விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

Dr.தியோடர் எச்.எஃப்.
(மே-ஜுன் 2018)

6. ஆவியின் பட்டயம் (எபேசி.6:14-17)

விசுவாசி அணிந்துகொள்ளவேண்டிய சர்வா யுதவர்க்கத்தின் ஆறாவதும், கடைசியானதுமான பாகம் “தேவவசனமாகிய ஆவியின் பட்டயம்” (எபேசி.6:17). ஆவியின் பட்டயம் என்பது விசு வாசியின் கையில் கொடுக்கப்படும் ஒரு கருவியல்ல. சர்வாயுதவர்க்கத்தின் மற்ற பாகங்கள் தருவது போல இதுவும் இயேசுகிறிஸ்துவால் தரப்படும் பாதுகாப்பாக தெரிகிறது. “ஆவியின் பட்டயம்”  என்றால் என்ன? என்பதை முதலில் கவனியுங்கள். அது “தேவ வசனம்” என்று கூறப்படுகிறது. யோவான் நற்செய்தி நூலிலே இயேசுவை ‘வார்த்தை’ என்று கூறப்பட்டுள்ளது. இது யோவான் முதல் அதிகாரத்தில் முதல் 14 வசனங்களிலும் விளக்கப்படுகிறது. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவான் 1:1). இந்த வேதப்பகுதியின் முடிவில் “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவான் 1:14).

இந்த வசனங்கள் சிறப்பாக  ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையே குறிக்கின்றன என்று அறிகிறோம். அவர் பரலோகத்தின் மகிமையைத் துறந்து இந்தப் பூமிக்கு வந்து மானிட ரூபமெடுத்து, இந்த உலகத்தின் பாவத்திற்காகச் சிலுவையில் மரணமடையத் தம்மை ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய வசனமும் “வார்த்தை” என்று கூறப்படுவதுண்டு. சங்கீதம் 119இல் இந்தச் சொல் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருப்பது போல இதிலுள்ள வித்தியாசம்:

இயேசுகிறிஸ்து – வாழும் ஜீவவசனம்,
வேதாகமம் – எழுதப்பட்ட தேவவசனம்

என்பதாகும். எபிரெயர் 1ஆம் அதி. முதல் இரண்டு வசனங்களிலும் இந்த இரண்டும் ஒன்றாக்கப் பட்டிருப்பதைக் காணலாம். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்”. தேவன் “எழுதப்பட்ட வார்த்தையைத்” தீர்க்கதரிசிகள் மூலம் தந்தார். தம்முடைய “ஜீவ வசனத்தைத்” தம்முடைய ஒரே குமாரனாகிய இந்தப் பூமிக்கு வந்த இயேசுகிறிஸ்துவின் மூலம் நமக்குத் தந்தார்.

இயேசு ஜீவவார்த்தையையும், எழுதப்பட்ட தேவ வசனத்தையும் நாம் உட்கிரகிக்கவேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டார். அவருடைய கருத்துக்கள் யோவான் சுவிசேஷத்தில் கூறப்பட்டுள்ளன. யோவான் 6:51 இல் “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்”. இயேசு எப்படி தம் மாம்சத்தை அவர்களுக்குப் புசிக்கக்கொடுப்பார் என்பது யூதர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இயேசு தொடர்ந்து கூறினார்: யோவான் 6:53 முதல் 57 வரை உள்ள வசனங்களில் இதற்கான விளக்கம் இருக்கிறது. “அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது. என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்”. அவர்களால் புரிந்துகொள்ள முடியாத இந்த வார்த்தைகள் காரணமாக அநேகர் இயேசுவைப் பின் செல்லுவதைவிட்டுப் பின்வாங்கிப்போனார்கள். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளத்தக்கதாக ஒரு கருத்தை 63ஆம் வசனத்தில் இயேசு குறிப்பிட்டார்:

“ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது”. சொல் பொருளின்படி இயேசு தமது சரீரத்தின் மாம்சத்தைப் புசிக்கும்படி எவரிடமும் கூறியதில்லை. இயேசு தமது உபதேசங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மனதில் பதிய வைக்கப்பட வேண்டும் என்று கூறினார். அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் இயேசு கூறியதும் எதிர்பார்த்ததும், மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளவேண்டும் என்பதாகும். கர்த்தருடைய வசனம் ஆகிய “திருவசனம் களங்கமில்லாத ஞானப்பால்” என்று 1பேதுரு 2:3இல் கூறப்பட்டுள்ளது. எபிரெயர் 5:14இல் “பலமான ஆகாரம்” (மாமிசம், இறைச்சி) என்று கூறப்பட்டுள்ளது. இவ்விதமாக ‘வார்த்தை’ என்பது விசுவாசிக்கு ஆவிக்குரிய ஆகாரமாயிருக்கிறது. எரேமியா இவ்வாறு கூறினான்: “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது” (எரேமி.15:16). இந்த வசனத்தின் மூலம் எரேமியா கூறுவதென்னவெனில் தேவனுடைய வார்த்தையில் அடங்கியிருந்த செய்தியை அவர் சாப்பிட்டார். சங்கீதக்காரன் தாவீது,”உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவுக்கு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங்.119:103) என்கிறார்.

வேதாகமத்தில் காணப்படும் எழுதப்பட்ட தேவவார்த்தைகள் ‘அகத்தூண்டுதல்’ (Inspiration) மூலம் வந்தவை. “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் (தூண்டப்பட்டு) அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் …பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோ.3:16,17).

ஜீவவார்த்தை (Living Word) நமக்கு மனுவுரு வேற்பின் மூலம் கிடைத்தது. “அந்த வார்த்தை மாம்சமாகி … நமக்குள்ளே வாசம்பண்ணினார்”. எழுதப்பட்ட தேவவசனம் அடங்கிய வேதாகமத்தையும் ஜீவவார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவையும் வேறுபிரிக்க முடியாது. ஜீவ வார்த்தையின் செய்தியே எழுதப்பட்ட தேவ வசனமாகும். ஜீவ வார்த்தையை நேசிப்பவர்கள், எழுதப்பட்ட தேவவசனத்தையும் விரும்புவார்கள். ஏனென்றால் எழுதப்பட்ட தேவ வார்த்தை மனுடாவதாரம் எடுத்த தேவகுமாரனைப் பற்றி கூறுகிறது. எழுதப்பட்ட தேவ வசனங்கள் அடங்கிய வேதாகமத்தோடு நம் தொடர்பைப் பற்றிக் கவலையற்றிருப் போமானால், ஜீவவார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவோடும் உள்ள நமது தொடர்பினைக் குறித்து நாம் கவலையற்றவர்களாய் இருப்போம்.

விசுவாசிக்குக் கிறிஸ்துவை வெளிப்படுத்துவது பரிசுத்த ஆவியின் ஊழியமாகும் (யோவான் 16:15). வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கும் தேவ வசனங்களை வெளிப்படுத்தும் சத்தியங்களை விசுவாசிக்கு வெளிப்படுத்துவதன் மூலம் அவர் இதைச் செய்கிறார். எனவேதான் வேதாகமம் ‘ஆவியின் வார்த்தை’ என்று கூறப்படுகிறது. நம் வாழ்க்கையில் பரி.ஆவியானவர் இம்முறையில்தான் கிரியை செய்கிறார். அவர் கிறிஸ்துவை நமக்கு உண்மையானவராகக் காட்டுகிறார்.

எபிரெயர் 4:12 கூறுகிறது:”தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது”. பேசப்படும் வார்த்தையின் வல்லமையை ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் பார்க்கிறோம். தேவன் பேசினார்; எல்லாம் உண்டாயின, விளைவு பிரபஞ்சத்தின் படைப்பு.

