அதோனிராம் ஜட்சன்

நற்செய்தியைக் கொண்டாடுவோம்
(மே-ஜுன் 2018)

பர்மிய மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்த
அதோனிராம் ஜட்சன்


 பர்மாவில் சிலுவை நிரந்தரமாக நாட்டப்படும்வரை நான் பர்மாவைவிட்டு போகமாட்டேன்!


அதோனிராம் ஜட்ஸன் ஒரு கண்டிப்பான போதகரின் வீட்டில் வளர்ந்த போதிலும், வாலிபனாவது வரையிலும் தன்னுடைய இருதயத்தையும், வாழ்க்கையையும் இயேசுவுக்குக் கொடுக்கவில்லை. ‘டான்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஜட்ஸன் மிகவும் சுறுசுறுப்பான, புத்திசாலியான பையன். அவன் மூன்று வயது சிறுவனாய் இருந்தபோதே அவர்களுடைய குடும்ப வேதாகமத்தில் ஒரு அதிகாரம் முழுவதையும் வாசிக்கவும், மனப்பாடமாக ஒப்பிக்கவும் தெரிந்திருந்தார். இதைக்கண்ட அவருடைய அப்பா, அவரை மிகச்சிறந்த கல்வி கிடைக்கக்கூடிய பள்ளிக்கு அனுப்பி வைத்தார். ஜட்ஸன் தனது 12வது வயதில் கற்றுக்கொள்வதற்கு மிகவும் கடினமான கிரேக்க மொழியைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.

ஜட்ஸனின் 14வது வயதுவரை அவருக்கு எந்த சுகவீனமும் வரவில்லை. ஆனால் அவரது 14வது வயதில் இறந்து போவார் என்று நினைக்குமளவுக்குக் கடினமான ஒரு வியாதி அவருக்கு வந்தது. படுக்கையில் இருக்கும்போது டான் தனது வாழ்க்கையைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தார். அவர் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றினால் தான் பெரிய ஆளாக வேண்டுமென்று போட்டிருந்த மனக்கோட்டைகள் அனைத்தும் தகர்ந்து போகும். அவர் தன்னுடைய சிந்தனையில் நேர்மையுடன் இருக்க விரும்பினார்.  அவருக்கு கிறிஸ்தவனாக விருப்பம் இல்லை. எனவே அவர் உடல்நலம் பெற்று எழுந்த உடன் கிறிஸ்தவன் ஆவது குறித்த எண்ணம் முழுவதையும் இழந்துவிட்டார்.

தனது 16வது வயதில் ஜட்ஸன் பல்கலைக் கழகத்தில் தன் பெயரைப் பதிவு செய்தார். இன்னொரு மாணவனின் தூண்டுதலின் பேரில், “கடவுள் பேரில் நம்பிக்கை” என்னும் பொருள் குறித்துத் தன் மனதில் பல கேள்விகளை உருவாக்கினார். அவர் தன் படிப்பை முடிக்கும் வரை, கடவுள் மேல் நம்பிக்கை அவருக்கு  ஏற்படவில்லை. தனது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஜட்ஸன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றார்.

தன்னுடைய சிந்தனையும், எண்ணங்களும் ஏன் எப்படி மாறிவிட்டன என்பதை அவரால் தனது தந்தையிடம் விளக்கிக் கூற முடியவில்லை. அவருடைய தந்தையோ, ஜட்ஸன் தன் வழியைப் பின்பற்றித் தன்னைப்போல ஒரு தேவ ஊழியராக வருவார் என்று எதிர்பார்த்தார். அவர் தனது மகனின் எண்ணங்களை மாற்ற எவ்வளவோ முயற்சித்தார். வாதம் செய்தார். இருப்பினும் மகனின் மனதை மாற்ற அவரால் முடியவில்லை. தங்கள் மகன் கடவுள்மேல் நம்பிக்கை இல்லாத ஒரு அவிசுவாசி என்று கண்டு பெற்றோர் எவ்வளவு வேதனை அடைந்தார்கள் என்பது ஜட்ஸனுக்குத் தெரியும். இதை உணர்ந்த பின்னரும் அவர் தன் எண்ணத்தை மாற்றவில்லை. இது அவருடைய குடும்பத்தில் பெற்றோருக்கும் மகனுக்குமிடையே வேதனை தரும் பிரிவினையை உருவாக்கிற்று.

