Dr.உட்ரோ குரோல்
(மார்ச்-ஏப்ரல் 2018)

சீர்திருத்த செம்மல் மார்டின் லூத்தரின் ஆரம்ப வாழ்க்கையில் அவருக்கு அநேக சந்தேகங்கள் இருந்தன. அவர் அதிக மனச்சோர்வடைந்திருந்தார். விட்டென்பர்க் நகரத்தில் ஆலயத்தின் கதவில் 95 நியமங்களை ஆணியறைந்தபின் அவருக்கு அநேக இன்னல்கள் உண்டாயிற்று. அவர் மிகுந்த சந்தேகத்துடனும் விரக்தியுடனும் இருந்ததைக் கண்ட அவருடைய மனைவி கேத்தரின் அம்மையார் ஒருநாள் தலைமுதல் கால்வரை கருப்பு உடை தரித்துக்கொண்டார். பொதுவாக ஓர் இறுதிச் சடங்கு நிகழ்வின்பொழுது மட்டுமே இவ்விதமாக அணிந்துகொள்வார்கள். இதைக்கண்ட லூத்தர் ஏன் இவ்விதமான அடக்க ஆராதனை உடை உடுத்தியிருக்கிறாய்? என்று கேட்டார். நீங்கள் செயல்படும்விதத்தைப் பார்த்தால் தேவன் இறந்துவிட்டார் என்று தெரிகிறது என்று பதிலளித்தார். லூத்தர் அவர் குறிப்பிடும் செய்தியைப் புரிந்துகொண்டார். அதாவது நாம் தேவனை சந்தேகிக்கும்பொழுது தேவன் எனக்கு உதவி செய்ய முடியாது, அவர் இறந்துவிட்டார் என்று சொல்வதற்கு சமம்.

இந்த இதழில் நாம் இயேசுகிறிஸ்துவின் சீடரான தோமாவைப் பற்றி ஆராய இருக்கிறோம். அவரைப் பற்றி லூக்கா 24 மற்றும் யோவான் 20 ஆகிய அதிகாரங்களில் நாம் வாசிக்கிறோம். அவருக்கு “சந்தேக தோமா” என்ற அடைமொழி உண்டு. ஆனால் நாம் வேதாகமத்தை சரியாக வாசித்தோமானால் மற்ற சீடர்களைவிட அவர் அதிகமாக சந்தேகிக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். பிலிப்பு அநேக நேரங்களில் இயேசுவை சந்தேகித்தார். ஆயினும் தோமாவையே நாம் சந்தேக தோமா என்று அழைக்கிறோம். உயிர்த்தெழுந்த இயேசு தமது சீடர்களுக்கு முதன்முறை காட்சியளித்தபொழுது தோமா அவ்விடத்தில் இல்லை. கிலெயோப்பாவும் அவரது நண்பரும் எருசலேமில் இருந்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டதைக் கண்டார்கள். மகதலேனா மரியாள் கல்லறையிலிருந்து வந்து இயேசு உயிரோடு இருக்கிறார் என்று அறிவித்ததைக் கேட்டார்கள். பேதுருவும் யோவானும் காலியான கல்லறையைக் கண்டு வந்து சீடர்களிடம் கூறினர். அப்பொழுதும் கிலேயோப்பாவும் அவரது நண்பரும் அங்கே இருந்தனர். அவர்கள் இயேசு உயிரோடிருக்கிறார் என்று கேள்விப்பட்டார்கள். ஆனாலும் அவரை தங்கள் கண்களால் காணவில்லை. எம்மாவுக்குச் செல்லும்வழியில் இயேசு அவர்களுடனே நடந்து சென்று தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். உடனடியாக அவ்விருவரும் எருசலேமுக்குத் திரும்பிவந்து மற்ற சீடர்களுக்கும் அதனைத் தெரிவித்தனர்.

இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இயேசுதாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அங்கு நடந்ததற்கும் அவர்களது கலக்கத்துக்கும் தொடர்புடைய மூன்று காரியங்களை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? என்று கேட்டார் (வச.38). இதனை அவர் தம்முடைய சீடர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது தோமா அவர்கள் மத்தியில் இல்லை. மற்ற சீடர்களும் சந்தேகப்பட்டனர். மற்ற சீடர்களை நோக்கி, இயேசு நான் தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார் (வச.39,40).

