பிரிக்க முடியாத இரட்டையர்கள்

சகோதரி சாந்தி பொன்னு
(மே-ஜுன் 2018)

ஆசீர்வாதம் – பாடுகள், இவையா இரட்டைப் பிறவிகள்? எப்படி இது சாத்தியமாகும்? யார்தான் பாடுகளை விரும்புவர்? யார்தான் ஆசீர்வாதம் வேண்டாம் என்பர்? ஆனால் இரண்டும் சேர்ந்து எப்படி? வேதம் சொல்லுவது என்ன?

“உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள். மழையும் குளங்களை நிரப்பும். அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து சீயோனிலே தேவ சந்நிதியில் காணப்படுவார்கள் ( சங்.84:5-7).

“இவளுக்கு என்னதான் நடக்கிறது?” எல்லோருடைய கண்களும் ரோஸியை நோக்கின. திடீரென்று,  கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள் ரோஸி. அடக்க ஆராதனை நடத்திக் கொண்டிருந்த போதகர் உட்கார்ந்துவிட்டார். இரண்டு நாட்களின் பின்னர் ரோஸி இப்பொழுதுதான் வாய் திறக்கிறாள். அரையிலே தன் அன்பு மகனைச் சுமந்துகொண்டு பேச ஆரம்பித்தாள். “பிரியமானவர்களே, இந்த விபத்து எப்படி நடந்தது? அவர் எப்படி இறந்தார், நானும் மகனும் எப்படி உயிர் பிழைத்தோம் என்பதெல்லாம் விளங்காத புதிர். என்றாலும், கர்த்தருக்குள் பெலன்கொள்ளுகிற மனுஷன் பாக்கியவான். அவன் சீயோனிலே தேவசந்நிதியில் காணப்படுவான். என் கணவர் அந்தப் பாக்கியத்தைப் பெற்றுவிட்டார். நாமோ இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த உலகத்தின் நிகழ்வுகளும், மரண இழப்புகளும் நமது சீயோன் பயணத்தைத் தடுக்க எத்தனிக்கும். நாம் இடமளிக்கக்கூடாது. இடமளித்தால், அது நம்மைக் கெடுத்துப்போடும். அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். இந்தப் பயணத்தில் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியை விலகி வேறு குறுக்கு வழியில் நாம் செல்லமுடியாது. பள்ளத்தாக்கை உருவ நடக்காதவன் அதன் நீரூற்றின் புத்துயிரையும் பெலத்தையும் பெற்றுக்கொள்ளமுடியாது; சீயோனில் சேரவும் முடியாது”. இவ்வாறு ரோஸி பேசி முடித்தாள். அப்பொழுது எல்லோரின் கண்களும் கலங்கின. ஆனால் ரோஸியின் கண்களோ பிரகாசமடைந்தது.

பாடுகளும் ஆசீர்வாதமும் இரு துருவங்கள் என்று நாம் நினைப்பது தவறு. இவை இரண்டும் மனுஷனின் உருவாக்கத்துக்கும், உச்சித பட்டணம் நோக்கிய பயணத்துக்கும் இன்றியமையாதது. “பாடுகளின்றி பரலோகம் இல்லை”. இதைச் சொன்னது பட்டணத்தில் பணிபுரியும் ஒருவர் அல்ல; கரடிகள், புலிகள், யானைகள், காட்டெருமைகள்கூட வாழுகின்ற, தமிழ்நாட்டின் ஒரு காட்டுப் பகுதியில் பணிபுரிகின்ற ஒரு ஊழியர் சொன்னது.

பாடுகள் அவசியந்தானா?

யாருக்குத்தான் பாடுகள் இல்லை! இது விழுந்துபோன உலகம். பாடுகள் வேதனைகள் வரத்தான் செய்யும். காரியம் அதுவல்ல. அந்தப் பாடுகளை நாம் எப்படிப் பார்க்கிறோம், அவற்றுக்கு எப்படி முகங்கொடுக்கிறோம், என்ன பதிலுரை கொடுக்கிறோம் என்பதில்தான் மனுஷ வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அடங்கியிருக்கிறது.

