ஹட்சன் டெய்லர்

நற்செய்தியைக் கொண்டாடுவோம்
(மார்ச்-ஏப்ரல் 2018)

வைராக்கியமான அருட்பணியாளர்
ஹட்சன் டெய்லர்


இயேசுகிறிஸ்துவின் மாபெரும் கட்டளையை நாம் ஏற்றுக்கொள்வது நமது விருப்பத்திற்கு உட்பட்டதல்ல; அது நாம் அனைவரும் கீழ்ப்படிய வேண்டிய பிரதான கட்டளையாகும்.
– ஹட்சன் டெய்லர்


1832ஆம் வருஷம் மே மாதம் 21 ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள யார்க்ஷையரில், ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் பிறந்தார். தங்களுக்கு பிறந்த முதற்பேறான குழந்தை ஹட்சனை அவர்களது பெற்றோர் தேவனுக்கென்று தத்தம் செய்தனர். ஹட்சனின் கல்வி அவருடைய வீட்டிலேயே கிடைத்தது. எபிரெய மொழியின் எழுத்துக்களை அவரது தந்தையார் கற்பித்தார். “புறஜாதியாரின் தேசங்களில் ஆண்டவரை அறியாத அந்தகாரம்” என்ற பேச்சை அவரது வீட்டில் பெரியவர்கள் பேசச் கேட்ட ஹட்சனின் சிந்தனையும் இவ்வாறாகவே இருந்தது. “நான் வளர்ந்து பெரியவனாகும்போது, ஒரு மிஷனெரியாகி, சீனாவுக்கு ஊழியம் செய்யச் செல்வேன்” என்றே ஹட்சன் முடிவெடுத்தார்.

மனந்திரும்புதலும் அழைப்பும்

ஹட்சன் 14 வயதாயிருக்கும்போது ஒருநாள் மாலையில் “எல்லாம் முடிந்தது” என்ற தலைப்பிலான ஒரு கைப்பிரதியை வாசித்தபோது அவருக்குள் பாவ உணர்வு ஏற்பட்டது. இரட் சிப்பின் தேவையை உணர்ந்தார். ஆண்டவருக்கு தன்னை அர்ப்பணித்து கிறிஸ்து இயேசுவைத் தனது சொந்த ஆத்தும மீட்பராக ஏற்றுக் கொண்டார். ஹட்சன் மனந்திரும்பிய அதே நாளில் 80 மைல்களுப்பால் இருந்த அவருடைய தாயார் ஹட்சன் இரட்சிக்கப்படவேண்டுமென்று ஊக்கமாய் ஜெபித்தார். தன் மகனை கர்த்தர் முழுவதுமாக மீட்டுக்கொண்டார் என்ற நிச்சயம் தனக்குள் ஏற்படும்வரை தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தார். பின் தன் மகனை கர்த்தர் இரட்சித்தற்காக நன்றி செலுத்தி ஸ்தோத்திரம் செய்தார். அவர் மறுபிறப்படைந்த ஒருசில மாதங்களில் ஒருநாள் அவர் வேதம் வாசித்து, “ஆண்டவரே, நான் என்னவிதமான பணியை எங்கு செய்யவேண்டுமென்று எனக்குத் திட்டமாய் தெரிவியும். நீர் எனக்குச் சொல்லும்வரை இந்த அறையிலிருந்து வெளியேறமாட்டேன்”  என்று முழங்காலில் இருந்த வண்ணமாக மன்றாடினார். ‘எனக்காக சீன தேசத்திற்குப் போ’ என்று தேவன் தன்னோடு பேசுவதைத் திட்டவட்டமாய் கேட்டார். தேவ அழைப்பைப் பெற்ற ஹட்சன் டெய்லர் பிற்காலத்தில் அந்த அழைப்பைப் பற்றி ஒருபோதும் சந்தேகித்ததில்லை.

