நெருங்கி வந்தும் பிரவேசிக்கவில்லையே!

சகோதரி சாந்தி பொன்னு
(மார்ச்-ஏப்ரல் 2018)

நமது நாட்டின் நெருக்கமான காலப்பகுதியில் ஊருக்குச் செல்லுவதற்காக மிகுந்த ஆபத்துக்கள் மத்தியில் பிரயாணத்தைத் தொடர்ந்தோம். திரும்பிவிடலாமா என்று மனம் தளரத்தக்கதாக ஏராளமான சம்பவங்கள்; என்றாலும், ஏறத்தாழ கிட்ட நெருங்கி வந்துவிட்டிருந்தோம். இன்னும் சற்றுத்தூரம்தான். அந்தச் சமயம் பார்த்து, பெரியதொரு கலகம் ஏற்பட்டது; நின்ற இடமும் தெரியாமல் சிதறி ஓடவேண்டியதாயிற்று. சென்றடைய வேண்டிய இடத்தைக் கிட்ட நெருங்கியும், எங்களது பிரயாணத்தை முடிக்க முடியவில்லை. உயிர் தப்பினால் போதும் என்று திரும்ப வேண்டிய சூழ்நிலை. ஆனாலும் மனம் தளரவில்லை. எப்படியாவது எங்கள் வீடுகளுக்குப் போகவேண்டும், எங்கள் அம்மா அப்பா உறவுகளின் அரவணைப்புக்குள் சென்றுவிட வேண்டும், அங்கேதான் நமக்கு ஆறுதலும் பாதுகாப்பும் கிடைக்கும் என்ற வைராக்கியம் எங்களை முன்தள்ளியது. காடுகளுக்குள் ஒளிந்து நடந்து, ஒரு பாதையைக் கண்டுபிடித்து இறுதியில், ஊருக்குள் சென்றோம். எங்கள் வீட்டைத் தூரத்திலே கண்டபோதே, மகிழ்ச்சியில் நாங்கள் அழுதேவிட்டோம். இவற்றை அனுபவித்தவர்களுக்குத்தான், இதன் வலியை உணரமுடியும்.

அன்றுமட்டும் விடாப்பிடியாய் நாங்கள் வீடு போய்ச்சேர்ந்திராவிட்டால் எங்களுக்கு எதுவும் நேர்ந்திருக்கலாம். இப்படியாக எங்களை முன்னே உந்தித்தள்ளியது எது? அது எங்களது வீடு, அங்கே எங்களது பெற்றோர் இருக்கிறார்கள், அதுவே எங்களுக்குப் பாதுகாப்பின் இல்லம் என்ற எண்ணமே காரணம். ‘அது எங்கள் வீடுதான். ஆனாலும் போகமுடியாதே’ ‘வழியில் ஆபத்து இருக்கிறதே’ என்ற எண்ணங்களையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டோம். ‘எப்படியாவது சொந்த வீட்டுக்குப் போய்விடவேண்டும்’ என்ற வைராக்கியம், அதுவே எல்லாத் தடைகளையும் தாண்ட எங்களுக்குப் பெலன் தந்தது.

வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது எது?

அன்றைய இஸ்ரவேல் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியாமற் போனது ஏன்? அவர்கள் முன்னெடுத்த பயணத்தை, கானான் என்ற இலக்கை அவர்கள் அடையாமற்போனது ஏன்? ஒரு பயணத்தை, அல்லது ஒரு இலக்கைச் சென்றடைய முடியாதபடி, அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியாதபடி அநேகர் தோற்றுப்போவதன் காரணம் என்ன? சில சொற்கள் உண்டு. ‘ஆனாலும், அன்றியும், என்றாலும்’ இப்படிப்பட்ட தொடர்சொற்களை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பது, நமது வெற்றி தோல்வியில் பெரும் பங்குவகிக்கிறது என்றால் மிகையாகாது. ‘போகலாம், ஆனால் அந்த வழி சரியில்லை.’ ‘செய்யலாம். என்றாலும் இதில் பலன் கிடைக்காது’ என்றெல்லாம் சூழ்நிலைகளைப் பார்த்துப் பின்வாங்கி இவற்றை எதிர்மறையாய் அறிக்கையிட்டு தோற்றுப்போய்விடுகிறோம். அதே சொற்களை அதே சூழ்நிலையில் நேர்மறையாய் பயன்படுத்தும்போது, ‘கடினம்தான், என்றாலும் நான் போவேன்’ என்ற சொல்லும்போது நமக்குள்ளேயே தைரியம் உண்டாகிறது.