விசுவாசியின் சர்வாயுத வர்க்கத்தின் ஒரு பாகமாகிய தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம் முதலில் சாத்தானின் தாக்குதல்களிலிருந்து நம்மைக் காக்கும் தற்காப்பு ஆயுதமாகப் பயன் படுத்தப்பட வேண்டும். சாத்தானின் தாக்குதல்களை தேவ வசனம் கொண்டு முறியடிப்பது எப்படி என்று இயேசுகிறிஸ்துதாமே நமக்குச் செய்து காட்டியிருக்கிறார். (மத்தேயு 4ஆம் அதி. வசனங் கள் 1 முதல் 11).

ஆவியின் பட்டயத்தை நாம் எவ்வளவு வல்லமையாகப் பயன்படுத்த முடியும் என்பது அது நம் இருதயத்தை எவ்வளவு ஊடுருவிச் செல்ல அனுமதிக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. அதாவது அது நமக்கு உண்மையானதாகவும், நமக்குள் வாசம் செய்வதாயும் இருக்கவேண்டும். இது வேதவசனங்களை மனனம் செய்து இருதயத்தில் வைத்துக்கொள்ளுவது மட்டுமல்ல, கர்த்தருடைய வசனத்தின் செய்தியை நம்மு டைய வாழ்க்கையில் செயல்படுத்துகிறவர்களாயும் இருக்கவேண்டும்.

வேதவசனங்களை அறிந்திருப்பதுமட்டும் போதாது. அவை கூறும் செய்திகளின்படி வாழ்க்கையில் செயல்படவேண்டும். வேதம் என்ன கூறுகிறதென்பது சாத்தானுக்குக் கூடத் தெரியும். ஆனால் அவன் சத்தியத்தை விலக்கித் தள்ளி விடுவான். மற்றவர்களை ஏமாற்றும்படி ஒரு ஒளியின் தூதனைப் போல வேதவசனங்களை மேற்கோள் காட்டிக்கொண்டு வருவான். ஏவாளிடத்தில் சாத்தான் செய்ததுபோல, தேவன் கூறியுள்ள காரியங்கள் மீது சாத்தான் சந்தேகக் கேள்விகளைக் கேட்டு விசுவாசியின் மனதைக் குழப்பும் வேலையைச் செய்வான். விசுவாசியின் உள்ளத்தில் சந்தேகங்களை விதைத்துவிடுவான். வேத வசனங்கள் நமக்குப் போதிப்பதை அறிந்து கொள்ளவும், அவை விரும்புவதை நாம் செயல்படுத்துவதுமே இணையற்ற செயலாகும். விசுவாசியின் சர்வாயுதவர்க்கத்தைப் பற்றி அறிந்துகொண்ட நாம், தேவனோடு நமக்குள்ள உறவும், தொடர்பும் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்று புரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமான காரியமாகும்.

ஆவியின் பட்டயமாகிய வேதாகமத்தைச் சாத்தானின் தாக்குதல்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும்படி பயன்படுத்துவது மட்டுமல்ல, மற்றவர்களைக் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தத் தாக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்த வேண்டும். இயேசு தமது சீஷர்களிடத்தில் “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று கட்டளையிட்டார். மற்றவர்கள் கிறிஸ்துவைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் உதவி செய்யும்போது நாம் வேதவசனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

வேதாகமம்மட்டுமே ஒரே அதிகாரப்பூர்வமான தேவ வார்த்தையின் தொகுப்பாகும். அடுத்தவர்களுடைய பாவங்களைச் சுட்டிக்காட்டி, இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் நாம் கூறவேண்டும். தேவனிடத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே வெளிப்பாடு, என்பதனால் பவுல் தீமோத்தேயுவிடம் இப்படிக் கூறினார்: “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு, புத்திசொல்லு” (2தீமோத்.4:2).

ஆவியின் பட்டயத்தைத் தற்காப்புக்காகவோ தாக்குவதற்காகவோ திறமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், இயேசுகிறிஸ்துவின்மீது ஆழ்ந்த பற்றுதல் இருக்கவேண்டும். சில வார்த்தைகளை மட்டும் திரும்பத்திரும்பக் கூறுதல் திறமையான பட்டயத்தாக்குதல் அல்ல. ஆவியினால் நிறைந்த இருதயத்திலிருந்து பேசப்படும் ஆவியின் பட்டயம் நித்தியமான நன்மைகளையும் பலனையும் தரும்.