தாம் உயிரோடிருப்பதற்கு இயேசு தம்மையே சான்றாகக் காட்டினார். சீடர்கள் தமது உயிர்த்தெழுதலை சந்தேகிக்கிறார்கள் என்று அவர் அறிந்திருந்தார். பின்னர் தோமாவுக்கும் அவைகளையே சான்றாகக் கூறினார். நாம் தோமாவை சந்தேக தோமா என்கிறோம். மற்ற சீடர்களிடம் எழுந்த சந்தேகத்தையே தோமாவும் கொண்டிருந்தார்.

முதலாவதாக, இயேசு தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்கு அன்போடே காட்டினார். அது உயிர்த்தெழுந்த நாளின் மாலை நேரம். கிலெயோப்பாவும் அவருடைய நண்பரும் எருசலேமிலிருந்து எம்மாவுக்குச் சென்றுவிட்டு அவசரமாகத் திரும்பிவிட்டனர். மகதலேனா மரியாளும் கல்லறைக்குக் சென்று இயேசுவை உயிரோடிருக்கிறவராகத் தரிசித்துவிட்டு வந்திருந்தாள். மரியாள் இயேசுவை தரிசித்தவேளையில். “இயேசு அவளைநோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் … ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்” (யோவா.20:17). அன்றையத்தினம் சாயங்கால வேளையிலே இயேசு தான் உயிரோடிருப்பதை நிரூபிக்க சீடர்களைத் தொட்டுப்பார்க்க அழைக்கிறார்.

இரண்டாவதாக, அவர் ஆவி உருவில் உள்ள ஒரு கற்பனை கதாபாத்திரம் அல்ல என்பதை இயேசுவின் சரீரம் நிரூபிக்கிறது. தனக்கு மாமிசமும் எலும்பும் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறார். அவர்கள் தந்த உணவையும் அருந்துகிறார். வசனம் 43இல் அவர்களிடம் சில பொறித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையும் இருந்தன. அவர்களுக்கு முன்பாக அவர் அவைகளைப் புசித்தார் என்று நாம் வாசிக்கிறோம். ஆவிகள் எதையும் உண்ணாது. இயேசுவுக்கு வித்தியாசமான சரீரம் இருந்தது என்பது நிச்சயம். அவரால் தோன்றவும் மறைந்து செல்லவும் முடியும். நீங்கள் தொட்டு உணரவும் முடியும்.

மூன்றாவதாக, இயேசு, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று கூறினார். மாம்சமும் இரத்தமும் என்று இணைத்து நாம் சொல்லுவோம். ஆனால் இங்கு அவர் மாம்சமும் எலும்பும் என்று கூறியுள்ளார். அவருடைய இரத்தம் எல்லாம் சிலுவையில் ஊற்றப்பட்டாயிற்று. மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது (1கொரி. 15:50) என்று வேதம் அறிவிக்கிறது. என்னுடைய சரீரம் வித்தியாசமானது. ஆனால் அதில் மாம்சமும் எலும்பும் உண்டு. எனக்கு இரத்தம் அவசியமில்லை. ஏனெனில் இது உயிர்த்தெழுந்த சரீரம் என்பதை அவர் விளக்கினார்.

நீங்களும் நானும் மறுமைக்குள் செல்லும் பொழுது நமக்கும் இரத்தம் அவசியமற்றதாகும். நித்திய வாழ்வுக்கு இரத்தம் தேவையில்லை. இரத்தம் நமது பாவசுபாவத்துடன் தொடர்புடைய தாகும். நாம் யோவானைப்போல இயேசுவில் அன்புகூர்ந்தாலும் பல வேளைகளில் தோமாவைப் போல சில நிரூபணங்களை எதிர்பார்க்கிறோம். இங்கு இயேசு தமது சீடர்களுக்கு சில உறுதியான சாட்சியங்களைக் காட்டுகிறார். அவருடைய சரீரம், ஆணிகளால் ஏற்பட்ட காயங்கள் இவற்றைத் தவிர அவர்களிடமிருந்த உணவையும் உட்கொண்டார். தற்காலத்தில் அவர் சரீரப்பிரகாரமாக நம் மத்தியில் இல்லை. ஆனால் நமக்கு வெளிப்படையான விசுவாசமும், உண்மையான விசுவாசமும் அதற்கும் மேலாக  தேவனைப் பிரியப்படுத்தும் விசுவாசமும் தேவைப்படுகிறது. நம்முடைய விசுவாசம் அதிகமாயிருந்தால் அதற்கேற்றபடி நமக்கு பலன் கிடைக்கும்.

லூக்கா 24 ம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ள நிகழ்வில் தோமா காணப்படவில்லை. ஆனால் யோவான் 20ம் அதிகாரத்தில் தோமா குறிப்பிடப் பட்டுள்ளார்:

“வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத் தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள். இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை” (வச.19-24).

பரிசுத்த லூக்கா எழுதியதையே இங்கு யோவானும் எழுதியுள்ளார். அது வாரத்தின் முதலாம் நாள்! அது இயேசு உயிர்த்தெழுந்த நாள்!! அவர் தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காட்டி அவர்கள் மீது ஊதி பரிசுத்த ஆவியை அருளி அவர்களுக்கு அதிகாரத்தையும் அளித்தார். ஏனெனில் ஆவியானவருடைய வல்லமையில்லாமல் நம்மால் எதையும் செய்ய இயலாது. மற்ற சீடர்களுடன் தோமா இணைந்ததும் கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன், நான் அதை நம்ப மாட்டேன்; அதை உண்மையென நம்ப மாட்டேன். மகதலேனா மரியாளும் மற்ற பெண்களும் அறிவித்ததைக் கேட்டேன். நீங்களும் அதையே கூறுகிறீர்கள். கிலெயோப்பாவும் அவரது நண்பரும் அவ்வாறே சொன்னார்கள். எனக்கு சில வெளிப்படையான சாட்சிகள் இருந்தால்மாத்திரமே நான் அதை நம்புவேன். “அவருடைய கைகளில் ஆணிகளாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய நான் விசுவாசிக்க மாட்டேன் என்றான்” (வச.25).

எட்டு நாட்கள் கழிந்தன. தம்மைக் குறித்து நேரடி சாட்சியைத் தருவதற்கு இயேசு  அவசரப்படவில்லை. ஏனெனில் சில வேளைகளில் சான்றுகள் விசுவாசத்தைக் குறைத்துவிடும். இயேசுவோ விசுவாசத்தில் ஆர்வமுள்ளவர். எட்டு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சீடர்கள் யாவரும் ஒன்றாகக் கூடியிருந்தனர். கதவுகள் பூட்டியிருக்கையில் இயேசு வந்து அவர்கள் நடுவே நின்றார். முன்போலவே உங்களுக்கு சமாதானம் என்றார். வசனம் 27 இல் “பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப்பார், உன் கையை நீட்டி, என் விலாவிலேபோடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்”. மற்ற சீடர்களுக்கு முன்னர் கொடுத்த வாய்ப்பையே இங்கு தோமாவுக்கும் கொடுக்கிறார். தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். மற்ற சீடர்களுக்கும் சந்தேகம் இருந்தது. இயேசு தமது சரீரத்தையே சாட்சியாகக் காண்பித்தார். தோமாவுக்கும் சந்தேகம் இருந்தது. மற்றவர்களுக்குக் கொடுத்த அழைப்பையே தோமாவுக்கும் கொடுத்தார். ஆனால் தோமாவோ, என் ஆண்டவரே! என் தேவனே! என்றார்.

அவருடைய சந்தேகக் கேள்வியைவிட அவரது விசுவாச அறிக்கை உயர்ந்ததாய்க் காணப்படுகிறது. அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என்விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்று கூறிய தோமாவுக்கு, “இதோ உன் கைகளை என் காயத்திலே போடு என்று தன்னுடைய சரீரத்தைக் காட்டுகிறார். ஆனால் தோமாவோ அதனைச் செய்யவில்லை. இயேசுவைக் கண்டவுடன் அவருக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து பணிகிறார். என் போதகரே, என் மேய்ப்பரே, என் தலைவரே என்பதைவிட என் ஆண்டவரே என் தேவனே என்று அறிக்கையிடுகிறார்.