“எப்படியப்பா உன் பாடுகள்” என்று வெகு சாதாரணமாக நாம் பிறரை விசாரிப்பதுண்டு. அதாவது ஒருவரின் சுகத்தை விசாரிக்கும்போது, நம்மையும் அறியாமலே “பாடுகள்” என்ற சொல்லைப் உபயோகிக்கிறோம், இல்லையா! நமக்கு நேரிடுகின்ற பல பிரச்சனைகளுக்கு நாமே காரணராகும் சந்தர்ப்பங்களும் உண்டு. அவற்றுக்கு முகங்கொடுத்து, அதை நாம் சரிசெய்யத்தான் வேண்டும். ஆனால், பாடுகள் என்பதுதான் என்ன? தாங்கொண்ணாத் துயர், துன்பம், துயரம், வலி, துக்கம் என்று பல விதங்களில் பாடுகளை நாம் விபரிக்கலாம், உணரலாம். தேவன் இந்தப் பூமியைப் படைத்து மனுஷனையும் படைத்து மகிழ்ந்திருந்தபோது இவை எதுவும் இருக்கவில்லை. ஆகவே, இந்த உணர்வுகளும் அனுபவங்களும், மனிதன் பாவத்தில் விழுந்த பிற்பாடு உண்டானவை என்பது விளங்குகிறது. ஆம், விழுந்துபோன உலகம் தீமையினால் அல்லது பாவத்தினால் பாடுகளுக்குட்பட்டுள்ளது. ஆனால், யோபுவின் பாடுகள் தேவனுடைய அனுமதியுடன் சம்பவித்ததை யோபு புத்தகத்தில் காண்கிறோம். ஒரு நீதிமான் பாடுபடலாமா என்ற கேள்வியை இப்புத்தகம் பலருடைய மனதில் எழுப்பியிருக்கிறது. யோபுவின் முழுப்புத்தகத்தையும் ஆழமாகத் தியானித்தால், எதுவும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை நம்மால் மறுக்கமுடியாது.

காரணங்கள் பல

பாடுகளுக்குப் பல காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, விழுந்துபோன உலகில் பாடுகள் எல்லோருக்கும் பொதுவானது. அல்லது, நமது தவறுகளால் நமக்குத் துன்பங்கள் ஏற்படலாம். அல்லது, நாம் விதைப்பதை அறுக்கவேண்டியும் வரும். எல்லாவற்றுக்கும் மேலாக, நமது பிதாவாகிய தேவன் நம்மைப் புடமிட்டு உருவாக்கும் போதும், நமது தவறுகளிலிருந்து நம்மைச் சீர்ப்படுத்தும்படி நம்மைச் சிட்சிக்கும்போதும் நமக்குப் பாடுகள் நிச்சயம் நேரிடும். இன்னுமொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். கிறிஸ்துவினிமித்தம் வருகின்ற பாடுகள், அதாவது கிறிஸ்து நம்மில் மகிமையடையும்படிக்கு தேவன் அருளின மேலான ஈவாகவும் பாடுகள் வரும்.

பாடுகளைக் குறித்து பவுல் மகிமையான தொரு விஷயத்தை எழுதியுள்ளார். “கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது” (பிலி.1:29). இங்கே “அருளப்பட்டிருக்கிறது” என்ற வார்த்தையைக் கவனிக்க வேண்டும். ஆம், பாடுகள் நமக்கு அருளப்பட்டுள்ள ஈவு. இது விநோதமாயில்லையா? வேதனை தருகின்ற பாடுகளை யாரும் ஈவு என்றும் ஆசீர்வாதம் என்றும் சொல்ல முடியுமா? முடியும்; எப்போது? கிறிஸ்துவினிமித்தம் பாடுகளுக்குட்படுத்தப்படும்போது அது நமக்கு அருளப்பட்ட ஈவாக இருக்கிறது. பாடுகள் நமக்களிக்கப்பட்டுள்ள ஒரு சுதந்திரம்! உலக சுகத்தைவிட்டு பரத்தை நோக்கி நமது கண்களை ஏறெடுக்கப் பாடுகள்தான் நமக்கு உதவுகிறது. மேலோட்டமான போலித்தனமான விசுவாசிகளைப் பாடுகள் களைந்துபோடும். விசுவாசியின் விசுவாசத்தைப் பாடுகளே பெலப்படுத்துகிறது. நம்மைக் கிறிஸ்துவுடன் அடையாளப்படுத்துவதும், கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நாம் முகங்கொடுக்கும் பாடுகள்தான். இப்போ சொல்லுங்கள், பாடுகள் ஆசீர்வாதமா? இல்லையா?

