Dr.உட்ரோ குரோல்
(நவம்பர்-டிசம்பர் 2018)

சத்தியவசன வாசகர்களுக்கு என்னுடைய அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இக் கிறிஸ்துமஸ் காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாம், சற்றே பின்னோக்கி, இந்நிகழ்வைப் பாழாக்க முயன்ற மனிதர்களைக் குறித்து மத்தேயு 2ம் அதிகாரத்தை மையமாகக் கொண்டு தியானிப்போம்.

மரியாளும் யோசேப்பும் பத்திரமாக பெத்லகேமுக்கு வந்து சேர்ந்தனர். இயேசு பாலகனும் பிறந்துவிட்டார். ஆனால் யூதாவின் அரசனாகிய ஏரோது அதனைத் தடுக்க தன்னால் இயன்றதைச் செய்தும் அதில் தோல்வியே கண்டான். இவன் இயேசுவின் பிறப்பைத் தடை செய்ய முயன்ற பத்து பேர்களில் இறுதியானவன். இவனைப் பற்றி மத்தேயு 2:1-18 இல் நாம் வாசிக்கிறோம். பெத்லகேமிலே பிறந்து வாழ்ந்து கொண்டிருந்த பாலகனாகிய இயேசு ஏரோதின் ஆணையால் கொலை செய்யப்பட்டிருந்தால் நமக்கு கிறிஸ்துமஸ் கிடையாது.

இயேசுவின் பிறப்பைத் தடை செய்ய பத்து பேர் முயன்றாலும் இறுதியில் தேவனே வென்றார். அவருடைய அனாதி திட்டம் பாழாகவில்லை. இரட்சகரின் பிறப்பை எதுவும் தடை செய்யவில்லை. அவரைக் கல்லறையும் வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர் மீண்டும் வருவதையும் எதுவும் தடை செய்ய முடியாது. ஏரோதின் குணநலன் மற்றும் ஆளுமைப் பண்பைப் பற்றி நெல்சன் எனும் வேதாகம அறிஞர் இவ்வாறு கூறுகிறார்: “அவன் ஓர் இரக்கமற்ற எதிர்ப்பாளன், சாதுரியமான பேச்சாளன், தந்திரமான அரசியல்வாதி”. தன்னை எதிர்த்தவர்களை அவன் சமாளித்த விதத்தையும் யூதமக்களைக் கட்டுப்படுத்திய முறையையும் ரோமர்கள் பாராட்டினர். இக் குணங்களும் பேரரசருக்கு அவன் காட்டிய விசுவாசமும் ரோம நாட்டிலும் பாலஸ்தீனாவில் வசித்துவந்த யூதர்களிடையேயும் அவனை ஒரு முக்கியமான மனிதனாகக் காட்டியது.

ஏரோது ஒரு தந்திரமான அரசியல்வாதி. இவன் சீசரின் அரியணைக்கு போட்டியிட்ட ஆக்டேவின் மற்றும் மார்க் அந்தோனி ஆகிய இருவரின் ஆதரவுகளையும் பெற்றான். ஏரோதுக்கு ‘யூதரின் ராஜா’ என்ற பட்டத்தைக் கொடுக்க ரோம செனட்டுக்கு இவர்கள் பரிந்துரை செய்தனர். கி.பி. 39 இல் வட இஸ்ரவேல் தேசத்தின் கடற்கரைப் பட்டணங்களில் ஒன்றான ஆக்கா என்ற இடத்துக்கு வந்த ஏரோது, மூன்று ஆண்டுகளின் போராட்டத்திற்குப் பின்னர் ‘யூதருக்கு ராஜா’ என்ற பட்டத்தைப் பெற்றான். தேசத்தின் அனைத்துக் குடிகளையும் தனக்குக் கீழ்ப்படுத்தினான். ஏதோமியரான இவன் ரோமர்களுக்கு விசுவாசியான நண்பராக இருந்தான். இவன் ஏதோமியராக இருந்ததாலும் முழுவதும் யூத வம்சத்தைச் சேர்ந்தவராக இல்லாததாலும் இஸ்ரவேலில் இருந்த யூதர்களின் மரியாதை இவனுக்குக் கிடைக்கவில்லை. எருசலேமில் யூதர்களின் ஆலயத்தை புதுப்பித்துக் கட்டினாலும் தனது ராஜ்யத்தின் அநேக இடங்களில் புற ஜாதி மக்களின் தெய்வங்களுக்கும் கோயில்களை எழுப்பினான். ஆகவே அவன் பாலஸ்தீனிய யூதர்களால் சிறப்பாக மதிக்கப்படவில்லை.