மிஷனெரிப்பணிக்கென்று ஆயத்தப்படுதல்

சீனதேசத்தில் திருப்பணிச் செய்வதற்கென்று தன்னை எல்லாவிதங்களிலும் ஆயத்தம் செய்துகொள்ள முயன்றார். மிகுந்த பிரயாசத்துடன் லூக்கா எழுதின நற்செய்தி நூலை சீன மொழியில் கற்று புலமைப்பெற்றார். ஆசிரியர் உதவி இல்லாமலே சீன மொழியை கற்றுக்கொண்டார். அவரது தகப்பனாரின் வணிகத்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே இலத்தீன், கிரேக்க மொழிகளையும் இறைநூல், மருத்துவம் ஆகியவற்றையும் கற்று தேர்ச்சி பெற்றார். உலகின் மற்றப் பாகங்களில் பணியாற்றும் மிஷனெரி இயக்கங்களோடு தொடர்புகொண்டு அவை செயல்படும் முறைகளை அறிந்து தம் மனதில் பதித்துக்கொண்டார். பத்தொன்பதாம் வயதில் மருத்துவத்தில் மேற்கொண்டு படிக்க இலண்டன் நகரம் போய்ச்சேர்ந்தார். அநேக பிரச்சனைகளுக்கூடாக கடந்து சென்ற அந்நாட்களில் அவரை பார்க்கும் யாரும் கடவுள் எப்படி இவரை மிஷனெரி பணித்தளத்தில் பயன்படுத்த முடியும் என்று ஆச்சரியப்படும்வகையில் மெலிவான தோற்றமும் ஒதுங்கிவாழும் சுபாவமும் உடையவராக இருந்தார். ஆனால் கடவுளின் வாக்குறுதி “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி.4:13) என்பதாகும். ஹட்சன் டெய்லரைப் போன்ற மிக பெலவீன மனிதர்களையே தம்முடைய மகிமைக்காகத் தம்முடைய சித்தத்தில் பயன்படுத்துகிறார்.

சீனநாட்டிற்கு பிரயாணப்படுதல்

1853 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹட்சன் டெய்லர் சீனாவிற்குப் பிரயாணம் செய்ய கப்பல் ஏறினார்.”சீனநாட்டிற்கு நற்செய்தி கழகம்” என்ற ஸ்தாபனத்தின் வாயிலாக ஹட்சன் டெய்லர் தரிசனமும் அழைப்பும் பெற்ற நாட்டிற்குப் பிரயாணப்பட்டார். ஷாங்காய் துறைமுகத்தில் வந்து இறங்கினபோது ஷாங்காய் நகரம் புரட்சியாளர்களின் ஆட்சியில் இருப்பது அவருக்கு தெரிய வந்தது. இவைகள் அவருக்கு உற்சாகமூட்டக் கூடியதாக இல்லை. கடவுளின் பேரில் அவருக் கிருந்த விசுவாசமே அவரைத் தாங்கிப்பிடித்தது.

ஹட்சனின் நினைவும் மனமும் உள்நாட்டுச் சீனர்களைப் போய் அடைவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தது. பவுல் அடியாரின் முன் மாதிரியின்படி, “சிலரையாவது இரட்சிக்கும்படியாக நான் எல்லாருக்கும் எல்லாமுமானேன்” என்றபடி இவரும் சீன உடைளை உடுத்தி, சீன வாழ்க்கைமுறையை மேற்கொண்டார். உள் நாட்டு சீன மக்களை ஆதாயப்படுத்த அவர்கள் மத்தியில் அவர் அவ்விதம் உழைத்தது பலன் தந்தது. சில மாதங்களில் மனந்திரும்பிய முதல் ஆத்துமாவை ஆதாயப்படுத்திவிட்டார்.

தொடர் சோதனை

டெய்லர் தன்னுடைய பணியில் அடிக்கடி சோர்வடைய சோதிக்கப்பட்டார். எதிர்காலம் அவருக்கு இருளாகவே இருந்தது. அவரை அனுப்பிவைத்த மிஷனெரி இயக்கம் அக்கறையில்லாமல் இருந்துவிட்டது. பண உதவிகள் ஒழுங்காய் வந்து பணித்தளம் சேருவதில்லை. இவர் ட்சுங்கிங் நகரில் ஒரு மருத்துவப் பணித்தளத்தை நிறுவினார். அதன்மூலமாய் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களைச் சந்திக்க முடிந்தது. அவருடைய ஒரே நண்பர் வில்லியம் பர்ண்ஸ் என்பவர் மரித்ததினால், அவருக்கு அதிர்ச்சியும் தாங்கமுடியாத துயரமும் ஏற்பட்டது. அவரும் சீனர்களின் மீட்புக்காக திருப்பணியில் ஈடுபட்டவர். ஹட்சன் இறந்துவிட்ட தன் நண்பனின் கிறிஸ்தவ ஐக்கியத்தினால் உற்சாகத்தையும் மன உறுதியையும் பெற்றிருந்தார். 1856ஆம் ஆண்டு பர்ண்ஸ் உள்நாட்டுப் புரட்சிக்காரர்களால் சிறைபிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இது அவருக்குப் பேரிழப்பாகும்.

நிங்போ என்ற துறைமுக நகரில் மருத்துவர் எவரும் இல்லை. அங்கே தன் பணியைத் துவங்க முடிவு செய்தார். அங்கே போகும் வழியில் அவரது வேலைக்காரனே எல்லா உடைமைகளையும் திருடிக்கொண்டு அவரை தனியே விட்டு ஓடிப்போனான். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் அவர் மனந்தளர்ந்து போய்விடவில்லை. நீண்ட நேர படிப்பு, போதனை செய்வது, பல வேறுபட்ட பருவ நிலைகளில் நீண்ட பிரயாணங்களை மேற்கொள்ளுவது ஆகியவை டெய்லர் அவர்களின் சுகத்தை பெரிதும் பாதித்தது. ஏழு ஆண்டுகள் இடைவிடாத சேவைக்குப்பின் அவருடைய சுகவீனத்தின் காரணமாக, ஓய்வு எடுக்கவும், நற்சுகம் பெறவும் சுயதேசத்திற்குத் திரும்பிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனம்

இலண்டன் நகரில் தங்கியிருக்கும்போது மருத்துவ கல்வியைத் தொடர்ந்து படித்தார். சீன தேச விளக்கப்படம் ஒன்று அவருக்கெதிராக சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்தது.அதில் பதினொரு தனித்தனி பிரதேசங்களையும். முப்பத்தெட்டு கோடி மக்களையும் சித்தரித்து இருந்தது. இந்த பதினொரு பிரதேசங்களில் பணிபுரிய இருபத்து நான்கு மிஷனெரிகளுக்காக ஜெபித்து வந்தார். ஒரு சிறுதொகையை வங்கியில் முதலீடு செய்தார். விசுவாசத்தின் விளைவாக ‘சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனம்’ அன்று நாட்டப்பட்டது. “சிறிய தொகையோடு ஏராளமான கடவுளின் வாக்குத்தத்தங்களும் அன்று மிஷன் ஸ்தாபனத்திற்காக முதலீடு செய்யப்பட்டது” என்று ஹட்சன் சொன்னார். பதினொரு மாதங்களுக்குப் பின்னர் பதினாறு மிஷனெரிகளோடு சீனநாட்டிற்கு ஹட்சன் பயணமானார். ஹட்சன் குழுவினர் ஆற்றிய திருமறை உரையாடல்கள் மூலமாய் இருபது கப்பல் சிப்பந்திகள் கிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.” கடல்கடந்து செல்வதால் ஒரு மிஷனெரி உருவாகுவதில்லை; தன் வீட்டிலும், சுய நாட்டிலும் பயன்படாதிருக்கிற ஓர் ஆள் அயல் நாட்டிலும் கிறிஸ்துவின் சேவையில் பயனுள்ளவராய் இருக்க மாட்டார்” என்று ஹட்சன் அடிக்கடி கூறுவார்.

