ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்!

Dr.உட்ரோ குரோல்
(மே-ஜுன் 2018)

என்னை நேசிக்க யாருமேயில்லை என அங்கலாய்ப்பவர்கள் பலர் நம் மத்தியில் காணப்படுகின்றனர். என் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், வாழ்க்கைத்துணை ஒருவருமே என்னைப் புரிந்துகொள்ளவில்லை எனத் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்வோரும் உண்டு. ஆனால் அவர்களை ஆழமாக நேசிக்கும் ஓர் அன்பின் ஆண்டவர் உண்டு. அதை அவர்கள் அறியவேண்டும். இறைவன் மனிதர்களுடன் ஆழமான உறவு கொள்ளவும் தம்முடைய அன்பை அவர்கள் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்றும் ஆவல் கொண்டிருக்கிறார்.

அநேகர் தேவனைத் தேடுவதில்லை. அவர்கள் உலகத்தால் திருப்தியற்று நிறைவைத் தேடியலைகிறார்கள். அத்தாகத்தை தேவன் மாத்திரமே தணிக்கமுடியும். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தேவன் அத்தாகத்தை உருவாக்குகிறார். அப்பொழுது அவர்கள் தேவனைத் தேட ஆரம்பிக்கிறார்கள். மனிதன் தேவனைத் தேடுகிறான். ஆனால் தேவனோ மனிதனைத் தேடிக்கொண்டிருக்கிறார். தேடல் இருவரிடமும் காணப்படுகிறது. நீங்களும் நானும் தேவனைத் தேடுவதைப்போல அவரும் தம்மைத் தேடும் மனிதரைத் தேடுகிறார். 1960ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி, நிலவில் மனிதனை இறக்கிவிட தம் நாட்டு விண்வெளி அறிஞர்களுக்கு சவால் விட்டார். 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி நீல் ஆர்ம்ஸ்டாராங் என்ற வீரர் நிலவில் காலடி வைத்தார். மனிதனுக்கு அது ஒரு சிறு அடிதான். ஆனால் மனுக்குலத்துக்கு அது மாபெரும் பாய்ச்சல். ஆம் விண்வெளியைப் பற்றிய தாகத்துக்கு முதல் மைல் கல்லை அறிவியல் அறிஞர்கள் நிறுவினர். இன்றும் அவ்வாராய்ச்சிகள் தொடருகின்றன. உலக மக்களிடம் இயற்கையாகவே ஒரு தேடல் காணப்படுகிறது.

ஐசக் பெரிமன் என்ற  இசைஞானி தமது நான்காவது வயதிலே போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாதவரானார். இரு கால்களிலும் இரும்பு பிணைப்புகளைக்கொண்டே அவரால்  நடக்க முடியும். இசை அரங்கு நிகழ்ச்சியில் அவர் நாற்காலியிலிருந்து எழும்பும் பொழுது அவரால் வயலின் வாசிக்கமுடியும் என்று யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் நீங்கள் அவரது வயலின் இசையைக் கேட்கும்பொழுது உலகின் மிகச்சிறந்த இசைக்கலைஞராக வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை நீங்கள் உறுதிப்படுத்துவீர்கள்.

ஆண்களும் பெண்களும், நீங்களும் நானும் வாழ்வில் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நாம் பொன்னைத் தேடுகிறோம்; பதவியைத் தேடுகிறோம்; புகழைத் தேடுகிறோம். உள்ளான சமாதானத்தைத் தேடுகிறோம். அநேகர் வாழ்வின் அர்த்தத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வாழ்க்கையே ஒரு தேடல்தான். தேவனும் தேடிக்கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்களா? உலகின் கடை முனை மட்டும் அவர் தேடுகிறார். அவருடைய தேடுதல் ஆதிகாலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. போதகர் ஜிம் சிம்பாலா என்ற போதகர் தேவன் ஞானத்தையோ விலையேறப்பெற்ற கற்களையோ தேடவில்லை. அவர் அனைத்தையும் அறிந்தவர்; உலகம் முழுவதும் அவருக்கே உரியது. ஆனால் சர்வத்தையும் படைத்தாளும் சர்வ வல்லவர் உலகம் முழுவதும் தம்மைத் தேடும் ஓர் இருதயத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு மனிதனைப் பலப்படுத்தி உதவி செய்து ஆசீர்வதிக்க முடியும் என்பதை அனுமதிக்கும் ஓர் இதயத்தை அவர் தேடுகிறார் என்று கூறியுள்ளார்.