ஏரோது இஸ்ரவேல் தேசத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான். எனவே “ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்த பொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்” (மத்.2:1-3).

இங்கு கலக்கம் என்ற சொல் நடுக்கம், பதட்டம் அல்லது கிளர்ச்சி என்று பொருள்படும். கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் யூதருடைய ராஜாவைத் தேடிவந்தபொழுது ஏரோது கலக்கம் அடைந்தது மட்டுமல்ல, சிறிது நடுக்கமும் கொண்டான். இயேசு கடலின் மேல் நடந்ததைக் கண்ட சீடர்கள் மரண பயத்தில் அலறினது போல் (மாற்கு6:49); ஏரோதும் பயந்தான். நடுக்கத்தில் அவனது முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது. உண்மையிலேயே அவனுக்கு பயம் பிடித்துக்கொண்டது. கர்த்தருடைய தூதன் சகரியாவுக்கு தரிசனமான பொழுது அவர் ‘கலங்கி பயமடைந்தான்’ என்ற சொல்லே இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்று இயேசு தமது சீடர்களைத் தேற்றிய சொல் இதுவே.

“உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” என்ற வாக்குறுதியை அவர் நமக்கும் அளித்திருப்பதால் நாம் கலங்க வேண்டிய அவசியம் இல்லை.

இங்கு ஏரோது நடுங்கினான். ஒரு சிறிய குழந்தை ஏரோது அரசருக்கு அச்சுறுத்தலாக அமைந்தார். இக்காலத்தில் ஏரோது சுமார் 70 வயதுடையவராயிருந்தான். யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கும் குழந்தை அரியணைக்கு உரியவர் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னுடைய சிங்காசனத்தை விட்டுவிட அவன் ஆயத்தமாக இல்லை. எனவேதான் “யூதருக்கு இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று சாஸ்திரிகள் கேட்டபொழுது, ஏரோது தனக்குள் ‘நான் ஒருவன்தான் யூதருக்கு ராஜா’ என்று எண்ணி அச்சிறு குழந்தையினிமித்தம் பயப்பட்டான்.

ஏரோதின் பண்பும் குணமும் அவருக்கு திகிலை ஏற்படுத்தியிருக்கும் என எண்ணுகிறேன். ஏரோது பாதுகாப்பற்ற மனநிலையையுடையவன். தனது வெற்றியின் பாதையில் குறுக்கிடுபவரை இரக்கமற்று அகற்றுவதற்கு அஞ்சாதவன். ஏரோது பட்டத்துக்கு வந்தவுடன் தனது குடும்பத்தில் ஆட்சிக்கு உரிமையாகப் போகும் அனைத்து ஆண் மக்கள் யாவரையும் கொன்றான். பெத்லகேமிலுள்ள ஆண் குழந்தைகளை அவன் கொன்றதை நான் இங்கு குறிப்பிடவில்லை. கி.மு. 37 இல் அவன் அரசனாக்கப்பட்ட பொழுது தனது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த அநேக ஆண்பிள்ளைகளைக் கொன்றான். கி.மு. 37இல் தனக்குப் பிரியமான மனைவி மரியம்னேயையும் சந்தேகத்தின் பேரில் கொலை செய்தான். தனது அரியணையை அபகரிக்க எண்ணினார்கள் என்ற வதந்தியை நம்பி அலெக்சாந்தர் மற்றும் அரிஸ்டோபுலுஸ் என்ற தனக்கு பிரியமான குமாரர்கள் இருவரையும் தான் இறப்பதற்கு முன் கி.மு. 7 இல் கொலை செய்தான். தனது பதவியைக் காப்பாற்றுவதற்கு தனது குடும்பத்தினரைக் கொல்லத் தயங்காத ஏரோது யூத குழந்தைகளைக் கொன்றுபோட்டான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஏரோது ஒரு தந்திரசாலி, சதிகாரன், நுட்பமான அறிவுள்ளவன். “அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்” என்று வசனம் 7இல் நாம் வாசிக்கிறோம்.