ஜட்ஸன் தான் வாழ நினைத்திருந்த வாழ்க்கையைக் குறித்து நினைத்து கவலையடைந்தார். பல்கலைக்கழகம் படிப்பு முடிந்து சுமார் ஒரு வருடம் சென்றபின், குழப்பமான மனதுடன், ஒரு குழுவினருடன் சேர்ந்து பல இடங்களுக்கும் பயணம் செய்தார். தான் சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதன் ஆகவேண்டும் என்னும் எண்ணம் மங்கத் தொடங்கியது. கடைசியில் ஒருநாள் தன் குதிரையின் மேல் ஏறி எங்கு செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்று எவ்வித இலக்கும் இன்றிப் புறப்பட்டுச் சென்றார்.

ஒரு இரவில் ஒரு சத்திரத்தில் தங்குவதற்காக ஒரு அறையைக் கேட்டார். சத்திரக்காரர், “ஐயா, எங்கள் சத்திரத்தில் தங்குவதற்கு இன்னும் ஒரே ஒரு அறை மட்டுமே உள்ளது. ஆனால் அந்த அறையில் தங்கினால் வெளியில் கூச்சல், சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும்” என்றார். காலியாயிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் ஒரு நோயாளி இருந்தார். அவர் மரணத்தருவாயில் இருந்தார். அந்த மனிதன் வேதனையில் சத்தமிட்டுக்கொண்டே இருப்பார். ஜட்ஸன் இதைப் பொருட்படுத்தவில்லை. மிகவும் களைப்படைந்திருந்தபடியால் இவர் அறையில் சென்றுப் படுத்ததும் அயர்ந்து தூங்கிவிடுவோம், எந்தச் சத்தமும் தன்னைப் பாதிக்கப்போவதில்லை என நினைத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. ஜட்ஸன் அந்த அறையில் சென்று படுத்தார். இவரால் தூங்க முடியவில்லை.

அடுத்த அறைக்கு டாக்டர் வருவதும், நோயாளியின் முனகல் சத்தமும், வேதனைக் குரலும் கேட்டுக்கொண்டே இருந்தது. 14 வயதில் தனக்கு வந்த வியாதி நினைவுக்கு வந்தது. அடுத்த அறையில் இருந்த மனிதன் மரிப்பதற்கு ஆயத்தமாய் இருந்தாரா என்னும் கேள்வி ஜட்ஸனின் உள்ளத்தில் எழும்பிற்று. ஒருவேளை அவரும் தன்னைப் போல ஒரு அவிசுவாசிதானோ? மறுநாள் காலையில் தூக்கத்தை இழந்தவராக ஜட்ஸன் களைப்புடன் எழுந்தார். சத்திரத்தின் பொறுப்பாளர் “நேற்று இரவு எப்படித் தூங்கினீர்கள்?” என்று கேட்டார். ஜட்ஸன் “என்னால் தூங்கவே முடியவில்லை” என்றார். சத்திரத்தின் பொறுப்பாளர்,”அடுத்த அறையில் இருந்தவருக்கு உங்கள் வயதுதான். நேற்று இரவில் அவர் இறந்துபோனார். அவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்” என்றார். இதைக் கேட்டதும் ஜட்ஸன் அதிர்ச்சியடைந்தார். அதே பல்கலைக்கழகத்தில்தான் ஜட்ஸன் படித்திருந்தார். தன் வயது வாலிபன் என்றால் தன்னுடன் படித்திருக்கலாம் என்று நினைத்து, “இறந்து போனவருடைய பெயர் என்ன?” என்று கேட்டார். அவர் கூறிய பெயரைக் கேட்டதும் ஜட்ஸனின் கவலையும், அதிர்ச்சியும் மிகவும் அதிகமாயிற்று. அந்த மனிதன் ஜட்ஸனுக்கு மிகவும் நெருங்கிய நண்பன். ஒரு நாத்திகவாதி. கடவுள் பேரில் நம்பிக்கையே இல்லாதவன். ஜட்ஸனைக் கடவுள் நம்பிக்கை அற்றவனாக இருக்க ஆலோசனைக் கூறி, மனதை மாற்றித் திசை திருப்பியதே  இவன்தான்.