“என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்” (1பேதுரு1:6-7). ஆக, பாடுகள் நமக்கு அவசியமா இல்லையா என்பதை நாமே தீர்மானித்துக்கொள்வோம். மேலும், பேதுரு, “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடனுவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக” (1பேதுரு5:10) என்கிறார். பாடுகள் பாக்கியம் இல்லையா!

கிறிஸ்துவினிமித்தம் பாடுகள்

இப்படியிருக்க, பாடுகளை நாம் பாடாக நினைக்கலாமா? (ஆனால், நமது பாடுகளுக்கு நாமே காரணரானால், நாமேதான் மனந்திரும்ப வேண்டும், அதைத் தேவபலத்துடன் சரிசெய்ய வேண்டும்). என்றாலும், சில சம்பவங்கள் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துவதை மறுக்க முடியாது. சமீபத்தில், ஒரு ஊழியரின் தலையைத் துண்டாடி, அந்தக் காட்சியை இணையத்தளத்திலும் பரவவிட்டிருந்தனர். ஆனால், நமது நாட்டுச் சூழலில் இப்படியான சம்பவங்கள் வெகு அரிது. இப்படியிருக்க கிறிஸ்துவினிமித்தம் பாடுகள் என்றால், நமது சூழ்நிலையில் அதற்கும் நமக்கும் சம்பந்தம் என்னவென்று கேள்வி எழும்பலாம். அதற்கு வேதாகமம் தருகின்ற ஒரே பதில், இந்த உலகுடன் ஒத்துப்போகாமல், கிறிஸ்துவின் வழியில், அவருடைய வார்த்தையின் வழியில் நாம் வாழ எத்தனித்தாலே இந்த உலகம் நம்மைச் சும்மா விடுமா? இதனால்தான் இன்று அநேக கிறிஸ்தவ பிள்ளைகள் உலகத்தோடு சறுக்கிப்போகிறார்கள். உலகம் கிறிஸ்துவுக்குப் பகையானது. ஆகையால் கிறிஸ்துவையுடையவர்களும் இந்த உலகுக்குப் பகையாளிகளே. அப்படியிருக்க இந்த உலகம் நம்மைச் சும்மாவிடுமா?

ஆனால், கர்த்தர் நம்மை நிச்சயம் தாங்குவார். எப்படி? பாடுகளிலிருந்து நம்மை விலக்கி வைத்து அல்ல; அப்படிச்செய்தால் நாம் உருவாக்கப்படுவது எப்படி? பேதுரு சோதிக்கப்படுவான், மறுதலிப்பான் என்று இயேசுவுக்குத் தெரியும். ஆனால் இயேசு பேதுருவை எப்படித் தாங்கினார்? “நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்” (லூக்.22:31,32) என்றார். சோதனையினின்று விலக்குவதாக இயேசு சொல்லவில்லை; விசுவாசத்தைக் காத்துக்கொள்வதாகவே நம்மைப் பலப்படுத்துகிறார். இப்போ சொல்லுவோம், பாடுகள் வெறுப்பிற்குரியதா? அல்லது, அதுவே ஆசீர்வாதத்தின் ஊற்றா? ஆசீர்வாதத்தைக் குறித்துத் தவறாகப் போதிக்கப்பட்டு, தவறான எண்ணங்களையும் ஏக்கங்களையும் மனதில் வளர்த்துக் கொண்டதனால்தான் இன்று பாடுகளில் நாம் சோர்ந்துபோய், சில சமயம் பின்வாங்கியும் போகிறோம்.