ஒருவேளை ஏரோது அதில் வெற்றி பெற்றிருந்தால் நமக்கு கிறிஸ்துமஸ் கிடையாது. ஆனால் நண்பர்களே, தேவன் ஒருபொழுதும் தோல்வியடைவதில்லை. அவர் அனைத்தின்மீதும் கட்டுப்பாடு உடையவர். நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் அவர் கட்டுப்படுத்துபவர். எனவே நாம் கலங்கவேண்டியதில்லை. ஒரு பழைய ஆங்கிலப் பாடல் பின்வரும் வினாக்களை எழுப்புகிறது:

மரியாளின் மடியில் துயிலும் இப்பிள்ளை யார்?
வானவர் இன்னிசை கீதம் இசைத்து
மந்தை ஆயர்க்கு பிறப்பினை அறிவித்த
இவரே தேவசுதனாம் கிறிஸ்து ராஜன்.
தூதர் செய்தி கேட்டு ஆயர் விரைந்து வந்து
மரியாளின் மகவினைப் புகழ்ந்தனர்.
நீரும் வாரீர் வந்து பணிவீர்.

குழந்தை இயேசுவைப் பணிந்து கொள்வது ஏரோதின் நோக்கமல்ல. அக்குழந்தையைக் கொல்வதே அவனுடைய எண்ணம். மத்தேயு 2: 16-18இல் “அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலை செய்தான். புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று, எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொ ழுது நிறைவேறிற்று” என்று வாசிக்கிறோம்.

வரலாற்றின் ஏடுகளை நாம் திருப்புவோமானால் இது போன்ற படுகொலைகள் ஏராளமாக நடந்துள்ளன. ஆனால் இது மிகவும் கொடிதானதொன்று. பெத்லகேம் குழந்தைகளுக்கு இது ஒரு பேரழிவு என நாம் கூறலாம். சிலர் இதனை குற்றமில்லா பாலகர்களின் படுகொலை என அழைக்கின்றனர். அவர்கள் பாலகர்களாக இருந்தாலும் பாவமில்லாதவர்கள் அல்லர். நாம் அனைவருமே பாவத்தில் பிறந்தவர்கள். “என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள்” என்று தாவீது கூறுகிறார். இது மிக சோகமான நிகழ்வு என்றாலும் அவர்கள் அப்பாவிகள். பயங்கரமான ஒரு மனிதனின் தாக்குதலுக்குப் பலியானவர்கள். கிறிஸ்துமஸ் நிகழ்வை அழிப்பதற்கு ஏரோது எதையும் செய்யத் தயங்கவில்லை.

