ஜெப நேரம் இன்ப நேரம்!

சகோதரி சாந்தி பொன்னு
(ஜூலை-ஆகஸ்டு 2018)

தேவன் பேசிய வார்த்தைகளாலும், தேவ பிள்ளைகளின் ஜெபங்களாலும், ஜெபத்தின் முக்கியத்துவங்கள், எச்சரிப்புகளாலும் நிரம்பியிருக்கிற ஒரு பொக்கிஷம்தான் பரிசுத்த வேதாகமம். எல்லா மனிதருமே கடவுளைத் தேடி வேண்டுதல் செய்கிறார்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவ விசுவாசிக்கு ஜெபம் என்பது வெறும் தேடுதலோ வேண்டுதலோ கிடையாது; ஜெபம் அவனது மூச்சு; இதயத்துடிப்பு!

ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்காமல் இருக்கமாட்டான். சிறியதோ பெரியதோ, அவசரமோ ஆழமோ நாம் எல்லோருமே ஜெபிக்கிறோம். அதேசமயம், ‘ஜெபம்’ என்பது அர்த்தமற்ற ஒன்றாக, கடமையாக, பழக்கப்பட்ட ஒன்றாக, உணர்வற்ற வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டதாக ஆகிவிட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஒரு ஒன்று கூடுகை, நிகழ்வு என்றால் முதலில் ஒரு ஜெபம்; உணவு என்றால் ஒரு ஜெபம், ஆராதனை ஆரம்பிக்க, முடிக்க ஜெபம், சபைக்கமிட்டிக் கூட்டத்தில் சண்டைகளுக்கு முன்னதாக ஆரம்ப ஜெபம். வியாதிக்கு ஜெபம், வேண்டுதலுக்கு ஜெபம். வேதப்படிப்புக்கூட ஜெபம் இல்லாமல் ஆரம்பிக்காது.

கிறிஸ்தவர்கள் கூடினால் எப்படியாவது ஒரு ஜெபமாவது இருக்கும். “சரி, ஒரு ஜெபம் செய்து விட்டுத் தொடங்கலாமே” இது நாம் அடிக்கடி கேட்கின்ற ஒரு விஷயமாகும். இதிலே, ஏதோ ஜெபம் செய்துதானே ஆரம்பிக்கவேண்டும்; கட்டாய தொனி கேட்கிறதல்லவா! இவை எல்லாமே நல்லது அவசியமானது. ஆனால் இந்த ஜெபங்களெல்லாம் உதடுகளிலிருந்து எழுகின்றனவா? அல்லது உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்வுடன் எழுகின்றனவா?

ஆக, ஜெபம் என்பது என்ன? எதற்காக? ஏன்? இது அவசியந்தானா? பலன் என்ன? எப்படி ஜெபிப்பது? யாரிடம் ஜெபிப்பது? நமது ஜெபத்தை யாராவது கேட்கிறார்களா? ஜெபிக்கக் கற்க வேண்டுமா? சரியான ஜெபம் எது அந்தரங்க ஜெபம், பகிரங்க ஜெபம் இவை என்ன? எவ்வளவு நேரம் ஜெபிக்கவேண்டும்? எப்படி, எங்கிருந்து ஜெபிக்கவேண்டும்? இப்படிப் பல கேள்விகளை நம்மிடமே கேட்டு, உண்மைத்துவத்துடன் பதிலை ஆராய்ந்துபார்ப்போமானால், ஆண்டவர் சொன்ன அஞ்ஞானிகளின் ஜெபங்களையா இதுவரை நாம் செய்தோம் என்ற சந்தேகம் நமக்குள்ளேயே எழும்பும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெபம் செய்யக் கற்றுக்கொள்

சிறுபிள்ளை அப்பாவுடன் பேசுவதற்கு யார் கற்றுக்கொடுக்கவேண்டும்? ஆனால், வளர்ந்த ஒரு பிள்ளை தன் தகப்பனுடன் பேசும்போது உரிமையுடன் பேசினாலும், நிதானித்துத்தான் பேசுவான். அப்பாவின் விருப்பம் அறிந்து பேசுவான் இல்லையா!

