அவதாரத்தின் மகிமையான முடிவு!

திருமதி. சுகுணா ஜோசப்
(மார்ச்-ஏப்ரல் 2018)

“அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்” (அப்.1:3).

சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் உயிர்த் தெழுதலைக் குறித்து பலமாய் சாட்சி கொடுத்தார்கள். அவர் உரைத்தபடியே, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தாவியைப் பெற்று, எருசலேம் துவக்கி பூமியின் கடைசிபரியந்தம் சாட்சிகளாகத் திகழ்ந்தார்கள். “அன்றியும் மனந் திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” (லூக்.24:47), என்று இரட்சகராகிய இயேசு தம் சீஷருக்கு உபதேசித்தார்.

வாழையடி வாழையாக சீஷர்களுடைய சாட்சியினால் மனந்திரும்பின மக்கள் இன்றுவரை பாவமன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும் அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள்.

பிதாவின் மன்னிப்பைப் பெற்ற மக்கள் தாங்களும், பிறரை மன்னிக்க வேண்டுமென்பதை, இயேசு சிலுவை பீடத்திலிருந்து செயல்முறையில் காட்டினார். ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவ விசுவாசிகள் பிறருக்கு மன்னிப்பு ஈகின்ற காரியத்தில் தவறுகிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. “ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து விட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” என்று மத்.5:23,24இல் எழுதப்பட்டிருக்கிறது.

நம்பேரில் ஒரு சகோதரன் குறைபட்டுக்கொள்ள ஏதுவான காரியம் ஏதாகிலும் இருந்தால் நாம் நேர்ந்துகொண்ட காணிக்கையோ, நற்பணிக்கென்று மனமுவந்து கொடுக்கும் தொகையோ, தியாகஞ்செய்து கர்த்தருக்கென்று சிறுகச் சிறுக சேமித்து மகிழ்ச்சியாய்த் திரட்டின தொகையோ தேவனைப் பிரியப்படுத்துவதில்லை. அதை அப்படியே தேவ சமுகத்தில் வைத்துவிட்டுப் போய் அந்த சகோதரனோடு ஒப்புரவாகின பின் காணிக்கையைச் செலுத்தவேண்டும். அப்போதுதான் தேவன் அதை அங்கீகரிப்பார். மேலும் மாற்கு 11:25,26 இல் “நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்” என்று எழுதப்பட்டிருக்கிறது.

‘இப்படி நமக்குத் துரோகம் செய்துவிட்டானே’ என்று யாரைக் குறித்தாகிலும் நினைப்பின், மனதில் குறை உணர்வு காணப்படக்கூடும். நமக்குத் தீங்கிழைத்த நபரிடமுள்ள அன்பு உறவு சரிசெய்யப்படாது, முறிக்கப்பட்ட நிலையில், மனக்கசப்புடன் ஜெபிப்பதில் சிறிதளவும் பயனில்லை. முதலில் அவனுடைய பிழையை மன்னித்துவிட்டு, பின்பு ஜெபிக்கவேண்டும். பரமபிதா நம் குற்றங்களை மன்னிக்க வேண்டுமானால் நாம் மனமுவந்து பிறர் குற்றங்களை மன்னிப்பதுதான் நிபந்தனை. சத்துருக்களை சிநேகியாமலும், அவர்களுக்காக ஜெபிக்காமலும், நன்றியறியாதவர்களுக்கும், துரோகிகளுக்கும் நன்மை செய்யாமல் இருந்தால், உன்னதமானவருக்குப் பிள்ளைகளாக இருப்பது சாத்தியமன்று (லூக்.6:35). பரலோக ராஜ்யத்தின் நியதிகளைக் கைக்கொண்டால்தான் பரலோக மேன்மையடையலாம் என்பது தெளிவு. “என்னைத் தள்ளி, என் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்” (யோவா. 12:48).

இயேசுகிறிஸ்து தம் தாயிடம் காட்டிய அன்பு மிகவும் அருமையானது. தன்னுடைய வேதனையின் மத்தியில் சாத்தானுடைய தலையை நசுக்குகிற வேளையில் அன்புத்தாயை மிகுந்த பட்சமுடன் தன் சீஷனாகிய யோவானுடைய ஆதரவில் கையளித்தார். அநேகமாயிரம் ஆத்துமாக்களை கர்த்தரண்டை இழுக்கக்கூடிய வரம் பெற்றிருப்பினும், தேவமக்கள், வயதுசென்று கவனிப்பாரற்று விடப்பட்ட தாய் தந்தையர், தம் பொறுப்பில் விடப்பட்ட முதியோர் போன்றவர்களிடம் அன்புகாட்டி ஆதரிக்கவேண்டியது மிகவும் அத்தியாவசியம். தேவ ஊழியம் செய்வதினால், பெற்றோருடன் செலவழிக்க நேரமில்லை என்று சொல்லுவது சற்றும் பொருந்தாது. இராப்பகலாய் கண்ணும் கருத்துமாய்ப் பேணிப் பாதுகாத்து, வியாதி நேரங்களில் கண்ணீர் வடித்து ஜெபித்து, ஆளாக்கப்பட்ட பிள்ளைகள் தங்கள் வேலைமிகுதியில் தாய் தகப்பனாருடன் உறவாட சமயமில்லை என்றால், அந்த முதியோருடைய கண்களிலிருந்து கசியும் கண்ணீர் கர்த்தருடைய துருத்தியில் நிச்சயமாகக் காணப்படும். அவர்களுடைய பெருமூச்சு கர்த்தருடைய சமுகத்தை எட்டும். அப்படிப்பட்ட விசுவாசப் பெருமக்களுக்காக குமாரனாகிய இயேசுகிறிஸ்து தனது பிதாவின் சமுகத்தில் வேண்டுதல் செய்வார் என்று எதிர்பார்ப்பது தவறு.

