நானே நல்ல மேய்ப்பன்!

Dr.உட்ரோ குரோல்
(ஜூலை-ஆகஸ்டு 2018)

ஆதி பெற்றோரின் மகனான ஆபேல் ஆடுகளை மேய்த்தவன் (ஆதி.4:2.) அக்காலந்தொட்டு இஸ்ரவேல், ஜோர்டான், சிரியா, லெபனான் எகிப்து போன்ற மத்திய கிழக்கு நாட்டு மக்களின் முக்கிய தொழில் மந்தை மேய்த்தலாக உள்ளது. அவை அம்மக்களின் சொத்தாகக் கருதப்படுகின்றன. பழைய ஏற்பாட்டில் மேய்ப்பர்கள் என்றவுடன் அநேகர் நமது நினைவில் வருவார்கள். ஆபிரகாம் எகிப்தைவிட்டு வந்தபொழுது அநேக மிருக ஜீவன்களை உடையவராய் இருந்தார் (ஆதி.3:1-5). ஈசாக்கும் திரளான ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் உடையவராய் இருந்தார் (ஆதி.26: 13-14). மோசே மீதியான் தேசத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபொழுது அவருக்கு எரிகின்ற முட்செடியில் தேவன் தரிசனமானார் (யாத்.3:1-10). தாவீது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபொழுது சாமுவேல் தீர்க்கதரிசியால் அழைக்கப்பட்டு இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் பண்ணப்பட்டார் (1 சாமு.16:1-13). தெக்கோவா ஊர் மேய்ப்பர்களுக்குள் இருந்த ஆமோஸ் தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியாக கருதப்பட்டார் (ஆமோஸ்1:1).

வேதாகமத்தில் மேய்ப்பன்-ஆடுகள் என்ற உருவகம் அநேகமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. நானே நல்ல மேய்ப்பன் என்று இயேசுகிறிஸ்து கூறியுள்ளார். சிறந்த நல்ல, அழகிய, நம்பிக்கை யான என்ற பொருளை இந்த “நல்ல” என்ற சொல் குறிப்பிடுகிறது. கலிலேயா ஊரிலிருந்த கானா ஊர் திருமணத்தில் தண்ணீரை திராட்ச ரசமாக்கி அற்புதமாக்கின நிகழ்வில் இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பந்தி விசாரிப்புக்காரன் மணவாளனை நோக்கி “எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்ச ரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்த பின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே” என்று கூறினான். இந்த சொல் தரம் குறைந்ததற்கும் சிறந்ததற்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாக்குகிறது.

அதுபோன்றே இயேசுவும் தனக்கு முன் வந்தவர்கள் சுயநலத்தையே குறிக்கோளாகக் கருதி வந்தவர்களாகவும் தன்னை நல்ல மேய்ப்பனாகவும் குறிப்பிட்டார். தன்னுடைய ஆடுகளுக்கு இயேசு தரும் கவனிப்பே இந்த வேறுபாட்டைத் தெளிவாக்குகிறது. சோர்ந்துபோன உள்ளங்கள், சரீர வேதனைகள், தன்பால் ஈர்க்கும் வஞ்சக உலகம் இவற்றிலிருந்து காப்பாற்றும் ஒருவரே இந்த ‘நல்ல மேய்ப்பர்’.

நல்ல மேய்ப்பனின் கரிசனை

பழைய ஏற்பாட்டில் தேவனை மக்களின் மேய்ப்பன் என்று அழைத்தார்கள். கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் (சங்.23:1). இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டு மந்தையைப் போல் நடத்துகிறவரே, செவிகொடும்; (சங்.80:1). ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள் போலவும், சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள் போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது (பிர.12:11). மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார் (ஏசாயா. 40:11) என்ற வசனங்கள் இதனை தெளிவாக்குகின்றன. ஆகவே தேவ குமாரனான இயேசுவும் ஜனங்களின் மேய்ப்பன் என்று புதிய ஏற்பாட்டில் அழைக்கப்பட்டதில் வியப்பொன்றுமில்லை.