இயேசு ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்த பின்பு அவருடைய சீஷரில் ஒருவன் அவரிடம், “யோவான் ஸ்நானன் தன் சீஷருக்கு ஜெபம் பண்ணக் கற்றுக்கொடுத்தான்” என்கிறான். அப்போ இயேசு ஜெபித்ததைச் சீஷர்கள் கவனித்திருந்தனர் என்பது விளங்குகிறது. அத்துடன் யோவான் என்ன கற்றுக் கொடுத்திருப்பான் என்ற கேள்வியும் அவர்களுக்குள் எழுந்திருக்கிறது என்பதுவும் விளங்குகிறது. இப்போ இவர்களுக்குள் ஒரு ஆவல் எழுந்தது. இல்லாவிட்டால், “நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும்” என்று இயேசுவிடம் கேட்டிருக்கமாட்டார்கள். இயேசுவும் தயங்காமல், “நீங்கள் ஜெபம் பண்ணும்போது” என்று ஆரம்பித்து, ஒரு மாதிரி ஜெபத்தைக் கற்றுக் கொடுத்தார். அத்துடன் நிறுத்திவிடாமல், ஜெபத்தின் தார்ப்பரியங்களையும் சீஷருக்குக் கற்றுக்கொடுப்பதையும் (லூக்கா 11:1-13) காண்கிறோம்.

வேதம் வாசிக்கத்தெரியாத சிறுவயதிலே, ஜெபிக்கின்ற நமது பெற்றோரைப் பார்த்து நாமும் மழலை மொழியிலே, “இயேசப்பா, அம்மா அப்பாவுக்கு நன்றி. இந்த சாப்பாட்டுக்கு நன்றி” என்று ஜெபிக்கிறோம். கிறிஸ்தவ சூழலில் வளரும்போது, ஜெபம் என்பதுவும் நமது வாழ்வின் ஒரு பகுதியாக சேர்ந்தே வளருகின்றது. என் தகப்பனார் காலையில் எழுந்து வேலைகளை முடித்துக்கொண்டு, நேரே வீட்டிலிருந்த ஜெப இடத்துக்குச் சென்று, ஒரு மெழுகுதிரி கொழுத்தி (அது அன்று அவர்கள் அறிந்திருந்தது) கை கூப்பி கண் மூடி வார்த்தைகள் வெளியே கேட்காமல், வாய் அசைத்து ஜெபிப்பதைப் பார்த்து வளர்ந்த நான், எப்படி ஜெபிப்பது என்பது தெரியாமலே அதே இடத்தில் போய் நின்று மெழுகுதிரி கொழுத்தவும் தெரியாத பட்சத்தில், “இயேசப்பா மெழுகு திரியை நீங்க கொழுத்துங்கோ” என்று சொல்லி விட்டு வார்த்தைகள் இல்லாத வாய் அசைவுடன் ஜெபத்தை முடித்துவிட்டு வெளியே வருவேன். வளர்ந்து வரும்போது, ஆலயத்தில் கேட்கின்ற ஜெபம், குறுகின ஓரிரு வார்த்தைகள் அடங்கிய ஜெபமாக எனக்குள் உருவெடுத்து அது வளர்ந்தது. இதுவும் ஒருவித வளர்ச்சிதான். ஆனால், ஜெபத்தின் இன்பத்தைச் சரியாக அனுபவிக்கவில்லை என்பது, அனுபவிக்க ஆரம்பித்த பின்னாதான் விளங்கியது.

முதற்படி

பெற்றோர், ஞாயிறு பாடசாலை ஆசிரியர் இவர்களின் முன்மாதிரி, ஆலயத்தில் நடைபெறுகின்ற ஜெபங்கள், இவைகளைப் பார்த்து, பிஞ்சுக் கைகளைக் கூப்பி அங்குமிங்கும் பார்த்துப் பார்த்து, “இயேசப்பா” என்று மழலையில் ஜெபிக்கும் ஜெபத்தில் நிச்சயம் தேவன் மகிழுகிறார். இது ஒருவித முன்பள்ளி அனுபவம் எனலாம். ஆனால் நாம் அடுத்த படியில் ஏறவேண்டாமா?

