கிறிஸ்துமஸ் நமக்கு அருளும் நான்கு ஆசீர்வாதங்கள்!

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(நவம்பர்-டிசம்பர் 2018)

கர்த்தருக்குள் அருமையான சத்தியவசன நேயர்கள் பங்காளர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

அருமையானவர்களே! நீங்கள் சத்தியவசன ஊழியத்திற்காக ஜெபிக்கிறதற்காகவும், ஊழியங்களை தாங்குகிறதற்காகவும் நன்றி சொல்லுகின்றேன். கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்ற இந்த காலத்திலே ஒருமுக்கியமான கருத்தை நான் சிந்திக்க ஆரம்பித்தேன். இந்நாட்களிலே ஆண்டவர் நமக்குக் கொடுக்கிற நான்கு முக்கியமான காரியங்களைக் குறித்துப் பார்க்கலாம். “மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்” (லூக்.2:20). மேலும் 17ஆம் வசனத்தில், “கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள்” என வாசிக்கிறோம். மத்தேயு 2: 12ஆம் வசனத்தில், “பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள்”. தூய ஆவியானவராய் இருக்கிற தேவன் இந்த கிறிஸ்துமஸ் காலத்திலே நமக்குத் தருகிற நான்கு நன்மைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முதலாவது, என்னவென்றால் புதுப்பிக்கப்பட்ட ஒரு வாழ்வு. அதாவது புதுப்பிக்கப்பட்ட ஒரு வாழ்வைத்தான் ஆண்டவர் நமக்கு பண்டிகையாக தருகிறார். 2கொரி.5:17ஐ பாருங்கள்: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்”. ஒருமனிதன் பாவியாக இருந்து ஆண்டவரைவிட்டு தூரம் போய் இருக்கலாம். அம்மனிதன் ஆண்டவரை அறிந்துகொண்டு, அவர் எனக்காக பிறந்தார் என்று புரிந்துகொண்டு, அவருடைய மீட்பின் வல்லமையை அறிந்துகொள்வானானால் ஆண்டவருக்கு தன்னை அர்ப்பணிப்பானானால் அவனுடைய பழைய குணங்கள் பழைய தன்மைகள் எல்லாம் மாறி புதுமனிதனாக மாறுகிறான். திருமறை ஆதாரத்துடன் நான் சொல்கிறேன்: கிறிஸ்து பிறந்ததினாலே நமக்கு கிடைக்கிற பரிசு புதுப்பிக்கப்பட்ட வாழ்வு.

ஒருவேளை நாம் ஆண்டவரை விட்டு விலகி தூரம்போயிருக்கலாம். அல்லது வாழ்வில் ஏற்பட்ட தடுமாற்றத்தினாலே வீழ்ந்துபோய், வாழ்க்கை கறைப்பட்டு இருக்கலாம். அல்லது அநேகருக்கு கலகம் உண்டாக்குகிற மனிதனாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவையெல்லாவற்றிலுமிருந்து விடுபட்டு ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும்போது ஆண்டவர் புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கையைத் தர வல்லமையுள்ளவராய் இருக்கிறார். மத்தேயு 2:12ஆம் வசனத்தில் நாம் வாசித்தபடி அவர்கள் வேறுவழியாய் புறப்பட்டு போனார்கள். அவர்கள் வந்த வழி வேறு; செல்லுகிற வழி வேறு, ஆண்டவரை சந்தித்த பிற்பாடு அவர்களுடைய பாதையே மாறுகிறது இல்லையா? அப்படியானால் நீங்கள் ஆண்டவரை சந்திக்கும்போது அவருக்கு உங்களை அர்ப்பணிக்கும் போது உங்களுடைய வாழ்வின் பாதைகளிலே மாற்றங்கள் வருகிறது.

இரண்டாவது, கிறிஸ்து பிறப்பின் மூலமாய் நாம் பெறுகிற மற்றுமொரு ஆசீர்வாதம் என்னவென்றால், ஆண்டவருக்காக சேவை செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு. ஆண்டவருக்கு சேவை செய்யக்கூடிய ஒரு வாய்ப்பை நமக்கு பரிசாகத் தருகிறார். ஆண்டவர் யார்? அவர் ஒளியின் மத்தியில் வாசம் செய்கிறவர், கேருபீன்கள் சேராபீன்கள் மத்தியில் வாசம் பண்ணுகிறவர், கோடிக்கணக்கான தூதர்கள் அவரை துதித்துப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சர்வ வல்லமை படைத்த அந்த திரியேக தேவனுக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்ததின் மூலமாகதான் நமக்குக் கிடைத்திருக்கிறது. மேய்ப்பர்கள் ஆண்டவரைக் காண வரும்போது எப்படி வந்தார்கள்; ஆர்வத்தோடு வந்தார்கள். அப்படி ஆர்வத்துடன் காணவந்த அவர்கள் திரும்பச் செல்லும்போது என்ன செய்தார்கள். ஆண்டவரை பிரசித்தப்படுத்திக் கொண்டே சென்றனர். ஆண்டவரைப் பிரசித்தப் படுத்திக்கொண்டே கர்த்தருக்கு சேவை செய்தனர்.

சகேயு என்பவன் ஆண்டவரைக் காண வரும்போது மிகுந்த ஆர்வத்துடன் கடந்து வந்தான். ஆண்டவரை சந்தித்தபின் சகேயு என்ன செய்தான்? “ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலந்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்” (லூக்.19:8). இவ்விதமாக சகேயு தன் வாழ்வை சரி செய்ய ஆரம்பித்தான். ஆண்டவருக்கு சேவைச் செய்யக்கூடிய மனப்பான்மையிலே வளர ஆரம்பித்ததைப் பார்க்கலாம்.

ஏசாயா 6:8ஐ வாசித்துப் பாருங்கள்: ஏசாயா வுக்கு ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தினபோது, “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன் அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும் என்றேன்” என்பதாக வாசிக்கிறோம். “அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று சொல்லி அப்படியே அவன் தன்னை அர்ப்பணித்தான். அப்.9:6 இல் பவுல் என்கிற அந்த மனிதனுக்கு ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தினபோது, “ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்” என்று கேள்வி கேட்டு தன்னை அர்ப்பணித்தான். இறுதிவரையில் ஆண்டவருக்கு சேவை செய்கிற அடியானாக மாறினார். அப்படியானால் கிறிஸ்து பிறந்ததின் மூலமாக நமக்குப் புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கை மாத்திரமல்ல, ஆண்டவருக்காக சேவை செய்ய வேண்டும் என்கிற பெரிய வாய்ப்பையும் பெற்றுக்கொள்கிறோம். எல்லாரும் முழு நேரமாக போதகராக வரவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆண்டவர் கொடுக்கிற கிருபையின் அடிப்படையிலே ஆண்டவருக்கென்று உங்கள் பணிகளிலே உங்களால் இயன்ற பரியந்தம் நீங்கள் சேவை செய்வீர்களானால் அதுவே ஆண்டவருக்கு கொடுக்கிற மகிமையாகும்.

மூன்றாவதாக, கிறிஸ்து பிறப்பின் பண்டிகை யிலே நாம் அறிந்துகொள்கிறது என்னவென்றால்; கர்த்தரை ஆராதிக்கும் கிருபை என்று பார்க்கிறோம். “அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப் போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்” (மத்.2:11). சாஸ்திரிகள் ஆண்டவருடைய பாதத்திலே, அந்த பிள்ளைக்கு முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து அவரை பணிந்து கொண்டார்கள். அப்படியானால் கிறிஸ்துமஸ் பண்டிகையின் மூலமாக கிறிஸ்துவின் மூலமாய் சர்வ வல்லமை படைத்த தேவனை நாம் தொழுதுகொள்கிறோம். பழைய ஏற்பாட்டிலே எல்லாரும் தேவனை தொழுதுகொள்ள முடியும்.

ஆனால் ஒருசில மக்கள்தான் அவரோடு நேரடியாய் தொழுதுகொள்ள முடியும், நேரடியாய் பேசமுடியும். ஆனால் கிறிஸ்து பிறந்த பிற்பாடு நமக்கு இடைத்தரகர்கள் யாரும் தேவையே இல்லை. அப்பா, பிதாவே என்று உரிமை பாராட்டி அவரை நாம் தொழுதுகொள்ளுகிற வாய்ப்பை பெறுகிறோம். அப்படியானால் கிறிஸ்து பிறக்கவில்லை என்று சொன்னால் சர்வ வல்லமை படைத்த தேவனை நம்மால் தொழுதுகொள்ள முடியாமல் போயிருந்திருக்கும். தூரமாய் கிடந்த நாம் கிட்டி சேர்ந்து அவருடைய பிள்ளையாய் மாறி அவரைத் தொழுதுகொள்கிற அந்த பாக்கியத்தைப் பெற்றுக் கொள்கிறோம்.

நான்காவதாக, சரியான பரிசுகளை ஆண்டவருக்கு அளிக்கிற கிருபை என்கிற அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்கிறோம். ஆண்டவருக்கே அன்பளிப்புகளை கொடுக்கிற அந்த வாய்ப்பு. மத்.2:11இல் சாஸ்திரிகள் பொன்னைக் கொடுத்தார்கள்; வெள்ளைப்போளத்தைக் கொடுத்தார்கள்; தூபவர்க்கத்தைக் கொடுத்தார்கள். விலை மதிக்க முடியாத அந்த பரிசுகளை அவர்கள் ஆண்டவருக்கென்றுக் கொடுத்தார்கள். அவர்கள் தங்களிடத்தில் உள்ளதை ஆண்டவருக்குக் கொடுத்தார்கள்.

அருமையானவர்களே! நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் ஏதோ ஒரு தாலந்தை நிச்சயமாகவே கொடுத்திருக்கிறார். உங்களுக்கு கர்த்தர் கொடுத்த தாலந்து அல்லது வரங்களை அவருக்காகப் பயன்படுத்துங்கள். உங்களையேக் கொடுங்கள். அதுதான் பெரிய பரிசு! அப்படிச் செய்வோமானால் அது பெரிய பாக்கியம் இல்லையா?

நாம் சிந்தித்ததான இந்த நான்கு காரியம் புதுப்பிக்கப்பட்ட வாழ்வு, ஆண்டவருக்கு சேவை செய்யும் வாய்ப்பு, தேவாதி தேவனை ஆராதிக்கும் கிருபை, ராஜாதி ராஜாவுக்கு நம்மையே பரிசாக கொடுக்கிற அந்த வாய்ப்பு இந்த கிருபைகளை ஆண்டவர் உங்களுக்கு தர இந்த பண்டிகை நாட்களிலே உங்களை வாழ்த்தி உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.


சிந்தியுங்கள்!

தன்னயம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒரு பாரமாக்குகிறது; ஆனால் அன்போ அதை மகிழ்ச்சியாக்குகிறது.

சத்தியவசனம்