“ஜட்ஸன் அவனுடைய வாழ்க்கை தவறு. சிந்தனைகள் தவறு. தீர்மானமும் தவறு” என்று உணர்ந்து உடனே தன்னுடைய குதிரையில் ஏறித் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி வந்தார். ஜட்ஸன் இறையியல் படிக்கக் கல்லூரியில் சேர நினைத்தார். உடனே அதை செய்ய முடியாததால் மூன்று மாதங்கள் வீட்டில் தங்கி பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு முழுவதையும் கருத்துடன் படித்து வேதத்தைப் புரிந்துகொண்டார். கிறிஸ்துவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தார். எப்படியும் தான் ஆண்டவருக்கென்று செய்யவேண்டிய ஒரு காரியம் உண்டு என்றுணர்ந்தார். இந்த நேரத்தில் தான் “கிழக்கிந்தியக் கம்பெனி” என்னும் பிரிட்டிஷ் குழுவினரில் போதகராக இருந்த ஒருவர் எழுதிய புத்தகத்தை அவர் வாசிக்க நேர்ந்தது. அப்புத்தகத்தில் இந்தியாவில் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கப்படும் விதமும், அந்த நற்செய்தி மக்களிடையே ஏற்படுத்தும் நல்ல  மாற்றத்தையும் விளக்கியது. இதைப் படித்த ஜட்ஸனுக்கு தானும் இந்தியாவுக்குச் சென்று மிஷனெரியாகப் பணியாற்ற வேண்டும் என்னும் ஆசை உண்டாயிற்று.

ஒருநாள் ஜட்ஸன் காட்டின் வழியாக நடந்து வந்து கொண்டிருக்கும்போது ஆண்டவரிடம் இப்படிக்கேட்டார்: “ஆண்டவரே என் வாழ்க்கையில் நான் உமக்காக என்ன செய்ய வேண்டும்? அதை எனக்குத் தெரிவியும்!” என்று வேண்டினார். உடனே தேவன் பதில்கூறியதுபோல ஒரு வேதவசனம் அவருடைய நினைவில் வந்தது. “நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (மாற்கு 16:15). “நீ உடனே இந்தியாவுக்குப் போ!” என்று ஆண்டவர் கூறுவதுபோல இருந்தது. ஜட்ஸன் இந்தியாவுக்குச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். எனவே அவர் அதற்காகத் தன் முழு வாழ்க்கையையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்தார். பின்னர் ஜட்ஸன், ஆன் ஹாசெல்டின் என்னும் ஊழிய வாஞ்சை உள்ள ஒரு பெண்மணியை திருமணம் செய்தார்.

