மிஷனெரிக்கான கரிசனை

ஆ.பிரேம்குமார்
(ஜூலை-ஆகஸ்டு 2018)
கடந்த இதழின் தொடர்ச்சி ….

மிஷனெரி கரிசனையில் யார் எப்படி ஈடுபடவேண்டும்?

ஏழு பேர்கள் சேர்ந்து கஞ்சி சமைக்கத் தயாராயினர். ஒவ்வொருவரும் ஒரு கைப்பிடி அரிசி அதற்குப் போட இணங்கினர். கஞ்சி சமைக்கும் நேரம் வந்தபோது முதலாவது நபர் எழுந்து கைப்பிடி அரிசியோடு பானையின் அருகில் சென்று மற்றவர்கள் அரிசியைப்போடுவார்கள் என எண்ணி கைப்பிடி அரிசியை எடுத்து பானையில் போடுவதுபோல் பாசாங்கு செய்து வந்து அமர்ந்தார். இரண்டாம் நபரும் அப்படியே செய்தார். இப்படியாக ஏழு பேரும் மற்றவர் போடுவார்கள் என்றெண்ணி கையிலுள்ள அரிசியை பானையில் போடாமல் இருந்தனர். இறுதியில் அவர்களுக்கு கஞ்சியல்ல, வெறும் தண்ணீரே மிஞ்சியது!

அங்கத்தினருக்கான கரிசனை அல்லது மிஷனெரிக்கான கரிசனையில் யார் ஈடுபட வேண்டும் என்னும் கேள்வி முக்கியமானது. மற்றவர்கள் செய்வார்கள் என நாம் அனைவரும் இருந்துவிட்டால் அதனை யார் செய்வார்கள்? மிஷனெரிகளில் அக்கறை கொள்ள வேண்டியது அனுப்பும் சபையா? மிஷனெரி ஸ்தாபனமா? தனிப்பட்ட நபர்களா? தளத்தில் உள்ள தலைவர்களா? சபைகளா? இப்படி பல கேள்விகள் நம்முன் எழலாம்.

யார் கரிசனை கொள்ள வேண்டும் என்பதற்கு டேவிட் பொலக்கும் (Dr.David Pollock) கெல்லி ஓ டொனெல் (Kelly O’ Donnell) ஆகிய இருவரும் முன்வைத்துள்ள மாதிரியை அடிப்படையாகக் கொண்டு அதனை இலகுபடுத்தி பின்வரும் ஏழுவிதமான கரிசனைகளைத் தருகிறேன்.

1.சுயகரிசனை (Self Care)

மிஷனெரி, தன்னில்தானே கரிசனை எடுத்துக்கொள்வது அவசியம். இயேசுகிறிஸ்துவும் ”உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்பதே: இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்” (மாற்கு 2:31). மிஷனெரியானவர் ஒரு புறத்தில் தன் சுயத்தை வெறுத்து மிஷனெரியாக வந்துள்ள அதே வேளை தன்னை நேசிக்கவும் தனது சரீர, ஆவிக்குரிய, சமுக, மனரீதியான நலனில் அக்கறை கொண்டு தன் நலனைப் பேணுவதும் அவசியம்.

காலையில் தியானம், ஜெபம் போன்றவற்றை ஒழுங்காகவும் அர்த்தமுள்ளதாகவும் செய்து சோதனைகளில் விழுந்துவிடாமல் நன்கு வேலிகள் அடைத்து காத்துக்கொள்ளுதல், நல்ல கிறிஸ்தவ புத்தகங்கள் வாசித்தல், ஒலி/ஒளி இருவட்டுக்கள் கேட்டல்/பார்த்தல் உடலை அலட்சியம் செய்யாமல் உணவு பழக்கவழக்கங்களில் கவனமாயிருந்து சத்துள்ள உணவுகளை உட்கொள்ளல், உடற்பயிற்சி செய்தல், நோய் வருமாயின் மருத்துவ பரிசோதனைக்குச் செல்லல், போதிய ஓய்வு எடுத்தல் நல்ல பொழுது போக்குகளைக் கொண்டிருத்தல் என்பன அவசியம்.

19ஆம் நூற்றாண்டில் ஊழியம் செய்த ரொபட் மரே மக்ஷேன் என்னும் ஸ்காட்லாந்து ஊழியன் 23 வயதில் பெரிய ஊழிய பொறுப்புகளை ஏற்றிருந்தார். ஆனால், அவர் 29 வயதில் மரித்துப்போனார். அவர் மரிப்பதற்கு முன்பாகக் கூறிய பிரபல்யமான கூற்று ”ஆண்டவர் ஒரு செய்தியை கையளிக்குமாறு கொடுத்து, அதனைச் செய்ய ஒரு குதிரையையும் கொடுத்தார். நானோ குதிரையைக் கொன்றுவிட்டேன். இப்பொழுது செய்தியையும் கையளிக்க முடியவில்லை” என்றார். அவர் தனது சரீரத்தையே குதிரை என்றார். தான் தனது சரீரத்தை அலட்சியம் செய்ததால், அவரது ஊழியத்தையும் தொடர முடியவில்லை என்பதே அவரது ஆதங்கம்.