ஜெபமும் வேதமும் பிரிக்கப்பட முடியாதன; ஜெபம் என்பது நாம் தேவனுடன் பேசுவது, வேதம் வாசிப்பது என்பது தேவன் நம்முடன் பேசுவது என்றுதான் நான் இரட்சிப்புப்பெற்ற ஆரம்பத்தில் கற்றுக்கொண்டது இன்னமும் ஞாபகத்தில் உண்டு. இது சத்தியம்! விளங்குகிறதோ இல்லையோ, வேதத்தை விரும்பி நேசித்து சத்தமாக வாசிக்கும்போது தேவன் பேசுவதை உண்மையாகவே உணர முடியும். இது வெறும் அறிவு அல்ல; இது அனுபவித்து ருசிக்க வேண்டிய விஷயம். ஆனால், எப்படி ஜெபிப்பது? “அன்புள்ள ஆண்டவரே” என்று ஆரம்பித்து, மனதில் தோன்றுகிறவைகளையும், தேவைகளையும் சொல்லிவிட்டு, “இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே” என்று பெரியவர்கள் ஜெபிப்பதைப் பார்த்து ஜெபத்தை முடிக்கவும் கற்றிருந்தேன். இது ஒரு ஆரம்பப்பள்ளி அனுபவம் எனலாம். இந்த அடிப்படையே இல்லாமல், அன்றைய பரிசேயன் ஆலயத்தில் ஜெபித்தது போல ஜெபிக்கின்றவர்கள் இன்றும் இல்லாமல் இல்லை.

இரண்டாம் படி

படிகள் ஏற ஏற, நாமும் வளருகிறோம். அத்துடன் நமது அறிவும் அனுபவமும் வளர்ந்திருக்கும். வளர்ச்சி இல்லையானால் ஏதோ குறைவுண்டு என்பதுதான் அர்த்தமாகும். ஆக, ஜெபத்தைக் குறித்த அறிவிலும் அனுபவத்திலும் வளரும்போது, இது வெறும் வார்த்தைகள் மாத்திரம் அல்ல, மேலும் அதிகம் என்று உணருகிறோம்.

ஆம், ஜெபம் என்பது தேவனுடன் நாம் உறவாடும் நேரம். உறவு என்பது தேவன் நமக்கு அருளிய ஒரு உன்னத அனுபவமாகும். அது வெறும் வார்த்தைகளில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. ஏதேன் தோட்டத்திலே குளிர்ச்சியான மாலை வேளைகளில் தேவன் வந்து தமது பிள்ளைகளுடன் உறவாடினார் என்று பார்க்கிறோம். உறவு, இது பாசம் நேசம் என்று எல்லா வித உணர்வுகளும் கலந்த ஒன்று. இது மனம் சம்பந்தப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன உணர்வு இருக்குமோ அப்படிப்பட்டது என்று இதனை வர்ணிக்கலாம். ஆனால் இது அதற்கும் மேலானது. வாஞ்சித்தல், காத்திருக்குதல், மகிழ்ச்சி, செல்லக் கோபம், முகம் புதைத்துக் கவலைகளைக் கொட்டுதல் என்று எல்லாவித உணர்வுப் பரிமாற்றமும் நிகழும் நேரம்தான் உறவாடும் நேரம். ஆக தேவனுடன் உறவாடுகின்ற நேரம்தான் ஜெப நேரம் என்பதை நாம் கற்றுக்கொள்வது அவசியம்.

மூன்றாம் படி

நாம் இன்னமும் ஏறவேண்டும்; வளர வேண்டும். உறவாடுதல் என்பது பகிர்ந்து கொள்ளுதல் அல்லது பரிமாற்றம் செய்யப்படும் நேரம். என் மனதை நான் திறக்க, தேவன் தம் நினைவுகளை என் நினைவில் வைக்க, என் பாரம் அவர் சுமக்க, அவர் பாரம் நான் சுமக்க, இது ஒரு இதமான அனுபவமாகிவிடுகிறது.

