மேரி ஸ்லேசர்

நற்செய்தியைக் கொண்டாடுவோம்
(ஜூலை-ஆகஸ்டு 2018)

இருண்ட கண்டத்தில் வெள்ளை ராணி
மேரி ஸ்லேசர்


நான் இராஜரீக அருட்பணியில் செயலாற்றுகிறேன்; நான் இராஜாதி இராஜாவின் சேவையில் இருக்கிறேன். நான் எதற்காக பயப்படவேண்டும்?


மேரி ஸ்லேஸர் 1848ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள் ஸ்காட்லாந்து தேசத்தில் பிறந்தாள். அவளுடைய பெற்றோர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தபடியினாலே பதினோரு வயது நிரம்பியவளாகும்போதே தனது குடும்பத்தைத் தாங்குவதற்காக அருகில் இருந்த தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு அதன் பிறகு ஓர் இரவு பாடசாலைக்குச் சென்று படித்து வந்தாள். ஒரு புத்தகத்தைத் தன்னோடு எடுத்துச்செல்வாள். வேலை செய்யும்போதும் சில சமயம் தன் பாடங்களைப் படிப்பாள். இவ்விதமாகவே தன்னுடைய வேதாகமத்தையும் எடுத்துச் சென்று படிப்பாள். அந்த நாட்களில் கர்த்தருடைய பிரசன்னம் மிக அருகில் இருந்ததை அவள் உணர்ந்தாள். அதுமட்டுமல்ல, அவ்வப்போது ஆண்டவர் அவளோடு பேசுவதையும் அவள் தெளிவாக உணர்ந்தாள். வயதான அம்மாள் கூறிய செய்தியின் மூலமாக ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டாள். மேலும் ஆண்டவரை அதிகமாக நேசித்தாள்.

யோவான் எழுதிய நற்செய்தி நூலை மிகவும் பிரியமாக வாசிப்பது உண்டு. பல சமயங்களில் தமது தூக்கத்தை மறந்து அவள் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பாள். அவருடைய தந்தை ஒரு குடிகாரனாக இருந்தபடியினால் குடும்ப வாழ்க்கை என்பது சுமூகமாக இல்லை. குடிவெறியிலே வீட்டிற்கு வரும் தகப்பன் அடிக்கடி தனது தாயாரை அடித்துத் துன்புறுத்துவதைக் கண்டாள். அந்த வேளைகளில் மேரி கண்ணீரோடும் துயரத்தோடும் பயத்திலே ஆதரவு அற்ற நிலையிலே வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்டு இருளிலே அலைய நேர்ந்தது என்றாலும் இவ்விதமான எல்லா அனுபவங்களும் அவளுடைய எதிர்கால வாழ்க்கையின் அனுபவங்களுக்கும் வாழ்க்கையின் வேலைகளுக்கும் முன்னோடியாக அவளைப் பயிற்றுவித்தன.

மேரியின் தாயார் மிகவும் பக்தி நிறைந்த ஒரு கிறிஸ்தவப் பெண். அடிக்கடி இந்த அம்மையார் தன்னுடைய பிள்ளைகளை அழைத்து இயேசு கிறிஸ்துவின் அன்பையும் ஆப்பிரிக்காவில் உள்ள பிள்ளைகளுக்குக் கிறிஸ்துவின் அன்பைப் பற்றித் தெரியாது என்பதையும் எடுத்துச்சொல்வார்கள். தன்னுடைய தாயிடம் இருந்துதான் மிஷனெரி பணிக்கான ஓர் ஆழ்ந்த பாரத்தை மேரி பெற்றுக்கொண்டாள், அவள் தன் தாயாரைப் பார்த்து ”அம்மா நான் ஆப்பிரிக்கச் சிறுவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க ஒரு மிஷனெரியாகச் செல்வேன்” என்று அடிக்கடி சொல்வது உண்டு.

மேரி 14 வயதாக இருக்கும்போது அவளுடைய தகப்பனார் ராபர்ட் உட்பட அவளது இரண்டு சகோதரர்களும் எதிர்பாராத விதத்தில் மரணம் அடைந்தார்கள். குடும்பத்தை முழுவதுமாகப் பராமரிக்கும் பாரம் மேரியின்மேல் விழுந்தது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகத் தன்னையே தியாகம் செய்யும் வாழ்க்கையினை அவள் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இக் கடுமையான துன்பங்களின் மூலமாக மேரி முன்னிலும் அதிகமான தைரியமும், பொறுமையும் உடையவளானாள்.

ஆப்பிரிக்காவிற்கு அழைப்பு:

தான் ஒரு மிஷனெரியாவதற்கு முன்னதாகவே மேரி முழுமனதோடு ஆண்டவருக்காகத் தன் சொந்தப் பட்டணத்தில் சாட்சியாய் விளங்கினாள். நாம் ஆண்டவருக்குப் பணிபுரிய தூர இடங்களுக்குச் செல்லுமுன், நம்முடைய சொந்த ஊரிலும் இனத்தாரிடத்திலும் ஆண்டவருக்கு சாட்சியாக இருக்கவேண்டும். மேரி ஒவ்வொரு நாளும் பத்துமணி நேரம் தொழிற்சாலையில் வேலை செய்வாள், என்றாலும் தனது ஓய்வு நேரத்திலெல்லாம் கடவுளுக்கு எவ்வளவு சிறப்பாகப் பணிபுரிய முடியுமோ அவ்வளவு சிறப்பாகப் பணிபுரிவாள். இவ்விதமாக 14 ஆண்டுகள் கடந்தன. ஆனால் அந்த ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் காடுகள், அவற்றில் உள்ள குடிசைகள் எல்லாம் எப்போதுமே அவள் மனக்கண்முன் காட்சி அளித்துக்கொண்டே இருந்தன.

ஆப்பிரிக்காவில் மிஷனெரியாகப் பணியாற்றிய டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவிலேயே இறந்துவிட்டார் என்ற துயரச்செய்தி ஸ்காட்லாந்து தேசத்தில் பரவியது. அந்த இடத்திற்கு இனி யார் சென்று அந்தப் பணியை தொடர்வார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த அறைகூவல் ஆப்பிரிக்காவிற்குச் செல்வதற்கான மேரியின் அழைப்பினை உறுதி செய்தது. ஆப்பிரிக்கா செல்வதற்கு இப்படி ஓர் அழைப்பு இருப்பதை மேரி தன் தாயாரிடம் கூறினாள். அவளுடைய தாயார் மகிழ்ச்சியாக சம்மதித்தார். உடனே மேரி மிஷனெரி சங்கத்திற்கு ஓர் கடிதம் எழுதினாள். அவளது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாயும் அவள் ஆப்பிரிக்காவிலே கலாபார் என்ற இடத்திற்கு மிஷனெரியாக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் மிஷனெரி சங்கத்திலிருந்து பதில் வந்தது.

1876ஆம் ஆண்டு மேரி ஸ்லேஸர் கப்பலின் மேல்தளத்தில் நின்று நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கையசைத்து விடைபெற்று மிஷனெரியாக ஆப்பிரிக்கா புறப்பட்டாள். கடல் பிரயாணத்தின்போது அவளோடு பிரயாணம் செய்த ஒருவர் ஆப்பிரிக்காவைப் பற்றி அதிகமான குறிப்புகளை அவளுக்குக் கொடுத்தார். எவ்விதமாக ஆப்பிரிக்கா அடர்த்தியான காடுகளினால் மூடப்பட்டு இருக்கிறது, எந்தவொரு வெள்ளையனுமே பார்த்திராத வேகமான ஆறுகள் ஓடுகின்றன, காட்டாறுகள் வேகமாக எழும்பிக் குடிசைகளையும் மரங்களையும் வேரோடு அடித்துக்கொண்டு செல்கின்றன என்பதையும் விளக்கினார். அதுமட்டுமன்றி அடர்த்தியான காடுகளில் பெரும் யானைகள், சிறுத்தைகள் புலிகள் பயங்கரமான பாம்புகள் எல்லாம் இருக்கின்றன என்றும் நதிகளில் நீர்யானைகள் முதலைகள் ஏராளமாய் இருக்கின்றன என்றும் விவரித்தார்.

ஆப்பிரிக்காவில் மேரி:

ஆப்பிரிக்காவில் டுயூக் டவுன் என்ற கடற்கரைப் பட்டணத்தை மேரி அடைந்து அங்கு நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தாள். அந்த நாட்டு மொழியினைக் கற்றுக்கொள்வதற்கும் அது அவளுக்குப் பெரும் உதவியாக இருந்தது. அந்த நாட்டில் உள்ள ஆப்பிரிக்கச் சிறுவர் சிறுமியருடன் நன்முறையில் பழக ஆரம்பித்தாள். அவர்களோடு மிகவும் நட்புடன் பழகியதால் அவர்களுடைய நல்லெண்ணத்தையும், நல் மதிப்பையும் பெற்றுக்கொண்டாள். ஆனால் அவளுடைய உள்ளத்திலோ ஆப்பிரிக்காவின் காடுகள் நிறைந்த உள் பகுதிகளுக்குச் செல்லவேண்டும். அங்கே ஆண்டவரை அறியாத மக்களுக்கு ஆண்டவரைப் பற்றிச் சொல்லவேண்டும் என்ற விருப்பம் மேலிட்டு இருந்தது.

இருண்ட கண்டம்

ஆப்பிரிக்கா எதனால் ”இருண்ட கண்டம்” என்று அழைக்கப்படுகிறது என்பதை வெகு விரைவில் புரிந்துகொண்டாள் மேரி. அங்கே பாவம், கொடுமை, அசுத்தம் முதலிய தீமைகள் நிறைந்த ஒரு நிலைமை காணப்பட்டது.  அடிமை வியாபாரம் தாராளமாக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் ஈவு இரக்கம் இன்றி பிடிக்கப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டு மிருகங்களைக் காட்டிலும் மோசமாக நடத்தப்பட்டார்கள். அங்கிருந்த மக்கள் குளங்களிலும் மரங்களிலும், பலவித அசுத்த ஆவிகள் இருக்கிறதாக நினைத்துப் பயந்திருந்தார்கள். வேறு சிறு மலைவாசிகள் சண்டையிடுவதிலும் குடித்து வெறித்துக் கூத்தாடுவதிலும் தங்கள் வாழ்க்கையையும், காலத்தையும் விரயமாக்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் அதில் பலர் மனிதரைத் தின்னும் நரமாமிச பட்சினிகளாய் இருந்தார்கள். தங்களுடைய தெய்வங்களைப் பிரியப்படுத்துவதற்காக மிருகங்களின் இரத்தத்தைச் சிந்துகிறவர்களாகவும் இருந்தார்கள். இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவர்களுக்குப் பாவத்திலிருந்து விடுதலையும், மகிழ்ச்சியும் பரிசுத்தமுள்ள வாழ்க்கையும் உண்டு என்பதை அவர்கள் ஒருபோதும் உணரவில்லை.

”அம்மா ஸ்லேஸர்”

ஒரு தாயாருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட மேரி அந்தக் குழந்தைகளுக்கு நேரிடும் நிலையை அறிந்தவளாக வேகமாக அந்தக் குடிசைக்கு ஓடினாள். அங்கே அந்தக் குடிசையில் இருந்த ஒரு மூதாட்டியிடம் அந்தக் குழந்தைகளை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று கேட்டாள். அந்தக் குழந்தைகளின் முதுகை ஒடித்து அவர்களைப் பக்கத்தில் உள்ள புதரிலே தூக்கி எறியப் போவதாக அக்கிழவி கூறினாள். உடனே மேரி அந்தக் குழந்தைகளைத் தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று வளர்க்க ஆரம்பித்தாள். எப்படியோ அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றாகிய ஆண் குழந்தை, அதன் உறவினர்களால் திருடப்பட்டு கொல்லப்பட்டுவிட்டது. ஆனால் மேரி பெண் குழந்தையை மிகவும் பரிவுடனும், கவனத்துடனும் தத்து எடுத்து ஆப்பிரிக்க குடும்பத்தின் தன்னுடைய முதல் மகள் என்று வளர்த்தாள்.

மேரி அவ்விடத்து மக்களின் குடிசைகளில் வாழ்ந்து, அவர்களின் உணவாகிய மீன், கிழங்கு, பழங்களையே சாப்பிட்டு வந்தாள். அந்த மக்களுக்கு உடைகளைத் தயாரித்தும், எழுத படிக்கப் போதிக்கும் ஆசிரியையாகவும் பிணிகளைத் தீர்க்கும் செவிலித்தாயாகவும் சேவை செய்துவந்தாள். அவர்களுக்குள் ஏற்படும் சண்டைகளைத் தீர்த்து வைக்கும் தலைவியாக தாயன்போடு அவர்களை அரவணைத்து சரியான வாழ்க்கைப் பாதையில் நடத்தினபடியால் அவளை அம் மக்கள் ”அம்மா” என்றே அழைத்தனர். ”அம்மா ஸ்லேஸர்” என்ற பெயர் நிலைத்துவிட்டது.

மேரிக்கு ஆப்பிரிக்காவின் உட்பகுதிக்குச் செல்ல அதிக ஆவலாய் இருந்தது. உட்பகுதி மக்கள் கடற் பகுதி மக்களுக்கு எதிரிகளாக இருந்தனர். கொடுமை செய்பவர்களாயும் இருந்தனர். மிஷனெரி சங்கமும் அவளை, உட்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரித்து தடைசெய்திருந்தது. ஆனாலும் அவள் ஓர் இரவு உட்பகுதிக்குச் செல்ல புறப்பட்டு விட்டாள். தன்னோடு மூன்று ஆப்பிரிக்க ஆண்பிள்ளைகளையும் ஒரு சிறிய பெண்ணையும், ஒரு குழந்தையையும் அழைத்துச் சென்றாள். இருண்ட காடுகளின் வழியே புகுந்து ஓர் உட்பகுதி கிராமத்தை அடைந்தாள்.

அச்சிறிய கிராமத்தில் அவளும் அவளோடு சென்ற மக்களும், மூங்கில்களினால் ஆன ஒரு குடிசையைப் போட்டனர். குடிசைக்குள் போதிய இடம் இல்லாததால் பாத்திரங்களையும் மண் பாண்டங்களையும் குடிசைக்கு வெளியே தொங்கவிட்டனர். ஒரு சிறிய ஆலயத்தையும் கட்ட ஆரம்பித்தனர். அப்புதிய கிராம மக்களுக்கு மேரி உடைகளைக் கொடுத்து, படிக்கவும் தைக்கவும்  கற்றுக்கொடுத்தாள். சமையல் முறைகளையும் படித்துக்கொள்ள உதவி செய்தாள். இயேசுவின் இனிய கதைகளைத் தவறாமல் சொல்லி வந்தாள்.

மேரி பலமுறை அநேக மைல்கள் நடந்து சென்று உட்பகுதி ஆப்பிரிக்க இனமக்களில் எழும்பும் சிறிய சண்டைகளைத் தீர்த்து வைப்பாள். ஒருநாள் அவ்வினமக்களிடையே பெரும் போர் மூளும் அபாயம் தோன்றியது. அதை நிறுத்த மேரி வேகமாக இரவில் தன்னந் தனியாக இருண்ட காட்டுப் பகுதிக்குள் நடந்துசென்றாள். கொடிய விலங்குகளினின்று பாதுகாக்கப்பட ஜெபித்துக் கொண்டே சென்றாள். இவள் ஒரு தைரியசாலியாகப் பிறந்தவளா? இல்லை. ஸ்காட்லாந்தில் ஒரு பசு மேயும் வயலைக்கூட கடக்கப் பயப்படும் இவள், பரிசுத்த ஆவியானவரின் பெலத்தையும், தைரியத்தையும் பெற்று வழிநடந்தாள். இருண்ட காடுகள், கொடிய விலங்குகள், கொடூரமான ஆப்பிரிக்க இனத்தலைவர்கள் ஆகிய இவைகளையெல்லாம், பரிசுத்த ஆவியானவரின் பெலத்தால் மேற்கொண்டாள். ஒரு நியாயமான தீர்ப்பு செய்பவளாகவும், நல்ல ஆலோசனைகளை வழங்குபவளாகவும் ஆப்பிரிக்க இனத்தலைவர்கள் இவளை ஏற்றுக்கொண்டனர். ஒருசில சமயங்களில் ஒருநாள் சமாதானம் செய்து வைப்பாள். அவளுடைய நேர்மையான நியாயத்தீர்ப்புகளை அவ்வின மக்கள் ஏற்றுக் கீழ்ப்படிந்தனர். அவள் பணிபுரிந்த அப்பகுதிகள், இங்கிலாந்து அரசாங்கத்தின் ஆட்சிக்குள் வந்தபோது, மேரியை அரச பிரதிநிதியாக நியமித்தனர். ”வெள்ளை அரசி” என்ற பட்டப்பெயரால் மேரி மிகவும் புகழப்பட்டாள்.

மேரி ஆப்பிரிக்காவில், அந்த மக்களைப் போலவே மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து தன் குறைந்த சம்பளத்திலும் மீதப்படுத்தி, அதை ஸ்காட்லாந்திலுள்ள தன் தாய்க்கும், சகோதரிக்கும் அனுப்பி வைத்தாள், சிலநாள்களில் அவ்விருவரும் ஒருவர் பின் ஒருவராய் இறந்துவிட்டனர் என்ற செய்தி மேரிக்கு கிடைத்தது. தான் தன்னந் தனிமையாக கைவிடப்பட்டுள்ளோம் என்று வருந்தி இருக்கும்போது அவளுக்கு ஆப்பிரிக்கக் குடும்பத்தில் அநேக பிள்ளைகள் இருப்பதை உணர்ந்தாள். இரட்டைக் குழந்தைகள், அநாதைகள் மீட்கப்பட்ட அடிமைகள் என்று பலர் அவளால் பாதுகாக்கப்பட்டிருந்தனர்.

மேரி தன்னுடைய பல பொறுப்புகளில் ஈடுபட்டு இருக்கும்போது வாரத்தில் அன்று என்ன கிழமை என்றுகூட மறந்துவிடுவாள். அவளுடைய நண்பர்கள் செய்யும் ஜெபங்களும், வேண்டுதல்களும் அவளுக்கு உதவியாகவும், ஊழியத்தில் ஊக்கம் கொடுப்பவையாகவும் அமைந்தன.

ஆப்பிரிக்காவின் மேல் மேரியின் கரிசனை:

உடல் நலக்குறைவால் மேரி ஸ்காட்லாந்து நாட்டிற்கு திரும்பிப்போக வேண்டியதாக இருந்தது. உடல் நலம் தேறியவுடன் தன்னைத் திரும்ப ஆப்பிரிக்க நாட்டிற்கு அனுப்பவேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். தன்னை அனுப்பாவிட்டால் ”கடலில் நீந்திச் சென்றாவது ஆப்பிரிக்காவை அடைவேன்; ஏனென்றால் கிறிஸ்து இல்லாமல் ஆப்பிரிக்க மக்கள் மரிக்கின்றனர்; நான் போகவேண்டும்”என்று சொல்லி ஆப்பிரிக்க நாட்டை திரும்ப வந்தடைந்தாள். அடிமை வியாபாரம் நடக்கிற இடங்களிலும் நரமாமிசப் பட்சினிகள் என்று அழைக்கப்படுகின்றவர்கள் மத்தியிலும் எவ்வித பயமுமின்றி கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டாள், முதுமைப் பிராயத்திலும் உற்சாகத்தோடு பணிபுரிந்தாள். சைக்கிளில் பிரயாணம் செய்து கிராமங்களில், சேவை செய்தாள். சில சமயங்களில் அவளை நாற்காலியில் உட்கார வைத்துச் சுமந்து செல்வர். இவ்விதம் மேரி வயது சென்ற நிலைமையிலும் ஆப்பிரிக்க மக்களை நேசித்து அவர்களுக்குப் பணி செய்து வந்தாள்.

பிரிட்டிஷ் அரசாங்கம், மேரியை ஆப்பிரிக்காவின் அந்தப் பகுதிகளுக்கு நீதிபதியாக நியமித்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமனம் பெற்றவர் மேரி ஸ்லேஸர் அவர்களே. தனக்குக் கிடைத்த உயர்பதவியை கிறிஸ்துவுக்கு என்று பயன்படுத்தினார்கள். ஆப்பிரிக்க நாட்டுக் குடிமக்களும், அங்கு பணி புரிந்து வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளும் கிறிஸ்துவை ஏற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அங்கு நீதிபதியாகப் பணியாற்றினார்கள். அவரது திருப்பணியும், ஆப்பிரிக்க மக்களுக்குச் செய்த சேவையும் அன்று வெளி உலகிற்கு தோன்றவில்லை. நாகரீகம் அற்ற இடத்தில் மறைந்து கிடந்தது. ஒருவரும் அறியாநிலையில் இருந்த மேரியின் கிறிஸ்தவ பண்புகளும், சேவையும் வெளி உலகு அறிய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் சாம் ராஜ்ய சக்ரவர்த்தி மேரி ஸ்லேஸரை கெளரவிக்கவும் சேவைகளைப் பாராட்டவும் முன்வந்தார். தம்மை மகிமைப்படுத்திய மகளை கிறிஸ்துவும் கனப்படுத்தி உலகின் உயர்பதவிகளை அடையச் செய்தார் என்பதே உண்மை.

மகிமையில் பிரவேசித்தல்:

மேரி ஸ்லேஸர் தன் சுயதேசத்திற்குத் திரும்பிப் போகவில்லை.  கடைசி மூச்சுவரை பணிபுரிய ஆப்பிரிக்காவிலேயே இருந்து விட்டார்கள். பலவீனம், முதுமை நோய்வாய்ப்படுதல் போன்ற இவைகள் ஒன்றும் அவர்களின் பணியை தடைசெய்ய முடியவில்லை. நடமாட முடியாத நிலையிலும் படுக்கையில் இருந்தவாறே ஜெபித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய நினைவுகளெல்லாம் பரலோகத்தைப் பற்றியதாகவே இருந்தது.

இறுதியில் 1915ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 13ஆம் நாள் பரம ராஜாவின் சந்நிதியை அடைந்தார்கள். வெகு உண்மையாய் தான் சேவித்த கிறிஸ்துவிடம் பலனையும், கிரீடத்தையும் பெற பரலோகம் சென்றார்கள். அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருந்த பரிசுத்த வேதாகமம் பல போராட்டங்களை ஜெயிக்க உதவியது. அவர்களோடு படுக்கையில் இருந்த அவ்வேதாகமம் முழுவதும், குறிப்பு எழுதப்பட்டும், கோடுகள் வரையப்பட்டும் காணப் பட்டது.

உச்சா துணை நூல்: சிலுவை வீரர்கள்
ஆசிரியர் தியோடர் வில்லியம்ஸ்

சத்தியவசனம்