1.நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை அறிந்திருக்கிறார்

நானே நல்ல மேய்ப்பன்; … நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன் (யோவான் 10: 14,15). என் ஆடுகளை நான் அறிந்திருக்கிறேன் என்று இயேசு கூறியதன் பொருள் என்ன? கிரேக்கர்கள் அறிதல் எனில் தெரிந்து கொள்ளுதல் என்று அர்த்தம் கொள்வர். ஆனால் யூதர்கள் அதைவிட சிறந்த பொருளைக் கூறுவர். அதாவது தன்னுடைய ஆடுகளிடம் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளார் என்பதாகும். அவரது தனிப்பட்ட உரிமையையும் ஆழமான கவனிப்பையும் காட்டுகிறார். தனது ஆடுகள் அனைத்தின்மேலும் சிறந்த ஆர்வம் வைத்துள்ளார்.

அலெக்ஸாண்டர் மெக்லாரின் என்பவர் ஒரு மேய்ப்பனின் அறிவு என்பது நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. காண்பதாலோ நினைப்பதாலோ அவைகளை அறிந்துகொள்வதில்லை. அதைவிட மேலானதாகும். அவர் என்னை நேசிப்பதால் என்னை அறிந்திருக்கிறார். என்மீது இரக்கம் வைத்திருப்பதால் என்னை அறிந்திருக்கிறார். என்னுடைய அன்பினாலும் உணர்வினாலும் நட்பினாலும் நானும் அவரை அறிந்திருக்கிறேன். அன்பில்லாத உள்ளம் மேய்ப்பனை அறியாது. மேய்ப்பனுடைய இருதயமும் அன்பினால் நிறைந்திருந்தால்தான் தனது ஆடுகளை அறியும். ஆடுகளின் உவமையில் இயேசுகிறிஸ்து தம்மை நல்ல மேய்ப்பனாகக் கூறியுள்ளார். மேய்ப்பன் தனது மந்தையின் தொண்ணூற்றொன்பது ஆடுகளின்மேலும் காணாமல்போன ஆட்டுக்காகவும் கரிசனை உடையவராய் இருக்கிறார். தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பத்திரமான ஓரிடத்தில் விட்டுவிட்டு காணாமல்போன ஆட்டைத் தேடிச் செல்லுகிறார். தன்னைப் பற்றியோ தனது பாதுகாப்பைப் பற்றியோ கவலைப்படாது காணமல்போன ஆட்டின் தேவையைப்பற்றியே அவர் கவலைப்பட்டார்.

காணமற்போன ஆடு கிடைத்ததும் அதனை எடுத்துத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு வீடு திரும்பினார். அத்துடன் அவரது மகிழ்ச்சி நிறைவுபெறவில்லை. வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும்கூட வரவழைத்து: “காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன்; என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள்” என்று கூறினார். “கவலை தன்னைக் கவனித்துக் கொள்ளும். ஆனால் மகிழ்ச்சி நிறைவுபெற வேண்டுமெனில் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று மார்க் ட்வெயின் என்ற அறிஞர் உரைத்துள்ளார்.

காணமற்போன ஆடுகளான நம்மையும் நல்ல மேய்ப்பன் இவ்விதமாகவே செய்கிறார். உலகத்தின் முட்செடிகளிலும் களைகளிலும் சிக்குண்டிருந்தோம், பரந்த வனாந்தரத்தில் தொலைந்து போயிருந்தோம்; ஆனால் தேவன் நம்மை நேசித்தார். மந்தைகளின் மற்ற ஆடுகளைப் பத்திரமான இடத்தில் விட்டுவிட்டு நம்மைத் தேடிவந்தார். “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” (லூக்கா 19:10). அவர் நம்மைக் கண்டபொழுது நமது நிலை பரிதாபமாயிருந்தது. தேவனைவிட்டு தூரமாய் விலகியிருந்தோம். நாம் அவரிடம் திரும்பி வருவதற்கான பாதை தெரியாமல் அலைந்து கொண்டிருந்தோம். ஆனால் அவர் அநாதி சிநேகத்தால் நம்மைச் சிநேகித்தார் (எரே.31:3).

