மிஷனெரிக்கான கரிசனை

ஆ.பிரேம்குமார்
(மே-ஜுன் 2018)
கடந்த இதழின் தொடர்ச்சி ….

மிஷனெரிக்கான கரிசனை ஏன் அவசியம்?

எப்பொழுது நாம் மிஷனெரிக்கான கரிசனையைக் காட்ட வேண்டும்?

2.திரும்பி வருகையில்….!

அ) குறுகிய காலத்திற்குத் திரும்பி வருதல்

அவர்கள் தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கோ தங்கள் வீட்டிற்கு, நாட்டிற்கு திரும்பி வரலாம். விடுமுறைக்காக, குடும்ப அங்கத்தினரது திருமணம் அல்லது மரணம் அல்லது வீசாவை புதுப்பிக்க, இப்படி பல காரணங்களுக்காக தற்காலிகமாக ஓரிரு கிழமைகளுக்கோ, அல்லது பல மாதங்களுக்கோ திரும்பி வரலாம்.

இப்படி திரும்பி வருபவர்களை விமான நிலையத்திற்கோ அல்லது ரயில் நிலையத்திற்கோ சென்று அழைத்து வரலாம். தங்க இடவசதி இல்லாத பட்சத்தில் அதற்கு உதவலாம். வீட்டிற்கு அழைத்து, போஷித்து அவர்களைப் பற்றியும், ஊழியத்தைப் பற்றியும், விசாரிக்கலாம். அப்போது அவர்கள் தேவைகளைக் கண்டறியலாம்.

அவர்கள் தம் ஊழியத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளுவதற்கு சபைகளைத் தொடர்புகொண்டு, அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். பண ரீதியாக, ஜெப ரீதியாக அவர்களுக்கு உதவக்கூடியவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். அல்லது குடும்பமாக விடு முறையைக் கழிக்க ஒழுங்குசெய்து கொடுக்கலாம்.

இங்கிருக்கும்வரை பிரயாணம் செய்ய வாகன ஒழுங்குகள் செய்து கொடுக்கலாம். மருத்துவ தேவையிருப்பின் மருத்துவரை சந்திக்க முன்பதிவு செய்வதிலும், மருத்துவரிடம் அழைத்துச்செல்வதிலும் உதவலாம். அவர்கள் செய்யும் ஊழியம், தொழில் (கூடாரம் அமைப் போராக இருப்பின்) சம்பந்தமான புத்தகங்கள், ஒலிநாடாக்கள் கொடுத்து உதவலாம். திரும்பிச் செல்லுவதற்கும் வசதிகளைச் செய்து கொடுக்கலாம்.

ஆ) நிரந்தரமாகத் திரும்பி வருதல்

விமானமொன்றை தரையிறங்குகையில் மிகவும் கவனமாகத் தரை இறக்காவிட்டால், விமானமானது விபத்துக்குள்ளாகும் அபாயமுள்ளது. அவ்வண்ணமே மிஷனெரியாகச் சென்று திரும்பி வருபவரை சொந்த நாட்டின் கலாச்சாரத்தில் கவனமாகவும், சரியாகவும் திரும்பி வருவதற்கு உதவ வேண்டும்.

ஒருவர் மிஷனெரியாக குறித்த ஒரு காலத் திற்கெனச் சென்றிருந்தால் அக்காலம் முடிந்தவுடன் நிரந்தரமாகத் திரும்பலாம். அல்லது ‘சுகவீனம் காரணமாக, பிள்ளைகளின் படிப்பு கருதி அல்லது ஊழியத்தில் சோர்வுகள் அல்லது வீழ்ச்சி காரணமாக அல்லது தம்மோடு சென்ற குடும்ப அங்கத்தினரின் இழப்பு காரணமாக அல்லது வயது முதிர்ந்த பெற்றோரைப் பராமரிக்க வேண்டிய நிலை, இப்படி பல காரணங்களுக்காக அல்லது கலாச்சார அதிர்ச்சிகளை தாங்க முடியாமல், குடும்ப ஏக்கம் காரணமாக என பலதரப் பட்ட காரணங்களுக்காக நிரந்தரமாகத் திரும்பி வர நேரிடலாம்.

தற்காலிகமாக நாடு திரும்புகிறவர்களைப் பராமரிப்பதைக்குறித்து நாம் கவனித்த அநேக காரியங்கள் இவர்களுக்கும் பொருந்தும். ஆனால் இவர்கள் நிரந்தரமாக வருவதால், இவர்கள் சொந்த மண்ணில் தம்மைத் திரும்பவும் பக்குவப்படுத்திக்கொள்ள அதிக கரிசனை அவசியமாகும்.