தேவன் இதை ஏன் அனுமதித்தார்? தேவன் ஏன் இதைத் தடுக்கவில்லை? என்று நீங்கள் ஒரு வேளை கேட்கலாம்? இதற்கு தகுந்த பதில் என்னிடம் இல்லை. இவ்விதமான கேள்விகளுக்கு தேவனும் பதில் தரவில்லை. ஆனால் இந்த நிகழ்வை தேவன் செய்யவில்லை. ஏரோது அரசனே செய்தான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஒரு பாதுகாப்பற்ற, பொறாமை கொண்ட பைத்தியக்காரனின் மிருகத்தனமான வெறிச்செயல் என்று நாம் கூறலாம். தேவன் இவ்வுலகை பாவத்தின் விளைவுகளிலிருந்து நீக்கவில்லை. அவர் நம்மை இப்பாவ உலகிலிருந்து மீட்டுக்கொண்டார். மனிதனின் பாவத்தின் விளைவுகளை நிறுத்துவது தேவனுடைய வேலையல்ல. அப்பாவத்துக்கு பரிகாரம் தருவதே அவருடைய காரியம். துன்பங்கள், பஞ்சம் மற்றும் போர் இவற்றை நிறுத்துவது அவர் பொறுப்பு ஆகாது.

ஒருநாள் அவர் அவைகளை நிறுத்துவார். ஆனால் அவற்றை அவருடைய நேரத்தில் அவருடைய வழியில் செய்வார். இவை அனைத்துமே மனிதனின் பாவத்தால் வரும் விளைவுகளே. தேவனுடைய புறக்கணித்தல் அல்ல. தேவனை நோக்கி, “நீர் ஏன் ஒன்றுமே செய்யவில்லை?” என்று நாம் கேட்கக்கூடாது.

அவர் மிக முக்கியமான ஒரு காரியத்தில் அப்பொழுது ஈடுபட்டிருந்தார். நமது நன்மைக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் அவருடைய இரட்சிப்பின் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருந்தார். நம் அனைவருடைய வாழ்வைக் காப்பாற்றும் ஒருவரின் பாதுகாப்பைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். இவ்வுலகுக்கு இரட்சகர் உண்டு என்பதை அவர் உறுதிப்படுத்திக்கொண்டிருந்தார். ஆம். குழந்தை இயேசு அந்தநாளில் பெத்லகேமில் இருந்திருந்தால் மற்ற ஆண்குழந்தைகளுடன் அவரும் கொல்லப்பட்டிருப்பார். ஆனால் தேவனுடைய திட்டம் வேறு. அவர் சர்வவல்லவர், அனைத்தையும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

இந்த கிறிஸ்துமஸ் காலத்திலும் தேவன் உங்களுக்கு என்று ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். தேவனுடைய திட்டத்துக்கு உங்களது வாழ்வை நீங்கள் ஏற்புடையதாய் வைத்திராவிட்டாலும் தேவன் உங்களை கைவிடமாட்டார். நமது இரட்சகரின் பிறப்பைக் கொண்டாடும் காலமே கிறிஸ்துமஸ்! இதனை அழிக்க நினைத்த அனைவரும் தோற்றுப்போனதற்காக தேவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

பொறாமை குணம் கொண்ட சகோதரன் காயீன், தைரியமற்ற உறவினர், தாவீது அரசனாவான் என கனவில்கூட நினைக்காத தகப்பன் ஈசாய், தாவீதின் மேல் பொறாமை கொண்ட சவுல், தாவீதின் சந்ததியை ஒழிக்க தனது பேரக்குழந்தைகள் அனைவரையும் அழித்த அத்தாலியாள். தாவீதின் சந்ததியைச் சேர்ந்த கீழ்ப்படியாத எக்கோனியா ஆகியோராலும் இயலவில்லை. அகுஸ்து ராயன் குடிமதிப்பெழுதும்படி கட்டளை பிறப்பிக்காவிட்டால்… குணசாலியான மரியாள் கன்னியாக இருந்திராவிட்டால்… மனசாட்சியுள்ள யோசேப்பு மரியாளைத் தனது மனைவியாக ஏற்றுக்கொள்ளாவிட்டால்… அனைவருமே கிறிஸ்துமஸ் நிகழ்வைத் தடை செய்திருப்பார்கள்.