குடும்பத்தோடு நேரம் செலவழித்தல், ஆவிக் குரிய வாழ்வைக் கட்டியெழுப்புதல், தாலந்துகள், வரங்கள் திறமைகள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஒரு மிஷனெரி இவ்வாறு தன்னில்தானே அக்கறை எடுத்து, தனது தனிப்பட்ட விருத்தியிலும் சுயகரிசனையிலும் ஈடுபடுவது அவசியம்.

2.ஒருவரில் ஒருவர் கரிசனை (Mutual Care)

ஒருவரிலொருவர் என்னும் சொற்பதங்கள் வேதாகமத்தில் பலமுறை வருகிறது.

யோவான் 13:34 ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்’.

ரோமர் 12:10 ‘சகோதர சிநேகத்திலே ஒருவர் மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்’.

ரோமர் 15:14 ‘என் சகோதரரே, நீங்கள் நற் குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்’.

எபேசியர் 4:32 ‘ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்’.

கொலோசெயர் 3:13 ‘ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால் கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்’.

கலாத்தியர் 6:2 ‘ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்’.

மிஷனெரிகளாக செயல்படுகிறவர்கள் ஒருவரி லொருவர் அக்கறைகொள்ள வேண்டும். இவர்கள் ஒரே குழு அங்கத்தினராக இருக்கலாம் அல்லது வேறு குழு அங்கத்தினராக இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒருவரிலொருவர் கரிசனை காட்டலாம். ஒரே குழு அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் பொறுப்புக் கூறுபவர்களாக (கணக்கு ஒப்புவிக்கிறவர்களாக) இருந்து, குழுவில் ஒருவர் மற்றவருக்கு உதவலாம் அல்லது மிஷனெரிகளும் அப்பிரதேசத்திலுள்ள சுதேச விசுவாசிகளும் ஒருவரில் ஒருவர் கரிசனை காட்டலாம்.

ஊழியத்தளங்களிலேயே இவ்வாறு ஒருவரில் ஒருவர் கரிசனை செலுத்தி, ஒருவர் தேவையை ஒருவர் சந்தித்து, ஒருவரையொருவர் திருத்தி, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தலாம். இத்தேவையை உணர்ந்து, உறவுமுறை சார்ந்த ஒருவருக்கொருவர் ஒத்தாசையாகத் தாங்குகின்ற கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்வது அவசியம்.

நாங்கள் முதன் முதலாக ஒரு மிஷனெரியை பீகாருக்கு அனுப்ப எண்ணியபோது மிஷனெரிக்கான கரிசனையை செலுத்த, நமது ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒருவரும் அங்கு இருக்கவில்லை. GEMS நிறுவனமானது நமது மிஷனெரியை ஏற்றுக்கொண்டு, அவர் அங்கு காலூன்றும்படி உதவியது. அந்த நிறுவனத்திற்காக நான் ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன். GEMS ஊழியர் ஒருவர் வீட்டில் இவர் தங்கினார். அந்த ஊழியர் இவருக்கு அந்தப் பிரதேசத்தை அறிந்துகொள்ளுவதற்கான உதவி ஒத்தாசைகளை வழங்கினார். காலப்போக்கில் நமது ஊழியர்கள், தமது ஊழியங்களை தனியே ஆரம்பித்த பின்னரும், இவர்கள் ஊழியங்களுக்கு GEMS ஊழியரும், GEMS ஊழியங்களுக்கு இவர்களும் உதவினர். நாம் வேறுபட்ட ஸ்தாபனங்களாக இருந்தாலும், அந்த GEMS ஊழிய ருக்கு நமது மிஷனெரி கணக்கு ஒப்புவிப்பாளராக இருந்தார். அதற்குப் பின்பு, நாம் அனுப்பிய ஊழியரும் அப்படியே இதனைத் தொடர்ந்தார். அந்த GEMS ஊழியர் வேறு பிரதேசத்திற்கு சென்ற பின்னர், நமது மிஷனெரிகள் தற்போது தேவ சபை (AG) மிஷனரியொருவருக்கு கணக்கொப்புவித்து, அவரது ஊழியத்தில் அவரும் உதவுகின்றனர். பிரச்சனைகள் வரும்போது அவரிடம் ஆலோசனைப் பெறுகின்றனர். நமது குழுவிலும் ஒருவரிலொருவர் அக்கறை செலுத்தி, ஒருவருக்கொருவர் கணக்கு ஒப்புவிக்கின்றனர், அத்தோடு அந்த தேவ சபை ஊழியரிடம் ஆலோசனை பெற்று தமது சவால்கள், பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டு ஒருவரையொருவர் விருந்துக்கு அழைத்து ஒருவருக்காக ஒருவர் ஜெபித்து ஒருவரிலொருவர் கரிசனை செலுத்துகின்றனர்.