தோமா இயேசுவையும் அவருடைய காயங்களையும் கண்டார். அவருக்கு வேறு எந்த சாட்சியும் தேவைப்படவில்லை. அவருக்கு விசுவாசம் இருந்தது. அடுத்த வசனத்தில், அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். இனி அவரை நாம் “சந்தேகத் தோமா” என அழைக்காமல் “விசுவாச தோமா” என்று அழைப்பது சிறந்தது. நாங்கள் முதல் நூற்றாண்டில் வாழவில்லை. எவ்வாறு இயேசுவை நம்புவது? அக்காலத்து மக்களைப் போல எங்களிடம் சாட்சிகள் இல்லை. இந்த 21ம் நூற்றாண்டில் இயேசுவை எவ்வாறு நம்புவது? என பலர் என்னிடம் கேட்கிறார்கள். இதற்கு இயேசுவே பதிலளித்துள்ளார். விசுவாசத்தினால் மாத்திரமே அது சாத்தியம்.

இயேசு உயிரோடிருப்பதை நம்ப நீங்கள் அவருடைய காயங்களில் உங்கள் கரங்களைப் போடமுடியாது. அதை நம்ப உங்களுக்கு விசுவாசம் வேண்டும். நமக்கு தோமாவை ஒத்த சந்தேக உள்ளமே உண்டு. ஆனால் அவருடைய விசுவாசஅறிக்கை நமக்கு வேண்டும். உண்மையை அறிய நாம் அவரைத் தொடமுடியாது. தேவன் நமக்குத் தந்த வார்த்தையை நாம் விசுவாசிக்கவேண்டும். என் ஆண்டவரே! என் தேவனே! என்று அறிக்கை செய்த தோமாவுக்கு அறிவியல், அனுபவம் மற்றும் ஆதார நிரூபணங்கள் தேவையில்லாதிருந்தது. அது இயேசு அளித்த அழைப்பு; இயேசுவின் நம்பகத்தன்மை. ஏனெனில் இயேசுவை தான் நம்பலாம் என தோமா அறிந்திருந்தார். அவருடைய விலாவில் கையைப் போடவேண்டிய அவசியமில்லை. நம் அனைவருக்கும் அவரைப் போன்ற சமவாய்ப்பே தரப்பட்டுள்ளது. இயேசு யார்? அவர் நமக்கு என்ன செய்தார்? என்பதை நாம் விசுவாசிக்க தேவனுடைய வார்த்தை நம்பகத்தன்மையுடையது. அதை நாம் செய்யும்பொழுது தோமாவைப் போலவே நமக்கும் வாழ்வை மாற்றும் நம்பிக்கை உருவாகும்.

தோமா இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை வைத்தார். இயேசுவின் விலாவில் தமது கரத்தைப் போடவில்லை. அதைப் போட வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. இயேசுவைப் பார்த்தவுடன் தம்மை அவருக்கு அர்ப்பணித்தார். நாம் வேதத்தை சரியாக வாசிக்காமல் இருக்கிறோம். அநேக மக்கள் தோமாவைப் போலவே உள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் தங்கள் கரங்களை இயேசுவின் விலாவில் போட்டிருப்பர். தேவனிடத்தில் நாம் விசுவாசத்தில் வரும்பொழுது நமக்கு சாத்தானுடனான யுத்தம் ஆரம்பமாகிறது. இரட்சிக்கப்படாத மக்களைவிட கிறிஸ்தவ விசுவாசிகளே அதிகம் தாக்கப்படுகின்றனர். சாத்தனுடைய ஆபத்தான ஆயுதங்களில் ஒன்று சந்தேகமாகும். பரி.பவுலும் சாத்தானுடைய தந்திரங்களை அறிந்திருக்கவேண்டும் என்று நமக்கு ஆலோசனை அளிக்கிறார்.

அவ்வாறு சந்தேகம் நிறைந்த மக்களுடன் நாம் ஜெபித்து அதிலிருந்து அவர்கள் தெளிவுபெற நாம் உதவ வேண்டும். விசுவாசிக்காத மக்களுக்கு நம்முடைய கரிசனையை அவர்களுக்கு வெளிப்படுத்தி, இயேசுவை அவர்களுக்குக் காட்டி அவர்களது சந்தேகங்களை நீக்கி தெளிவு கொடுக்க வேண்டும். தேவன் அனைவரையும் நேசிக்கிறார். இயேசு அவர்களுக்காக மரித்தார். அவர்கள் இயேசுவை இரட்சகராக நம்பவேண்டும். ஏனெ னில் அவர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரியாக இயேசு கல்வாரியில் மரித்தார்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை