ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

மே-ஜுன் 2018

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

சகல ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றும் காரணராயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

‘ஜீவனுள்ள தேவனண்டைக்கு வழிநடத்துகிற இவ்வுன்னத பணிக்கு’ தாங்கள் தந்துவருகிற ஆதரவுகளுக்காக தேவனைத் துதிக்கிறோம். ஜெபத்தாலும் உதாரத்துவமான காணிக்கை களினாலும் தாங்கிவருகிற அன்பு பங்காளர்களை தேவன்தாமே அபரிதமாய் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்கிறோம். இவ்வூழியத்தின் மூலம் அடைந்துவருகிற ஆசீர்வாதங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். தேவன் இவ்வூழியத்தின் வாயிலாக செய்துவருகிற அவருடைய கிருபைகளுக்காக அவரை ஸ்தோத்திரிக்கிறோம்.

அரசு பொதுத்தேர்வு எழுதின அனைத்து பங்காளர் பிள்ளைகளும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சியடைய கர்த்தர் கிருபை செய்திருப்பார் என்றே விசுவாசிக்கிறோம். தொடர்ந்து அவர்கள் அனைவருக்காகவும் வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசனத்திலிருந்து நடத்தப்பட்டுவரும் Whatsapp ஊழியத்தின் மூலம் தாங்கள் பயனடைய விரும்பினால் உங்கள் பெயரையும் எண் ணையும் Whatsapp No. 6380692034 இந்த எண்ணில் பதிவு செய்துகொள்ள அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் விசுவாசி அணிந்துகொள்ள வேண்டிய ஆறாவதான ‘ஆவியின் பட்டயத்தை’க் குறித்து Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய கட்டுரையும்,  நமது ஆத்ம தாகத்தைத் தீர்க்கும் பானம் வேதவசனங்களே என்பதை வலியுறுத்தி ‘ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறேன்’ என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. மேலும் கிறிஸ்துவினிமித்தம் அடையும் பாடுகள்தான் ஆசீர்வாதம் என்பதை விளக்கி சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் பிரிக்க முடியாத இரட்டையர்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும், சகோ.ஆ.பிரேம் குமார் அவர்கள் எழுதிய மிஷனெரிக்கான கரிசனை என்ற கட்டுரையின் தொடர்செய்தியும் இடம் பெற்றுள்ளது.

நற்செய்தியை கொண்டாடுவோம் என்ற கருப்பொருளில் தயாரிக்கப்பட்ட இவ்வருட காலண்டரில் இடம்பெற்றுள்ள அருட்பணியாளர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து வருகிறோம். இவ்விதழில் பர்மிய மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்த திரு.அதோனிராம் ஜட்சன், மற்றும் சாம்பலுக்கு அழகூட்டிய மங்கை திரு.ஏமி கார்மைக்கேல் அம்மையார் ஆகியோர் ஆற்றிய அருட்பணி அனுபவங்களை சுருக்கமாக தொகுத்து வழங்கியுள்ளோம். தேவன் தந்த இந்த அருட்பணியாளர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.

இச்செய்திகள் ஒவ்வொன்றும் உங்கள் யாவருக்கும் அதிக பிரயோஜனமுள்ளவையாக இருக்க நாங்களும் ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்