ஆனால் ஒரு விஷயம், நாம் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் தேவசித்தமாய் இருத்தல் கட்டாயமான கட்டாயம். கர்த்தர் நம்மை நடத்துவாரென்றால், நாம் சென்றடையவேண்டிய இலக்கு தேவன் நமக்கு அருளியது என்பது நிச்சயமானால், ‘ஆனால், அன்றியும்’ என்று எதிர்மறைப் பேச்சுக்களுக்கு இடமளிக்க வேண்டிய அவசியமே இல்லையே!

இஸ்ரவேலின் இழப்பு

மக்களின் முறுமுறுப்பையெல்லாம் பொறுத்துக்கொண்டு, பத்துக் கற்பனைகளைக் கிருபையாய் கொடுத்து, எகிப்திலிருந்து தங்களை விடுதலையாக்கிய தேவனை மறந்து கன்றுக்குட்டியைக் கொண்டாடியதையும் பொறுத்தருளி, தாமே தமது மக்களுடன் வாசம்பண்ண விரும்பி, ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தின் கிருபாசனத்திலிருந்து மக்களை வழிநடத்தி, மக்களின் வாழ்க்கைக்கு அவசியமான ஒழுக்கவிதிகளை நியாயப்பிரமாணங்களை அருளி, தம்மை ஆசரிக்கும் விதிமுறைகளையும் பண்டிகைக் கொண்டாட்டங்களின் முக்கியத்துவங்களையும் கற்பித்து, எவ்வளவாய் கர்த்தர் தமது மக்களைக் கானானை நோக்கி நடத்தி வந்தார் என்பதையெல்லாம் யாரால் மறுக்கமுடியும்? அது சரித்திர உண்மை.

நெருங்கி வந்தும்

நீண்ட பயணத்தின் பின்னர் இப்போது கானானுக்குச் சமீபமாக பாரான் வனாந்தரத்துக்கு வந்துவிட்டார்கள். அப்பொழுது கர்த்தர் கோத்திரத்துக்கு ஒருவனாக பன்னிருவரைத் தெரிந்து, கானானைச் சுற்றிப்பார்த்து வரும்படி அனுப்ப மோசேயைப் பணித்தார். கானான் எப்படிப்பட்டது, அங்கே யார் இருக்கிறார்கள் என்று கர்த்தருக்குத் தெரியாதா, என்ன? என்றாலும், அவர்களுடைய பதிலுரை, கர்த்தர்மீது அவர்கள் வைத்துள்ள நமபிக்கைக்கு அடையாளமாகும் அல்லவா! அப்படியே பன்னிருவரும் போனார்கள் (இந்தச் சங்கதிகளை எண்.13,14ம் அதிகாரங்களில் காணலாம்). மோசே கற்பித்தபடியே அந்தந்த வழிகளில் சென்று, சுற்றிப்பார்த்து, அந்தத் தேசத்துத் திராட்சைக்குலையுடன் ஒரு கொடியையும் அறுத்து, மாதுளம்பழம் அத்திப்பழங்களையும் கொண்டுதான் திரும்பினார்கள்.

“ஆனாலும்”

திரும்பிவருகிறவர்களைக் கண்டதும், செய்தி கேட்க மக்கள் திரண்டு ஓடிவந்திருக்க மாட்டார்களா? வந்தவர்களில் பத்துப்பேர் சொன்னது என்ன? “நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம். அது பாலும் தேனும் ஓடும் தேசந்தான். இது அதினுடைய கனி. இத்துடன் நிறுத்தியிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும்! கதை தொடருகிறது. “ஆனாலும்” இங்கேதான் எல்லாம் தலைகீழாகத் திரும்புகிறது. “எல்லாம் நல்லதுதான். ஆனாலும்” அங்கே பலதரப்பட்ட மனிதர், அதிலும் இராட்சதப் பிறவியான மனிதரும் இருக்கிறார்கள். அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மால் கூடாது” என்று சொல்லி ஜனங்களிடையே துர்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஜனங்கள் கூக்குரலிட்டுப் புலம்பி மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கலகம்பண்ணி, தங்கள் மனைவி பிள்ளைகளைக் கொல்லும்படிக்கா கர்த்தர் இந்தத் தேசத்துக்குக் கொண்டு வந்தார் என்று கர்த்தருக்கு விரோதமாகவும் எழும்பினர்.