ஊழியத்தின் வளர்ச்சியும் இழப்புகளும்

ஹட்சனும் அவருடன் வந்த மிஷனெரி களுக்கு தங்கும் வசதியோ ஏற்ற ஆகாரமோ இருந்ததில்லை. அவர்கள் உயிர் ஆபத்துகளுக்குப் பயப்படாமல் உள்நாட்டிற்குள் போகத் தீர்மானித்தனர். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து சிறப்பான பணியினை செய்துவந்தது. இருநூற்று இருபத்தைந்து மிஷனெரிகளும், ஐம்பத்தொன்பது ஆலயங்களும், ஆயிரத்து எழுநூறு விசுவாசிகளையும் கொண்ட ஸ்தாபனமாய் விளங்கிற்று. பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கைப்பிரதிகளும், சிறு புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டன. பன்னிரண்டரை ஆண்டுகள் அவருக்கு மிக உதவியாக இருந்த அவரது மனைவி காலரா வியாதியினால் மரித்தபோது, “நானோ தனித்து விடப்பட்டவன் அல்ல. முன்னைக் காட்டிலும் கர்த்தர் எனக்கு அதிகநெருக்கமாய் உள்ளார்” என்றும் எழுதி வைத்தார். இப்படிப்பட்ட பெரும் இழப்புகளைக் கிறிஸ்துவின் நிமித்தம் தைரியத்தோடு தாங்கிக்கொண்டார்.

சீனதேசமே அவர் நினைவு

ஹட்சன் டெய்லர் பலமுறை இங்கிலாந்திற்கு வந்தபோதிலும், அவர் நினைவெல்லாம் சீன நாட்டைப் பற்றினதே. 1900ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்தில் இருந்த சமயம் சீன தேசத்தில் பணி செய்து கொண்டிருந்த எழுபத்தொன்பது மிஷனெரிக் குடும்பங்கள் சீனர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டார். இங்கிலாந்தில் இருக்க மனமற்றவராய் 1905 ஆம் ஆண்டு தனது பதினோராவது பயணத்தை மேற்கொண்டார். இங்கிலாந்திலிருந்து சீனாவுக்கு சென்ற கடைசிப் பயணமாகவும் அது அமைந்தது. சாங்ஷா நகரில் அவர் வந்து இறங்கியதுமே கடவுளோடு ஐக்கியப் படும்படியாகப் பரலோகம் சென்றடைந்தார்.

ஹட்சன் டெய்லர் மரிக்கும்போது, சீன உள்நாட்டு ஸ்தாபனத்தில் 849 மிஷனெரிகள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். ஹட்சன் டெய்லர் உலக ஐசுவரியம் ஒன்றும் இல்லாதவர். வறுமையில் வாழ்ந்தவர். வாழ்க்கை வசதிகளை உதறித்தள்ளி அநேகரை ஐசுவரியவான்களாக்கத் தன்னை ஏழ்மையாக்கினார். தேவன் எவைகளையெல்லாம் தமது வசனத்தில் வாக்குத்தத்தம் செய்திருக்கிறாரோ, அவைகளை நிச்சயம் செய்வார் என்ற உறுதியோடு பணியாற்றினார். “கைகூடாது, நடக்கவே நடக்காது, ஒருவரும் செய்யமுடியாது என்று மனிதன் நினைப்பவைகளைப் பார்த்து விசுவாசம் என்றும் பற்றுறுதி சிரிக்கும். கீழ்ப்படிதலும், கடவுளுடைய சித்தத்தை செய்தலும், கேள்விகளைக் கேட்டு தாமதிக்கும் மனப்பான்மையைக் கொண்டு வராது” என்னும் பொன் மொழிகளை ஹட்சன் அடிக்கடி கூறுவார்.

விசுவாசமும் கீழ்ப்படிதலும், கர்த்தருடைய திருப்பணியாளர்களின் வல்ல செயல்களின் இரகசியமாகும்.

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்