பல வருடங்களுக்கு முன்னர், பதில் காண முடியாத ஒரு நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டது. அந்த சூழ்நிலையைவிட்டு ஓடிவிடலாமா என்று திட்டமிட்டும் முடியவில்லை. கண்ணீர்விட்டுக் கதறி அழுது பாரத்தைக் குறைக்கவும் முடியாத நிலையில் என் உள்ளம் இரவுபகலாக ஓலமிட்டது. அன்று அது ஒரு அற்புதமான நாள். என் கடமைகளை முடித்துவிட்டு, முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே, இனி என்னால் முடியாது. நீரே பார்த்துக்கொள்ளும்” என்று முகங்குப்புற விழுந்தேன். அப்போது நான் வாசித்துக் கொண்டிருந்த ஏசாயா புத்தகத்தைத் திறந்து அன்று வாசிக்க வேண்டிய 50ஆம் அதிகாரத்தை வாசித்தேன். அதன் இறுதிக்கு வந்தபோது, கடைசி இரண்டு வார்த்தைகளையும் திருப்பி வாசிக்கும்படிக்கு மனதிலே உந்தப்பட்டேன். “நீ இருட்டிலே நடப்பது எனக்கென்ன தெரியாதா? தெரியும். வெளிச்சம் தெரியாத இந்த இருட்டிலும் நீ என்னைச் சார்ந்திரு. இந்த இருட்டிலும் உன்னுடன் நான் இருப்பேன். மாறாக, நீயாக ஒரு நெருப்பைக் கொளுத்தி வெளிச்சத்தை உண்டாக்கி உன் இருளைப் போக்க நினைத்தால், அந்த அக்கினியே உன்னை எரித்துப்போடும்” என்பதாக அந்த வார்த்தைகள் என் இதயத்தை ஊடுருவிச் சென்றன. மனதிலே ஒரு அமைதி சமாதானம்! இந்த உறுதி கிடைத்து, ஏறத்தாழ நான்கு வருடங்களின் பின்னர் கர்த்தர் செய்த பெரிய காரியம் இன்றும் நிலைத்திருக்கிறது என்பதை என் கர்த்தருக்குச் சாட்சியாக வாசகர்களுக்குச் சொல்லுகிறேன்.

அனுபவித்துப் பாருங்கள். இந்த உலகத்தில் தேவனால் முடிக்கமுடியாது என்று எதுவுமே இல்லை. ஆனால், அவர் பேச நான் பேச, என் உள்ளத்தை அவரிடம் வெளிப்படுத்த அவர் தமது சித்தத்தை வெளிப்படுத்த, அதற்கு நான் கீழ்ப்படிய அவர் தாம் சொன்னதை நிறைவேற்ற. என்ன அற்புத உறவு இல்லையா! சுருங்கச் சொன்னால், ஆண்டவருடையதும் என்னுடையதுமான இதயத் துடிப்புகள் ஒன்றாகும் ஜெப நேரம்தான் இன்ப நேரம்.

நான்காம் படி

இன்னும் நாம் ஒரு மேற்படிக்கு ஏறலாமே. மாசற்ற அன்பில் திளைத்திருக்கும் கணவன் மனைவியின் இடையில் தேவைகள் பல இருந்தாலும், காரசாரமான வார்த்தைகளுக்கோ, வாக்குவாதங்களுக்கோ, தேவைகளைக்குறித்த தர்க்கங்களுக்கோ அங்கே இடமிராது. வாழ்த்துரைகளுக்கும் நன்றிகளுக்கும் மேலாக அங்கே உள்ளங்கள் இணைகின்ற ஒரு ரம்மியமான உணர்வில் வார்த்தைகளே அற்ற ஒரு அன்பின் பிணைப்புத்தான் இருக்கும். இதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இந்த உலக வாழ்வின் மனித உறவுகளில் மேன்மையான இந்த திருமண உறவுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை.