என் நண்பரே! தேவன் உங்களைத் தேடுகிறார். மகனே, உன் நெஞ்சை எனக்குத் தாராயோ? என்று மனிதர்களைத் தேடுகிறார். பரலோக தேவன் தம்முடைய தேடலை நிறுத்தப்போவதில்லை. வெளி.5:9 கூறுவதுபோல சகல இனமக்களிடமும், பாஷைக்காரர்களிடமும் சகல நாட்டு மக்களிடமும் தேடுகிறார். அப்படி தம்முடைய இதயத்துடன் இசைந்துசெல்லும் ஒரு ஆணையோ பெண்ணையோ அவர் கண்டுபிடித்தால் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எப்படிப்பட்ட இதயத்தைத் தேவன் தேடுகிறார்? பலசாலிகளையோ ஞானிகளையோ செளந்தரியமானவர்களையோ அவர் தேடவில்லை. பணம் படைத்தவர்களையோ, பெரும் பதவியில் இருப்பவர்களையோ சேவை மனப்பான்மையுடையவர்களையோ அவர் தேடவில்லை. தம்மைத் தேடும் இதயத்தையே அவரும் தேடுகிறார். அப்படிப்பட்ட இதயத்தை அவர் காணும்பொழுது அந்த தாகத்தைத் தமது பிரசன்னத்தால் நிரப்புகிறார்.

தாவீது அரசரின் இதயம் தேவனைத் தேடியது. சங்கீதம் 63:1இல் தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது என்று அவர் விளக்குகிறார். தாவீது தேவனைத் தேடிய ஒரு மனிதர். தேவனுடன் நெருங்கி உறவாட விரும்பினார். அவருடைய ஆத்துமா மாத்திரமல்ல, அவருடைய சரீரமும் தேவனை அறிந்துகொள்ள விரும்பியது. சரீரத் தேடுதலைக் குறிக்க கஹ்மா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். வேதபுத்தகத்தில் இந்த ஓரிடத்தில் மாத்திரமே இச்சொல் காணப்படுகிறது. நம் மொழியில் சொல்வதானால், எனக்கு அது கிடைக்கவில்லை எனில் நான் மரித்துவிடுவேன் என்பதாகும். தேவனோடு நெருங்கிய உறவு கொள்ள தாவீது ஏங்குகிறார். அத்தாகத்தை அவர் தீர்க்காவிடில் தான் மரித்துப்போய் விடுவதாக இங்கு அவர் அறிவிக்கிறார். தாவீதின் தகப்பனை சாமுவேல் தீர்க்கதரிசி சந்தித்து அவருடைய குமாரர்களுள் ஒருவனை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணவேண்டும் என்று கூறினார். எனவே ஈசாய் தன் குமாரர்களை பரிசுத்தம்பண்ணி சாமுவேலுக்கு முன்பாக நிறுத்தினார். சாமுவேல் ஈசாயின் மூத்த குமாரனான எலியாபைப் பார்த்தவுடனே கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன்தான் என்று தனக்குள்ளாக முடிவெடுத்தார் (1சாமு.16:6). ஆனால் கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார் (1சாமு.16:7) தாவீது செளந்தரய ரூபமுள்ளவனாயிருந்தான். நல்ல பலசாலி, இளஞனான மேய்ப்பன். விரைவில் ஒரு போர்வீரனாகப் போகிறவன். ஆனால் தேவனுக்கு அவன் தேவனோடு நெருங்கிய உறவுகொள்ள வாஞ்சித்த அவனது இருதயமே பிடித்திருந்தது. அவ்வாறான இதயத்தையே தேவன் இன்றும் நம்மிடையே தேடிக்கொண்டிருக்கிறார். அதை உங்களிடத்திலும் என்னிடத்திலும் தேடுகிறார்.

தாகம் எடுக்கும்பொழுது நாம் தண்ணீரை அருந்துகிறோம். ஆனால் கோடை காலத்திலும் வெப்ப நாடுகளிலும் நாம் அதிகமான நீரை எடுத்துக்கொள்ளுகிறோம். அதைப்போலவே நாம் தேவன் மேல் தாகமாயிருக்கும்பொழுது அதைத் தீர்க்க அவருடைய வார்த்தையை அதிகமாய் வாசிக்கவேண்டும். வாசித்த வசனங்களை தியானிக்கவேண்டும். அப்பொழுதுதான் தேவனை நாம் அதிகமாய் புரிந்துகொள்ள முடியும்; அவரோடு அதிகமாய் உரையாட முடியும். நம்முடைய தாகத்தை நாம் அறிக்கையிடுவதுமாத்திரம் போதாது, அதனை நிரூபிக்கவும் வேண்டும். தேவனைத் தேடுதலை ஒரு கடமையாகக் கருதக்கூடாது. அது தேவையின் நிமித்தமாகவும் அன்பு நிறைந்ததாயும் மரியாதையுடனும் இருக்க வேண்டும். கடமைக்காகவும் கட்டாயத்துக்காகவும் செய்யாமல் ஒருநாளில் அவருடன் ஐக்கியம் கொள்ள நேரத்தை தனியாக ஒதுக்கவேண்டும். அதை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளவேண்டும். அநேக பக்தர்கள் தேவனோடு நெருங்கிய ஐக்கியம் வைத்திருந்தனர். எனவே நாமும் தேவனுடனான அவ்வித ஐக்கியத்தைக் கொள்வது சாத்தியமே.

தாவீது என்னைவிட எதில் வேறுபட்டவர்? நான் எவ்வாறு அவரைப்போல மாறலாம்? என்று அறிந்துகொள்ள சங்கீதம் 63 அல்லது 1 சாமுவேல் 16ஐ வாசிக்கலாம். தேவன் உங்களுடன் தொடர்பு கொள்ள விருப்பம் இல்லாதவராயின் நீங்களும் அவரைத் தொடர்புகொள்ள முடியாது. ஆனால் அவர் நம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார். தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது (2 நாளாகமம் 16:9). தம்முடைய தெய்வீகக் கண்களால் பூமி முழுவதையும் தேவன் ஆராய்ந்து கொண்டிருக்கிறார். தம்முடன் தொடர்புகொள்ள ஆவலாய் இருக்கும் மனிதர்களைத் தேடுகிறார். அவ்வாறு முழுவதும் அர்ப்பணித்த இருதயத்தை அவர் காணும்பொழுது அவர்களை அவர் ஆசீர் வதிக்கிறார். நமது இதயத்தில் அத்தாகத்தைத் தூண்டிவிடுபவர் அவரே. தேவனைவிட்டு தூரமாய்ச் செல்லும் மனிதர்களைத் திருப்பிக் கொண்டுவர அவரே முதல் முயற்சியைச் செய்கிறார். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் பாவம் செய்தபின் தேவனிடமிருந்து தங்களை மறைத்துக் கொண்டனர். ஆனால் தேவன் அவர்களைத் தேடிவந்தார். தம்முடனான உறவை சரி செய்துகொள்ள அவர் ஆதிப் பெற்றோர்களைத் தேடிச் சென்றார். இதனை நாம் ஆதியாகமம் 3ம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.

பூமியிலுள்ள மக்கள் அனைவரும் அக்கிரமம் செய்து வாழ்ந்தபொழுது வேறு வழி இல்லாமல் அனைத்து உயிர்களையும் அழிக்க தேவன் எண்ணியபொழுது தங்களைக் காத்துக்கொள்ள பேழை கட்டும் எண்ணம் நோவாவுக்கு எழுந்ததா? இல்லை. இரட்சிப்பை உண்டுபண்ணும்படி தேவனே நோவாவுக்கு பேழையைக் கட்ட ஆலோசனை வழங்கினார். தேவனே எப்பொழுதும் நம்முடன் நெருக்கமான ஒரு உறவை ஏற்படுத்துகிறவர். A.W.டோசர் என்பவர் தாம் எழுதிய The Pursuit of  God என்ற புத்தகத்தில் நாம் தேவனைத் தேடுகிறோம். ஏனெனில் அவரே நமக்குள்ளாக அவ்வாஞ்சையைத் தூண்டிவிடுகிறார். தேவனைத் தேடுதல் அவரிடமிருந்தே ஆரம்பமாகிறது. ஆனால் அந்த உந்துதலை நாம்தான் தொடர வேண்டும் என்று எழுதியுள்ளார். தேவனை நெருங்கி வாழ நாம் செய்யும் அனைத்துக் காரியத்துக்கும் அவர் நம்மில் எழுப்பிவிட்டதாகமே காரணம்.

இன்று நீங்கள் தேவனுடன் தொடர்புகொள்ள விரும்புகிறீர்களா? இருதயம் என்று வேதாகமம் குறிப்பிடுவது உடலுக்குள் இரத்தத்தை அனுப்பும் உறுப்பு அல்ல. அது நம்முடைய உள்ளான மனிதனைக் குறிப்பிடுகிறது. பாவத்தினால் நம்முடைய இருதயம் கேடுள்ளதாயிருக்கிறது என்று எரேமியா 17:9 கூறுகிறது. நம்முடைய இருதயத்தை நாம் அறியமாட்டோம். அதனை நாம் முழுவதும் நம்ப முடியாது என்று 1 கொரி. 4:7இல் நாம் வாசிக்கிறோம். அநேகநேரங்களில் விசுவாசிகள் மறைவான நோக்கங்களைக் கொண்டுள்ளனர். அவர் களுடைய இருதயங்களில் இரகசியமான பாவ விருப்பங்கள் எழுகின்றன. உலகம் அதனை அறியாது. இருதயம் பலவற்றைப் பகுத்தறிகிறது. நமது பாவ பழக்கத்தை நியாயப்படுத்துகிறது. நம்முடைய சிந்தையை மறைத்துவிடுகிறது. ஆனால் தேவன் இருதயத்தை ஆராய்கிறவர். அவரை நாம் ஏமாற்ற முடியாது.

அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை (யோபு 34:21-22). எரேமியா தீர்க்கதரிசி ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே (எரே.20:12) என்று தேவனை அழைக்கிறார். தாவீதைப் போன்ற இருதயம் உங்களுக்கும் கிடைக்கும்; தாவீதைப் போன்று நீங்களும் தேவன்மேல் தாகமாய் இருக்க முடியும். தேவன் உங்களுடைய ஏக்கத்தை அறியாதவர் அல்லர். நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்ப்பது தேவனுக்கு மிக எளிது. ஏனெனில் தமது வார்த்தையாகிய வேத வசனத்தின் மூலம் அது அவருக்கு சாத்தியம். எனவே தான் எபிரெய புத்தகத்தின் ஆசிரியர் தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று நமக்கு நினைப்பூட்டுகிறார் (எபி.4:12,13).

வேதாகமத்தின் மூலம் உங்களுடைய இருதயத்தின் உள்ளான நோக்கங்களை அறிந்து கொள்ள தேவன் உங்களுக்கு உதவுவார். அங்கேதான் உங்களுக்கு தேவனுடனான தொடர்பு உள்ளது. தேவனுடைய வார்த்தை வழியாக நீங்கள் அவருடைய எண்ணங்களை அறிந்துகொள்வது போலவே அவரும் உங்களது எண்ணங்களை அறிவார். தேவனுடைய இருதயத்துக்கும் உங்களுடைய இருதயத்துக்கும் வேதாகமமே இணைப்பு சாதனமாகும். தேவனுடைய வார்த்தையில் நீங்கள் பரிச்சயமுள்ளவர்களாயிருந்தால் தேவனோடு நெருங்கிய உறவு கொள்ளமுடியும். வேதாகமம் வாழ்வுக்கு வழிகாட்டி, அறிவு நிறைந்த வார்த்தைகள், அழகிய வாழ்க்கை சரித்திரங்கள் அடங்கியது மாத்திரமல்ல. அது உங்களுடைய இருதயம் தம்முடைய இருதயத்தோடு ஒத்துப்போக தேவன் வைத்துள்ள ஒரு கருவியாகும். ஒரு நூலின் ஆசிரியரைப் பற்றி அறியாமல் அந்த புத்தகத்தை வாசிப்பதில் உபயோகம் இல்லை. அதனால்தான் அநேகர் வேதத்தை வாசித்தும் அதன் பயனை அடையாமல் போகின்றனர். ஏனெனில் அவர்கள் அந்நூலாசி ரியரின் எண்ணத்தைப் புரிந்துகொள்ளவில்லை. கோராகின் புத்திரர்கள் மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? (சங். 42:1-2) என்று பாடியுள்ளார்கள். தாகத்தைத் தீர்க்கும் பானம் வேதவசனங்களே. இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன் (யோவான் 7:37) என்று இயேசுகிறிஸ்து அழைக்கிறார். ஆம்! ஆத்தும தாகத்தைத் தீர்ப்பதற்கான முக்கியமான வழியை தேவன் தம்முடைய வார்த்தையில் வெளிப்படுத்தியுள்ளார். ஆகவேதான் அவர் தம்மை வெளிப்படுத்தி, தம்முடைய திட்டங்களையும் வாக்குறுதிகளையும் உங்களுக்கு தந்துள்ளார்.

வேத வசனங்களை வாசிக்கும்பொழுது தேவனுடைய இருதயத்தையும் அவரது சிந்தனைகளையும் நாம் அறிந்து கொள்ளமுடியும். தேவனுடைய வார்த்தைக்குத் திரும்பும்படி மக்களை அழைப்பதே நமது ஊழியமாயிருக்கிறது. ஏனெனில் இவ்வுலகம் ஆத்துமதாகத்தினால் வருந்திக் கொண்டிருக்கிறது. தேவன் நமக்குத் தந்த விலையேறப்பெற்ற பொக்கிஷம் அவருடைய குமாரனும் அவருடைய வார்த்தையுமே ஆகும். நீங்கள் உண்மையிலேயே தேவனைத் தேடுவீர்கள் எனில் தேவன் அதை அறிவார். அவருடன் தொடர்பு கொள்ளும் வழியையும் அவர் தந்துள்ளார். வேத புத்தகம் ஒரு விலையேறப்பெற்ற புத்தகம். காலங்கள் கடந்தும் அது பழையதாகிப்போகாது. தினமும் ஒரு மணி நேரமாவது அதை வாசியுங்கள். தேவன் உங்களோடு பேசுவார். தம்முடைய சத்தியங்களையும் உங்களைப்பற்றிய திட்டத்தையும் அவர் வெளிப்படுத்துவார். வேதத்தை நேசியுங்கள். அதை நீங்கள் வாசியுங்கள்.

பூர்வ காலங்களில் தீர்க்கதரிசிகளின் மூலமாகப் பேசின தேவன் பின்னர் அவருடைய குமாரன் மூலமாகப் பேசினார். நமக்கோ அவருடைய வார்த்தையின் மூலமாகப் பேசுகிறார். அவர் அமைதியாய் இருப்பவரல்லர். நாம்தான் வேத வசனங்களுக்கூடாக அவரைத் தேடி உறவுகொள்ள வேண்டும்.

விலையேறப்பெற்ற வேத புத்தகமானது பேதைகளுக்கு ஞானமும், வறியவர்களுக்கு பெரும்செல்வமாகவும், பாதைக்கு நல்தீபமாய் பரலோகத்துக்கு செல்லும் வழியைக் காட்டுமே!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்