அவர் நம்மைத் தூக்கி சுத்தப்படுத்தி தமது தோள்களின் மேல் போட்டுக்கொண்டார். இப்பொழுது அவருடைய வீடான பரலோகத்துக்கு பத்திரமாக அழைத்துச் செல்லுகிறார். இதை ஏன் அவர் செய்யவேண்டும்? ஏனெனில் அவர் நம்மை நெருக்கமாக அறிந்திருக்கிறார். நமக்காக ஆழ்ந்த கவலைப்படுகிறார். தனிப்பட்ட முறையில் நம்மை நேசிக்கிறார். ஏனெனில் அவர் ஒருவரே அவருக்கு முன்வந்தவர்களிலும் வேறுபட்ட நல்ல மேய்ப்பர்.

2.நல்ல மேய்ப்பர் தமது ஆடுகளை அழைக்கிறார்!

நல்ல மேய்ப்பருக்கும் மற்ற மேய்ப்பர்களுக்கும் உள்ள மற்றொரு வேறுபாடு தமது ஆடுகளை அவர் நடத்தும் விதமாகும். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன்,  அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது (யோவான் 10:27). ஆட்டுத் தொழுவத்துக்குள் வாசல் வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான் (வச.1). வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டு போகிறான் (வச3).

தங்களுடைய பாதுகாப்பைக் கருதி மேய்ப்பர்கள் பொதுவாக கூட்டமாகவே இருப்பார்கள். கிராமங்களைவிட்டு வெளியே இருப்பதால் திருடர்கள் எளிதாக அவர்களைத் தாக்கக்கூடும். மேலும் ஓநாய் அல்லது கழுதைப்புலி வந்தால் உதவிக்கு அழைக்க மனிதர்கள் அருகில் இருக்கமாட்டார்கள். மேய்ப்பர்களது வாழ்வு விரும்பத்தக்கது அல்ல. யூதேயாவின் வனாந்தரத்தின் தனிமையைப் போக்குவதற்கு அவர்கள் ஒரு குழுவாக சேர்ந்தே இருப்பார்கள். இரவில் அனைத்து ஆடுகளையும் ஒரு தொழுவத்தில் அடைத்து வைப்பார்கள். மறுநாள்  காலையில் ஒவ்வொரு மேய்ப்பனும் தொழுவத்துக்குள் சென்று தன்னுடைய ஆடுகளைக் கூப்பிடுவான். அப்பொழுது அவைகள் அவனுக்குப் பின் செல்லும். மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை நன்கு அறிவர். அவைகளுக்குப் பெயரிட்டும் அழைப்பர். ஆடுகளும் தங்கள் மேய்ப்பனின் குரலை நன்கு அறியும். தங்களது மேய்ப்பனின் குரலைக் கேட்டால்தான் அவைகள் வெளியில் வரும். மற்ற மேய்ப்பர்கள் கூப்பிட்டாலும் அவனுடையதல்லாதவைகள் அவனுக்குச் செவிகொடுக்காது. நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளைக் கனிவோடும் பண்போடும் நடத்துவான். அவனுக்கு அவனுடைய ஆடுகள் மிகவும் முக்கியம். இருவருக்கும் இடையில் ஒரு தனிப்பட்ட பாசப்பிணைப்பு காணப்படும்.

வேதாகமத்துக்கு திரும்புக ஊழியத்தின் Sandals in the Sand என்ற முதல் குறும்படத்தை பெத்லெஹேமுக்கும் தெக்கோவா ஊருக்கும் இடையில் உள்ள ஒரு மலைப்பிரதேசத்தில் எடுத்தோம். இயேசு பிறந்த இடத்தை ஒத்த ஒரு குகையில் ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அங்கே தனது ஆடுகளை ஒரு மனிதன் மேய்த்துக்கொண்டிருந்தான். அதை நாங்கள் அதிகமான படங்கள் எடுத்தோம். ஆனால் அந்த ஆடுகள் சிதறி ஓடாமல் இருந்தது எங்களுக்கு அதிக ஆச்சரியத்தை அளித்தது. பின்னர்தான் அதன் காரணத்தைக் கண்டுபிடித்தோம்.

அந்த மேய்ப்பன் தனது வாயினால் மெல்லிய ஒலியை எழுப்பி அவைகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான். ஒரு காட்சியில் அந்த ஆடுகள் குகைக்குள் செல்லுவதுபோல எடுக்க வேண்டும். நான் அவைகளை அக்குகைக்குள் ஓட்ட முயற்சித்தேன். அவைகள் அசையவே இல்லை. எனவே நான் குகைக்குள் சென்று அந்த மேய்ப்பன் செய்ததுபோல ஒலி எழுப்பினேன்.  அவை யாவும் கூட்டமாக உள்ளே வந்து விடும் என்று எதிர்பார்த்தேன். ஒரு  ஆடுகூட உள்ளே வரவில்லை. பின்னர் அந்த மேய்ப்பன் என்னுடன் குகைக்குள் வந்து அதேபோல் குரல் கொடுத்தான். அவைகள் குகைக்குள் பாய்ந்து ஓடிவந்தன. ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது என்பது உண்மையே!

நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளாகிய உங்களையும் என்னையும் அழைக்கும்பொழுது அவர் நம்மை நேசிக்கிறார். நம்மைக் கவனிக்கிறார்.  நம்முடன் இருக்க விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. இயேசுகிறிஸ்து இரட்சிப்பை அளிப்பதற்கு நம்மை அழைக்கும் பொருள் இதுவே. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்  நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன்  தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் (யோவான் 3:16,17). நல்ல  மேய்ப்பனின் குரலைக் கேட்கும் பொழுது நாம் அவருக்குக் கீழ்ப்படியவேண்டும்.

3. நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறான்.

நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவான் 10:11). ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுப்பானா? அவர்களுக்கிடையே உள்ள அன்பு அவ்வளவு வலிமையானதா? என நாம் கேள்விகளை எழுப்பலாம். தொண்ணூற்றொன்பது ஆடுகளின் உவமையில் அந்த மேய்ப்பன் அந்த ஆடுகளைப் பத்திரமான இடத்தில் சேர்த்த பின்னர் காணமற்போன ஆட்டைத் தேடி வனாந்தரத்துக்குப் போனான் என்று இயேசு விளக்கினார். வனாந்தரத்தில் அந்த ஆட்டுக்கு ஆபத்துகள் உண்டு என்று கூறும் நாம், அந்த மேய்ப்பனும் தனது ஆடுகளுடன் பத்திரமான இடத்தில் தங்காமல், ஆபத்தைத் தேடிச்செல்கிறான் என்பதை நாம் மறக்கக்கூடாது.

ஆடுகளுக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. அவை பொதுவாக  சமவெளியிலோ மலையுச்சியிலிருந்து தூரமான இடத்திலோ மேயாது. ஆபத்து எங்கேயோ அவ்விடங்களில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருப்பதை நாம் அநேக  இடங்களில் காணமுடியும்.

ஒரு சமயம் ஜோர்டானிலுள்ள பெட்றா என்ற இடத்தில் குதிரையில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது கண்ட ஒரு காட்சியை என்னால் மறக்க முடியவில்லை. நான் காண்பதை உறுதி செய்துகொள்ள என் குதிரையை நான் நிறுத்தி சில புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டேன். சுமார் 200 அடிக்கு மேலாக உள்ள ஒரு மலையுச்சியிலிருந்து ஒரு மனிதன் ஒரு கயிறைக் கட்டி இறங்கிக்கொண்டிருந்தான். மலையுச்சியிலிருந்து சுமார் முப்பது அடிக்குக் கீழாக ஒரு சிறிய தொங்கு பாறை இருந்தது. அதில் ஒரு ஆடு தனிமையாக ஆதரவின்றி நின்றிருந்தது. அம்மனிதன் தன் உயிரைப் பணயம் வைத்து அந்த ஆபத்தின் விளிம்பில் நிற்கும் ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்துகொண்டிருந்தான். இம்முயற்சியில் அவனுடைய உயிருக்கும் ஆபத்து உண்டல்லவா?