தம்பதிகள் இருவரும் மனமொத்து, இந்தியாவுக்கு மிஷனெரிகளாகச் செல்வதற்குரிய பயணத்துக்காகத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் முதன்முதல் ஜட்ஸன் போகும்போது தன் இளம் மனைவியை அழைத்துச்செல்வது நல்லதல்ல என்றனர். ஆனால் ஜட்ஸனுடன் செல்ல ஆன் மிகவும் உற்சாகத்துடன் ஆயத்தப்பட்டார்.  தாங்கள் இருவரும் இந்தியா செல்வது தேவசித்தம் என்று உணர்ந்தனர். 1812 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் நாள் அதோனிராம் ஜட்ஸனும், ஆன் ஜட்ஸனும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டனர். அவர்களுடைய பயணம் மிகவும் களைப்பானதாகவும் கடினமானதாகவும்  பல புதிய அனுபவங்களுடனும் சிரமங்களுடனும் இருந்தது. நான்கு மாதங்கள் பயணத்திற்கு பின் இந்தியாவில் கல்கத்தா வந்து சேர்ந்தனர். கொஞ்ச நாட்களிலே “எங்களுக்கு மிஷனெரிகள் யாரும் தேவையில்லை. உடனே இந்தியாவை விட்டு வெளியேறிவிடுங்கள்” என்று கிழக்கிந்தியக் கம்பெனியார் கட்டளையிட்டதால் இரவோடிரவாகப் புறப்பட்டு கப்பல் ஏறிவிட்டார்கள். கப்பல் அநேக புயல்களில் சிக்கியது. பயந்துபயந்து ஆண்டவர் அருளால் காப்பாற்றப்பட்டு பர்மாவில் உள்ள ஒரு பெரிய பட்டணமான ரங்கூன் வந்து சேர்ந்தனர்.

பர்மாவில் ஆண்டவராகிய இயேசுவை அறியாத ஏராளமான மக்களைச் சந்தித்தனர். அவர்களுக்கு இயேசுவைப் பற்றிக் கூறி அவர்கள் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும் என்று ஜெபித்தனர். அங்கே பல்வேறு இன மக்களும், பல சமயங்களும் இருந்தன. அங்கிருந்த பெரிய அழகான கட்டடங்கள் யாவும் புத்தரின் கோவில்களாய் இருந்தன. அவை “பகோடா” என்று அழைக்கப்படும். பர்மாவின் தேசிய மதம் “புத்த மதம்”. பர்மியரிடத்தில் சில அசாதாரண பழக்க வழக்கங்கள் இருந்தன. புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் மனிதனின் ஆத்துமாவுக்கு மறுபிறவி எடுக்கும் ஆற்றல் உண்டு என்று நம்பினர். அவர்கள் புத்த சமயக் கொள்கைகளையும், கட்டளைகளையும் பின்பற்றினால் அவர்கள் மிருகங்களில் தாழ்ந்தது முதல் உயர்ந்தது வரை உள்ள பட்டியலில் உயர்ந்த வகைகளைச் சேர்ந்தவர்களாகப் பிறப்பார்கள். இந்த ஒவ்வொரு பிறவியிலும் துன்பங்களும் சோதனைகளும் உண்டு. இந்தத் தீமைகள் நிறைந்த உலகில் மறுபடியும் மறுபடியும் பிறக்காமல் இருக்கவேண்டுமானால், இந்த உலகின் தீமைகளையும், வியாதிகளையும், மரணத்தையும் அடையாமல் இருக்கவேண்டுமானால் மனிதன் “நிர்வாணம்” என்ற நிலையை அடைய வேண்டும் என்று அவர்கள் மீண்டும் பிறக்கும் விதிக்கு அடிமைப்பட்டிருந்தார்கள். இந்த மூட நம்பிக்கையுள்ள மக்களுக்கு விடுதலையையும், சந்தோஷத்தையும் தரும் நற்செய்தியை ஜட்ஸன் தம்பதிகள் அறிவிக்க ஆசைப்பட்டனர்.