சொந்த கலாச்சாரத்தை விட்டு, அந்நிய கலாச்சாரத்திற்குச் சென்று, கலாச்சார அதிர்ச்சிகளுக்குட்படுவது உண்டு. கால நிலை வித்தியாசப்படலாம். உணவு, மொழி, கலாச்சாரம், அனைத்துமே வித்தியாசமாயிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக, அந்த கலாச்சாரத்திற்குத் தங்களைப் பக்குவப்படுத்தியவர்கள். இவர்கள் ஆண்டவர் மிஷனெரியைத் தளத்திற்கு அனுப்பும்போது, அவரைப் பயன்படுத்துவதற்கு முன்பாகப் பண்படுத்துவது உண்டு. மற்றவர்களை மாற்றும் முன்பாக மிஷனெரி தன்னை மாற்றவேண்டியவனாக இருக்கிறான். தன் சொந்த கலாச்சார பழக்க வழக்கங்களைவிட்டு, அதற்கு மரித்து அந்நிய கலாச்சாரத்தை தனதாக்கிக்கொள்ள முயற்சிக்கவேண்டும். சிலகாலத்தில் அக்கலாச்சாரம் பழக்கப்பட்டுவிடும் (சில காரியங்கள் கடைசிவரை மாறாதிருப்பதும் உண்டு). இப்படி பழகிய பின், பழக்கப்படுத்தியப் பின் சொந்த நாட்டிற்கு வரும்போது, மறுபுறமான கலாச்சார அதிர்ச்சி ஏற்படும். சொந்த நாட்டு கலாச்சாரம் ஓரளவிற்கு அந்நியமாக மாறியிருக்கும்.

இந்நிலையானது ‘தனியாக வாழ்ந்த ஒருவர் திருமணம் செய்து, திருமண வாழ்வில் தன்னைப் பக்குவப்படுத்தியபின் துணை மரித்துவிட்டால் திரும்ப தனியாளாக வாழ தன்னை பக்குவப்படுத்துவது’ போன்றது. மிஷனெரிகளின் பிள்ளைகளின் நிலை இன்னும் கடினமானது. பெற்றோர் பிறந்த நாட்டைவிட்டு, ஊழியம் செய்த நாட்டில் அதிக காலம் இருந்துவிட்டதால், பெற்றோரின் சொந்த நாடும் அந்நியமாயிருக்கும். ஊழியம் செய்த நாட்டிலும் மற்றவர்கள் அவர்களை அந்நியராகக் கருதலாம். தங்களின் அடையாளம் (Identity) சம்பந்தமாகவும் பிரச்சனை எழலாம். எனவே இங்கேயும் சொந்தமில்லாமல், அங்கேயும் சொந்தமில்லாமல் வெளவால்போல் வாழும் நிலைமையே இங்கும் ஏற்படுகின்றது.

திரும்பி வருகின்ற மிஷனெரிக்கு தங்க வீடு ஒன்றை பெற்றுக்கொள்ள உதவுவதுடன், பிள்ளைகள் பாடசாலைகளில் சேரவும், திரும்ப சொந்த நாட்டில் ஒரு தொழிலையோ அல்லது ஊழியத்தையோ பெற்றுக்கொள்ளவும் உதவ வேண்டும். அவர்களை அடிக்கடி சந்தித்து ஊக்கப்படுத்தி, திரும்பவும் தமது வாழ்வை சொந்த இடத்தில் மேற்கொள்ள உதவ முடியும். பணித்தளத்தை விட்டு விட்டு வந்துவிட்டோமே, என்னும் குற்ற உணர்விலிருந்தும் வெளியே வருவதற்கு உதவலாம். தேவையேற்படின் பயிற்சிகள் பெற்றுக்கொள்ளவும், தாம் கற்றவற்றைப் பயன்படுத்தவும் (உதாரணம் புதிய மிஷனெரிகளை பயிற்றுவிக்க) இவர்களுக்கு வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கலாம். பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களை, பொழுது போக்குகளை பெற்றுக்கொடுத்து உதவலாம். நிரந்தர வருமானம் கிடைக்கும் வரை பண ரீதியாக உதவலாம்.

இப்படியாக, மிஷனெரிகளுக்கு உதவுவதற்கு நீங்கள் ஆயத்தமா?

சத்தியவசனம்