3. அனுப்பும் சபை

சபையானது, ‘மிஷனெரிகளை அனுப்பிவிட்டோம், மாதந்தோறும் பணம் அனுப்புகிறோம். அவர்கள் அறிக்கைகளை அனுப்பவேண்டும் என இத்தோடு நிறுத்திவிட முடியாது. அனுப்பப்பட்டவர்கள் சபையின் சார்பில் சபையின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டிருக்கிறார்கள். எனவே சபையானது அவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து, அவரின் உடல்நலம் உளநலம் உறவுமுறைகள் (தேவனோடும் மற்றவர்களோடும்), ஊழியம் ஆகிய இவையனைத்தையும் குறித்து கரிசனையெடுக்க வேண்டும்’. அவர்களுக்காக இடைவிடாது ஜெபிக்கவேண்டும். சபை மக்களையும் அவர்களுக்காக தொடர்ந்து ஜெபிக்க ஊக்கப்படுத்த வேண்டும்.

ஒரு மிஷனெரியொருவர் மிஷன் தளத்திலே தனது மனைவியை நோயினால் பறிகொடுத்தார். பின்னர் இவரும் நோய்வாய்ப்பட்டு நாடு திரும்பினார். இதனை ஒருவருக்கும் அறிவிக்காமல் தனது சபையில் நடக்கும் ஜெபக்கூட்டம் ஒன்றிற்குச் சென்று பின் இருக்கையில் உட்கார்ந்தார். சபையார் சபையில் நடக்கும் பலதரப்பட்ட காரியங்களுக்காக ஜெபித்தார்கள். ஆனால் தாம் அனுப்பிய மிஷனெரிக்காக ஜெபிக்கவில்லை. அந்த ஜெபக்கூட்டத்தில் அவரை மறந்தே விட்டனர். சபையின் மிஷனெரியாகச் சென்று தனது மனைவியையும் இழந்து, இப்பொழுது அவரும் நோய்வாய்ப்பட்டு திரும்பியிருக்கிறார். ஆனால் சபை இவரை ஜெபத்தில் தாங்க மறந்துவிட்டது. இவரும் சிறிது காலத்தில் வேதனையோடு மரித்துவிட்டார். இன்று சபைகள், தமது சபைசார் நிகழ்ச்சிகளில் மூழ்கி மிஷனெரிகளுக்காக ஜெபிக்கவோ, அவர்களைத் தாங்கவோ, எந்த முக்கியத்துவமும் கொடாதிருப்பது வேதனைக்குரியது. அவர் சபையில் தமது ஊழியங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூட நேரம் கொடுக்க முடியாதபடி சபையானது நிகழ்ச்சிகளில் மூழ்கியுள்ளமை துக்ககரமானது.

கிறிஸ்தவம், பலஸ்தீனாவில் உறவு முறையாக ஆரம்பித்து, கிரேக்கத்திற்குச் சென்றபோது தத்துவமாக அடையாளம் காணப்பட்டது. ரோமா புரிக்குச் சென்றபோது அது ஸ்தாபனமாக மாறியதுடன், ஜரோப்பாவில் அது பரவும்போது கலாச்சாரமாகி, அமெரிக்காவில் அது வர்த்தகமாகி, 3ம் உலக நாடுகளுக்கு வந்தபோது அது பணித்திட்டமாகி (Project) இப்பொழுது நிகழ்ச்சிகளாக மாறிவிட்டது என்றார் பிரகாஷ் ஏசுவடியான். ஆம்! இன்று சபை தனது நிகழ்ச்சிகளுக்குக் கொடுக்குமிடத்தை உறவுமுறைகளுக்குக் கொடுக்கிறதா? தாம் அனுப்பிய மிஷனெரிகளைப் பார்க்கிலும் சபை நிகழ்ச்சிகளானவை, சபையின் முக்கியத்துவத்தை எடுத்துள்ளமை துக்ககரமானதே! அதிலும் மிஷனெரிகளை மறந்து போவது மிகவும் வேதனையானது. சபையானது மிஷனெரிகளை நினைக்கவேண்டும். சபையாக அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். சபை அறிவிப்புப் பலகையில் அவர்களின் அறிக்கைகள், ஜெப விண்ணப்பங்கள் போடப்படவேண்டும் (அவர்கள் சுவிசேஷத்திற்கு தடையுள்ள நாடொன்றில் இருப்பார்களானால், அந்த நாட்டைக் குறித்த தகவல்களை அகற்றி, ஏனையதை போடலாம்).

அவர்களின் ஊழியத்தளத்திற்கு ஓரிரு வருடங்களுக்கு ஒருமுறையாவது சென்று, அல்லது சபை பிரதிநிதிகளை அனுப்பி அவர்களைப் பற்றியும், ஊழிய நிலவரங்களையும் கண்டு, அறிந்து விளங்கி, அர்த்தமுள்ள விதத்தில் அக்கறை காண்பிக்க வேண்டும். அவர்களை பணரீதியாகத் தாங்கவேண்டும். தொடர்ந்து பணம் திரட்டப்பட வேண்டும். அவர்களோடு தொடர்புகொண்டு விசாரிக்க வேண்டும். போதக கரிசனை, சபை கரிசனை என்பவற்றை காண்பிக்க வேண்டும். சுகவீனமாக இருந்தால், விசாரிக்க வேண்டும். திரும்ப வருகையில் அவர்கள் ஊழியங்கள் பற்றி பகிர்ந்துகொள்ள வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

சபையானது மிஷனெரியை தனித்து அனுப்பியிருந்தால் (மிஷனெரி ஸ்தாபனமொன்றுக்கூடாக அனுப்பாமல்) கணக்கு ஒப்புவிக்கும் கட்டமைப்பையும் ஏற்படுத்தி அவரது வாழ்வையும் ஊழியத்தையும் மேற்பார்வை செய்ய வேண்டும்.

சபை ஒரு மிஷனெரி ஸ்தாபனத்திற்கூடாக மிஷனெரியை அனுப்பியிருந்தாலும் சபை தனது பொறுப்பிலிருந்து விலக முடியாது. மிஷனெரி ஸ்தாபனம் சபையின் மிஷனெரியைத் துஷ்பிரயோகம் செய்தால், தமது மிஷனெரி சார்பில் ஸ்தாபனத்துடன் பேச வேண்டும். சபையும் ஸ்தாபனமும் தங்கள் பங்கு குறித்து ஏற்கனவே பேசி முடிவெடுத்து ஒருவர் மற்றவருடைய எல்லைக்குள் போகாமலிருப்பது நல்லது. ஒருவேளை ஊழியத்தளம் அல்லது ஊழியத்தளத்தின் மேற்பார்வை போன்றவற்றை ஸ்தாபனம் பொறுப்பேற்றிருந்தால் சபையானது. அதில் தலையிடாமல் இருக்கவேண்டும்.  ஆனால் சபையானது மிஷனெரியின் வாழ்வில் கரிசனை செலுத்தியே ஆகவேண்டும்.

4. அறுப்பும் ஸ்தாபனமும்

சபை தனியே மிஷனெரியை அனுப்பாமல் ஒரு மிஷனெரி ஸ்தாபனத்துக்கூடாக அனுப்பியிருந்தால் அந்த மிஷனெரி ஸ்தாபனமும் மிஷனெரியில் கரிசனை காட்டவேண்டும். மிஷனெரி செய்யும் ஊழியத்தில் மட்டுமல்லாது மிஷனெரியின் வாழ்வில் வளர்ச்சியில், குடும்பத்தில், எதிர்காலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

அவர்களுக்குக் கணக்கு ஒப்புவிக்கிற கட்டமைப்பை ஏற்படுத்தி கொடுப்பதும் மேற்பார்வை செய்து மீளாய்வுசெய்து, குறைநிறைகளை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி குறைகளில் உதவ முன்வர வேண்டும். தம்மை அனுப்பிய ஸ்தாபனம் தாம் செய்யும் ஊழியத்தில் மட்டுமல்லாமல் தம்மிலும் கரிசனையாக இருக்கிறார்கள் என்னும் உணர்வு மிஷனெரிகளை ஊக்குவிப்பதுடன் உற்சாகமாக செயற்படுவதற்கும் வழிவகுக்கும்.

மிஷனெரியின் விருத்தியிலும் ஆற்றல் அல்லது திறன்களை விருத்தி செய்வதிலும் அவர் வினைத்திறனுள்ள விதத்தில் ஊழியம் செய்யவும் அவருக்கு உதவ வேண்டும். அதாவது அவர்களை மேற்பார்வை செய்து அவர்கள் இடும் திட்டங்களை ஆராய்ந்து வழிநடத்தி, அனுப்பப் பட்ட இலக்கை நோக்கிச் செல்கிறார்களா? என்பதை உறுதி செய்ய உதவ வேண்டும்.

சத்தியவசனம்