இதற்கு அவசியமான பர்மிய மொழி அறிவை பெற எண்ணி  ஜட்ஸன் பர்மிய மொழியைப் படிக்க ஆரம்பித்தார். அவரது மனைவி ஆன் ஜட்ஸன் தனது வீட்டுபணிகளைச் செய்துகொண்டே அவர்களும் வேகமாக அம்மொழியை கற்றறிந்தார். ஆனால் பர்மிய மொழியைக் கற்றுக்கொள்ளுதல் அதிக கடினமானதாகவே இருந்தது. பர்மாவில் இருக்கும்போது ஒரு மகன் பிறந்து, எட்டு மாதங்களில் நோய்வாய்ப்பட்டு பரிதாபமாக இறந்தான். மகனை இழந்து பாடுகளின் மத்தியில் கடந்து வந்தபோதும், தங்கள் மகன் பரலோகத்தில் இயேசுவின் மடியில் இருக்கிறான் என்று நினைத்து ஆறுதல் கொண்டனர்.

பர்மிய மொழியில் உள்ள புத்தகங்கள் ஓலைச்சுவடிகள் நூல் கோர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் எழுத்துக்கள் தெளிவின்றிக் கிறுக்கி எழுதப்பட்டிருந்தன. பல மாதங்கள் அவற்றை வாசித்து வாசித்து ஜட்ஸனுக்கு கண் வலியும் தலைவலியும் ஏற்பட்டு சுகவீனமானார். இப்படிப் படுக்கையில் வியாதியாய் இருக்கும்போது பர்மிய மொழிக்கு ஆங்கில மொழியில் பொருள்கூறும் ஒரு அகராதியைத் தயாரித்தார். மேலும் இயேசுகிறிஸ்துவின் இரட்சிக்கும் பணியை விவரிக்கும் ஒரு துண்டுத்தாள் பிரதியையும் (Tract) தயாரித்தார். இந்நேரத்தில் ‘ஹோ’ என்னும் இன்னொரு மிஷனெரி தம்பதிகள் இவர்களுடன் இணைந்து ஊழியம் செய்ய வருகிறார்கள் என்று செய்தியைக் கேள்விப்பட்டு அதிக சந்தோஷமடைந்தனர். ஒருநாள் ஒரு பர்மிய மனிதன், “எனக்கு இயேசுவின் சமயத்தைப் பற்றி அறிய ஆசை, சொல்லித்தாருங்கள்” எனக் கேட்டார். அப்போதுதான் அவர்களுக்கு வாசிக்கக் கொடுக்க அவருடைய மொழியில் வேதாகமம் இல்லை என்று கண்டு வருந்தினார். வேதாகமத்தை பர்மிய மொழியில் மொழி பெயர்க்கவேண்டிய அவசியத்தை உணர்ந்த ஜட்ஸன், அதற்கு தேவையான பர்மிய மொழியில் உள்ள எல்லா வார்த்தைகளும் அடங்கிய ஒரு அகராதியையும் தயாரித்து முடித்துவிட்டார்.

பர்மிய மொழியைப் படிக்கவும், மொழி பெயர்க்கவும் நேரத்தை செலவிட்டபடியால், இவரால் நற்செய்தி அறிவிக்க முடியவில்லை. பர்மிய மக்களைக் கூட்டி  அவர்களுடன் பழகவும் பேசவும் ஒரு பொது இடம் தேவைப்பட்டது. இப்படிப்பட்ட இடத்தை அவர்கள் ‘சயாட்’ (ZAYAT) என்பார்கள். நம்முடைய ஊரில் இப்போது இருக்கும் சமுதாயக்கூடம் போன்றது அது. முக்கியமான நகரத்தின் சாலைகள் செல்லும் இடத்தில் ஒரு இடத்தை வாங்கி ஜட்ஸன் ஒரு பெரிய மண்டபத்தைக் கட்டினார். யாத்ரீகர்கள் அங்கே இலவசமாகத் தங்கிச் செல்வார்கள். அதன் பலன் அவர்கள் ஜட்ஸனின் நண்பர்களாயினர். ஜட்சன் பர்மிய மொழியில் தான் கட்டிய சயாட்டில் ஒரு முழு ஆராதனையை 1819 ஏப்ரல் 4ஆம் தேதி நடத்தினார். இந்த முதல் ஆராதனையில் 15 பெரியவர்களும் அநேக பிள்ளைகளும் வந்து கலந்துகொண்டனர். இந்த சயாட்டைக் கடந்துசெல்லும் ஒவ்வொருவரும் இயேசுவின் நற்செய்தியை நின்று கேட்டுவிட்டுச் சென்றனர். அச்சமயத்தில் புத்த சமயத்தில் அதிகபற்றுதல் உள்ள ஒரு இராஜா பதவியேற்றார். தேசத்தில் இருந்த பகோடாக்கள் என்னும் புத்த ஆலயங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன. பர்மியர்கள் இந்த அயல்நாட்டுக்காரரின் சமயத்தில் விருப்பம் காட்டினால் அது அவர்களுடைய தேசிய சமயத்தை அவமதித்ததாகும். ஜட்ஸன் மிகவும் எச்சரிக்கையாக தனது வேலையைச் செய்துகொண்டிருந்தார்.