ஆசீர்வாதத்தின் ஆசீவாதம்

ஆசீர்வாதம் என்றாலே, எனக்கு என்ன கிடைத்தது, என்ன கிடைக்கிறது, கிடைக்க வேண்டும் என்ற ஒரு தவறான சிந்தனையை நாம் வளர்த்துவைத்திருக்கிறோம். அது முற்றிலும் தவறு.

ஆசீர்வாதம் என்பது எனக்குரியதல்ல; மாறாக, என்னாலே அடுத்தவனுக்கு உரித்தாகுவது.

ஆசீர்வாதம் என்பது நான் பெற்றுக் கொள்வது அல்ல; நான் கொடுப்பது!

ஆசீர்வாதம் என்பது வைத்திருப்பதில் அல்ல; விட்டுவிடுவதிலேயே மிளிருகிறது!

ஆசீர்வாதம் என்பது தற்காலிகமானது அல்ல; அது நம்முடன் கூடவே வருவது!

ஆசீர்வாதம் என்பது ஒருபோதும் சாபமாக மாறாது; சாபத்தையும் மாற்றவல்லது!

ஆசீர்வாதம் பிறரிலிருந்து எனக்கல்ல; என்னிலிருந்து ஊற்றெடுத்து பிறருக்குள் பாய்வது!

ஆசீர்வாதம் என்பது உலகம் கற்றுத்தருவதல்ல; அது தேவனிடத்திலிருந்து கற்றுக் கொள்வது!

ஆக, நன்மைகளையும் நற்காரியங்களையும் நான் அல்ல; பிறர் பெற்று வாழவேண்டுமென்று நான் அவர்களை வாழ்த்தி, அந்த வாழ்த்தைச் செயற்படுத்துகின்ற ஒரு செயற்பாடுதான் ஆசீர்வாதம்!

“நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்று வெறுமனே சொல்லுவது இலகு; அந்த வாழ்த்தைச் செயலில் வெளிப்படுத்துகின்ற ஒரு வல்லமையே ஆசீர்வாதம். ஆகவே, நாம் நினைத்திருக்கிறபடி ஆசீர்வாதம் என்பது நாம் பெற்றுக் கொள்கின்ற காரியங்கள், அது நமது வாழ்வில் ஏற்படும் உயர்வுகள் அல்ல என்பதை நன்றாய் மனதில் நிறுத்திக்கொள்வோம். ஆசீர்வாதம் என்பது ஒருவருக்கொருவர் காட்டும் ஒரு அன்பின் கிரியை. நான் அடுத்தவனை ஆசீர்வதிக்கிறேன்; அதற்கேற்ற காரியங்களை நான் முன்னெடுக்கிறேன். அதற்காக நான் எதையும் இழக்கவும் தயாராயிருக்கிறேன். நான் இழந்து அடுத்தவன் வாழ நான் காரணனாயிருக்கும்போது, அதுவேதான் எனக்கு ஆசீர்வாதம்!

தேவன் நமக்கு வாழ்வு, வாழ்வின் வளங்கள் எல்லாமே தருகிறார்; நாம்தான் அவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம், மாறாக அவரல்ல. அவர் நமக்கு அருளியுள்ள ஆசீர்வாதங்களில் ஒப்பற்ற ஆசீர்வாதம் எது? நம்மைத் தீமையிலிருந்து திருப்பி, நமது பாவங்களை மன்னித்து, நமக்குப் புது வாழ்வு தந்தாரல்லவா, அதுவே சொல்லி முடியாத ஆசீர்வாதமாகும். இதை நாம் உணருகிறோமா? இந்த ஆசியை நமக்கு அவர் எங்கிருந்து அள்ளித் தந்தார்? தமது பொக்கிஷசாலையைத் திறந்து அதிலிருந்து எடுத்துக்கொடுத்தாரா? இல்லை, நமக்கு மீட்பு, விடுதலை, நித்திய வாழ்வு என்ற மகா உன்னத ஆசியைக் கொடுப்பதற்காக அவர் தம்மையல்லவா இழந்தார்; அதாவது தம்மையே கொடுத்தாரல்லவா! அதற்காக அவர் அடைந்த பாடுகள் எத்தனை? அவர் அடைந்த நிந்தைகள், இழப்புகள் எத்தனை! அத்தனையும் நமக்காகத்தானே! சிலுவை மரணம் இல்லாவிட்டால் உயிர்த் தெழுதல் நடந்திருக்குமா? சீஷர்களைவிட்டு ஆண்டவர் பரத்துக்கு ஏறியிராவிட்டால் பரிசுத்தாவியானவர் அருளப்பட்டிருப்பாரா?