ஆனால் தேவன் செய்ய நினைப்பது எதுவோ அது நடந்தே தீரும். பெத்லகேமில் கிறிஸ்து பிறப்பதை யாராலும் தடைசெய்திருக்க முடியாது. சிலுவையில் அவருடைய மரணத்தையும் யாராலும் தவிர்த்திருக்க முடியாது. அவரை கல்லறையில் எதுவும் வைத்திருக்க முடியாது. அதுபோல அவர் வருவதையும் யாரும் தடை செய்ய முடியாது. தேவன் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். நமது வாழ்வில் அவர் அத்திட்டத்தை நிறை வேற்றிக்கொண்டிருக்கிறார். தேவன் அறியாத எதுவும் உங்களுடைய வாழ்வில் நுழையாது. அது நிறைவேறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதுவே உங்களுக்கு சிறப்பானதாக அமைவது உறுதி. இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் அதற்காக நன்றி சொல்லுங்கள்.

யூதருக்கு ராஜாவாகப் பிறந்த குழந்தையைப் பற்றி ஞானிகள் கூறுவதைக் கேட்ட ஏரோதுக்கு இரு வாய்ப்புகள் இருந்தன. அவர்களைப் பின்பற்றி அவனும் அக்குழந்தையைப் பணிந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவன் கிறிஸ்துவை நிராகரித்துவிட்டான். முழு உலகிற்குமே தேவனை விசுவாசிப்பதும் விசுவாசியாமல் இருப்பதும், மரணத்துக்குப்பின் உள்ள வாழ்வை நம்புவதும் நம்பாததும், கிறிஸ்தவ மதத்தை நம்புவதும் நம்பாததும் ஆகிய இவ்விரு வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. மனித உருவில் வந்த தேவனை நம்புவதும் நம்பாததுமாகிய மிகப்பெரிய வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன.

நாம் அவரிடம் போகமுடியாது எனவே அவருடைய கிருபையாலும் இரக்கத்தாலும் அவர் நம்மிடம் வந்தார். ஏரோது அதனை நம்பவில்லை. நீங்கள் நம்பாவிட்டால் உங்களுடைய நித்திய வாழ்வை அது பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பரலோகத்துக்குச் செல்லும் ஒரே வழி தேவனுடைய வழியே. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசு தெளிவாகக் கூறியுள்ளார்.

இயேசு ஒரு போதகரோ மதத்தலைவரோ அல்லர். நமது பாவத்திலிருந்து நம்மை மீட்டு; நமது மரணத்துக்குப் பின் செல்லும் நித்திய வீட்டுக்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக மாற்றும் ஒரே வழி அவரே. அவரை நீங்கள் விசுவாசித்தீர்களானால் சந்தோஷப்பட்டு களிகூருங்கள். அவரை விசுவாசியாதவர்களானால் பயப்பட வேண்டாம். இந்த நாளில் அவரிடம் வாருங்கள்.

அறிந்தோ அறியாமலோ அநேகர் கிறிஸ்து பிறப்பைப் பாழாக்க நினைத்திருந்தனர். ஆனால் ஏரோது அறிந்தே கிறிஸ்து பாலகனை அழிக்க எண்ணினான். தமது குமாரனைப் பாதுகாத்த தேவன் ஏன் மற்ற பாலகர்களைக் காப்பாற்றவில்லை? அவரது வல்லமை எங்கே? அவர்களுக்கான அவரது கிருபையும் அன்பும் எங்கே? என நீங்கள் கேட்கலாம். தேவன் அக்குழந்தைகளைக் கொல்லவில்லை. கிறிஸ்து பாலகனைக் கொல்வதற்காக அப்பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டது நம்மை பாதிக்கலாம். நமது கோபத்தை தேவனிடம் அல்ல; ஏரோதிடமே காட்ட வேண்டும். தேவன் அப்படுகொலையைத் தடுத்திருக்க முடியும். அவருக்கு அந்த வல்லமை உண்டு. ஆனால் அதைக் கேட்பதற்கு நமக்கு உரிமை கிடையாது. தேவன் அதனை அனுமதித்தார். நாம் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுகிறோமா அல்லது எதிர்த்து நிற்கிறோமா என்று நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை