் என்று பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. எனினும், “பாவத்திலிருந்து அவர் வேறுபிரிக்கப்பட்டவர்” என்னும் அர்த்தத்திலேயே அவர் பரிசுத்தமானவர் என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார் (W.Grudem, Systematic Theology, p.201). மேலும், “பரிசுத்தமே தேவனுடைய சகல தன்மைகளையும் செயல்களையும் நிர்ணயிக்கும் காரணியாகவும் உள்ளது” (P.Enns, The Moody Handbook of Theology, p. 193). இதனால், பாவம் அவர் பார்வையில் அருவருப்பானதாக இருப்பதோடு, இது அவரால் சகிக்கமுடியாத காரியமாக அவருக்கு கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது (சங்.7:11, ஆப.1:13, ரோ.1:18, எபே.5:6). “பாவத்தின் மீது தேவன் கோபமாயிருக்கின்றார் என்பது வேதாகமம் அறியத்தரும் சத்தியமாய் உள்ளது” (L.Morris, The Atonement: Its Meaning and Significance, p. 154).

தேவன் பூரணப் பரிசுத்தராக இருப்பதனால், அவருடைய நீதிச் சட்டம் பாவம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. “பாவத்தின் சம்பளம் மரணம்” என்பது தேவனுடைய மாறாத நீதிச் சட்டமாக இருப்பதனால் (ரோ.6:23) மானிட பாவம் மரணத்தினால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக இருக்கின்றது. “பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசே.18:20) வேதாகமம் கூறுகிறது. இதனால்தான், தம்முடைய கட்டளையை மீறிய முதல் மனிதனுக்கு, அவன் விலக்கப்பட்ட கனியைப் புசித்தால் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று தேவன் தெரிவித்திருந்தார் (ஆதி.2:17,3:3). ஆனாலும், முதல் மனிதன் தேவனுடைய கட்டளையை மீறிப் பாவம் செய்ததினால் (ஆதி.3), அவனும், அவனுடைய வம்சத்தினரான உலக மாந்தர் அனைவரும் (அப்.17:26) அவனது பாவ சுபாவத்தை உடையவர்களாகவும் மரணமடைபவர்களாகவும் இருக்கின்றனர். இதனால்தான், “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது” (ரோ.5:12) என்று வேதாகமம் கூறுகிறது.

தேவன் பூரணப் பரிசுத்தராக இருப்பதனால், பாவியான மனிதர் மரணத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றனர். ஆனாலும், தேவன் அன்புள்ளவராகவும் (1யோவா.4:8) மனிதரை நேசிப்பவராகவும் இருப்பதனால் (யோவா.3:16) மனிதருடைய மரணம் அவர் விரும்பாத துயரகரமான சம்பவமாகவே உள்ளது (எசே.18:20, 2பேது.3:9). உண்மையில், தேவன் பரிசுத்தராக இருப்பதனால் பாவியைக் கட்டாயம் தண்டிக்க வேண்டும். ஆனால் அவர் அன்புள்ளவராகவும் இருப்பதனால் மனிதரைத் தண்டிக்காமல் மன்னிக்கவும் வேண்டும். எனினும், தேவன் பரிசுத்தமானவராகவும் நீதியுள்ளவராகவும் இருப்பதனால் பாவியைத் தண்டிக்காமல் மன்னிக்க முடியாத நிர்ப்பந்தமான நிலைமையிலும் இருக்கின்றார். ஏனென்றால், பாவம் தண்டிக்கப்படாமல் மனிதரை தேவன் மன்னித்தால் அவர் பரிசுத்தமானவராக இருக்கமுடியாது. இதனால்தான், தம்முடைய பரிசுத்தத்தையும் நீதியையும் எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்காமல் பாவியான மனிதனை நேசிக்கும் தேவன், பாவத்துக்கான தண்டனையை தாமே சிலுவையில் ஏற்றுக்கொண்டு, நமக்காகப் பாவப் பரிகாரப் பலியாக மரித்தார்.

தேவன் பூரணப் பரிசுத்தராக இருப்பதனால், பாவம் தண்டிக்கப்படவேண்டியது தவிர்க்க முடியாத செயலாய் உள்ளது. அவருடைய நீதிச் சட்டம் பாவத்திற்கு மரண தண்டனையைக் கொடுப்பதனால், பாவியான மனிதன் மரணத்தினால் தண்டிக்கப்பட வேண்டியவனாக இருக்கின்றான். ஆனாலும் தேவன் மனிதரை நேசிப்பதனால், மனிதரை அவர் தண்டிக்காமல், மனிதருடைய தண்டனையைத் தாமே ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தார். பாவத்திற்கான தண்டனை தவிர்க்கப்பட முடியாததாய் இருந்தாலும், நாம் பெறவேண்டிய தண்டனையை இயேசுகிறிஸ்து பெற்றதினால் அவர் மேல் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால்தான், “நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது” (1யோவா.4:10) என்று வேதாகமம் கூறுகிறது.

சத்தியவசனம்