ஆபிரகாம் பெற்ற ஆசீர்வாதம்

ஆபிரகாம் ஆசீர்வதிக்கப்பட்டார் என்கிறோம், உண்மைதான். கர்த்தர் அவரை அழைத்த போதே ஆசீர்வாதத்தின் வாக்குறுதியைக் கொடுத்திருந்தார். ஆனால், உலகரீதியாகப் பார்க்கும்போது, அந்த ஆசீர்வாதங்களை ஆபிரகாம் அனுபவித்தாரா? சொந்த மண்ணையும் உறவுகளையும் பிரிந்து, போகிற இடத்தை அறியாமலேயே பிரயாணம் செய்து, கானானின் செழிப்பை அல்ல, மலைப்பாங்கான பிரதேசத்தையே பெற்றுக்கொண்டு, வாக்களிக்கப்பட்ட சுதந்தர பூமியிலேயே பரதேசியாக வாழ்ந்தாரே, இவரா ஆசீர்வதிக்கப்பட்டவர்? பிறந்த ஒரே மகனையும் மோரியா மலைவரைக்கும் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அன்றுமாத்திரம் ஆபிரகாம் மகனைத் தகனபலியாக்கக் கத்தியை ஓங்கியிராவிட்டால், விசுவாச மார்க்கத்தாரின் தந்தை என்ற பெயர் ஆபிரகாமுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.

ஆம், உலகத்தின் கண்களில் அவர் ஒன்றுமில்லைத்தான்; ஆனால், நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தேவன் என்று தேவன் தமக்கு ஒரு நாமத்தைக் கொடுக்கு மளவுக்கு மெய்யாகவே ஆபிரகாம் நிறைவாய் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவர்தான்.

மரியாள் பெற்ற ஆசீர்வாதம்

மேலும், “மரியாளே வாழ்க, ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்ற வாழ்த்தைப் பெற்ற மரியாள் மெய்யாகவே இந்த உலகக் கண்ணோட்டத்தில் ஆசீர்வாதமான வாழ்வா வாழ்ந்தாள்? இல்லையே. கன்னிக்கர்ப்பம், கலைந்த கனவுகள், அகதியாக்கப்பட்ட இடம் பெயர்வு, பிள்ளையைப் பெற்றெடுக்க இடமில்லாத அவலநிலை, குழந்தையைக் கிடத்த ஒரு தொழுவம், பரிசுத்த பாலகனைப் பெற்றெடுத்தவளுக்கு, “உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் ஊடுருவும்” என்ற தீர்க்கதரிசனம், கொலைக்கு அஞ்சி எடுத்த ஓட்டம் எத்தனை இன்னல்கள் மரியாளுக்கு. பன்னிரு வயதில் தொலைந்து போனவரைத் தேடிப்போக, என் அப்பாவின் வீட்டில் இருக்கிறேன் என்கிறார் மகன். போதாததற்கு, பெற்றெடுத்த மூத்த மகன், முப்பது வயதில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். தேடிப் போனவளுக்கு, இவர்கள்தான் என் தாயும் தந்தையும் என்று சுற்றியிருந்தவர்களைப் பார்த்துக் கூறுகிறார் இயேசு. எல்லாவற்றுக்கும் மேலாக, தான் பெற்றெடுத்த மகன் சிலுவையில் தொங்கிய கோரக்காட்சியைப் பார்க்க நேர்ந்த ஒரு தாய் ஆசீர்வதிக்கப்பட்டவளா? உலகக் கணக்கின்படி, ஆசீர்வாதத்தைக் குறித்து நாம் போட்டுவைத் திருக்கும் கணக்கின்படி மரியாள் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதம்தான் என்ன? இத்தனைக்கும் மத்தியில், மரியாள் ஆசீர்வதிக்கப்பட்ட பெண்தான். அவள் முகங்கொடுத்த இத்தனை பாடுகளும்தான் இந்த உலகுக்கே ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது. அது தான் அவள் பெற்றுக் கொண்ட மாபெரிய ஆசீர்வாதம்!

