ஆ.பிரேம்குமார்
(மார்ச்-ஏப்ரல் 2018)
கடந்த இதழின் தொடர்ச்சி ….

மிஷனெரிக்கான கரிசனை ஏன் அவசியம்?

ஒரு மிஷனெரி தம்பதியினர் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு மிஷனெரியாகப் போயிருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அவர்கள் அனுப்பப்பட்டபோது, அவ்விடத்திற்கு அருகில் தமது பிள்ளைகள் கற்பதற்கான ஆங்கில பாட சாலைகள் இருக்கவில்லை என்பதை அறிந்த போது மனங்கலங்கினர். ஒருநாள் இரவு கணவன் வீடு திரும்பியபோது, வீடு இருளில் இருந்தது. ‘லைட்’ எதுவும் போடப்படாதிருந்தது. உள்ளே சென்று பார்த்தால் அவரது மனைவி சமையல் அறையில் அழுது கொண்டிருந்தார். ஏன்? என வினவியபோது தன் நாட்டில் தனக்கு தோழிகள் பலர் இருந்தார்கள். ஆனால் இங்கே பேச யாருமில்லை. (இவருக்கு இந்நாட்டு மொழி தெரியாது. அப்பிரதேசத்தில் ஆங்கிலம் பேசுபவர்களும் குறைவு) என அழுதுகொண்டிருந்தார். மிஷனெரிகள் ஆரம்பத்தில் மொழி தெரியாமல், பேச ஆளில்லாமல், இவ்விதமாக அங்கலாய்ப்பதுண்டு, எனவே மிஷனெரிகளுக்கான ஊக்கப்படுத்துதல் அவசியம். மிஷனெரிகளுக்கான கரிசனை அவசியம்.

எப்பொழுது நாம் மிஷனெரிக்கான கரிசனையைக் காட்டவேண்டும்? இதனை இனி கவனிப்போம்!

1.மிஷனெரிப் பணித்தளத்திற்கு அவர்கள் போவ தற்கு முன்பாக!

அவர்கள் மிஷனெரிகளாகச் செல்லுவதற்கு முன்பதாகவே, அவர்களிடம் கரிசனை செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். அவர்கள் இத்தீர்மானத்தை எடுத்தவுடன் பலர் அவர்களை சோர்வுற பண்ணலாம். இசபெல் ஹான் என்னும் பெண் சீனாவுக்கு மிஷனெரியாக போகத் தீர்மானித்தபோது, அவரது தாய் கடுமையாக எதிர்த்து, ”என் பிணத்தை கடந்துதான் நீ போகவேண்டும்” என்றார். வில்லியம் கேரி தேவ ஊழியர் கூட்டத்தில் இது குறித்து பேசியபோது, மூத்த ஊழியர் ஒருவர் இடைமறித்து ”உட்காரு வாலிபனே! ஆண்டவர் அந்நிய ஜாதிகளை மனமாற்ற விரும்பினால் அவர் உனது உதவியும் எனது உதவியும் இல்லாமலே அதைச் செய்வார்” என்று சோர்வுறப் பண்ண முயற்சித்தார்.

நல்ல எதிர்காலமுள்ள வாலிபனாகிய ஜாண் பேட்டன் தென்பசுபிக் தீவுகளிலுள்ள நாகரீகமற்ற, கொடூரத் தன்மையுடன் காணப்பட்ட சுதேசிகள் மத்தியில் மிஷனெரியாகப்போக முடிவெடுத்தபோது, பலரது பார்வையில் அது முட்டாள் தனமான முடிவாக தென்பட்டது. ஒரு வயது முதிர்ந்த மனிதன் பேட்டனைப் பார்த்து ”அவர்கள் நரமாம்ச பட்சிகள் உன்னைத் தின்று விடுவார்கள்” என்று கூறியபோது, பேட்டனோ ”நீங்கள் வயது முதிர்ந்தவராக இருக்கிறீர்கள்; இன்னும் கூடிய சீக்கிரத்தில் கல்லறையில் வைக்கப்படுவீர்கள். அப்பொழுது புழுக்கள் உங்களை சாப்பிடும், நான் கிறிஸ்துவை சேவித்து மகிமைப்படுத்தி வாழ்ந்து மரிப்பேனானால், மனிதர் என்னை சாப்பிடுவார்களோ! புழு சாப்பிடுமோ! என்பது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது” என்றார்.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் அதன்பின் ஆப்பிரிக்காவுக்கும் சென்ற பிரபலமான  மிஷனெரி சி.டி ஸ்டட் ”நான் மக்களின் கருத்துக்களை கவனித்திருந்தால் மிஷனெரியாயிருக்க முடியாது” என்றார்.

