சத்திய வசனம் பங்காளர் மடல்
நவம்பர்-டிசம்பர் 2018
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,
நமக்காக அடிமையின் ரூபமெடுத்து மனுஷசாயலான கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
நம்முடைய தேசத்தில் சீர்கேடான காரியங்களும் பிரச்சனைகளும் ஒருபுறம் அதிகமாகிக் கொண்டிருக்க, இயற்கை சீற்றத்தாலும் பல மாவட்டங்களில் அநேக அழிவுகளையும் சேதங்களையும் காண்கிறோம். மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும் (வெளி.22:20). சீக்கிரமாய் வாரும் என்றே நாமும் ஜெபித்து கர்த்தருடைய வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்துவோம்.
சத்தியவசன கிறிஸ்துமஸ் கீத ஆராதனை டிசம்பர் 1ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலை 6.30 மணிக்கு அமெரிக்கன் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. கீத ஆராதனைக்கான அறிவிப்பு 5வது பக்கத்தில் உள்ளது. கீத ஆராதனையில் Rev.அனில்குமார், மற்றும் Rev.அந்தோனி ராஜூ (GNBS Board) அவர்கள் கலந்துகொண்டு சிறப்புச் செய்தி வழங்குவார்கள். மதுரையிலும் அதின் அருகாமையிலுமுள்ள சத்தியவசன விசுவாச பங்காளர்களும் நேயர்களும் குடும்பமாக கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். தங்களை நேரில் சந்திக்க வாஞ்சையாயிருக்கிறோம்.
இவ்விதழில் ‘கிறிஸ்துமஸ் நமக்குத் தரும் நான்கு ஆசீர்வாதங்கள்’ என்ற தலைப்பில் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களது செய்தியும், இயேசுவின் பிறப்பை தடைசெய்ய முயன்ற மனிதர்களில் ஏரோதின் தந்திரமான செயல்களை விவரித்து Dr.உட்ரோ குரோல் அவர்களும் எழுதியுள்ளார்கள். சிறு பிள்ளைகள் முதல் பெரியவர் வரை கிறிஸ்துமiஸ எவ்விதமான கண்ணோட்டத்தோடு கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களின் பேட்டியோடு கூடிய சிறப்பு செய்தியை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் வழங்கியுள்ளார்கள். மேலும் தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் என்ற தலைப்பில் Dr.சாம் கமலேசன் அவர்களின் செய்தியும், மனித அவதாரத்தின் பரம இரகசியம் என்ற தலைப்பில் எழுதிய திரு.பாபிங்டன் ஐயா அவர்களின் செய்தியும் இடம் பெற்றுள்ளது. Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் எழுதிய விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டத்தில் ஜெபத்தின் தொடர் செய்தியோடு இந்த அத்தியாயங்கள் முடிவுபெறுகின்றன.
நற்செய்தியை கொண்டாடுவோம் என்ற கருப்பொருளில் நாம் பார்த்துவரும் அருட்பணி யாளர்களின் வாழ்க்கை வரலாற்று தொடரில், இவ்விதழில் தனது சொந்தநாட்டில் இருந்துகொண்டே மிஷனெரி பணியில் இணைந்து செயலாற்றியும் இலக்கியங்கள் வாயிலாக சத்தியத்தை மக்கள் மத்தியில் பறைசாற்றின மிஷனெரி வீரர் ஆன்ட்ரு புல்லர், மற்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள பழங்குடி மக்கள் வாழும் தீவுக்கூட்டங்களில் கடினமாக மிஷனெரி பணியாற்றிய ஜான் G.பேட்டன் ஆகிய இருவரைப்பற்றியும் சுருக்கமாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
சத்தியவசன விசுவாச பங்காளர்கள் ஆதரவாளர்கள் நேயர்கள் வாசகர்கள் யாவருக்கும் அன்பின் கிறிஸ்துமஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்