இந்த ஜோர்டான் மேய்ப்பன் தன் உயிரைப் பணயம் வைத்து இறங்கினான். ஆனால் இயேசுவோ தன்னுடைய உயிரையே தியாகம் செய்தார். கோர சிலுவையின் சித்திரவதைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். நமக்காக தமது உயிரைக் கொடுத்தார். அப்பணியில் அவர் உயிர் துறக்கவில்லை. தம் உயிரைக் கொடுத்து நம்மை மீட்டார். உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே (1பேதுரு 1:18-19). அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:6-8).

தமக்கு முன்வந்த மற்றவர்களிலும் நல்ல மேய்ப்பனான இயேசு எவ்வாறு வேறுபட்டவர்? மற்றவர்கள் யாரும் தங்களுடைய ஆடுகளுக்காக தமது உயிரைத் தரவில்லை. மற்றவர்கள் பணத்துக்காக அநேக தியாகங்களைச் செய்தனர்; ஆனால் இயேசுவோ அன்பினாலே தன் உயிரைத் தந்தார். அவரது மரணம் நம்மை இரட்சிக்கப் போதுமானது. அவரிடமே நல்ல மேய்ப்பனின் தன்னிறைவை நாம் காணமுடியும்.

4. நல்ல மேய்ப்பன் தமது ஆடுகளைப் பாதுகாக்கிறார்.

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவை கள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. (யோவான் 10:27-28). ஆம். இது அவர் நமக்குத் தருகிற வாக்குத்தத்தம். அவரது மரணம் நமக்கு நித்திய ஜீவனைத் தந்தது. அவர் நித்தியராயிருப்பதால் நமக்கும் நித்திய ஜீவனை அளிக்கிறார். உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே (எபே.1:4) நம்முடைய பாவங்களை மன்னித்து அவருடைய இரத்தத்தினாலே நம்மை மீட்டுக்கொண்டார் (வச.7). நமக்கு நித்திய மரபுரிமையையும் அருளினார் (வச.11).

யோவான் 10:28இல் நல்ல மேய்ப்பன் கூறியது நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியாது. தனது மந்தையை பாதுகாத்து பராமரிப்பது மேய்ப்பனின் திறமையில் உள்ளது.

நீங்கள் தேவனுடைய மந்தையில் உள்ள ஓர் ஆடுதானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அவருடைய குரலை நீங்கள் கேட்கிறீர்களா? அந்த சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறீர்களா? எந்த ஒரு நிபந்தனையுமில்லாமல் அவர்  நம்மை நேசிக்கிறார். உங்களுடைய அன்பை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள்?

பயப்படாதே சிறு மந்தையே, நல்மேய்ப்பர் பாதையை நன்கறிவார்
புயல் வீசும் மலைகளிலும் உன்னை பாதுகாப்பாய் நடத்துவார்.
ஆணிகள் பாய்ந்த அவரது கரம் பத்திரமாகக் காத்திடும்;
பரம வீட்டுக்கு நிச்சயமாய்க் கொண்டுபோய் சேர்த்திடுவார்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை


உங்களுக்குத் தெரியுமா?   

தேவனால்மட்டுமே அவரைப்பற்றி சரியான விதத்தில் மக்களுக்கு அறிவிக்க முடியும். அவ்வாறு அவர் தன்னை வெளிப்படுத்திய இடம் பரிசுத்த வேதாகமமே!

சத்தியவசனம்