அவ்வேளையில் காலேப்பும் யோசுவாவும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, “நாங்கள் போய் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். அந்தத் தேசத்து மக்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். கர்த்தர் நம்மோடே இருக்கிறார். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால் அவர் நம்மைக் கொண்டுபோய் சேர்ப்பார்” என்று சொல்லியும் மக்களோ செவி கொடுக்கவில்லை. நடந்தது என்ன?

கர்த்தர் கோபங்கொண்டு இஸ்ரவேலை அழித்துப் போடுவதாகச் சொல்ல, மோசே மன்றாடி ஜெபிக்க, இறுதியில், “நீங்கள் என் செவிகேட்கச் சொன்ன பிரகாரம் செய்வேன். காலேப், யோசுவாவைத் தவிர, இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும். ஆனால், கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் பிள்ளைகளை நான் அதில் பிரவேசிக்கப் பண்ணுவேன் என்றார் கர்த்தர்.

சிந்திக்க!

சில காரியங்களை நாம் சிந்தித்துப்பார்ப்பது நல்லது. ஒன்று, இந்தப் பெருங்கூட்டத்தாரில், இந்தப் பன்னிருவரும்தான் கானான் தேசத்துள் கால் வைத்த முதல் மனிதர். எத்தனை பெரிய பாக்கியம் பெற்றவர்கள் இவர்கள்! வாக்குப் பண்ணப்பட்ட சொந்த தேசத்துள் சென்று நடந்து அதைப் பார்த்து ரசிக்க இவர்களுக்குத்தான் தருணம் கிடைத்தது. அதன் கனிகளை பறிக்கும்போது தாங்களும் ருசித்தார்களோ என்னவோ! ஆனால், போய் வந்த இவர்களில் பத்துப்பேரும் திரும்ப அந்தத் தேசத்தில் கால் வைக்கவேயில்லை.

அடுத்தது, இவர்கள் அத்தேசத்தில் நாற்பது நாட்களாகச் சுற்றித்திரிந்தபோது இந்த இராட்சத மனிதர் இவர்களைக் காணவில்லையோ? அது போதாதென்று வந்து கதை அளக்கிறார்கள். இவர்கள் அவர்களுக்கு முன்பாக வெட்டுக்கிளிகளைப்போல இருந்தார்களாம். அது போதாதென்று, அவர்களின் பார்வைக்கு இவர்கள் வெட்டுக்கிளிகள்போலத் தெரிந்தார்களாமே, அது இவர்களுக்கு எப்படித் தெரிந்தது?

அடுத்தது, நாற்பது நாட்கள் போய்வந்து துர்ச்செய்தி பரப்பிய இவர்களைப் பார்த்துக் கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் திரும்பிச் சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம் பண்ணுங்கள். என்ன பரிதாபம்! இவ்வளவு தூரம் வந்து கானானை நெருங்கியும், திரும்பவும் வனாந்தரத்தில் அலைய நேரிட்டது. நாற்பது நாட்களுக்குப் பதில் நாற்பது வருடங்கள் இவர்கள் வனாந்தரத்தில் அலைந்தார்கள். அந்தக் காலப்பகுதியில் இந்தச் சந்ததியினர் இறந்து போயினர். இப்போ அவர்களுடைய அடுத்த சந்ததியே பயணத்தைத் தொடர்ந்தது. நடை தூரத்தில் போய்விடக்கூடிய தேசத்தைக் கிட்டி நெருங்கியும், அவர்களால் அதற்குள் பிரவேசிக்க முடியவில்லை.