நாளை தடுமாறிப்போகவும் வாய்ப்புள்ள இந்த உறவே இப்படியிருக்க, நம்மைத் தமக்கென்று படைத்து, வீழ்ந்துபோன நமக்காகத் தம்மையே கொடுத்து, மறுபடியும் நம்மைத் தம்முடையவர்களாக்கின தேவனுடனான நம்முடைய உறவு எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும்! நாமாகவா அவரைத் தேடினோம்? நாமாகவா அவரில் முதலில் அன்புகூர்ந்தோம்? நாமாகவா அவருக்கு ஆலோசனை சொன்னோம்?

நீ அருவருக்கப்படத்தக்க ஒருவனாய் வெளியிலே எறிந்துவிடப்பட்டிருந்தாய். உனக்காகப் பரிதபிக்க யாரும் இருக்கவில்லை. பலர் கடந்து போனார்கள். நான் உன்னைக் கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து, பிழைத்திரு என்றேன். ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து பிழைத்திரு என்று சொன்னேன். ஏற்ற நேரத்திலே என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன் படிக்கை பண்ணினேன் (எசே.16:4-8) என்று கர்த்தர் உங்களுடன் பேசியதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார். அநேகர் அதைக் கண்டு பயந்து கர்த்தரை நம்புவார்கள் (சங்.40:2,3) என்று உங்களால் சாட்சிகூற முடியுமா?

ஐந்தாம் படி

“கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். நமது பாவத்துக்கான கிரயத்தைச் செலுத்திவிட்டார். பின்னர் பரத்துக்கு ஏறினார். ஏறி தமது பிள்ளைகளாக வாழும்படி நமக்குச் சொல்லுகிறார். காலங்கள் முடியும்வரை நம்முடன் இருப்பதாகச் சொல்லுகிறார். இவற்றை அவர் ஏன் செய்தார்? நம்முடன் தாம் உறவில் இருப்பதற்காகவே.” 12வயது மாத்திரமே நிரம்பிய ஒரு பையன் தன் தினக்குறிப்பில் இவ்வண்ணமாக எழுதியிருந்ததை வாசித்ததாக அவனுடைய தகப்பன் எழுதுகிறார். இதுதான் சுவிசேஷம்! 12 வயது பையன் அதைப் பெற்றிருந்தான். இந்த சுவிசேஷத்தை உண்மையாகவே ஒருவன் பெற்றுக்கொண்டால் அவன் தேவனுடனான உறவில் இருக்கிறான் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.

ஜெபம் என்பது உறவு, அல்லது தொடர்பாடல் என்று பார்த்தோம். இன்று வீதிக்கு வீதி எத்தனை தொடர்பாடல் ஸ்தலங்கள் (communications) இருக்கின்றன. தொடர்பாடலுக்கான எத்தனை நவீன தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. மனிதன் இவற்றால் கவர்ந்து ஈர்க்கப்பட்டு, அவற்றிற்கு அடிமையாகியும் விட்டான். சாத்தான் தனது அடுத்த வஞ்சகத்தை விதைத்துவிட்டான்; மனுக்குலமும் அதில் அகப்பட்டுவிட்டது. மனித  தொடர்பாடல்கள் இன்று தூக்கத்திலும் தொடருகின்ற அவலத்தை என்ன சொல்ல. இந்த நவீன பேசுங்கருவிகள் இல்லாத ஒருவருமே இல்லை. நித்திரை மயக்கத்தில் இன்னமும் கண்கள் மூடியபடி இருக்கவே, “ஆண்டவரே ஸ்தோத்திரம்” என்று சொல்லிக் கண் விழித்த அம்மாவை நினைக்கின்றேன். இப்போதெல்லாம், ஸ்மார்ட் போனைத் தடவி எடுத்து அதில் கண் விழிக்கின்ற ஏராளமான கிறிஸ்தவர்களைக் காணலாம். பின்னர் தேவனுடனான தொடர்பாடலுக்கு, உறவுக்கு இடமேது. சாத்தான் வஞ்சக தந்திரத்தால் நம்மை அரவணைத்துவிட்டான்.