ஒருநாள் ஒரு கூட்ட இராணுவ வீரர்கள் ஜட்ஸனின் வீட்டுக்குள் வந்து “உன்னை இராஜா அழைக்கிறார், உடனே புறப்பட்டு வா” என்று இழுத்துக்கொண்டு போய் மரண தண்டனைக் கைதியாக சிறையில் அடைத்தனர். பல மாதங்கள் நல்ல உணவு இல்லாமல் கஷ்டப்பட்டார். அவர் அணிந்திருந்த ஆடைகள் கிழிக்கப்பட்டன. அவருடைய கைகள் பின்னால் வைத்து கட்டப்பட்டிருந்தது. ஆன் ஜட்ஸன் பல நாட்கள் சிறைகளுக்கு அதிகாரியாக இருந்த ஆளுநரைச் சந்தித்தும், பல தடவை அரசாங்கத்துக்கு மனு கொடுத்தும் அவரை மரணச்சிறையிலிருந்து வெளியே கொண்டு வரச்செய்தார். ஜட்ஸன் இராஜாவின் கைதி. ஆதலால் அவரது வீட்டில் உள்ள பொருட்கள் சொத்து யாவற்றையும் கைப்பற்றி வரும்படி அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். இதை முன்னதாக அறிந்த ஆன் தன்னுடைய சில பொருள்களையும், ஜட்ஸன் செய்திருந்த மொழிபெயர்ப்பு வேலைகளைப் பத்திரப்படுத்தி, பொதிந்து கட்டி, குழி தோண்டி, ஒரு இடத்தில் புதைத்து வைத்திருந்தார். சில நாட்கள் சென்ற பின் அதைத் தோண்டி எடுத்து, அந்தப் பேப்பர்களை ஒரு தலையணைக்குள் வைத்துச் சிறையிலிருக்கும் ஜட்ஸனுக்குக் கொண்டுபோய் கொடுத்துவிட்டார்.

ஜட்ஸன் சிறையில் இருந்த நாட்களில் ஆன் பர்மிய மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார். பல நாட்கள் இராஜாவின் அரண்மனைக்குச் சென்று, அதிகாரிகளைச் சந்தித்துத் தன் நிலையை எடுத்துக்கூறி, தன் கணவரைச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுவார். ஆனால் ஒவ் வொரு முறையும் ஒரே விதமான பதில்தான் வரும். “எங்களுக்கு ஆங்கிலேயரானாலும் அமெரிக்கரானாலும் கவலையில்லை. அந்நிய தேசத்தாராக எங்கள் நாட்டில் இருக்கும் அனைவருமே எங்களுடைய பகைவர்களே”.