நோயாளிகட்கு இரத்தம் தேவைப்படும்போது சமயங்களில் இரத்த தான வங்கியிலிருந்து இரத்தம் செலுத்தப்பட்டு அவர்கள் புத்துயிர் பெறுகின்றனர். ஆனால், செலுத்தப்படும் இரத்தமும், நோயாளியின் இரத்தமும் ஒரே சீராகப் பொருந்தாவிடில், அதனால் பயன் ஒன்றும் ஏற்படாது. மாறாக தீமையே விளையும். இரட்சகராகிய இயேசுவின் சரீரம் பலியிடப்பட்டு, நமக்கு ஜீவ ஆகாரமாகத் திகழ்கிறது. “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்” (யோவா. 6:56). இயேசுகிறிஸ்துவின் சரீரத்தின் அம்சங்கள் அல்லது திவ்விய சுபாவங்களுக்கு ஏற்றாற்போல நம் சுபாவங்கள் மாறினால்தான், இயேசுவின் இரத்தத்தின் மேன்மை நம்மில் கிரியை செய்ய முடியும். அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையின்படி நாம் பலப்படுத்தப்படுவதின் விளைவு “சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும்” (கொலோ.1:11) நம் சரீரத்தின் அம்சங்களாக மாறுவதே. யாக்கோபை பெனியேலில் இஸ்ரவேலாக மாற்றினதுபோன்ற மாற்றத்தை, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமை நம்மில் மிளிரச் செய்வதற்கு, ஆழமான ஒப்புக்கொடுத்தல் அவசியம்.

உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் தற்போதைய பணி பரிந்துபேசும் பணியாகும். “அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” (ரோம.8:34). பரத்துக்கேறினது முதல் இந்நாள்வரையிலும் இந்த மன்றாட்டுப் பணியில் ஆசாரியனாகிய இயேசு ஈடுபட்டிருக்கிறார். ஆகவே, அது ஒரு தலைசிறந்த முக்கியமான, எல்லோரும் கடைபிடிக்கவேண்டிய பணி. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் அறிக்கை “நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்” (1சாமு.2:23) என்பதாகும். வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களும், வயதானவர்களும் ‘நான் ஏன் உலகத்தில் பாரமாக இருக்கிறேன், என்னை ஆண்டவர் எடுத்துக்கொண்டால் பரவாயில்லையே’ என்று சோர்வுக்கு இடங்கொடுத்து சூரைச்செடியின் கீழ் படுத்துவிடுகிறார்கள். இரவில் தூக்கம் சரியாக வரவில்லை என்று கவலைப்படுகிறவர்களும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் தங்களுக்குத் தெரிந்த நபர்களுக்காகவும், நற்செய்திப் பணிகளுக்காகவும், பணியாளர்களுக்காகவும், அனைத்து ஊழியங்களுக்காகவும், சபையின் சீர்கேடான நிலைகளுக்காகவும், குடும்பத்தின் மக்களுக்காகவும் ஒருநாளில் ஒருமணி நேரமாவது ஒதுக்கிவைத்து ஜெபிக்கலாம்.

சிறுகுழந்தை முதல் பெரியோர் வரை வயது வரம்பின்றி கடைசி மூச்சுவரை ஈடுபடக்கூடிய பணி ஜெபப்பணி, அதன் விளைவு சுயபரிதாபத்தினின்று விடுபட்டு, சிறையிருப்பிலிருந்து மீட்கப்படுவதே. “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்” (யோபு 42:10). இப்படி ஒழுங்காக ஜெபிக்க ஆரம்பித்தால், சுற்றிச் சூழ உள்ள மக்கள் அநேக பிரச்சனைகளுக்காக ஜெபிக்கக் கேட்பார்கள். ஜெபிப்பவர்களின் மனப்பான்மையும் கண்ணோக்கும் மகிழ்ச்சி நிறைந்ததாக, ஆசீர்வாதமானதாக மாறும். இவ்வாறு கிறிஸ்துவின் பணியை உண்மையுடனும், உத்தமத்துடனும் கிறிஸ்தவ சமுதாயம் கடைபிடித்தால், கொரியாவின் எழுப்புதல் நமது தேசத்திலும் வரும் என்பதற்குச் சந்தேகமில்லை.”அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்” (அப்.1:3).


உங்களுக்குத் தெரியுமா?

இரட்சிப்பின் வெளிப்படையான அடையாளம் பரிசுத்தமே!
– C.H.ஸ்பர்ஜன் –

சத்தியவசனம்