ஆவியின் பட்டயம் எப்போதும் ஆயத்த நிலையில் இருக்கவேண்டும். ஏனெனில் சாத்தான் முன்னறிவிப்போ, எச்சரிக்கையோ தந்துவிட்டு நம்மைத் தாக்கமாட்டான். அவன் நம்மைத் தாக்கு வதற்குமுன் நாம் ஆயத்தமாக வேதாகமத்தைத் திறந்துவைத்துக்கொண்டு தேவனுடைய வசனங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறோமா என்று காத்திருக்கமாட்டான். இதற்கு நேர் எதிர்மாறான சந்தர்ப்பங்களில் நம்மைத் தாக்குவான். நம்முடைய உள்ளம் வேத வசனங்களை விட்டுத் தூர விலகி இருக்கும்போது சாத்தான் விழிப்படைவான். அவன் நம்மைத் தாக்கும்போது உடனே எடுத்து வாசிக்கத்தக்கதாக  வேதாகமம் நம் கை அருகில் இராது. முக்கியமான, தேவையான வேத வசனங்களை நாம் மனப்பாடம் செய்திருந்தால் அவை எந்த நேரத்துக்கும் கையுதவியாக இருக்கும். கடந்த காலத்தில் தேவனுடைய வார்த்தைகளை நாம் கருத்தாய், வாசித்துத் தியானித்து மனதில் இருத்திக்கொண்டிருந்தால், பரிசுத்த ஆவியானவர் அவற்றை நம் நினைவுக்குக் கொண்டு வந்து பயன்படுத்த உதவி செய்வார்.

பரிசுத்த ஆவியானவரின் ஊழியப்பணிகளில் ஒன்று முக்கியமான காரியங்களை வேண்டிய நேரத்தில் நம் நினைவுக்குக் கொண்டு வருவதாகும். யோவான் 14:26 இல் இப்படிப்பார்க்கி றோம். “என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்”. இவ்விதமாக தேவ வசனமானது ஆவியின் பட்டயமாக மாறுகிறது. நம்மிடம் வாசிக்க வேதாகமம் இல்லாத வேளைகளிலும் பரிசுத்த ஆவியானவரின் உதவியால் ஆவியின் பட்டயம் பயன்படுகிறது. எனவே வேத வசனங்களை நம் மனதில் மறைத்து வைத்திருத்தல் மிகவும் முக்கியமான காரியமாகும். தாவீது செய்ததுபோல நாமும் செய்ய வேண்டும். “உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்துவைத்தேன்” (சங்.119: 11). நாம் சாட்சி கூறும்போது, நம்முடைய கடமையும், பொறுப்பும் தேவவசனத்தை அப்படியே சித்தரிப்பதாகும். நாம் அதற்குத் தற்காப்பாக எதையும் கூறத் தேவையில்லை.

தேவவசனத்துக்கு தற்காப்பு தேவையில்லை என்ற இந்தக் கருத்தைக் குறித்து புகழ்பெற்ற இறைப்பணியாளர் ஸ்பர்ஜன் இப்படிச் சுட்டிக் காட்டியுள்ளார். “ஒருவனை ஒரு சிங்கம் தாக்க வந்தால் அதற்கு அவன் செய்யும் தற்காப்பைவிட அதிகமாக ஒன்றும் தேவ வசனத்துக்குச் செய்யத் தேவையில்லை. ஒரு சிங்கத்தை அதன் கூட்டிலிருந்து வெளியே விட்டுவிடுங்கள். அது தனக்குத் தற்காப்புச் செய்து கொள்ளும்”.

மொழியாக்கம்: G.வில்சன்


நினைவுகூருங்கள்

தேவன் மக்களுக்கு கொடுத்த மிகச்சிறந்த பரிசு வேதாகமமே!  உலக இரட்சகரிடமிருந்து நமக்கு கிடைக்கவேண்டிய சகல நன்மைகளும் இப்புத்தகத்தினூடாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சத்தியவசனம்