பவுல் பெற்ற ஆசீர்வாதம்

உலக பார்வையில் பவுல் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவர். பேர் புகழ் செல்வம் அந்தஸ்து அறிவு எதிலே குறைவுபட்டிருந்தார் பவுல்? கமாலியேலின் பாதம் அமர்ந்து கல்வி கற்றவர் என்றால் மிகுதியை நாம் கணக்கிட்டுப் பார்க்கலாம். சனகரிப் சங்கத்தின் இளைய அங்கத்தினர் இவர். எந்தப் பொறுப்பையும் சிரமேற் சுமந்து வெற்றியாகச் செய்துமுடிப்பார் என்று பெயர் பெற்றவர். யூத மத வைராக்கியமுடையவர். இல்லையானால் ஸ்தேவானின் மரணத்துக்குச் சாட்சியாக நின்றிருப்பாரா? கிறிஸ்தவர்களைக் கட்டிக்கொண்டுவர தமஸ்குவுக்கு அனுப்பப்பட்டிருப்பாரா? இவை யாவுக்கும் மேலாக அவர் யூதனாயிருந்தும், ரோம பிரஜாவுரிமை பெற்றிருந்த ஒருவர். இதற்கும் மேலாக இந்த உலகில் ஒருவனுக்கு என்னதான் ஆசீர்வாதம் வேண்டும்?

தன் கடமையை நிறைவேற்ற கெம்பீரமாக தமஸ்குவுக்குச் சென்றவர், ஒரு புதிய குரலைக் கேட்டார். அப்போது, “ஆண்டவரே, நீர் யார்” என்று பவுல் எழுப்பிய கேள்விதான் பவுலின் வாழ்வையே தலைகீழாக மாற்றிப்போட்டது. இது வரை எதுவெல்லாம் ஆசீர்வாதம் என்று எண்ணி னாரோ, அத்தனையும் கலைந்துபோனது. இப்போது அவருக்கு அழைப்பு வருகிறது, எதற்கு? “அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்று கர்த்தர் அனனியாவுக்குச் சொல்லி, அவனைப் பவுலிடம் அனுப்புகிறார். “நான் அவனை ஆசீர்வதிப்பேன்” என்று கர்த்தர் சொல்லவில்லை. மாறாக, பாடுபடுவதற்குப் பவுலுக்கு அழைப்பு வருகிறது. இந்தப் பவுல்தான் பின்னர், “கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது” (பிலி.1:29) என்று எழுதியவர்.

மேலும், “கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், இப்படி நான் அவரையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கு அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதி யாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையுமாக எண்ணுகிறேன்” (பிலி.3:7-13வரைக்கும் படிக்கவும்) என்கிறார் பவுல். இது நமது பார்வையில் ஆசீர்வாதமா? எத்தனை கசையடிகள், எத்தனை சிறையிருப்புகள், எத்தனை பாடுகள் எத்தனை துன்பங்கள். ஏன், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களினால் கூட பவுல் துன்பத்தை அனுபவிக்கவில்லையா? கைவிடப்படவில்லையா? இறுதியில், மரணம் வரும் என்று தெரிந்தும், கிறிஸ்துவின் சாட்சியாக ரோமாபுரிக்குக் கொண்டுசெல்லப்படத் தன்னையே கொடுத்தாரே! சிறையிருப்பிலிருந்தபடி, தன் விடுதலைக்காக ஜெபிக்கும்படி ஒரு வார்த்தை கேட்டிருப்பாரா பவுல்? மாறாக, “நல்ல போராட்டத்தைப் போராடினேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்றுதான் கடைசியாக எழுதினார்.