மேலும், வனாந்தரத்தில் சுற்றித் திரிந்த இந்த நாட்களில்தான், இவர்கள் தண்ணீருக்கு முறுமுறுக்க, கர்த்தர் மலையுடன் பேசச்சொல்ல, கோபங்கொண்ட மோசே கன்மலையை அடிக்க, தண்ணீர் வந்தது. ஆனால், மக்களில் கொண்ட கோபத்தில் தேவனுடைய வார்த்தையை விசுவாசமற்போனதினாலே மோசேயும் கானான் பிரவேசத்தை இழந்தார்.

ஒரு “ஆனாலும்” கொடுத்த பயங்கர விளைவுகளைப் பார்த்தீர்களா? யோசுவாவும் காலேப்பும், யார் இருந்தாலும், நாம் போய் சுதந்தரிப்போம், கர்த்தர் நம்முடன் இருக்கிறார் என்றனர்; அப்படியே சென்றனர். மற்றப் பத்துப் பேருமோ, “ஆனாலும்” என்று சொல்லி தாமும் கெட்டு, ஜனங்களுக்கும் தீவினையை வருவித்துக்கொண்டார்கள்.

சூழ்நிலைக் கிறிஸ்தவர்கள்

இன்றும் அநேகர் பல இலக்குகளை, தமக்கே சொந்தமானவற்றை அடையமுடியாமல் தோற்றுப்போகக் காணரமே இதுதான் என்றால் மிகையாகாது. முதலாவது நம்மை நடத்துகிறவர் யார், எதற்காக நம்மை நடத்துகிறார், இதன் முடிவுதான் என்ன என்பதையெல்லாம் நாம் நிச்சயப்படுத்தவேண்டும். நாம் தேவனால் நடத்தப்படுகிறோம் என்பதற்காக நமக்குத் தடைகள் வராது என்பது அர்த்தம் அல்ல. இன்னும் சொன்னால், கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்பதே, நமது எதிரிக்கு அதிக ஆத்திரத்தைக் கொடுக்கின்ற விஷயம். அவன் விடுவானா? துரத்துவான், சந்தேகங்களைக் கிளப்புவான். இதுவரை நாம் நடந்துவந்த பாதைகள், கர்த்தர் நம்மை நடத்திய அதிசயமான வழிகள் எல்லாவற்றையும் மறக்கச் செய்வான். நாம் அதிகமாகத் தவறிப்போவதன் காரணம், நாம் சூழ்நிலைக் கிறிஸ்தவர்களாய் இருப்பதுவேதான் என்றால் மறுக்கமுடியுமா?

ஒடுக்கமான பாதையைத் தவிர்த்து விசாலமான பாதைகளில் செல்லக்கூடிய சோதனைகள் என்று எத்தனை! எத்தனை!!. அதனால் கிறிஸ்தியான் பின்வாங்கவில்லை. விழுந்தாலும் எழுந்து ஓடினான். இறுதியில் மோட்சத்தின் வாசலை அடைந்தான். இதுதான் ஒரு கிறிஸ்தவனின் வெற்றி! மாறாக, நாம் யாரை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை மறந்து, வழியில் காண்கின்ற சந்திக்கின்ற எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்கினால் முடிவு பரிதாபமே!

கல்வாரியைக் கண்டபின்பும்

வருடா வருடம் ஆண்டவர் பட்ட பாடுகள், அநியாயத் தீர்ப்புகள், காட்டிக்கொடுப்புகள், அடிகள், துன்புறுத்தல்கள், கொடிய மரணம் ஆகிய எல்லாவற்றையும் விடாமல் நாம் நினைவு கூருகிறோம். நல்லது. ஆனால், அந்தக் கல்வாரிக் கூடாக, அதற்கு அப்பால் ஆண்டவருடன் வாழுகின்ற நித்தியத்தை நோக்கிய நமது பயணம் உறுதியானதும், ஸ்திரமானதுமாய் இருக்கிறதா என்பதே கேள்வி. ‘எப்படியும் மோட்சம் சேர வேண்டும், ஆனாலும் சிலுவைப் பாதை கடினம்’ என்று சொல்லுவேனா? ‘எல்லாம் நல்லதுதான், அன்றியும் சில காரியங்களை நான் முடிக்காமல் எப்படி இவ்வழி செல்லுவது’ என்று தயங்குவேனா? நம்மை அழைத்தவர் யார்? நமது வாழ்வின் நோக்கம் என்ன? இவ்வுலகில் நமக்கு என்ன வேலை என்பதையெல்லாம் நாம் வேதாகமத்தின் அடிப்படையில் சிந்திப்போமானால், எந்தத் தடையும் நம் ஓட்டத்தை, நமது இலக்கை அடைகின்ற வைராக்கியத்தைச் சிதைக்கவே முடியாது. ‘தடைகள் உண்டுதான், ஆனாலும் என் இயேசு என் முன்னே செல்லுகிறார்’ என்று சொல்லலாமே. ‘பாதை ஒடுக்கம்தான், ஆனால் முடிவில் நித்திய ஆனந்தம்’ உண்டு என்று முன்செல்லலாமே! ‘என் சிலுவை பாரம்தான். ஆனால் தம் சிலுவையைச் சுமந்தவர் என்னை அறிவார்’ என்று தைரியமாய் முழங்கலாமே.

“முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” (மத்.24:13) ஓடி ஓடி, பல பெரிய காரியங்களையெல்லாம் கர்த்தருக்காகச் செய்து, பலரை இரட்சிப்பின் பாதையில் வழிநடத்தி, எல்லாம் செய்துவிட்டு, இறுதிய நேரத்தில் பின் வாங்கிப்போவோமானால் நம்மைப்போல பரிதபிக்கக்கூடியவர்கள் யார்? நெருங்கி வந்தபின்பு, இழந்துபோவது துக்ககரமான காரியம். இழந்து போனால், மரணம் நேர்ந்துவிட்டால் பின்னர் நமக்குத் தருணம் ஏது?

பின்வாங்குவது இலகு. விட்டு ஓடுவது அதிலும் இலகு. உலகத்தின் அரவணைப்புக்குள் சுகித்திருப்பது மிகமிக இலகு. ஆனால் முடிவு என்ன?

கடைசி மட்டும் ஓடிவந்து, இறுதி நேரத்தில் நம்முடைய நித்திய வீட்டை நாம் இழக்கலாமா?

மோசமான சூழ்நிலைகளைக் கண்டு பயந்து, நித்தியத்தை வாக்களித்தவரைச் சந்தேகிக்கலாமா?

அன்றைய இஸ்ரவேல் சந்தித்த இழப்பை நாமும் சந்திக்கவேண்டாம். கல்வாரி அண்டைக்கு வந்தபின்பும் சந்தேகம் ஏன்?,

நம்முடன் பரிசுத்தாவியானவர் இருக்கிறாரே. அவர் நடத்துவார். உலகப் பார்வையில் பயணம் நீண்டதாகத் தெரிந்தாலும், தூரம் இன்னும் கொஞ்சம்தான். சோதனைகள் பலமானாலும், என் பரம தகப்பன் எனக்காகக் காத்து நிற்கிறார் என்ற நிச்சயத்துடன் நாம் ஓடுவோம். நாம் பெலனற்றவர்களாய், சத்துருக்களாய் இருந்தபோதே தமது ஒரே பேறான குமாரனை நமக்காக ஏகபலியாகத் தந்த பரமபிதா, எந்த நிலையிலும் நம்மைக் கைவிடுவாரா? பின்னர் ஏன் இந்த, “ஆனாலும்”?

“ஆதலால், இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத் தக்கவைகள் அல்ல.” (ரோமர் 8:18). பின்னர் சூழ்நிலைகளின் மிரட்டலுக்கு ஏன் மிரளவேண்டும்? “மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள். காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2கொரி.4:17-18). எனவே நாம் சூழ்நிலைக் கிறிஸ்தவர்களாக வாழாதிருப்போமாக.

கிறிஸ்துவின் நாமத்தில் சூழ்நிலைகளை வெற்றிகொண்டு, கிறிஸ்துவை மாத்திரம் நோக்கி, தடைகளைத் தாண்டி, அவரண்டை சேரும்படி ஒவ்வொரு நாளும் அவருக்குள் பெலமடைய தேவ ஆவியானவர் நமக்குப் பெலன் அருளுவாராக. ஆமென்.

சத்தியவசனம்