ஒருநாள் ஆங்கிலேயபடை இந்தச் சிறைச்சாலையை நெருங்கி வந்தது. பர்மியச் சிறை அதிகாரிகள் பயந்து நடுங்கி சிறைச்சாலையில் இருந்த கைதிகள் அத்தனைபேரையும் விடுவித்து விட்டனர். இப்படி விடுலைப்பெற்றதும் ஜட்ஸன் தன் குடும்பத்துடன் பர்மாவில் உள்ள தூர இடத்திற்கு சென்று அம்ஹெர்ஸ்ட் என்னும் நகரத்தில் தங்கி மிஷனெரிப் பணியைச் செய்தார். அங்கே ஆன் ஜட்ஸன் கடுமையான காய்ச்சல் கண்டு இறந்துபோனார். எனவே ஜட்ஸன் அங்கிருந்து அருகில் உள்ள பட்டணத்துக்குச் சென்று இன்னொரு மிஷனெரியுடன் சேர்ந்து ஒரு ‘சயாட்’ கட்டினார். அங்கேயும் நற்செய்தி ஊழியம் தொடர்ந்து நடைபெற்றது. ஒரு வருடத்துக்குப்பின் முப்பது பர்மியர்கள் மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்ந்தார்கள். வருடங்கள் கடந்துசென்றன. பர்மிய மக்களின் சபையில் இப்போது 160 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களுடைய சயாட்டில் ஜட்ஸன் முற்பகல் முழுவதும் இருந்து வேதபாடம் நடத் துவார். கற்பிப்பார். புதிய ஆத்துமாக்களுக்கு நற்செய்தி அறிவிப்பார். பர்மிய பணித்தளத்தில் 32 வருடங்கள் கடினமாக உழைத்ததன் பின் சிறிது ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்றார். ஜட்ஸன் மறுபடியும் பர்மாவுக்கு திரும்பினபோது கிறிஸ்தவத்தை முற்றிலும் எதிர்க்கிற இராஜா இருந்தமையினால் ஊழியத்துக்குச் சாதகமான சூழ்நிலை இல்லை. வீட்டிலே இருந்து பர்மிய மொழி – ஆங்கில மொழி அகாராதியை முடிக்கும் பணியைச் செய்தார்.

1849 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜட்ஸனுக்கு ஜலதோஷமும் அதோடு கடுமையான காய்ச்சலும் வந்தது. அமெரிக்க மிஷனெரிப் பணியை மிகவும் முன்னேற்றம் செய்த அதோனிராம் ஜட்ஸன் வாழ்க்கையின் கடைசி மணி நேரம் ஒரு கப்பலில் நடந்தது. அவர் மாரிட்டஸ் தீவுகளுக்குக் கப்பலில் சென்றுகொண்டிருக்கும்போது இந்தக் காய்ச்சல் வந்து அவரை மீளமுடியாத அளவில் சுருட்டிப்போட்டுவிட்டது. பர்மாவின் கரையிலிருந்து மூன்றுநாள் பயண தூரத்தில் கடலிலேயே மரித்து அடக்கம் பண்ணப் பட்டார். ஜட்ஸன் தன் வாழ்க்கை முழுவதையும் பர்மாவுக்காகவே அர்ப்பணித்திருந்தார்.

அதோனிராம் ஜட்ஸனின் ஊழியம் மறக்கப் படவில்லை. ஜட்ஸன் கால் பதித்த இடங்களில் அவர் விட்டுச்சென்ற ஊழியங்களை இப்போது பல மிஷனெரிகள் சென்று தொடர்ந்து செய்து வருகிறார்கள். இவருடைய வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களும், எத்தனையோ சோதனைகளும், பாடுகளும் ஏற்பட்டபோதிலும் தேவன் ஜட்ஸனை அற்புதமாய்க் காப்பாற்றி வந்தார். ஜட்ஸனின் ஊழியத்தின் பயனாக இன்று பர்மாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்.

மொழியாக்கம்: G.வில்சன்


உங்களுக்குத் தெரியுமா?

சுயநலத்தின் மிகப்பெரிய அம்சம் தனியாக பரலோகத்துக்குப் போவதில் திருப்தியடைவதாகும்.

சத்தியவசனம்