பிரித்துப்பார்க்கமுடியாத இரட்டையர்கள்

இப்போ சொல்லுவோம்? எது ஆசீர்வாதம்? உலகம் எதிர்பார்க்கும் வாழ்வா? அல்லது, உலகத்திற்குச் செத்துப்போன வாழ்வா? பெற்றுக்கொள்வதா; அல்லது இழப்பா? விழுந்துபோன இந்த உலகில் பாடுகள் வரும், அதிலும் கிறிஸ்துவுக்காக நிற்கிற ஒருவனைப் பாடுகள் நிச்சயம் தாக்கி வீழ்த்தும். ஆனால், அந்தப் பாடுகள்தான் நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவருகிறது. பாடுகளுக்கூடாகச் செல்லும்போது, உலகத்தோடு ஒத்து  ஓடாமல், கிறிஸ்துவுக்காய் நிற்கும்போது அதுவே நற்சாட்சி, அதுவே பிறருக்கு நாம் சொல்லும் சுவிசேஷம். இம்மைக்காக மாத்திரம் கிறிஸ்துவைப் பற்றிப்பிடித்தால் நம்மைப்போல பரிதாபத்திற்குரியவர்கள் யார்? சிந்திப்போம்.

பாடுகள்தான் தெய்வீக ஆசீர்வாதத்தின் ஊற்றுக்கண். இவ்வுலக வாழ்வில் உலகரீதியாக கர்த்தர் ஆசீர்வதிக்கிறார் என்றால், அது நமக்காக மாத்திரமல்ல, நம்மூலமாக அநேகர் நலம்பெறுவதற்காக கர்த்தர் நம்மை நம்பி நமக்கு வளங்களை அருளுகிறார் என்பதை மனதில் நிறுத்திக் கொள்வோம். இவ்வுலகில் நாம் இழப்பது எதுவும் வீணுக்கல்ல. மாத்திரமல்ல, பிறருடைய பாடுகளை ஏற்கவும், அதில் பங்குகொள்ளவும் நம்மை அர்ப்பணிக்கும்போது, அங்கே ஆண்டவருடன் நாம் அடையாளப்படுத்தப்படுகிறோம். இது எத்தனை பெரிய ஆசீர்வாதம்! பாடுகள் துன்பங்கள் துயரங்கள் வரும், வரட்டுமே! அது காரியமல்ல; மாறாக, அவற்றுக்கு நாம் என்ன பதிலுரை கொடுக்கிறோம் என்பதே காரியம். பாடுகளை ஏற்று, அதிலும் பிறரின் பாடுகளில் பங்குகொண்டு அல்லது ஏற்று, அதே பாடுகளை ஆசீர்வாதமாக மாற்றப்போகிறோமா? அல்லது, பாடுகளை நமக்கே சாபமாக மாற்றப்போகிறோமா? தீர்மானம் நம்முடையது.

இறுதியாக ஒரு விஷயம். “இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது” (எபி.2:9,10). இதற்கும் மிஞ்சி என்ன சொல்ல.

ஆசீர்வாதம் என்பதன் தவறான புரிதலை இத்துடன் நிறுத்திவிட்டு, நம்மை ஆசீர்வதிக்கின்ற ஆண்டவர் சென்ற பாதையில் செல்ல நம்மை அர்ப்பணிப்போமாக. பாடுகள் இல்லாமல், மெய்யான ஆசீர்வாதம் இல்லை. சிலுவை இல்லாமல் உயிர்த்தெழுதல் இல்லை. அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடக்காதவன், அதில் ஊறுகின்ற நீரூற்றின் ருசியை அனுபவிக்கமுடியாது. போலிகளை நம்பி ஏமாறாமல் கொடுப்போம், இழப்போம், கிறிஸ்துவுக்காய் சகலத்தையும் நஷ்டமும் குப்பையும் என்று தள்ளுவோம். ஆசீர்வாதத்தின் ஊற்றாகிய கிறிஸ்து நமக்குள்ளிருந்து வெளிப்படுவார். அதுவே ஆசீர்வாதம்.

பாடுகளா? ஆசீர்வாதமா? என்பதல்ல கேள்வி. பாடுகளின் ஊற்றுத்தான் ஆசீர்வாதம்! ஆமென்.

சத்தியவசனம்