இப்படி நமது சொந்த குடும்பத்தினர் நண்பர்கள், ஏன்? ஆவிக்குரியத் தலைவர்கள்கூட மிஷனெரியாகச் செல்ல அடியெடுத்து வைப்பவர்களை அதைரியப்படுத்தலாம். இவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களது அழைப்பில் உறுதியாயிருக்க நாம் பக்கபலமாக இருக்கலாமே! அவர்களுக்காக ஜெபிப்பதுடன், அவர்களுக்காக ஜெபிப்பதற்கு பிறரை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டறிந்து, அவர்கள் தமது தளத்திற்குப் போவதற்கு தேவையான ஆயத்தங்களுக்கான பண உதவி செய்யலாம். அல்லது அவர்கள் சார்பில் மற்றவரோடு பேசி பணம் திரட்ட உதவலாம்.

குளோபல் இம்பெக்டில் இரண்டு பேர் மிஷனெரிகளாக பங்களாதேஷ் செல்ல ஆயத்தப்பட்டபோது, ஒருவரது சபை அவருக்கான முழுச் செலவையும் தாங்க முன்வந்தது. மற்றவரது சபையோ இவரை தாங்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. ஆயினும் இவர் விசுவாசத்தோடு உபவாசித்து ஜெபித்தார். பணந்திரட்ட பல முயற்சி செய்தார். இவரது பிரயாசத்தை கவனித்த குளோபல் இம்பெக்ட் பணியாளரொருவர் ”கொத்து நைட்” (கொத்து என்பது ஒரு உணவு) என்ற நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தினார். அதற்கான டிக்கட் விற்கப்பட்டது. இதன் நோக்கத்தை அறிந்த அநேகர் டிக்கட்டுகளை வாங்கியதுடன், உணவு விற்பனை நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றனர். இதன் மூலமாக அவர் போவதற்குத் தேவையான பணம் திரட்டப்பட்டது.

மிஷனெரியாக செல்ல இருப்பவர், ஒரு கூடாரம் அமைப்பவராக (தொழிலுக்கூடாக மிஷனெரிப் பணியாளர்) இருந்தால் அவரது தொழில்சார் பயிற்சிகளுக்கும் பண உதவி தேவைப்படலாம்.

நமது மிஷனெரி தம்பதியொருவர் சமையல் கலை சார்ந்த பாடநெறி கற்று, தேர்ச்சி பெற்று, ஒரு உணவகத்தில் வேலை செய்து அனுபவம் பெற்று, பின்னர் மிஷனெரித்தளத்திற்கு சென்று உணவகமொன்றில் வேலை செய்துகொண்டு ஊழியத்தைத் தொடர்ந்தார்கள். இவ்வித பயிற்சிகளுக்கும் பணம் அவசியம்.

அவர்கள் மிஷனெரிகளாகச் செல்ல முற்படும்போது, அவர்களுக்கு சொந்த வீடு இருப்பின் அதனை வாடகைக்கு விட உதவலாம். அவர்கள் சொந்த வீட்டுப்பொருட்களை வைத்து விட்டுப் போக விரும்பினால் அதற்கான இடத்தை பெற்றுக்கொடுத்து உதவலாம். அல்லது விற்க விரும்பினால் அதனை விற்பதற்கு உதலாம்.