அடுத்தது, ஜெபம், வேதம் இவை இரண்டையும் பிரித்துப்பார்க்கவே முடியாது. நம்மில் எத்தனை பேர் வேதத்தை வாசித்துத் தியானித்து பின்னர் அதன் பிரகாரம் ஜெபித்து தேவபாதத்தில் அமைதியாய் தரித்திருந்து தேவனுடனான நமது உறவில் வளருகிறோம்? தேவன் நமது உள்ளுணர்வில் உணர்த்துவதை நம்மில் எத்தனை பேர் எழுதி வைக்கிறோம்?

அடுத்தது, “ஜெபிப்போமாக” என்று வழிநடத்துகிறவர் சொல்லும்போது, தலையைத் தாழ்த்தி, கண்களை மூடி என்றும் அவர் சொல்லுவதுண்டு. இப்படிச் சொல்லுகிறவர்களுக்கு, கரங்களைக் கூப்பி, முழங்கால்களை முடக்கி என்று சொல்லுவதற்குத் தைரியம் வருவதில்லை. ஏன்? அல்லது இப்படியெல்லாம் சொல்லித்தான் ஜெபிக்கவேண்டுமா?

ஒரு காரியத்தைச் சிந்திக்கவேண்டியது மிக அவசியம். பழைய ஏற்பாட்டின் காலத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் மக்கள் போகமுடியாது. ஆசாரியன்கூட மிக எச்சரிப்போடு வருடத்தில் ஒருமுறைதான் செல்லுவார். ஆக, தேவனுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி; அங்கே ஒரு ஆசாரியன் இருந்தான். கர்த்தருக்கு எதிராக முறுமுறுக்கத் தெரிந்த மக்களுக்கு அவருடன் நேரிடையாகப் பேசமுடியாது. என்றாலும் ஆபிரகாம் ஈகாக்கு யாக்கோபு என்பவர்களின் தேவன் என்றும், இஸ்ரவேலின் தேவன் என்றும் அழைக்கப்பட்ட கர்த்தரிடம் பலர் ஜெபித்ததைக் காண்கிறோம். தாவீதின் சங்கீதங்கள் பலவும் ஜெபங்கள்தான். எலியா, தானியேல், நெகேமியா போன்றவர்களின் ஜெபங்கள் இன்றும் நம்மை அசைக்கின்றன. என்றாலும், கிறிஸ்துவுக்குள்ளான விடுதலையை அவர்கள் அன்று பெற்றிருக்கவில்லை. இயேசு உலகிற்கு வந்தபோதும், எப்படி ஜெபிப்பது என்று கற்றுத் தரும்படி சீஷர்கள் இயேசுவிடம் கேட்டனர். ஆனால் இன்று, “தேவனுடைய பிள்ளைகள்” என்ற சுதந்திரத்தை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் கிடைக்கப்பெற்றுள்ளோம். “அப்பா பிதாவே” என்று உரிமையுடன் கூப்பிடும் கிருபையையும் இன்று நாம் பெற்றிருக்கிறோம்.

இப்படியிருந்தும், இன்று நாமோ ஜெபம் என்றதும், இருந்த இடத்திலேயே அசையாமல் இருந்துகொண்டு, தலையை மாத்திரம் குனிந்து, கரங்கள்கூடக் கூப்பமாட்டோம், கண்மூடி துணிகரமாக இருக்கிறோம்! அதிலும் பலர் எப்ப இந்த ஜெபம் முடியும் என்பதுபோல தலை குனிந்தபடியே கண்களைத் திறந்து அங்குமிங்கும் பார்ப்பதுமுண்டு. அந்தநேரம் பார்த்து தொலைபேசி அலைவீச, மெதுவாக எழுந்து வெளியே போய் அடுத்தபக்கத்தில் பேசுகின்ற மனிதருடன் பேசிவிட்டு அமைதியாக வந்து உட்காருகிற வர்கள் இன்று எத்தனைபேர்! மாத்திரமா, ஜெபிக்க ஒரு வெட்கம், ஜெபம் என்றதும், “அன்புள்ள ஆண்டவரே” என்று ஆரம்பித்து, ஏதோ மெதுமெதுவாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பின்னர், இப்போதெல்லாம், “இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே” என்று சொல்லுவதைக் கூட அறுத்துவிட்டு, “ஆமென்” சொல்லி முடித்துவிடுகிறவர்களும் இருக்கிறார்கள். “ஆமென்” என்றால் என்ன என்ற உணர்வுகூட கிடையாது. “அப்படியே ஆகக்கடவது” என்று எதற்கு ஆமாப் போட்டோம் என்றும் தெரியாது.