அவர் போவதற்கு ஆயத்தப்படுவதால், அவர்களுக்கு தமக்குரிய அனைத்தையும் செய்வது கடினமாக இருக்கலாம். விமான நிலையத்திற்குச் செல்வதற்கான வாகன ஒழுங்குகளைச் செய்து கொடுக்கலாம். அவர்களுக்காக ஜெபிப்பதற்கென ஒரு ஜெபக் குழுவை உருவாக்கலாம். இப்படி அவர்கள் போவதற்கு முன்பாக, பல்வேறு விதங்களில் அவர்களில் கரிசனை செலுத்தலாம்.

2.மிஷனெரித்தளத்தில் அவர்கள் இருக்கையில்…..?

அன்ரு புளர் என்பவர் ”இந்தியாவிலே ஒரு தங்கச்சுரங்கம் உண்டு. யார் இறங்கிப்போய் அதனை ஆராய்ந்து கண்டுபிடிப்பார்கள்? என்னும் பொருளில் கேட்டபோது, ”நான் இறங்கிப்போகிறேன், ஆனால் கயிற்றைப் பிடித்திருக்க மறக்கவேண்டாம்” என்றார் வில்லியம் கேரி. மிஷனெரிகள் மிஷனெரித் தளத்தில் இறங்கும்போது கயிற்றைப் பிடித்திருப்பது போலவே ஜெபத்தாலும், பணத்தாலும், தொடர்ச்சியான தொடர்பாலும் அவர்களைத் தாங்குவது மிகமிக அவசியம்!

தளத்திற்குச் சென்ற பின்பு உறவுகளைப் பிரிந்து, தனிமையில் இருக்கும் அவர்களுடன் தொடர்ச்சியாக உறவில் இருப்பது அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. அறியாத இடத்தில் புதிதான மனிதரோடு புரியாத பாஷை உணவு பழக்க வழக்கங்கள் போன்ற இவ்வித சூழ்நிலையில் ‘தங்களையும் நினைத்து தங்களோடு தொடர்பு கொள்கிறார்கள்’ என அவர்கள் மிகுந்த சந்தோஷமடைவர்.

எமது இளம் மிஷனெரியொருவர் தனியே இந்தியாவில் பீகாருக்கு சென்றபோது தனிமை அவரை வாட்டியது. அவ்வேளைகளில் தனது அறைக்கு வந்து கதவைப் பூட்டி, சுவற்றில் அடித்து அழுவார்! இலங்கையிலிருந்து ஒரு SMS அல்லது  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தாலே போதும், அவர் மிகவும் சந்தோஷப்படுவார். மட்டுமல்ல, நாள் முழுவதும் அது அவரை ஊக்கப்படுத்தும். அவர் விட்டுவந்த பெற்றோர், குடும்ப அங்கத்தினரை நாம் சந்தித்து, அவர்களுக்கு உதவி வருவதை அவர் கேள்விப்படும்போது மிகுந்த மகிழ்ச்சியடைவார்.

அவர்கள் சொந்த இடத்தில், சபையில், நாட்டில் நடக்கும் தகவல்களைக் கொடுத்து வருதல் அவர்களுக்காக தொடர்ந்து ஜெப, பண உதவிகளைச் செய்தல் பணம் திரட்டுதல் மற்றும் மற்றவர்கள் மிஷனெரியை மறந்து விடாமலிருக்க, அவர் பற்றிய பணித்தளத் தகவல்களைத் தொடர்ச்சியாக மற்றவர்களுக்கு வழங்குதல், இவர் தேவைகளை விசாரித்து அறிந்து, அவைகளை சந்தித்தல் பிறந்தநாள், திருமண நாள், கிறிஸ்துமஸ், புதுவருடம் போன்ற தினங்களில் வாழ்த்து மடல்களை அனுப்புதல் தொலை பேசி ஊடாக அழைத்து வாழ்த்துதல் போன்ற செயற்பாடுகள் மூலம் அவர்களில் கரிசனை கொள்ளலாம்.

(தொடரும்)