பிதாவிடம் நேரிடையாக ஜெபிக்கின்ற தைரியத்தை யார் தந்தார்?

“அப்பா பிதாவே” என்று நாம் நேரிடையாகவே இன்று ஜெபிக்க ஆரம்பிக்கிறோமே, இந்த உரிமை நமக்கு எப்படிக் கிடைத்தது என்று எப்பொழுதாவது சிந்தித்துப்பார்த்திருக்கிறோமா? தேவபிரசன்னத்தை உணர்ந்து களிகூரும் அனுமதி இன்று நமக்கு எப்படிக் கிடைத்தது? பிதாவாகிய தேவனுக்குப் பகைவராயிருந்த நாம் எப்படி இன்று “அப்பா” என்று சொல்லி, அவரது கிருபாசனத்தண்டைக்குப் போகிறோம்? பிதாவுக்கும் நமக்கும் இடையே இந்த ஒப்புரவாகுதல் ஏற்பட யார் காரணம்? பரிசுத்த தேவனுக்கு முன்பாக பாவிகள் நாம் சாம்பலாகிவிடுவோம் என்ற நிலை மாறி, அவரது சந்நிதிக்குச் செல்லுகின்ற சுதந்திரத்தை யார் நமக்குப் பெற்றுத் தந்தார்?

மகா பரிசுத்த கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசு, அன்று நமது பாவங்களைத் தாமே சுமந்து, பாவமாக்கப்பட்டு, அடிகள் உதைகள் குட்டல்கள் துப்பல்கள் துன்புறுத்தல்கள் என்று யாவையும் ஏற்றுக்கொண்டு, சரீரம் நாராகக் கிழிக்கப்பட்டு, தலையிலிருந்து கால்வரை இரத்தம் வடிய, அழகெல்லாம் இழந்து, கோரமான உருவமாய், எல்லாராலும் வெறுக்கப்பட்டவராய், அக்கிரமக்காரரில் ஒருவராகக் கணிக்கப்பட்டு, தம் பிதாவினாலும் கைவிடப்பட்டவராய், ஈனச்சிலுவையிலே மூன்று ஆணிகளில் தொங்கினாரே! ஏன்? எதற்காக? யாருக்காக? நமக்காகத்தானே. அன்று மாத்திரம் அவர் இந்தக் கொடூர மரணத்தை, தம் பிள்ளைகளின் பாவத்திற்கான கிரயமாகிய இந்தக் கேவலமான மரணத்தை நிராகரித்திருந்தால், இன்று நாம் துணிகரமான ஜெபங்கள் செய்திருக்க முடியுமா? நேரடியாகத் தேவபாதம் சேரத்தான் முடியுமா?

பிதாவின் சித்தத்தைப் பரிபூரணமாக முடித்து விட்டு, “முடிந்தது” என்று சொல்லி பிதாவின் கைகளில் இயேசு தம் ஜீவனைக் கொடுத்தாரே! அந்தக் கணம், பரிசுத்த தேவனுக்கும் பாவியாக மனிதனுக்கும் இடையே தடையாய் நின்ற பாவத்திற்கு மாதிரியாக, ஆசரிப்புக்கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும், பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே தொங்கி நின்ற அந்தத் தடித்த தொங்கு திரை மேலிருந்து கீழாகக் கிழிந்ததை, ஜெபிக்கக் கண்கள் மூடும்போது நினைக்கிறோமா? அது மட்டும் அன்று கிழிந்து, பாவத்திரை கிழிந்ததை எடுத்துக்காட்டியிருக்காவிட்டால் இன்று நாம் தேவனண்டை சேர்ந்திருக்க முடியுமா?

நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாகப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணி, அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்கும் தைரியத்தை ஆண்டவர் சம்பாதித்துக்கொடுத்திராவிட்டால் (எபி.10:19), இன்று நாம் பிதாவிடம் ஜெபித்திருக்க முடியுமா?

இப்போ சொல்லுங்கள். இயேசு மாத்திரம் சிலுவையைச் சுமந்து நமது பாவத்தைத் தீர்த்திரா விட்டால் இன்று நாம் துணிகரமாக ஜெபிக்க முடியுமா? இந்த ஒன்றே போதுமே, ஜெபம் என்றதும் நமது முழங்கால்கள் முடங்க! இது போதுமே, ஜெபம் என்றால் நமது கண்கள் மூடி, கரங்கள் கூப்ப! இது போதுமே, தலை மாத்திரமா, நம்முடைய இருதயமே தாழ்ந்துபோக! இது போதுமே, அவர் பாதத்தில் தரித்திருக்க! பின்னர் அங்கே வார்த்தைக்கு இடமேது. இந்தப் பெரிய கிருபையை நமக்குத் தந்த ஆண்டவர், மாறிப்போகின்ற இந்த உலக தேவைகளைச் சந்திக்க பெலனற்றுப்போனாரா? சிந்திப்போம்.

இறுதியாக, ஜெப நேரம் தேவனுடன் உறவாடும் நேரம். ஜெபநேரம் துதியுடனும் மனந்திரும்புதலுடனும் அவரை ஏற்றுக்கொண்டு அவரிடம் அன்புகூர்ந்து அவருக்கு இணங்கி அவரது பிரசன்னத்தில் பிரவேசிக்கும் நேரம். அப்போது அவர் நம் தேவைகளைச் சந்திப்பதிலும் மேலாக, நாம் நிறைவேற்ற வேண்டிய அவருடைய தேவைகளை அவர் நம்மிடம் கொடுக்க, அவற்றை நாம் எடுத்துக்கொண்டு உலகத்துள் ஒளிவீசும் சுடர்களாய் கடந்து செல்லலாம். இந்த அனுபவம் நமக்கு அவசியம் தேவை.

உச்சிப்படி

எல்லாவற்றிலும் கற்றுத் தேறி, அனுபவித்து வளரும்போது, சீயோனிலே தேவனுடன் தனித்திருந்து ஜெபிப்பது ஒரு மேன்மையான அனுபவ மாகிவிடுகிறது. இயேசு நமக்காக யாவையும் செய்து முடித்து, நாம் பிதாவிடம் சேருவதற்கான வழி சமைத்தார் என்று நினைத்தாலே, இனி வார்த்தைகளுக்கு அங்கே இடமேது. இந்த உலக வாழ்வின் மத்தியிலும் ஆண்டவரையும் நம்மையும் பிரித்துப்பார்க்க முடியாத ஒரு உன்னத அனுபவத்துள் பரிசுத்த ஆவியானவர் நம்மை நடத்துகிறார். இதயங்கள் ஒன்றிணைந்து உறவாடும் இந்த நேரம்தான் நமது வாழ்வின் இன்ப நேரம்!

நமது கட்டுப்பாடுள்ள வட்டத்துக்குள் தேவனைக் கொண்டுவருவது அல்ல ஜெபம்; நம்மைத் தாழ்த்தி, தேவனுடைய “சித்தம்” என்ற அவருடைய பரிசுத்த வட்டத்துக்குள் நாம் கடந்து செல்லுகின்ற நேரமே உன்னதமான ஜெப நேரம். அங்கே நானும் என் ஆண்டவரும் மாத்திரமே! இதுவே இம்மையிலும் மறுமையிலும் நமக்கு இன்ப நேரம்! இதற்கும் மிஞ்சி என்ன சொல்ல! ஆமென்.


நினைவுகூருங்கள்

நாம் மற்றவர்களிடத்தில் காட்டும் ஆழ்ந்த அனுதாபத்தோடு கூடிய அக்கறையே சகோதர சிநேகம்!

சத்தியவசனம்